அழகென்ற சொல்லுக்கு அவளே 2 – 1

இந்தத் துறையில் இளவஞ்சிக்கான அனுபவம் என்பது பல வருடங்களைக் கொண்டது. தோள் கொடுக்கப் பெரிதாக யாரும் இல்லாமல், இத்தனை பெரிய ஆடைத் தொழிற்சாலையைத் தனியொருத்தியாகத் தாங்குகிறாள் என்றால் அது சும்மாவன்று.

இப்படியான பல தோல்விகளை, சறுக்கல்களை, இக்கட்டான சூழ்நிலைகளை எல்லாம் பலமுறை கடந்து வந்திருக்கிறாள். ஆரம்ப காலங்களில் அவள் ஒரு பெண் என்பதாலேயே இளக்காரமாக நோக்கி இலகுவாகத் தட்டிவிடலாம் என்றெண்ணி முயற்சிகளும் எடுத்திருக்கிறார்கள்.

அவற்றைக் கையாளும் முறைகளும் அவளுக்குக் கைவந்த கலைதான். அதெல்லாம் அவளைப் பெரிதளவில் பாதித்ததும் இல்லை.

இந்த முறை முத்துமாணிக்கம் என்பதாலேயே அளவுக்கதிகமாக நம்பியிருந்தாள். தன் மீதும் தன் அப்பம்மா மீதும் அவர் கொண்டிருந்த அபிமானம் அப்படி நம்ப வைத்திருந்தது.

அதோடு ரெயின்கோட் தயாரிப்பில் இறங்கி, பல புதிய விடயங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற அவள் கனவும் அதற்குள் புதைந்து கிடந்ததாலோ என்னவோ நடந்த விடயம் மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்திருந்தது.

இப்போது அவளின் ஒரேயொரு கேள்வி, இந்தச் செய்தி நிலனின் காதிற்கு எப்படிப் போனது என்பது. உடனேயே
முத்துமாணிக்கத்திற்கு அழைத்தாள்.

அங்கே அவருமே இப்படி நடந்துபோயிற்றே என்கிற மனவருத்தத்தில்தான் இருந்தார். ஒரு பருவத்திற்கு மேல் பிள்ளைகளின் கைகள் ஓங்கிவிடுகின்றன. பெரிய முடிவுகள் அவர்கள் வசமாகிவிடுகின்றன.

அதுவும் மொத்தமாகத் தொழிலைக் கொடுக்கிறோம் என்கையில் கிடைக்கிற வரையில் இலாபம் என்று பிள்ளைகள் நின்றபோது அவரால் எதுவும் செய்ய முடியாமல் போயிற்று.

ஆனால், இளவஞ்சி? அவளுக்கு அவர் கொடுத்த நம்பிக்கை?

அவள் அழைக்கவும் உடனேயே அழைப்பை ஏற்று, அவள் கேள்விக்குப் பதிலையும் சொன்னார்.

“உண்மையா நான் சொல்லேல்ல இளவஞ்சி. ஆனா என்ர இளையவனும் நிலனும் ஃபிரெண்ட்ஸ் எண்டு உங்களுக்கும் தெரியும்தானே? அப்பிடித்தான் நியூஸ் போயிருக்கு.”

அதுவரையில் ஆனந்தி மீது அவளுக்கு மெல்லிய சந்தேகம் உண்டாகியிருந்தது. அவள் பக்கமிருந்து அவள், விசாகன், ஆனந்தி மூவருக்கும்தான் இது தெரியும். விசாகன் அத்தனை சந்தேகங்களுக்கும் அப்பாற்பட்டவன்.

ஆனந்தி கடந்த இரண்டு வருடங்களாக மட்டுமே அவளோடு இருப்பவள். அவள் மூலம் விடயம் கசியவில்லை என்று தெளிவானதும் அழைப்பைத் துண்டிக்கப் போனவளை இடைமறித்துப் பேசினார் முத்துமாணிக்கம்.

“சொறியம்மா. இப்பிடி நடக்கும் எண்டு நான் நினைக்கேல்ல.” என்றார் மிகுந்த மனவருத்தத்தோடு.

“பரவாயில்ல அங்கிள். தொழில் எண்டு வந்திட்டா நாணயத்த விட லாபம் முன்னுக்கு வந்து நிக்கிறது எப்பவும் நடக்கிறதுதானே?” என்று, இத்தனை காலமும் அவர் ஈட்டி வைத்திருந்த நல்ல பெயரை ஒற்றை வரியில் அடித்து நொறுக்கிவிட்டு அவள் அழைப்பைத் துண்டித்துவிட, அப்படியே அமர்ந்துவிட்டார் முத்துமாணிக்கம்.

இங்கே இளவஞ்சி, நினைத்தது நடக்காமல் போன ஆத்திரம் ஒருபுறம், திரும்ப திரும்ப நிலனிடம் தோற்றுக்கொண்டே இருக்கிறோமே என்கிற இயலாமை இன்னொரு புறம் என்று தாக்கியதில் அதிலிருந்து வெளிவர முடியாமல் சிரமப்பட்டுக்கொண்டிருந்தாள்.

ஆனால், எல்லோரையும் போன்று உணர்வுகளுக்குள் ஆட்பட்டுக் கிடக்கவோ, மனநிலையைச் சரியாக்கிக்கொள்வதற்காக நேரம் செலவழிக்கவோ அவளால் முடியாதே!

புலி வாலைப் பிடித்த கதையாக அவளால் முடிகிறதோ இல்லையோ அன்றைய நாளின் பின்னே ஓடியே ஆக வேண்டும். அதில் எப்போதும் போன்று தயாராகித் தொழிற்சாலைக்குப் புறப்பட்டாள்.

அவள் முகத்தைப் பார்த்தே ஏதோ சரியில்லை என்று கண்டுகொண்ட விசாகன், “மேம்?” என்றான் கேள்வியாக.

“முத்துமாணிக்கம் அங்கிளின்ர கார்மெண்ட்ட நிலன் வாங்கிறாராம் விசாகன்.” என்றாள் வீதியோரம் பார்வை இருக்க.

“விடுங்க மேம். எல்லாம் நல்லதுக்கு எண்டே நினைப்பம்.” என்றான் ஆறுதலாக.

குறைந்தது பத்து ஏக்கருக்கு மேற்பட்ட பெரும் பரப்பளவில் பரந்து விரிந்து கிடந்தது அவளது தொழிற்சாலை.

அகன்ற பெரிய வாசல்கள் மட்டும் மூன்று. இங்கிருந்து ஏற்றுமதியாகும் பொருள்களைச் சுமந்து செல்லும் லொறிகளுக்காக ஒரு வாசல்.

வெளிநாடுகளிலிருந்து கப்பல்கள் மூலமோ, விமானங்கள் மூலமோ தலைநகருக்கோ, துறைமுகங்களுக்கோ வந்திறங்கும் மூலப் பொருள்களை அங்கிருந்து கொண்டு வரும் லொறிகளுக்கு இன்னொரு வாசல்.

தொழிலாளர்கள், அவர்கள் வாகனங்கள், அவர்களை ஏற்றி வருவதற்கு என்று அவள் ஏற்பாடு செய்திருக்கும் பஸ்கள், அலுவலகத்திற்கு வருகிறவர்கள் வந்து போவதற்கு என்று இன்னொரு வாசல்.

அந்த வாசல் நடுவில் இருந்தது. இவளின் காரைக் கண்டதும் அதன் கேட் உருண்டு ஓடிப்போய், ஒரு பக்கச் சுவரோரமாகப் பதுங்கிக்கொள்ள, நீண்ட நெடிய ஓடுபாதையில் நிதானமாகப் பயணித்து, இவளின் வாகனம் தரிப்பதற்கு என்றே பிரத்தியேகமாக இருந்த கூரையின் கீழ் சென்று ஓய்வுபெற்றது இவளது கார்.

ஆங்கில எழுத்து ‘வி’யைத் தலைகீழாக்கி வைத்தது போன்ற கூரைகள் பத்துக்கும் மேலே அடுத்தடுத்துத் தொடராகப் போடப்பட்டிருக்க, அதன் நீளங்கள் பின் பக்கமாக முடிவிலியைப் போன்று நீண்டுகொண்டே போயின.

அதன் மேல் பகுதியில் தையல்நாயகி ஆடைத் தொழிற்சாலை என்கிற பெயர், தமிழ், ஆங்கிலம், சிங்களம் என்று மூன்று மொழிகளிலும் கம்பீரமாக எழுதப்பட்டிருந்தது.

வேக நடையில் அதனுள் உள்ளிட்டவளை முகம் மலர்ந்த புன்னகையோடு வரவேற்றார் தையல்நாயகி.

அவரின் அறுபத்தி ஐந்தாவது பிறந்தநாளிற்கு எடுத்த படம். இன்னும் சொல்லப்போனால் எடுத்ததே அவள்தான். தன் பேத்தி தன்னைப் புகைப்படம் பிடிக்கிறாள் என்கிற பூரிப்பில் அன்றலர்ந்த மலராக மலர்ந்து சிரித்துக்கொண்டிருந்தார் தையல்நாயகி அம்மா.

அவரைக் கண்டதும் இன்னுமே கலங்கிப்போனாள். அவள் உள்ளம் சட்டென்று குழந்தையாக மாறி, அவர் மடிக்குள் தஞ்சம் புகுந்துகொள்ள ஏங்கிற்று.

முடியாதே!

தொண்டைக்குள் வந்து சிக்கிய எதையோ விழுங்கிக்கொண்டு, “நான் தோக்கிறனா அப்பம்மா?” என்று மனதார அவரிடம் பேசியவளின் கைகள், பழக்கதோசமாக அவருக்குப் பூச்சூடி வணங்கிற்று.

அவரின் கனிந்த பார்வை, ‘நீயாக ஒப்புக்கொள்கிறவரை தோல்வி தோல்வியே கிடையாது கண்ணம்மா.’ என்று சொல்வது போலவே இருக்க, மனம் இலேசாகத் தொடங்கிற்று.

அதனோடே தன் அலுவலக அறைக்குச் சென்று,
கைப்பையை உள்ளே வைத்துவிட்டு, விறுவிறு என்று தொழிற்சாலைக்குள் பிரவேசித்து நடக்க ஆரம்பித்தாள்.

மனம் எப்போதெல்லாம் சஞ்சலப்பட்டுக் கிடக்கிறதோ அப்போதெல்லாம் இதைத்தான் செய்வாள். இப்படிச் செய்கையில் அவள் உள்ளத்திற்கும் ஆறுதல் கிட்டும். ஒரு முறை எல்லாம் சரியாக இருக்கிறதா என்று அவளே நேரடியாகப் பார்த்ததாகவும் ஆகிவிடும்.

பெண்களுக்கான உடைகள் உற்பத்திதான் அவர்களது. உள்ளாடைகள் தொடங்கி, கர்ப்பிணிப் பெண்களுக்கான உடைகளிலிருந்து, குழந்தைகளுக்கான உடைகள்வரை ஒன்று விடாமல் உற்பத்தி செய்கிறார்கள்.

ஒவ்வொரு ஆடையிலும் அணிகிறவர்களுக்கு வசதியாக இருக்கும்படியான மாற்றங்களை யோசித்து, அதனை வடிவமைத்துக் கொடுக்க ஒரு குழு தனியாகவும், அப்படி அவர்கள் கொடுக்கும் வடிவமைப்பை வரைபடமாக்கி, அதை அந்த ஆடையின் தேவையான அளவுகளின்(XS, S, M, L, XL…) அளவுத் துண்டுகளாக்கிக் கொடுக்க ஒரு குழுவினரும் இருந்தனர்.

அவர்களிடமிருந்து வருகிற அளவுகளும், ஒவ்வொரு அளவிற்கும் எத்தனை உருப்படியில் ஆடைகள் தயாரிக்க வேண்டும் என்கிற ஆர்டரையும் கவனித்து, அதற்கு ஏற்ற வகையில் பரந்து விரிந்து கிடக்கும் பெரிய பெரிய மேசைகளில் பல அடுக்கில் துணிகளை விரித்து அடுக்கி, அதன் மேலே முன்னுடல், பின்னுடல், கை, கொலர் என்று இருக்கும் அளவுத் துண்டுகளை வரைந்து, அவ்வளவு பெரிய துணி அடுக்கினையும் ஒரே நேரத்தில் சீராக வெட்டும் மெஷினினால் வெட்டி, அந்தந்தத் துண்டுகளைத் தனித்தனியாகக் கட்டி, அடுத்த நிலைக் குழுவிடம் அனுப்ப என்று இன்னொரு குழு இருந்தது.

அப்படி வெட்டப்பட்ட துணிகள் அவர்கள் தொழிற்சாலையின் லோகோவைப் பிரிண்ட் பண்ணுவதற்கு முதலில் செல்லும். அதன் பிறகு கை, நெஞ்சுப் பகுதி, முதுகு என்று எங்காவது ஏதாவது டிசைன்கள் போடவேண்டுமாயின் அதற்குத் தகுந்த வகையில் நிர்ணயிக்கப்பட்ட எம்ப்ரோடிங், பிரிண்டிங் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து நகரும் துணிகள் சீராக அயர்ன் செய்யப்பட்டு தைக்கும் பகுதிக்குச் செல்லும்.

அங்கே ஒவ்வொரு ஆடையும் எந்த வரிசையில் தைக்கப்பட வேண்டுமோ அந்த வரிசையில் அவரவர் அந்தந்த வேலையை மட்டுமே முடித்துக்கொடுக்க, ஒரு வட்டம்போல் சுழன்று வரும் துணி, கடைசியில் தனக்கான வடிவத்தை முழுமையாகப் பெற்று, ஒரு உடையாக உருமாறி நிற்கும்.

அது கிளீனிங் பகுதிக்குச் சென்று, தேவையற்ற நூல்களோ, துணிகளோ இருந்தால் அகற்றப்படும். அப்படியே அளவு, போடப்பட்ட பிரிண்ட் முதற்கொண்டு தைக்கப்பட்ட பட்டன் வரை சரியாக இருக்கிறதா என்று ஆராயப்பட்டு, திரும்பவும் அயர்ன் பண்ணும் பகுதிக்குச் செல்லும்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock