கண்களில் கண்ணீர் திரள, “சத்தியமா எனக்குத் தெரியாதம்மா. நான் இந்த வீட்டுக்கு வந்த நேரம் நீ கைக்குழந்தை. கலியாணத்துக்கு முதல், ‘எனக்குப் பிறந்த பிள்ளை இல்லை. ஆனா இவா என்ர பிள்ளைதான்’ எண்டு சொல்லித்தான் என்னை உங்கட அப்பா கட்டினவர். அதுக்குப் பிறகும் உன்னைப் பற்றி ஒரு வார்த்த அவர் சொன்னதே இல்லை.” என்றவருக்கும் மிகுந்த வேதனையே.
அவளுக்கு யோசிக்க யோசிக்கப் பைத்தியம் பிடிக்கும் போலிருந்தது. இந்த உண்மை தெரியாமலேயே இருந்திருக்கலாம். நிம்மதியாக இருந்திருப்பாள்.
இது ஒரு நொடி தவறாது நான் யார், என்னைப் பெற்றவர்கள் என்னை ஏன் கைவிட்டார்கள், நான் எப்படி இவர்களிடம் வந்தேன், இப்போது அவர்கள் எங்கே, எத்தனையோ சொல்லித் தந்த அப்பம்மா இதை ஏன் சொல்லாமல் விட்டார் என்று ஓராயிரம் கேள்விகள் அவள் கட்டுப்பாட்டையும் மீறி அவளைப் போட்டுத் துரத்திக்கொண்டிருந்தன.
இதையெல்லாம் யாரிடம் கேட்டுத் தெளிவாள்? அனைத்தும் அறிந்தவர் வாயைத் திறக்கிறார் இல்லையே. ஒரு கோபம் நெஞ்சுக்குள் கனன்றாலும் அதை யாரிடமும் காட்ட முடியாமல் நடமாடிக்கொண்டிருந்தாள்.
குணாளன் மொத்தமாகத் துவண்டுபோனார். இதை அவள் இதோடு விடுவாள் என்கிற நம்பிக்கை இல்லை. அப்படியிருக்க இன்னும் எத்தனை முறை அவரால் திடமாக இருக்க முடியும்?
நெஞ்சை ஒரு பயம் கவ்விக்கொண்டது. விடயம் அவர் கையை மீறுவதற்குள் எப்படியாவது அவளுக்கு ஒரு நல்லதைச் செய்துவிட நினைத்தார்.
இப்போதெல்லாம் மனம் முற்றிலுமாகத் தளர்ந்து போயிற்று. இன்னும் எவ்வளவு காலத்திற்கு இருப்போமோ என்கிற பயம் அவரைப் பற்றிக்கொண்டது.
இளவஞ்சியும் அவரைக் கவனிக்காமல் இல்லை. இன்னொரு முறை பேசிப் பார்க்கலாமா என்று யோசிக்கக் கூட முடியாத அளவில் அவர் முகத்தில் தெரியும் சோர்வும், இயலாமையும் அவள் வாயை அடைத்தன.
அன்று அலுவலகம் முடிந்து வீடு வந்தபோது பிரபாகரன், சந்திரமதி, நிலன் மூவரும் அமர்ந்திருந்தார்கள்.
சம்பிரதாயத்திற்கு வரவேற்றுவிட்டு ஒதுங்க முயன்றாள். குணாளன் விடவில்லை. அவளையும் அழைத்து அங்கேயே நிறுத்திக்கொண்டார்.
“எப்பிடி இருக்கிறீங்கம்மா?” சந்திரமதி வாஞ்சையுடன் வினவினார்.
“நல்லாருக்கிறன் அன்ட்ரி. நீங்க?” இயல்பாக அவரை எதிர்கொண்டு பேச மிகவுமே சிரமப்பட்டாள். இதுவரையில் தையல்நாயகியின் பேத்தி நான் என்று அவர்களை நிமிர்ந்து நின்றே எதிர்கொண்டவள் இன்று விலாசமில்லாதவள் என்கிற உணர்வில் ஒருவிதமாகத் தனக்குள் கூசினாள்.
“கலியாணப் பரபரப்பில நாள் போகுதம்மா. உங்களுக்கும் நானே சாறி எடுத்தனான். பாருங்கோ.” என்று அவளை அழைத்துக் காட்டினார்.
எதற்கு வீணாக என்று கேட்க வந்தவள், அவர் முகத்தில் தெரிந்த உண்மையான மகிழ்ச்சியில் ஒன்றும் சொல்லாமல் பார்த்தாள். மிக நன்றாகவே இருந்தது.
“நல்லாருக்காம்மா? சுவாதிக்குக் கூட இவ்வளவு தேடேல்ல. பகட்டாவும் இல்லாம அதே நேரம் பாக்கப் பளிச்செண்டு இருக்கிற மாதிரி தேடி தேடி எடுத்தனான். பிடிக்காட்டிச் சொல்லுங்கோ மாத்தலாம்.”
“நல்ல வடிவா இருக்கு அன்ட்ரி. இதே போதும்.” இவ்வளவு பேச்சுக்கிடையிலும் அவள் நிலன் புறம் திரும்பவே இல்லை.
ஆனால் நிலன் அவளையேதான் கவனித்துக்கொண்டிருந்தான். அவள் வந்தது, தம்மை எதிர்பாராமல் ஒருகணம் புருவங்களைச் சுருக்கியது, பின் அங்கிருந்து போக முயன்றது என்று எதுவும் அவன் பார்வையிலிருந்து தப்பவில்லை.
இதே இவள்தான் கொஞ்ச நாள்களுக்கு முதல் இதே வீட்டில் அதிகாரமாக நின்று கேள்விகளால் அவர்களை விளாசியவள். இன்றைக்குச் சொந்த வீட்டிலேயே உரிமை இல்லாதவள் போல் நிற்கிறாள்.
ஒரு நொடி தன்னை நிதானப்படுத்திக்கொண்டு, “அங்கிள் முக்கியமான விசயம் ஒண்டு உங்களோட கதைக்கோணும்.” என்றான் குணாளனிடம்.
“சொல்லுங்கோ தம்பி.” இதமாய்ச் சொன்னார் குணாளன்.
“மிதுன் சுவாதி கலியாணத்தோட எனக்கும் வஞ்சிக்கும் சேர்த்தே கலியாணம் நடக்கட்டும்.” என்று அவன் சொல்லி முடிக்க முதலே, “என்ன, சுவாதின்ர வாழ்க்கைய நடுவுக்க வச்சு என்னை பிளாக்மெயில் பண்ணுறீங்களா?” என்று சீறினாள் இளவஞ்சி.
திட்டமிட்டே வந்தவன் திட்டமாகவே அவளை எதிர்கொண்டான்.
“எனக்கும் இப்பிடிக் கதைக்கிறதில விருப்பம் இல்ல வஞ்சி. அதாலதான் உன்னோட கதைச்சு, உன்னை எப்பிடியாவது ஓம் எண்டு சொல்ல வைக்க நினைச்சனான். ஆனா நீ உன்ர முடிவில இருந்து மாறுறதாவே இல்ல. பிறகும் என்னோட கோவப்பட்டா நான் என்ன செய்ய?” என்று திருப்பிக் கேட்டான்.
“நான் இதுக்கு மாட்டன் எண்டு சொன்னா?”
“மிதுன் சுவாதி கலியாணம் தள்ளிப்போகும்.”
பயந்துபோனார் ஜெயந்தி. “அம்மாச்சி, என்னம்மா இது? உன்ர தங்கச்சின்ர வாழ்க்கைய யோசியம்மா. அவரும் ஒண்டும் மோசமான பிள்ளை இல்லையே. நல்லவர்தானே. உங்களுக்க நல்ல பொருத்தமும் இருக்காம்.” என்று கெஞ்சினார்.
என்னதான் எல்லாம் சுமூகமாக நடந்துகொண்டிருந்தாலும் சுவாதியின் கழுத்தில் தாலி ஏறுகிற வரைக்கும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு திரியும் நிலையில்தான் இருந்தார் ஜெயந்தி. இப்போது அவர் பயந்தது சரிதான் என்பதுபோல் குழப்பம் வரவும் அவருக்குச் சுவாதியின் மானம் சந்தி சிரித்துவிடுமோ என்று நடுங்கிப் போயிற்று.
சுவாதிக்கும் இந்தத் திருமணம் நடக்கிற வரையில் நிம்மதி இல்லையே. அதில் அவளும் அழ, “தம்பி, என்னய்யா இது? என்ன இருந்தாலும் இப்பிடி வற்புறுத்திறது கூடாதப்பு.” என்றார் சந்திரமதி.
பிரபாகரன் நடுவில் போகவில்லை. அவரும் சந்திரமதியும்தான் இன்று இங்கு வருவதாக இருந்தது. நிலன் தானாகவே நானும் வருகிறேன் என்று சொல்லிச் சேர்ந்துகொள்ளும்போதே இப்படி ஏதோ ஒன்றை எதிர்பார்த்தார்.
மகன் பேச்சில் பெரிதளவில் ஒப்புதல் இல்லாவிட்டாலும் நடப்பதைக் காணும் பொருட்டில் அமைதியாகவே இருந்தார்.
“அவள் ஓம் எண்டு சொன்னா நான் ஏனம்மா இப்பிடி எல்லாம் கதைக்கப்போறன்? என்னில என்ன குறை எண்டு இவளுக்கு நான் வேண்டாமாம்?” என்று கேட்டான் நிலன்.
“குறை இருந்தாத்தான் வேண்டாம் எண்டு சொல்லோணுமா? உங்களை எனக்குப் பிடிக்க வேண்டாமா?” என்று ஆத்திரப்பட்டாள் இளவஞ்சி.
“உனக்கு என்னைப் பிடிக்காது?”
“இல்ல! பிடிக்காது!”
“பச்சப் பொய் அங்கிள். உங்கட மகள் கம்பஸ்ல படிக்கிற காலத்தில எனக்குப் பின்னால சுத்தினவள். இப்ப வளந்திட்டாளாம். அதால அதையெல்லாம் மறந்திட்டாளாம்.” என்று அவள் இரகசியத்தை எல்லோர் முன்னும் போட்டுடைத்தான் நிலன்.
“நிலன்!” என்று அவள் பல்லைக் கடிக்க, அவ்வளவு நேரமாக உண்மையிலேயே அவளுக்கு அவனைப் பிடிக்கவில்லையோ என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்த குணாளன், சட்டென்று உசாரானார். அவர் கவலைகள் எல்லாம் அந்த நொடியே பறந்தோடின. எப்படியாவது இந்தத் திருமணத்தை முடித்தே தீருவது என்கிற முடிவுக்கே வந்திருந்தார்.
“பிறகு என்னம்மா? ஓம் எண்டு சொல்லுங்கோவன்.” என்றார் கெஞ்சலாக.
“ஓம் எண்டு சொல்லு இளா.” ஜெயந்தியும் சொன்னார்.
“அக்கா ப்ளீஸ்!” என்று சுவாதி அழுதாள்.
ஆனால், அவளுக்குத் துணைபோல் அவளருகில் வந்து நின்றுகொண்டான் சுதாகர். அவனை உணரும் நிலையில் அவள் இல்லை. என்னை என்ன நிலையில் நிறுத்தியிருக்கிறாய் என்று கேட்பதுபோல் நிலனையே பார்த்தாள்.
அந்தப் பார்வை நிலனைத் தாக்காமல் இல்லை. ஆனால், சுவாதிதான் அவனுக்கான ட்ரம் கார்ட். அவள் திருமணம் நடந்துவிட்டால் அவனால் என்றுமே இளவஞ்சியின் மனத்தை மாற்றவே முடியாது.
அன்று இருபது வயதில் அவனை அவளுக்குப் பிடித்திருந்துமே அவன் வேண்டாம் என்று முடிவு செய்து, இன்றுவரை உறுதியாக அதில் நிற்கிறவள். அப்படியானவள் இன்றைய முடிவிலிருந்தா மாறுவாள்? இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால் அவனால் அவளை அவனிடம் கொண்டுவரவே முடியாது.
அதுதான் தவறு என்று தெரிந்தும் துணிந்து இறங்கிவிட்டான்.
ஜெயந்திக்கு அவளின் தொடர் அமைதி இன்னுமின்னும் அச்சத்தைத்தான் உண்டாக்கிற்று. அதில், “நீ என்ன நினைச்சாலும் சரி. ஆனா நான் உன்னைப் பெத்த பிள்ளையாத்தான் வளத்தனான். அந்த உரிமைல உன்னட்ட மடிப்பிச்சை கேக்கிறன். என்ர பிள்ளையின்ர மானத்தக் காப்பாத்தித் தாம்மா. ஆறு மாதம், இல்ல ஒரு வருசம் கழிச்சு எண்டாலும் நடக்கட்டும் எண்டு தள்ளிப்போடுற நிலமைல அவள் இல்லையம்மா.” என்று அழுதார்.
அன்னைக்கு ஒப்பாகத் தன்னை வளர்த்தவர் தன்னிடம் மடிப்பிச்சை ஏந்தி நிற்கிறார். அவள் இதயம் வெடித்துவிடுமோ என்னுமளவுக்குத் துடித்தது. ஒருமுறை விழிகளை இறுக்கி மூடித் திறந்தாள். அவளால் அவளைச் சமாளிக்கவே முடியவில்லை.
ஜெயந்திக்கு நேரம் போகப் போகப் பயத்தில் பதற்றம் கூடியது. கணவரிடம் ஓடிப்போய், “உங்கட மகளிட்டச் சொல்லுங்கோ குணா. அவளுக்கு நாங்க ஒண்டும் கெட்டது செய்ய நினைக்கேல்லையே. அவளுக்கும் அவரைப் பிடிச்சு இருக்காமே. இன்னும் என்ன வேணும் உங்களுக்கு? ஓம் எண்டு சொல்லச் சொல்லுங்கோ.” என்று அவரை உலுக்கினார்.
மனைவியின் கைப்பிடியிலேயே எழுந்து அவளிடம் வந்தார் குணாளன். “உங்கள நான் பெறாததாலதான் இவ்வளவு பிடிவாதமா நிக்கிறீங்களா? இதுவே உங்களப் பெத்த அப்பாவா இருந்திருந்தா ஓம் எண்டு சொல்லி இருப்பீங்கதானே? இத்தின வருசம் பாசமா வளத்தனேம்மா, அதுக்காகக் கூடவா ஓம் எண்டு சொல்லக் கூடாது?” என்றவரை வேதனையில் விழிகள் அகல நோக்கினாள் இளவஞ்சி.
யார் என்ன சொன்னாலும் நான்தான் உன் தந்தை என்று சொன்னவர் இன்று வளர்த்த கடனைத் தீர்க்கச் சொல்கிறார். செல் துண்டுகளாக இதயத்தைக் கீறிக்கொண்டு போயின அவர் வார்த்தைகள். எப்படி மறுப்பாள்? அதற்கு அவளுக்கு உரிமை உண்டா என்ன? இரண்டாம் முறையாக அந்த வீட்டின் பெரிய விறாந்தையில் பேச்சற்று நிற்கிறாள்.
“அம்மாச்சி…”
“உங்கட விருப்பப்படியே செய்ங்கோ.” என்று கமறிய குரலில் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றாள் இளவஞ்சி.