நிகேதனின் எந்த மறுப்பையும் காதில் விழுத்தாமல்,
ஆர்.ஜே இண்டஸ்ட்ரீஸ்’க்கு இழுத்துக்கொண்டு வந்திருந்தாள் ஆரணி.
மூன்று மாடிக் கட்டடம். முன்பக்கம் முழுவதுமே கண்ணாடிச் சுவரினால் உருவாக்கப்பட்டிருந்தது. கட்டடத்தின் வாசலில் இருந்து வீதிவரைக்கும் கற்கள் பதிக்கப்பட்டு, ஆங்காங்கே அழகுற பூச்சாடிகள் வைக்கப்பட்டிருந்தது. காவலாளி கண்ணாடிக் கதவினைத் திறந்துவிட ஏதுவாக வாசலிலேயே நின்றிருந்தான்.
இதைவிடப் பலமடங்கு பெரிய நிறுவனத்தின் முதலாளியின் மகள்தான் ஆரணி. அப்படியானவளின் இன்றைய நிலை? தன்னைக் காதலித்துத் தொலைத்துவிட்ட பாவத்துக்காக இங்கே வேலை கேட்டு வந்திருக்கிறாள். கசந்துவழிந்த உண்மையைத் தொண்டைக்குழிக்குள் விழுங்கிவிட முடியாமல் தடுமாறி நின்றவனை, “வா!” என்று அழைத்துக்கொண்டு உள்ளே நடந்தாள் ஆரணி.
இவளைக் கண்டதுமே, “மேம் வாங்க மேம்! சுகமா இருக்கிறீங்களா மேம்?” என்று வரவேற்ப்புப் பெண் தன்னிடத்திலிருந்து விரைந்து வந்து நலன் விசாரித்தாள்.
ஆரணி இட்டிருந்த திலகத்தைக் கண்டுவிட்டு, “வெட்டிங் முடிஞ்சுதா மேம்? எப்ப நடந்தது? எங்களுக்கெல்லாம் சொல்லவே இல்ல நீங்க. சேர் எங்க?” பக்கத்தில் நிற்பவனை அவளுடைய கணவனாக அவள் நினைக்கவில்லை என்று புரிந்தது.
விழிகளில் குடியேறிய மெல்லிய கோபத்துடன், “இவர் தான் அவர். பெயர் நிகேதன்.” என்று சுருக்கமாக அறிமுகம் செய்துவிட்டு, “அங்கிள பாக்கலாமா?” என்றாள் வேறு பேசாமல்.
“ஓ..! எஸ் மேம். வாங்கோ.” வேகமாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு அழைத்துக்கொண்டு போனாள் அவள்.
தன்னுடைய ‘பிஏ’ உடன் ஆலோசனையில் இருந்த ராஜேந்திரன் இவளைக் கண்டது சட்டென்று முகம் மலர்ந்தார். “வா வா வா! எப்பிடி இருக்கிறாய் ஆராம்மா?” எழுந்து வந்து ஆர்ப்பாட்டமாக வரவேற்றார். “இவர்தான் அந்த லக்கி போயா?” என்றபடி, அவனையும் அணைத்துக்கொண்டார்.
அவர்களை அமரவைத்து, சிறப்பாக உபசரித்து, குளிர்பானம் அருந்தக்கொடுத்துவிட்டு, “பிறகு எப்பிடிப் போகுது குடும்ப வாழ்க்கை?” என்று, குறும்புடன் கண் சிமிட்டிக் கேட்டார்.
ஆரணியின் முகத்திலும் நிறைந்த சிரிப்பு. அதே சிரிப்புடன் நிகேதனை திரும்பிப் பார்த்துவிட்டு “நல்ல சந்தோசமா போகுது அங்கிள்.” என்றாள்.
“எனக்கு மூன்றும் பெடியள். அதால என்ர வீட்டம்மாக்கு இவள் தான் மகள்.” என்று நிகேதனிடம் சொன்னார் அவர். இப்படி இனிமையாகச் சென்ற அவர்களின் அளவளாவல், “என்னம்மா? சொல்லு! நான் ஏதாவது செய்ய வேணுமா உனக்கு?” என்ற அவரின் கேள்வியில் வந்து நின்றது.
“ஓம் அங்கிள். இவருக்கு ஒரு வேலை தேடுறோம். எனக்காக வேண்டாம். அவரின்ர செர்டிபிகேட்ஸ் எல்லாம் கொண்டு வந்திருக்கிறோம். அதைப் பாத்திட்டுச் சொல்லுங்கோ.” என்றாள் ஆரணி.
“அதென்ன பாத்திட்டுச் சொல்லுறது? கட்டாயம் தாறனம்மா. உனக்கு இல்லாததா?” பைலை வாங்கிப் பார்த்தவரின் புருவங்கள் நன்றாகவே உயர்ந்தது. “எங்கட கம்பனிக்கு நீங்க வேணும் தம்பி. உங்களைக் கைவிட நாங்க ரெடி இல்ல.” என்றார் நிகேதனிடம்.
அதுவரை இருந்த சங்கடம் மறைந்து இருவர் முகமும் பட்டென்று மலர்ந்தது. பார்த்தியா என்பதாக அவனைப் பார்த்தாள் அவள். அவன் முகத்திலும் பெரும் சந்தோசம். அவனுடைய தகுதிக்கல்லவா வேலை கிடைக்கப் போகிறது. மேசைக்குக் கீழே அவன் கரத்தைப் பற்றி அழுத்திக் கொடுத்தாள் ஆரணி.
“சரி தம்பி. டொக்கிமெண்ட்ஸ் எல்லாம் ரெடியானதும் உங்களுக்குச் சொல்லுறன். வெகு விரைவில மெயில் வரும்!” அவனுக்கு கொடுக்கப்போகிற போஸ்ட், அந்த வேலை பற்றிய விளக்கம் அனைத்தையும் விலாவாரியாகச் சொல்லி, இன்முகமாகவே அவர்களை அனுப்பி வைத்தார்.
இருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. “வரமாட்டன் எண்டு அவ்வளவு அடம் பிடிச்சாய். இப்ப பாத்தியா. வேலை கிடைச்சிட்டுது. இனி எந்தக் கஷ்டமும் இல்ல. மரியாதையா பார்ட்டி வையடா!” என்று சந்தோசத்தில் துள்ளிக்குதித்தாள், ஆரணி.
“சம்பளம் வரவிட்டி வாங்கித் தரவா?” அவனுக்கும் ஆசைதான். ஆனால், கையிலிருப்பது அவளின் தாலிக்கொடியை விற்றுக் கிடைத்த பணம். அதில் சந்தோசம் கொண்டாட முடியவில்லை.
“டேய் வாடா. வேலையே கிடைக்கப் போகுது. அத சின்னதா கொண்டாட வேண்டாமா?” அவனை விடவில்லை அவள். இருந்த பணத்தில் ஹோட்டல் ஒன்றுக்குப்போய்த் தேநீர் அருந்திவிட்டு எல்லோருக்குமாக உணவும் வாங்கிக்கொண்டு சென்றனர்.
அங்கே ஆர்.ஜே இண்டஸ்ட்ரீஸில் பிரகாஷ் குழம்பிப்போய் நின்றிருந்தார். நடப்பது ஒன்றும் அவருக்கு விளங்கவில்லை. “சேர், நாங்கதான் மிஸ்டர் ரஞ்சனை அந்தப் போஸ்ட்கு போட்டுட்டோமே!” என்றார் குழம்பியபடி.
“அவருக்குக் கென்போர்ம் கடிதம் அனுப்பியாச்சா?” எந்தவிதக் குழப்பமும் இல்லாமல் கேள்வி எழுப்பினார், ராஜேந்திரன்.
“இன்னும் இல்லை. கான்சல்(cancel) செய்யவா?”
“நோ நோ! உடனேயே அனுப்பு!” உத்தரவிட்டார் அவர்.
“சேர்..” ஒன்றும் விளங்காமல் நின்றவரைப் பார்த்து மெல்லச் சிரித்தார், ராஜேந்திரன்.
“என்ன பாக்கிறாய். சத்தியநாதன் எவ்வளவு பெரிய இண்டஸ்ரியல். இண்டுவரைக்கும் என்னால அவனை அசைக்க முடியேல்ல. அவன்ர மருமகன் இண்டைக்கு என்னட்ட வேல கேட்டு வந்திருக்கிறான். இவன் அங்க போனான் எண்டு வை, சத்தியநாதன் இன்னும் நாலுபடி மேல போயிடுவான். அதுக்கு விடக்கூடாது. அதேநேரம் இவனுக்கு நல்ல வேலை குடுத்து மதிக்கிற இடத்தில வைக்கவும் கூடாது.”
தன் அதிர்ச்சியை மறைக்கமுடியாமல் நின்றார், பிரகாஷ். சத்தியநாதனும் ராஜேந்திரனும் வாடா போடா என்று கதைக்கும் அளவுக்கு நெருங்கிய சிநேகிதர்கள். தினமும் கிளப்பில் சந்தித்துக்கொள்வார்கள். அதெல்லாம் வேசமா?
“ம்ம்.. என்ன செய்யலாம்? ட்ரைவர் வேல? இண்டஸ்ட்ரியல் சத்தியநாதன்ர மருமகன் ஒரு ட்ரைவர்? எப்பிடி இருக்கு கேக்க?” கேட்டுவிட்டுச் சிரித்தவரின் சிரிப்பில் வெறுப்பை முகத்தில் காட்டிவிடாதிருக்கப் பெரும் பாடு பட்டுப் போனார், பிரகாஷ்.
“எஸ்! ட்ரைவர் தான். வேலை குடுத்த மாதிரியும் இருக்கோணும். சத்தியநாதன்ர மரியாதையை ஊருக்க வாங்கின மாதிரியும் இருக்கோணும்.”
அந்தப் பெண்ணிடம் எவ்வளவு பாசமாகக் கதைத்தார். அந்தச் சின்னஞ்சிறுசுகளின் முகம் எப்படி ஒளிர்ந்தது. பிரகாஷுக்கு நினைக்கவே வேதனையாகப் போயிற்று. வாய் விட்டுச் சொல்லமுடியாதே. அவரின் குடும்பமும் அவரது சம்பளத்தை நம்பித்தானே இருக்கிறது.
இதைச் சொல்லும்போது எப்படித் தாங்குவார்கள்? ஆனால், அவர்களை வரவழைத்து அன்றுபோலவே மிகச் சிறப்பாக உபசரித்துவிட்டு ராஜேந்திரன் சொன்னார்.
“ஆராம்மா, நேற்று இரவு கிளப்ல வச்சு நான் வாய் தவறி உன்ர அப்பாட்ட சொல்லிப்போட்டன். அவன் வேலையே குடுக்கக் கூடாது எண்டு சொல்லிப்போட்டான். குடுத்தா அத்தனை பார்ட்னர்ஷிப்பையும் கான்சல் பண்ணிப்போடுவானாம். என்னோடையும் கதைக்க மாட்டானாம். ‘நான் செல்லமா வளத்த மகளை ஏமாத்திக் கூட்டிக்கொண்டு போய்ட்டான். அவன் ஒரு சோம்பேறி. உழைக்கத் துப்பில்லை. உன்ன பிடிச்சு என்னட்ட வரப்பாக்கிறான். அவனுக்கு என்ர சொத்திலதான் கண். நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்குதடா. இப்பிடியே விட்டா கொஞ்ச நாளில அவளை துரத்தி விட்டுடுவான். கொஞ்சம் கஷ்டப்பட விட்டாத்தான் அவனின்ர உண்மையான குணம் தெரியும்.’ எண்டு சொல்லிப்போட்டானம்மா. நீயும் எனக்கு மகள்தான். ஆனா 25 வருசத்துக்கு மேலான நண்பன். அவன்ர சொல்ல என்னால மீற முடியேல்ல.”
அவர் சொல்லச் சொல்ல நம்ப முடியாத அதிர்ச்சியில் இருவருமே உறைந்துபோயினர். மிகவுமே நம்பினார்களே. அங்கிள் என்றபடியால் கிடைக்காமல் போகுமோ என்கிற எண்ணம் கூட வரவில்லையே. இனி? இருந்த ஒரே கதவும் அடைபட்டுப் போனதா? கலங்கிப்போய் நிகேதனின் முகம் பார்த்தாள் ஆரணி.
முகம் கருத்து, தாடை இறுகி, அவமானத்திலும் ஏமாந்துவிட்ட வலியிலும் உள்ளுக்குள் நொறுங்கிக் கொண்டிருக்கிறான் என்று தெரிய, “பரவாயில்லை அங்கிள். நிக்ஸ்க்கு எண்டு ஒரு வேலை கிடைக்காமலா போகப்போகுது. வாழ்ந்து காட்டுவமாம் எண்டு அவரிட்ட சொல்லிவிடுங்கோ. நாங்க வாறம்!” என்றுவிட்டு எழுந்துகொண்டாள், ஆரணி.
அவர் அவசரமாகத் தடுத்தார். “பொறம்மா பொறு பொறு! அவன் எனக்கு உயிர் நண்பன் எண்டா நீ எனக்கு மகள் எல்லாம்மா. உன்ன எப்பிடி இப்பிடியே அனுப்புவன்? கம்பனிலதான் வேலை குடுக்க வேணாம் எண்டவன். என்னட்ட அவசரத்துக்கு வேற வேலை இருக்கம்மா. ஆனா.. இல்ல வேணாம். நீங்க வேற தேடுங்கோ.”
அவரின் தேர்ந்த நடிப்பில் விறைத்து நிமிர்ந்து, “என்ன வேலை? சொல்லுங்கோ.” என்று வாயைத் திறந்தான் நிகேதன்.
“இல்லத் தம்பி. எனக்கே மனது வருதில்ல சொல்ல. நீங்க படிச்ச படிப்புக்கும் அந்த வேலைக்கும் சம்மந்தமே இல்ல. உங்களைக் கேவல படுத்த நினைக்கேல்ல. ஆனா.. எனக்கும் அவசரத்துக்கு ஆள் தேவை. உங்கட நிலைய பாத்தா சம்பளம் எண்டு ஒண்டு தேவை போல..” இன்னுமே சொல்லாமல் சுற்றிவளைத்தார்.
“பரவாயில்ல. சொல்லுங்கோ!”
“எனக்கு ஒரு ட்ரைவர் தேவை. என்ர ட்ரைவர வேலையை விட்டு அனுப்பிப் போட்டன். அவன் ஒரே குடி. ஆராக்குத் தெரியும், எனக்கு கொஞ்சம் சுக, பிரஷர் எல்லாம் இருக்கு. கார் ஓடக்கூடாது. அதுதான்..”
ஆரணியோ துடித்துப்போனாள். ட்ரைவரா? அவளின் நிகேதனா? கடவுளே கோபப்படப் போகிறானே என்று வேகமாகத் திரும்பிப் பார்க்க, அவனும் அவளைத்தான் பார்த்தான்.
நெஞ்சில் அவனைச் சுமப்பதற்கு அடையாளமாக நெற்றியில் குங்குமம் வீற்றிருந்தது. இத்தனை நாட்களாக மெலிதாக என்றாலும் கொடியாவது கழுத்தில் கிடந்தது. இப்போது அதுவும் இல்லை. நேற்று அணிந்துவந்த அதே ஆடை! வேலைக்கு என்று அவனுக்காக இரண்டு ஷர்ட்டுகள் வாங்கியபோதும் தனக்காக ஒன்றுமே எடுத்துக்கொள்ளாதவள். “நான் வாறன்.” என்றான் முடிவான குரலில்.
“நிக்கி, விசரா உனக்கு.”
“இப்பதான் தெளிஞ்சு இருக்கிறன்.” என்று அவளிடம் சொல்லிவிட்டு, “நான் வாறன் அங்கிள். எப்ப இருந்து?” என்று கேட்டான்.
“ஏலும் எண்டா இண்டைக்கே..” என்றார் அவர்.