அவள் ஆரணி 1 – 1

சீறிக்கொண்டு வந்த காரின் உறுமலிலேயே வருவது யார் என்று காவலாளிக்குத் தெரிந்துபோயிற்று. அப்போதுதான் தீமூட்டிய சிகரெட்டினைக் காலில் போட்டு மிதித்துவிட்டு ஓடிவந்து, அகன்ற பெரிய கேட்டினைத் திறந்துவிட்டான்.

வேகம் சற்றும் குறையாமலேயே நுழைந்த கார், வாசலின் முன்னே அவசரமாகக் கிறீச்சிட்டபடி நின்றது. சினத்துடன் கதவைத் திறந்துகொண்டு இறங்கினாள் ஆரணி. அவளின் பாதங்கள் விடுவிடு என்று வீட்டுக்குள் நுழைந்து, பரந்து விரிந்திருந்த நீள் சதுர ஹோலின் நட்ட நடுவில் சென்று நின்றது.

பளிங்குபோல் பளபளத்த வெள்ளை நிற மார்பில் நிலத்தில், ரெட் வைனின் நிறத்திலான சோபாவின் கைப்பிடியில் ஒற்றைக் கையை வைத்தபடி, நளினமாக அமர்ந்திருந்தார் யசோதா. கோபத்தில் சிவந்திருந்த மகளின் முகத்தை நிதானமாக ஏறிட்டார்.

ஆக, அவளின் வருகைக்காகக் காத்திருந்திருக்கிறார். புரிந்துவிட்டதில் நிதானமாக நடந்துசென்று தாயின் முன்னிருந்த சோபாவில் அமர்ந்துகொண்டாள் ஆரணி.

“உங்களுக்கும் தெரிஞ்சுதான் எல்லாம் நடந்திருக்கு!” வந்தபோது அவளிடமிருந்த கொந்தளிப்புக்குச் சற்றும் சம்மந்தமேயில்லாத அமைதியான குரலில் அன்னையைக் குற்றம் சாட்டினாள்.

அவளின் மனக்கட்டுப்பாட்டை எண்ணித் தனக்குள் மெச்சிக்கொண்டார் யசோதா. “ஒரேயொரு மகளின்ர திருமணத்தை அம்மாவும் அப்பாவும் சேர்ந்து ஏற்பாடு செய்றதுதானே வழமை.” உதட்டினில் உறைந்தே கிடக்கும் சின்னச் சிரிப்புடன் எடுத்துரைத்தார்.

“அந்த ஒரேயொரு மகளின்ர விருப்பம் என்ன எண்டு தெரிஞ்சும் வேற ஏற்பாடு செய்றது சரி இல்ல! அவளை அவமானப்படுத்தி இருக்கிறீங்க!” அடக்கப்பட்ட சினத்துடன் வந்தன அவள் வார்த்தைகள்.

“இது அவமானம் இல்ல ஆரா! அக்கறை. அவள் காலத்துக்கும் நல்லா இருக்கவேணும் எண்டுற பாசம்.”

“அக்கறை இருந்திருந்தா அவளின்ர விருப்பம் பெருசாத் தெரிஞ்சிருக்கும். அவளின்ர சந்தோசம் முக்கியமாப் பட்டிருக்கும்.” அவளும் விடுவதாயில்லை.

“உனக்குப் பிடிச்சிருக்கு எண்டுறதுக்காக வாங்கித் தாறதுக்கு வாசல்ல நிக்கிற கார் இல்ல இது, வாழ்க்கை. பிழைச்சிட்டுது எண்டா மாத்தி அமைக்கவே ஏலாது!” எத்தனை தடவை எடுத்துச் சொன்னாலும் கேட்கிறாள் இல்லையே என்கிற கவலை தொனித்தது அவர் குரலில்.

“இப்ப என்ன சொல்ல வாறீங்க? இந்த இருபத்திமூண்டு வயசிலையும் எனக்கு ஆட்களை எடைபோடத் தெரியாது. அதால வாயை மூடிக்கொண்டு நீங்க சொல்லுறதுக்கு தலையை ஆட்டவேணும். அப்பிடியா?” அவளின் கேள்விகள் சீறிக்கொண்டு வந்தது.

சட்டென்று நிதானித்தார் யசோதா. அவர்களின் பேச்சு அபாயகரமான பாதையை நோக்கி நகர்வதாய்ப் பட்டது. இனி இடையில் விடமுடியாது; ஆரணி அதற்கு விடமாட்டாள். எனவே மகளுக்கு நிதானமாக விளங்கப்படுத்த முனைந்தார்.

“வளந்த பிள்ளைகளும் பிழையான முடிவை எடுக்கச் சாத்தியங்கள் இருக்கு ஆரணி.” அன்னையின் நிதானம் அவளின் பொறுமையைச் சீண்டிப் பார்த்தது!

“சரியா சொன்னீங்க! அதைச் செய்தது நீங்களும் அப்பாவும்தான். நானில்ல!”

மற்றவர்களைப் போலக் காதலித்ததும் என் வாழ்க்கை என் விருப்பம் என்று போகாமல், பெற்றவர்களிடம் அவளின் விருப்பத்தைச் சொன்னபோது, அதை அவர்கள் ஏற்கவில்லை. அதை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. தன்னையும் தன் மனதையும் புரிந்துகொள்ளட்டும் என்று காத்திருந்தாள். அப்படியிருக்கையில்தான் இன்னொருவனை அவளுக்கானவன் என்று நிச்சயித்துவிட்ட அவர்களின் செயல், அவளை மிகுந்த ஆத்திரத்திற்கு உள்ளாக்கிற்று!

யசோதாவின் விழிகளிலும் மெல்லிய கோபம் வந்தமர்ந்தது.

“படிச்ச, நல்ல பதவில இருக்கிற, எங்கட வசதிக்குக் கொஞ்சமும் குறையாத, லட்சணமான, ஒரு குறை சொல்ல முடியாத ஒருத்தனை தெரிவு செய்திருக்கிறம். அவனிட்ட ஏதாவது ஒரு குறை இருக்கா சொல்லு பாப்பம்?” என்று சவால் விட்டார். ஒற்றைப் பெண்ணுக்காக என்று பார்த்துப் பார்த்துத் தேர்ந்து எடுத்ததையே பிழை என்கிறாளே!

இப்போது ஆரணி நிதானமாகத் தன் செவ்விதழ்களில் புன்னகையைத் தவழவிட்டாள். “உங்கள மாதிரி அடுத்தவனிட்ட குறை தேடுற பழக்கம் எனக்கில்ல அம்மா.” என்றாள் தைரியமாக.

தாயின் விழிகளில் தெறித்த முறைப்பை லட்சியமே செய்யவில்லை அவள்.

“நீங்க சொன்ன அத்தனை தகுதிகளும் நிகேதனுக்கும் இருக்கு. பிறகும் ஏன் வேண்டாம் எண்டு சொல்லுறீங்க? காசு! அது இல்ல அவனிட்ட. அதுதானே?” என்றவளின் இதழ்கள் ஏளனமாக வளைந்தது. “இங்க கலக்கப்போறது காசு; மனங்கள் இல்ல!” என்றாள் எள்ளலாக.

“எங்களிட்ட இல்லாத காசா!” கையினை அலட்சியமாக விசுக்கினார் யசோதா.

“அப்ப அவனுக்கு என்ன குறை எண்டு அவனை வேணாம் எண்டு சொல்லுறீங்க?” வெகுண்டுபோய்க் கேட்டாள் பெண்.

“அவனிட்ட குறையே இல்லையா?”

தாயின் கேள்வியில் தொனித்த ஏளனத்தில் ஆரணியின் விழிகளில் பெரும் சீற்றம் வந்தமர்ந்தது! அதைப் பொருட்படுத்தவில்லை யசோதா.

“சொந்தக் காலில நிக்க வக்கில்லாம, தமையன்ர காசுல சாப்பிடுறவனுக்குக் குறையில்லையா? காலத்துக்கும் வசதியா வாழ பணக்கார ஒருத்தியா பாத்து பிடிச்சிருக்கிறானே அது நல்ல குணமா?” அழுத்தம் திருத்தமாக அவர் கேட்டபோது, “அம்மா!” என்று, துள்ளிக்கொண்டு எழுந்தாள் ஆரணி!

“நிகேதனைப் பற்றி ஒரு வார்த்தை.. ஒரு வார்த்தை தவறக்கூடாது!” விரல் நீட்டி எச்சரித்தாள்.
“காசை வச்சு மனிசரை அளக்கிற உங்களுக்குக் காதலைப்பற்றித் தெரியப்போறதே இல்லை!”

“யாரையும் கேவலப்படுத்த வேண்டிய அவசியம் எனக்கில்லை ஆரா! உனக்கு காதல் கண்ணை மறைக்குது! அதுதான் உண்மையைச் சொல்லி விளங்கப்படுத்துறன்!” அவளைப்போன்று உணர்ச்சிவசப்படாமல் இன்னுமே நிதானமாகப் பேசினார் அவர்.

“என்னம்மா உண்மை? அவன் ஒரு பட்டதாரி எண்டுறது உண்மை. படிச்ச படிப்புக்கேத்த வேலை தேடுறான் எண்டுறதும் உண்மை. அதேபோல அவன்ர குடும்பம் ஏழ்மைல இருக்கு எண்டுறதும் உண்மைதான். இது எல்லாத்தையும் விடப் பெரிய உண்மை என்ன தெரியுமா? அந்த ஏழ்மை எண்டைக்கும் நிரந்தரம் இல்லை எண்டுறது! அவன் அதைத் தாண்டி முன்னுக்கு வருவான் எண்டுறது.”

இதற்குச் சட்டென்று பதிலிறுக்க முடியாமல் நின்றார் யசோதா. அவள் சொன்ன விடயத்தில் இருந்த நியாயமும் அவளின் இந்த ஆக்ரோசமும் அவரின் வாயை அடைத்தது. முதன் முதலில் அவரிடம் தான் அவள் தன் காதலைப் பற்றிச் சொன்னது. அன்றிலிருந்து மாறாமல் தன் பிடியிலேயே நின்றாளே தவிர, இப்படியொரு கோபத்தைக் காட்டவில்லை.

அதனால் தான் தைரியமாக அவர்கள் அவளுக்கான வரனைத் தேடியதும். அனைத்திலும் சிறந்தவனாக ஒருவனைக் கொண்டுவந்து நிறுத்திவிட்டு எடுத்துச் சொன்னால் விளங்கிக்கொள்வாள் என்று எதிர்பார்க்க விசயமோ அப்படியே தலைகீழாக மாறிப்போயிற்று!

அதேநேரம் அடுத்த காரும் சீறிக்கொண்டு வந்து நின்ற நொடியே விடுவிடு என்று வீட்டுக்குள் நுழைந்தார் சத்தியநாதன்! ஆரணி இண்டஸ்ட்ரீஸின் அதிபர்!

“விபாகரனை என்னத்துக்கு அவமானப்படுத்தி அனுப்பி வச்சனி ஆரணி?” அவரின் சீற்றத்தைத் தைரியமாகவே எதிர்கொண்டாள் ஆரணி.

“அவமானப்படுத்தி அனுப்பேல்ல, அனுமதி வாங்கிக்கொண்டு வா எண்டு அனுப்பி வச்சனான்!” நிமிர்ந்து சொன்னாள். “ஓபீஸ்ல வேலை நேரத்தில அப்போயின்மென்ட் இல்லாம யாரையும் பாக்கிறேல்ல எண்டுறது பொது விதிதானேப்பா. அதை எப்பிடி மீறுறது?” தந்தைக்கே பாடம் கற்பித்தாள் மகள்.

“அனுப்பி வச்சது நான்! பிறகு என்னத்துக்கு அனுமதி?”

“பாக்க வந்தது என்னைத்தானே?”

“ஆரா!” மகளின் பதிலில் கொந்தளித்தார் சத்தியநாதன்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock