அவள் ஆரணி 11 – 1

ஆரணியின் தொண்டையை ஆத்திரமா அழுகையா என்று பிரிக்கமுடியாத துக்கம் ஒன்று அடைத்துக்கொண்டிருந்தது. அன்றைக்கு எப்படி அவனுடைய பேச்சைக் காதில் விழுத்தாமல் இழுத்துக்கொண்டு போனாளோ அதே மாதிரி, வேறு வேலை தேடலாம் என்று அவள் சொன்னதைக் காதிலேயே விழுத்தாமல் இப்போது அவன் போயிருந்தான். முற்றத்தில் அவனுடைய வண்டியும் அவளைப்போலவே தனித்து நின்றது. அதற்கும் ஏதோ பழுது. ஸ்டார்ட் வர மறுத்தது.

இப்படியே இருந்தால் விசர் பிடித்துவிடும் என்பதில், வரும்போதே வாங்கி வந்த கோழி இறைச்சியை யூ டியூப் பார்த்துச் சமைத்தாள். வீட்டை ஒதுக்கி, வேலைகளை முடித்து, குளித்து, அவள் சாப்பிட்டு முடித்தபோது வீட்டுக்குள் நுழைந்த காரைக் கண்டு விழிகளை விரித்தாள். ஆனால், ‘ஆர் ஜே இண்டஸ்ட்ரீஸ்’ என்று இலட்சினை பொறிக்கப்பட்டு, டிரைவர் என்று அப்பட்டமாக அடித்துச் சொல்லும் பிரத்தியேக ஆடையில் இறங்கியவனைக் கண்டதும், நெஞ்சுக்குள் என்னவோ செய்தது.

பார்க்கும்போதே மதிக்கத் தோன்றும் உடையில், குளிரூட்டப்பட்ட அறையில், அவனைக் காண ஆசைப்பட்டது என்ன காணும் காட்சி என்ன? வேகமாக அறைக்குள் நுளைந்து, டெரெஸ்ஸில் சென்று அமர்ந்துகொண்டாள்.

காரை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் வந்தவனைக் கண்டதும் தன்னை மறந்து, “என்ன அண்ணா ஆளே மாறிப்போய் வாறீங்கள்?” என்றாள் கயலினி.

இத்தனை நாட்களாக முகத்தைத் திருப்பிக்கொண்டு திரிந்த தங்கை கதைப்பாள் என்பதை எதிர்பாராத நிகேதனின் நடை ஒருநொடி தேங்கிற்று. இருந்தும் நிற்காமல், “வேலைக்கேற்ற உடுப்பு.” என்றுவிட்டு அறைக்குள் நுழைந்தான்.

டெரசுக்கு வந்து, “எடியேய் மனுசி, வேலைக்குப் போய்ட்டு வாற மனுசனை இப்பிடியாடி வரவேற்கிறது.?” என்றபடி அவளை இடித்துக்கொண்டு அமர்ந்தான்.

ஆரணியால் அவனைப்போன்று இலகுவாகக் கேலி பேச முடியவில்லை. “உனக்குக் கவலையா இல்லையாடா?”

இல்லை என்று தலையசைத்து, பற்கள் தெரியப் புன்னகைத்தான் அவன்.

“பொய் சொல்லாத.” அவள் விழிகளில் தவிப்பு. தன்னால் தான் இந்த வேலைக்குப் போகிறானோ என்று மனது அந்தரித்தது.

“போடி விசரி!” என்றபடி அவளை அணைத்துக்கொண்டான் அவன். “உண்மைய சொல்லப்போனா, இங்க இருந்து போறவரைக்கும் மனதில பெரிய பாரமாத்தான் இருந்தது. ஆனா, அந்தக் கார்ல ஏறி இருந்ததும் அது இல்லாம போயிட்டுது. நானும் வேலைக்குப் போறன். உழைக்கப்போறன். என்ர ஆராவ சொந்தக் காசில நல்லா வச்சிருக்கப் போறன் எண்டுதான் பட்டது. இது போதாதுதான்! நல்ல வருமானம் வாற ஒரு வேலை வேணும்தான். ஆனா, இப்ப இந்த நிமிசம் நான் நிம்மதியா இருக்கிறன். சந்தோசமா இருக்கிறன். நீயும் அப்பிடித்தான் இருக்கவேணும். இது முடிவில்ல, ஆரம்பம் எண்டு நினை.” என்றான் அவள் முகம் பார்த்து.

அந்த நிலை நெஞ்சை அறுத்தாலும் தன்னைத் தேற்றிக்கொள்வதைத் தவிர அவளுக்கும் வேறு வழி இல்லை!

“இப்ப வீட்டுக்க வரேக்க கயல் கதைச்சவள். ஒரு வேலை எப்பிடி ஆட்களை மாத்துது எண்டு கவனி. எல்லாம் மாறும். இதுவும் மாறும்! அதால சும்மா கவலைப்படாம ஒரு தேத்தண்ணி கொண்டுவா!” என்று அவளை அனுப்பிவைத்தான் அவன்.

தேநீரைக் கொண்டுவந்து தந்தவளிடம், “வெளிக்கிடு, கடைக்குப் போயிட்டு வருவம்!” என்றான்.

“காசு?”

“சம்பளத்தை இண்டைக்கே தந்திட்டார் அங்கிள்.”

“ஓ..!” அவர்களின் நிலை உணர்ந்து நடந்திருக்கிறார். மனதுக்கு சற்றே ஆறுதலாக இருக்க, “சும்மா செலவு செய்றதை விட்டுட்டு, பைக்கத் திருத்த குடு நிக்ஸ். அதுதான் முக்கியம்!” என்று பொறுப்பாக எடுத்துச் சொன்னாள் அவள்.

“இப்ப பைக்குக்கு என்ன அவசரம் ஆரா? ‘சும்மா அலைய வேண்டாம். காரை நீயே வச்சிரு. என்னை ஏத்தி இறக்கினா போதும்’ எண்டுதான் அங்கிள் சொன்னவர். அதால, இப்ப எனக்கு பைக் தேவைப்படாது. இந்த மாதம் வீட்டுக்கும் உனக்கும் கொஞ்சம் தேவையானதுகள் வாங்குவம். அடுத்த மாதம் பைக்கை பாப்பம்!” என்றவன், குளித்துவிட்டு வந்து சாப்பிட்டு அவளையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.

“பரவாயில்ல மச்சி! வேலைக்குப்போன முதல் நாளே கட்டினவள கார்ல கூட்டிக்கொண்டு போற அளவுக்கு வளந்திட்டடா!” அவனைச் சீண்டியபடி ஏறிக்கொண்டவளும் மனச் சஞ்சலங்கள் அகன்று சந்தோசத்தில் இருந்தாள்.

காற்றே புகாதபடிக்கு மூடப்பட்டிருந்த வீட்டுக்குள் மெல்லிய ஒளிக்கீற்று ஒன்று படரத்தொடங்கிவிட்டதே! நிகேதன் சொன்னதுபோல, பிழைத்துவிடுவோம் என்கிற நம்பிக்கை வந்திருந்தது.

அவளுக்கு உள்ளாடைகளும், மாற்றுடையும், வீட்டுக்குத் தேவையான பொருட்களும் என்று பார்த்துப்பார்த்துக் கச்சிதமாக வாங்கிக்கொண்டவள் கொண்டுபோனதில் பாதியைக்கூடச் செலவுசெய்யவில்லை.

“இது என்னத்தையடி காணும்?” என்று கோபப்பட்டவனை, “இருக்கிற எல்லாத்தையும் செலவு செய்துபோட்டு அந்தரம் அவசரத்துக்கு என்ன செய்றது நிக்கி?” என்று கேட்டு அடக்கினாள்.

அரிசி, மா, சீனி, தேயிலை, அவ்வப்போது கொறிக்க பிஸ்கெட்டுகள் கொஞ்சம், பருப்பு வகைகள் என்று நிறையவே இருந்த பைகளை நான்கு ஐந்து முறைக்குக் கணவனும் மனைவியுமாகச் சமையலறைக்குள் கொண்டுசென்று வைக்கும் வரையில் விறாந்தையில் அமர்ந்திருந்த அமராவதியும் கயலினியும் அசையவேயில்லை. கடைசியாக உடுப்பு பாக்கினை எடுத்துக்கொண்டு ஆரணி வரவும், “எனக்கும் வாங்கினீங்களா அண்ணா?” என்று ஆர்வமாகக் கேட்டாள் கயலினி.

இல்லையே என்று சொல்லமுடியாமல் தடுமாறி நின்றான் அவன். முதன் முதலாக அவனிடம் ஒன்றைத் தங்கை கேட்கிறாள். அதுவும் உரிமையாக. வாங்கிவர மறந்துபோனானே.

அவன் நிலையை ஒற்றைப் பார்வையில் கணித்த ஆரணி, “எனக்கு ஒரு நைட்டியும், உள்ளுடுப்பும், வெளில போட ஒரு செட் பாவாடை சட்டையும் தான் வாங்கினான் கயல். கொஞ்சநாள் போகட்டும் உனக்கும் வாங்குவம்.” என்றாள் சமாதானமாக.

“உங்கட மனுசிய கண்டதும் என்னை மறந்திட்டீங்க என்ன?” குரலடைக்கக் கேட்ட தங்கையைப் பார்க்க முடியாமல் ஆரணியை முறைத்தான் நிகேதன்.

அவன்தான் யோசிக்கவில்லை என்றால் அவளும் சிந்தித்து நடக்கவில்லையே! ஆரணிக்கு அவனின் பார்வையோடு சேர்த்து கயலினியின் கேள்வியும் கோபத்தைக் கிளப்பியது.

“பாத்தோன்ன உடுப்பு பாக்கை கண்டு பிடிச்சவளின்ர கண்ணுக்கு, இவ்வளவு நாளும் நான் ஒரேயொரு நைட்டியை வச்சு போட்டது மட்டும் தெரியவே இல்லப்போல!” சினத்துடன் மொழிந்துவிட்டு அறைக்குள் புகுந்துகொண்டாள்,
ஆரணி.

சட்டென்று கிடைத்த பதிலடியில் கலங்கிச் சிவந்துவிட்ட முகத்தோடு அழுகையை அடக்கிக்கொண்டிருந்த மகளின் கோலத்தைக் காணமுடியாமல், “அது அவளின்ர மனுசன். அவேன்ர காசு. அவள் வாங்குறாள். நமக்கு இந்த வீட்டுல மூண்டு நேரமும் சாப்பாடு கிடைக்கிறதே பெரிய விசயம். இதுல நீ உடுப்புக்கும் ஆசைப்பட்டா கிடைக்குமா? உன்ர அண்ணா கொழும்பில இருக்கிறான், அவனைக்கேளு வாங்கித் தருவான்!” என்றார் அன்னை.

“தேவையில்லாம கதைக்காதீங்கம்மா. அவளுக்கு மாத்திப்போட ஒண்டும் இல்லை எண்டுதான் வாங்கினது. அதால கயலை யோசிக்கேல்ல நான். இந்தா, இதுல ரெண்டாயிரம் இருக்கு, உனக்கு விருப்பமானதை வாங்கு!” என்று, பர்ஸிலிருந்து பணத்தை எடுத்துக்கொடுத்தான் நிகேதன்.

“இல்ல, எனக்கு வேண்டாம்!” கன்னங்களில் வழிந்தோடிய கண்ணீரோடு மறுத்தாள் கயல்.

“அப்ப, அம்மா சொன்னமாதிரி நான் உனக்கு அண்ணன் இல்லை எண்டுதான் நீயும் சொல்லுறியா?” என்று கேட்டான் அவன். இல்லை என்று மறுத்தாள் அவள். “அப்ப பிடி!” என்று கைக்குள் திணித்துவிட்டு அறைக்குள் வந்தான், நிகேதன்.

உடை மாற்றியபடி அனைத்தையும் கேட்டிருந்தவள் உள்ளுக்குள் வந்தவனிடம் எதுவும் கதைக்கவில்லை.

“நீயும் அவளுக்கு எதையாவது எடுத்திருக்கலாம் ஆரா. இனி மறக்காத!” என்றவனின் முன்னால் போய்நின்று அவன் முகத்தை நேராகப் பார்த்தாள், ஆரணி.

“ஆளுக்கு ஒவ்வொண்டு எடுத்துக்கொண்டு வர நாங்க ஒண்டும் ஷொப்பிங் போகேல்ல. அதைவிட, என்னை ‘உங்கட மனுசி’ எண்டுறாள் அவள். அதைக் கொஞ்சம் நீயும் கவனி!” என்றவள், தன்னுடைய கூர்மையான நாக்கு இன்னும் வேறு எதையும் பேசி அவனை நோகடித்துவிடுமோ என்று அஞ்சி, வேகமாக அறையை விட்டு வெளியேறினாள்.

ஆரணியின் கோபத்தில் இருந்த நியாயம் நிகேதனைத் தாக்கிற்று. சமையலறையில் தனியாக நின்று பொருட்களை ஒழுங்குபடுத்திக்கொண்டு இருந்தவளை கூப்பிட்டுச் சமாதானம் செய்ய மனம் உந்தியது. அந்தச் சின்ன வீட்டில் அம்மாவையும் தங்கையையும் வைத்துக்கொண்டு அறைக்குள் வா என்று எப்படி அழைப்பது?

மறைமுகச் சமாதான முயற்சியாக, “போய் அண்ணிக்கு உதவி செய் கயல்!” என்றான், தங்கையிடம்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock