நிலன் வீட்டில் ஜானகியால் பெரும் பூகம்பமே வெடித்திருந்தது. ஆசையாசையாகப் பெற்று, பார்த்து பார்த்து வளர்த்த மகனுக்கு இவர்கள் போய்த் திருமணம் பேசிவிட்டு வருவார்களா என்று கொதித்தார்.
“பெத்தவள் நான் என்ன செத்தா போயிட்டன்? இருக்கிற மொத்த சொத்துக்கும் பாதி சொந்தக்காரன் அவன். இன்னும் சொல்லப்போனா நாலுல ஒரு பங்குதான் உங்களுக்குச் சொந்தம். மிச்ச எல்லாத்துக்கும் ஒற்றை வாரிசு அவன். அவனுக்குப் போய் ஆரின்ர வீட்டில கலியாணம் பேசி இருக்கிறீங்க. கேவலம் கெட்ட கூட்டம். உடம்பக் காட்டி என்ர மகனை மயக்கி இருக்கிறாள்.” என்றவரின் பேச்சில் அதிர்ந்துபோனான் மிதுன்.
அன்னை கோபப்படுவார் என்று தெரியும். அவனைக் குறித்து ஓராயிரம் கற்பனைகளோடு இருக்கிறார் என்றும் அறிவான். மிகவும் சங்கடத்தோடுதான் அவரை எதிர்கொள்ள வந்தான். ஆனால், அவர் பேசும் விதம்? சுவாதியைக் கேவலமாகப் பேசியதுமல்லாமல் குடும்பத்தைப் பிரித்துவிடுவார் போலிருந்தது.
அவசரமாகத் தன் மாமன் குடும்பத்தைப் பார்த்தான். அவர்களுக்கும் ஜானகியின் வாயைத் தெரியும். அதனால்தான் நிலன் முதலில் தந்தைக்கு அழைத்து விடயத்தைச் சொல்லி, அந்தப் பக்கம் இந்தப் பிரச்னையை ஒரு நிலைக்குக் கொண்டு வந்துவிட்டு இங்கே வந்து இவரிடம் சொல்லலாம் என்று முடிவு எடுத்தான். ஆனாலும் சொத்தைக் குறித்தெல்லாம் பேசுவார் என்று எதிர்பார்க்கவேயில்லை.
கோபத்தோடு கூடிய ஆதங்கத்தோடு மகனைப் பார்த்தார் பிரபாகரன். அவர் அவருக்குப் பிறகு நிலன் என்று முழுமூச்சாக நின்று தொழிலை வளர்த்து, சொத்தைப் பெருக்கியவர்கள் அவர்கள். பேச்சு எப்படி மாறிவிட்டது? தங்கைதான் என்று விட முடியாமல் அவரும் இரண்டு பிள்ளைகளை வைத்திருக்கிறாரே!
அவர் தவிப்பை உணர்ந்த நிலன் வேகமாக அவர் அருகில் சென்று, அவரின் கரம் பற்றி அமைதி படுத்தினான்.
அதுவே அவர்கள் தனி, தான் தனி என்றாகிப்போனது போலாகிவிட, “என்ன கதையெல்லாம் கதைக்கிறீங்கம்மா?” என்று அதட்டினான் மிதுன்.
ஜானகி அடங்க வேண்டுமே! “என்னடா? என்னையே அதட்டுற அளவுக்குப் பெரிய மனுசனா நீ? இப்பிடிக் குரலை உயத்தச் சொல்லி அவளா சொல்லித் தந்தவள்? இல்ல அவளின்ர அக்கா சொல்லி அனுப்பினவளா? செய்தாலும் செய்வாள்.” என்றதும் மிதுனோடு சேர்ந்து நிலனும் பல்லைக் கடித்தான்.
இந்த நேரத்தில் தானும் கோபப்பட்டால் இன்னுமே துள்ளுவார் என்று அவன் வாயை இறுக்கி மூடிக்கொண்டிருந்தான்.
ஆனால், அங்கே சுவாதியின் மனத்தை உடைத்துவிட்டு வந்த மிதுன், இங்கே அவளுக்காகப் பேசினான்.
“கேவலமா கதைக்காதீங்க அம்மா. அவளத்தான் எனக்குப் பிடிச்சிருக்கு. அவளைத்தான் கட்டப்போறன். நீங்க தலைகீழா நிண்டாலும் இது மாறாது!” என்றான் உறுதியாக.
“நான் உயிரோட இருக்கிற வரைக்கும் நடக்காது!” என்றார் அவன் அன்னை.
“அப்ப எனக்குக் கலியாணம் எண்டுற ஒண்டு நடக்கவே நடக்காது! ஆனா பிறக்கிற பிள்ளை என்ர பிள்ளைதான் எண்டு ஊருக்கே அறிவிப்பன்.” என்றான் அவனும் விடாமல்.
பயந்துபோனார் ஜானகி. பிறகு அவரின் மானம் மரியாதையெல்லாம் என்னாவது? ஆனாலும் மகனிடம் தன் பயத்தைக் காட்டிக்கொள்ள அவரின் தன்னகங்காரம் விடவில்லை. “என்னடா கதைக்கிறாய்? வெருட்டுறியா? உன்ன அப்பிடி ஒற்றையா பாக்கவோ படாத பாடெல்லாம் பட்டுப் பெத்து வளத்தனான்?” என்று அவனிடம் பதறியவர், “நீங்க ஏன் வாய மூடிக்கொண்டு இருக்கிறீங்க. உங்கட மகனுக்கு எடுத்துச் சொல்லுங்கோவன்!” என்று பாலகுமாரனையும் பிடித்து அதட்டினார்.
அவர் எதையும் பேசும் நிலையிலேயே இல்லை. அப்படி ஒரு அதிர்ச்சியில் உறைந்துபோயிருந்தார். திரும்பவும் நெஞ்சுக்குள் என்னவோ செய்வது போலிருந்தது. இத்தனை பேருக்கு முன்னால் நின்று இத்தனை உறுதியாகப் பேசும் மகனையே இமைக்க மறந்து பார்த்திருந்தார்.
ஜானகிக்கு அவரைக் கண்டு பற்றிக்கொண்டு வந்தது. “வாயே திறந்திடாதீங்கோ. தலைல இடையே விழுந்தாலும் ஊமை கோட்டான் மாதிரியே இருங்கோ. ஒண்டுக்கும் உதவாத மனுசன்!” என்று அவரையும் திட்டிவிட்டு, “அப்பா என்னப்பா நீங்களும் பேசாம இருக்கிறீங்க? தம்பிட்டச் சொல்லுங்கோப்பா. உங்களுக்குத்தான் அவளவேயப்(அவள்களை) பற்றி நல்லா தெரியும்.” என்றுகொண்டு தகப்பனிடம் போனார்.
அங்கே அவர் எத்தனைக்கு அதிர்வது என்று தெரியாது அமர்ந்திருந்தார். நெஞ்சுக்குள் இதயம் துடிக்கிற துடிப்பைப் பார்க்கையில் அது தன் துடிப்பை நிறுத்திவிடுமோ என்கிற அளவில் அவரே பயந்தார்.
நிலன் இளவஞ்சி இணைவையே எப்படி நடக்கவிடாமல் தடுக்கலாம் என்று அவர் யோசித்துக்கொண்டிருக்கிறார். இங்கானால் சின்ன பேரன் சுவாதியை விரும்புகிறானாம். அவன் குழந்தை அவள் வயிற்றிலாம். இதில் இளவஞ்சி அவர்கள் மகள் இல்லையாம். இரண்டு பேரர்களும் அவர் கையை விட்டு நழுவப் போகிறார்களா? அது மட்டுமா? அதைவிட… அதைவிட… மேலே யோசிக்கக் கூட முடியாமல் இதயத்தைப் பற்றிக்கொண்டார்.
மொத்தக் குடும்பமும் அவரிடம் ஓடியது.
அவரை வைத்தியசாலைக்குக் கொண்டுபோய், இரண்டு நாள்கள் வைத்தியர்களின் கவனிப்பிலேயே வைத்திருந்து, ஓரளவுக்குத் தேற்றிக்கொண்டு வந்தார்கள்.
இந்த மூன்று நாள்களும் தொண்டை அடைத்துப் போகிற அளவுக்குக் கத்தி தீர்த்திருந்தார் ஜானகி.
நீயெல்லாம் கூடப்பிறந்த தமையனா என்று பிரபாகரனைக் கேட்டார். என் மகன் வாழ்க்கையை மொத்தமாக அழிக்க வேண்டும் என்று எத்தனை நாள்களாகத் திட்டம் போட்டு வைத்திருந்தீர்கள் என்றார் சந்திரமதியிடம். என் பிள்ளைபோல் வளர்த்ததற்கு என் அடி மடியிலேயே கை வைத்துவிட்டாயா என்றார் நிலனிடம்.
கீர்த்தனா அவர் வாய்க்குப் பயந்து அவர் முன்னால் வருவதையே தவிர்த்து, ஒழித்து ஓடிக்கொண்டிருந்தாள்.
கடைசியில், “அவள் உன்ன வளக்கப் பாத்தது காணாம தங்கச்சியார வச்சு என்ற மகனைப் பிடிச்சிருக்கிறாள். கேடுகெட்டவள். ஏவல் எந்த நேரத்தில எப்பிடிப் பெத்துப்போட்டுப் போ…” என்றவரை, “வாய மூடுங்க அத்தை!” என்றிருந்தான் நிலன் அதற்குமேல் முடியாமல்.
தன் தமையனின் மகனா தன்னிடம் அப்படிச் சொன்னான் என்று நம்ப முடியாமல் பார்த்தார் ஜானகி. அவனுக்கும் அவருக்கும் அடிக்கடி முட்டிக்கொள்ளும்தான். என்றாலும் இப்படி எல்லாம் கதைக்க மாட்டான். இதுதான் முதல் தரம்.
அவர் அதிர்ந்து நிற்க, “இதையெல்லாம் செய்தது உங்கட மகன். என்ன கதைக்கிறதா இருந்தாலும் நீங்க அவனோட மட்டும்தான் கதைக்கோணும். அத விட்டுப்போட்டு இனி இன்னொருக்கா நீங்க என்ர அம்மாவையோ, அப்பாவையோ, இல்ல வஞ்சியையோ ஏதாவது கதைச்சீங்க எண்டு வைங்க! அத்த எண்டும் பாக்க மாட்டன்!” என்று சந்திரமதி தடுக்க தடுக்கச் சீறிவிட்டுப் போனான்.