அழகென்ற சொல்லுக்கு அவளே 7 – 4

பெத்த மகனுக்கு ஒப்பாகப் பேணிய மருமகனின் எடுத்தெறிந்து பேச்சு ஜானகியை மிக ஆழமாகக் காயப்படுத்திற்று. கூடவே அசையாத மகனின் பிடிவாதமும், வைத்தியசாலையிலிருந்து வந்த பிறகும் பேயறைந்தவர் போல் இருந்த தகப்பனின் நிலையம் அவரை அச்சுறுத்தின.

எல்லாவற்றையும் விட ஜானகியை அடக்கியது சக்திவேலரின் அந்தக் கனத்த அமைதிதான்.

அவரின் எதிர்ப்பையும் மீறி நடக்க ஆரம்பித்த சுவாதி மிதுன் திருமண வேலையைக் கண்டு பிரபாகரனிடம் பேச முயன்றார்.

“போதும் ஜானகி. அப்பாவை வேண்டாம் எண்டு சொல்லச் சொல்லு. இதோட நிப்பாட்டுறன். அதுக்கு மேல என்னோட என்ன கதைக்கவும் வராத!” என்று முடித்துவிட்டார் அவர்.

அவருக்கு அன்று ஜானகி சொத்தைக் குறித்துப் பேசியது மிகவும் பாதித்திருந்தது. இவ்வளவு பெரிய விடயம் ஜானகி மனத்தில் ஆழமாய் இருந்திருக்கிறது என்பதை அவர் இத்தனை காலமாக அறியவில்லை.

அவர்களின் சொத்துப் பறந்து விரிந்தது. அதில் நான்கில் ஒன்றுதான் உங்களுக்குத் சொந்தம் என்றால் என்ன பேச்சு? அவர் மனத்தில் பெரும் பிளவு விழுந்து போயிற்று.
*****

ஜெயந்திக்குப் பிரத்தியேகமாக இளவஞ்சி மீது எந்த வெறுப்பும் இல்லை. பெற்ற மகளாகத்தான் பாவித்தார். பாசமாகத்தான் வளர்த்தார். பிரிவினை காட்டியதும் இல்லை. ஆனால், உண்மை என்கிற ஒன்று எப்போதும் அடி நெஞ்சில் உறங்கிக்கொண்டேதானே இருக்கும். அதில் ஆத்திரத்திலும் அவசரத்திலும் நிதானமிழந்து வார்த்தைகளை விட்டுவிட்டார்.

இப்போது அவரையும் அவர் தவறு நிம்மதியாக இருக்க விடாமல் உறுத்தியது. எப்படியாவது அவளிடம் மன்னிப்பைக் கேட்டுத் தன்னை விளக்கிவிட முயன்றார்.

ஆனால் அவளோ, “நீங்க ஒண்டும் பொய் சொல்லேல்லையே. இன்னுமே சொல்லப்போனா இத்தனை காலமும் நான் வாழ்ந்த வாழ்க்கைதான் பொய். நீங்க சொன்னதாலதான் நான் ஆர் எண்டுற உண்மை எனக்குத் தெரிய வந்ததும்.” என்றுவிட்டாள்.

கூடவே, “கார்மெண்ட்ஸ் கணக்குவழக்கெல்லாம் எப்ப வேணுமெண்டாலும் நீங்க செக் பண்ணலாம். இல்ல, உங்கள்ள ஆருக்காவது கார்மெண்ட்ஸ மொத்தமா உங்கட பொறுப்பில எடுக்க விருப்பம் எண்டாலும் சொல்லுங்க, எல்லாத்துக்கும் நான் ரெடியாத்தான் இருக்கிறன். அப்பம்… அது தையல்நாயகி அம்மா கடைசி நேரத்தில கூட நீதான் பொறுப்பா இருக்கோணும், கார்மெண்ட்ஸ உடைய விடாமப் பாக்கோணும் எண்டு திரும்ப திரும்பச் சொன்னவா. அதால மட்டும்தான் இன்னும் அங்க போய் வாறன்.” என்றும் சொல்லிவிட்டுப் போகவும் கண்ணீருடன் பார்த்து நின்றார் ஜெயந்தி.

இங்கே ஒரு பக்கம் மிதுன் சுவாதி திருமண வேலைகள் மிக வேகமாக நடக்க ஆரம்பித்தன. நிலனுக்கு இந்தச் சந்தர்ப்பத்தை விட்டுவிட விருப்பமில்லை. அதைவிட, இதை விட்டால் அவளைப் பிறகு தன்னிடம் கொண்டுவர முடியாமலேயே போய்விடுமோ என்கிற பயமும் அவனைத் தொற்றிக்கொண்டது.

அதற்கு முதல் அவளோடு பேச வேண்டும். என்ன முயன்றும் அது மட்டும் நடப்பதாக இல்லை.

பொறுத்து பொறுத்துப் பார்த்தவன் கடைசியில் காரியத்தில் இறங்கினான்.

அன்று காலை, வழமை போன்று விசாகனோடு தொழிற்சாலைக்குப் பயணித்துக்கொண்டிருந்தாள் இளவஞ்சி. அப்போது அவர்களை முந்திய நிலனின் கார், வேகத்தைக் குறைத்து, இருபக்கத்து சிக்னல் லைட்டுகளையும் ஒரே நேரத்தில் ஒளிர விட்டு சமிக்ஜை செய்தது.

தன்னைப் பின்தொடர்ந்து வரச் சொல்கிறான். எத்தனை முறை தவிர்த்தாலும் விடாமல் துரத்துகிறவன் மீது கோபம் உண்டாக, “நீங்க நேரா தையல்நாயகிக்கு விடுங்க விசாகன்.” என்றுவிட்டு வீதியோரத்தில் பார்வையைப் பதித்துக்கொண்டாள் இளவஞ்சி.

ஆனால், அவளின் கார் நிலனின் காரைப் பின்தொடர்ந்தது.

“விசாகன், நீங்க தையல்நாயகிக்கு விடுங்க.” தான் சொன்னதைச் செய்யாமல் என்ன செய்கிறான் இவன் என்கிற சினம் மெலிதாகத் தெறிக்கச் சொன்னாள் இளவஞ்சி.

அவன் ஒன்றுமே சொல்லவில்லை. ஆனால், நிலனின் கார் ஒரு வீட்டின் முன்னே சென்று நிற்க, அதன் பின்னால் கொண்டுபோய் இந்தக் காரையும் நிறுத்தினான்.

நம்ப முடியாமல் விசாகனையே பார்த்தாள் இளவஞ்சி. கடந்த சில நாள்களில் நிறையப் பார்த்துவிட்டதாலோ என்னவோ அளவுக்கதிகமாக அதிரவெல்லாம் இல்லை. ஆனாலும் உள்ளே ஒரு வலி குடைந்தது.

அவன் இப்படிப் பொய்த்துப் போயிருக்க வேண்டாம் என்றே நினைத்தாள். அவனோடு அவனை நம்பி எங்குப் பயணிக்கவும் அவள் யோசித்ததேயில்லை. அவன் அவன் எல்லையில் நின்றாலும் அவள் அவனை ஒரு நண்பனாகத்தான் பாவித்திருக்கிறாள். அவ்வளவு நம்பிக்கை.

‘என் குடும்பம்’ என்று நினைத்தவர்கள் அவள் குடும்பத்தினர் இல்லையாம். நம்பிக்கையானவன் என்று நம்பிய ஒருவன் அவளை முற்றிலும் ஏமாற்றியிருக்கிறான். பிறகு என்ன அவள் பெரிய வெற்றிகரமாகத் தொழிலை நடத்துகிறவள்? விரக்தி நெஞ்சைச் சூழ்ந்தது.

இதற்குள் தன் காரிலிருந்து இறங்கி அவர்களிடம் வந்த நிலன், அவள் பக்கத்துக் கதவைத் திறந்து, “இறங்கு வஞ்சி!” என்றான்.

ஒருமுறை நிதானமாக அவன் முகத்தையே பார்த்துவிட்டு இறங்கினாள் இளவஞ்சி.

விசாகனுக்கு உள்ளே உள்ளம் உதறாமல் இல்லை. கூடவே ஒரு குற்றவுணர்ச்சியும். கோபப்படுவாள், ஏதாவது சொல்வாள் என்று அவளையே பார்க்க, “இது எத்தின நாளா?” என்றாள் அவள் நிலனிடம்.

சிறிதாய்த் தயங்கினாலும், “நாலு வருசமா.” என்றான் நிலன்.

“சோ, என்ர கைய விட்டுப் போன பல டீலுகளுக்குப் பின்னால இருந்தது விசாகன்?”

ஆம் என்பதுபோல் தலையை அசைத்தான் நிலன்.

“முத்துமாணிக்கம் அங்கிள் கார்மெண்ட்ஸ விக்கப்போறார் எண்டுற விசயம் தெரிய வந்ததும் இப்பிடித்தான்.”

பதிலெதுவும் சொல்லாமல் இறுக்கமாக நின்றான் நிலன்.

ஒரு நொடி யோசித்துவிட்டு, “அண்டைக்கு சுவாதி எனக்குத்தான் ஃபோன் பண்ணிச் சொன்னவள். அங்க போறவரைக்கும் நான் அவளோட கதைச்சுக்கொண்டேதான் இருந்தனான். ஆனா எனக்குப் பின்னால நீங்களும் வந்திட்டீங்க. சோ, நியூஸ் தந்தது விசாகன்?” என்றாள் அவன் மீதே பார்வையைப் பதித்து.

உதடுகள் கோடாக அழுந்த அதற்கும் ஆம் என்பதுபோல் தலையை அசைத்தான் நிலன்.

அவனையே இமைக்காது ஒரு கணம் பார்த்தவள் விசாகனின் புறமாகத் திரும்பிக் கையை நீட்டினாள்.

காரின் திறப்பைக் கேட்கிறாள். என்ன செய்யட்டும் என்பதுபோல் நிலனைப் பார்த்தான் விசாகன்.

“அவன் இருக்கட்டும் வஞ்சி.” என்றான் நிலன்.

அவள் நீட்டிய கையை இறக்கவும் இல்லை, அவன் சொன்னது காதில் விழுந்ததுபோல் காட்டிக்கொள்ளவும் இல்லை.

“வஞ்சி!”

அவள் அசையவில்லை.

“அவன் நம்பிக்கையானவன்தான். இருக்கட்டும் விடு.”

அப்போதும் அவளிடம் மாற்றமில்லை.

கடைசியில் நிலன்தான் இறங்கி வந்தான். தற்போதைய முக்கிய விடயம் விசாகன் இல்லை என்பதில், கொடு என்பதாக விசாகனிடம் தலையசைத்தாள்.

அதன் பிறகே கொடுத்தான் விசாகன்.

“சம்பளம் வாங்கிறது என்னட்ட. விசுவாசம் அங்க!” உதட்டோரம் ஒரு விதமாய் வளையச் சொன்னாள் இளவஞ்சி.

விசாகனின் முகம் கறுத்தது. அவள் பார்வையை நேரடியாகச் சந்திக்க முடியாமல் தடுமாறினான். அதுவும் இந்தக் கொஞ்ச நாள்களாக அவள் எப்படி உடைந்திருந்தாள் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். அப்படியிருக்கத் தானும் அவளுக்குத் துரோகமிழைத்தது குத்தியது.

“அடுத்தது என்ன?” என்றாள் நிலனை நோக்கி.

இந்த நேரத்திலும் நிதானமாகச் சூழ்நிலையைக் கையாள்கிறவளை அவனால் மெச்சாமல் இருக்க முடியவில்லை. தனக்கு என்று வருகிறபோதெல்லாம் அவள் இப்படித்தான் இருக்கிறாள். தன்னுடையவர்கள் என்று வருகையில்தான் பதறிவிடுகிறாள்.

“உன்னோட கதைக்கோணும், வா!” என்று அந்த வீட்டினுள் அழைத்துப்போனான்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock