“அண்ணா கேட்டதுக்குத்தான் நான் பதில் சொன்னான்.” அவளுக்கு மாலினியைப் பிடிக்கவே பிடிக்காது. அண்ணா முதல் அம்மா வரை அவரைச் சமாளித்தே போவதில் அவளால் மனதில் இருப்பதை வெளிக்காட்ட முடிவதில்லை.
இதையெல்லாம் கேட்டபடி சமையலறையில் ஒரு தட்டினை எடுத்துவைத்து வாங்கி வைத்திருந்த ‘லெமன் பஃப்’ மற்றும் ‘சொக்லேட் கிறீம்’ பிஸ்கட்டுகளை அழகாக அடுக்கினாள் ஆரணி.
சமாளித்துப்போக நினைக்கும் சகாதேவன், மனதின் வெறுப்பைக் காட்டும் மாலினி, மருமகளுக்கு நல்ல மாமியாராக நடக்க முயலும் மாமியார், இந்தப் பக்கமா அந்தப் பக்கமா என்றில்லாமல் தடுமாறும் கயல் என்று, அவளால் எல்லோரினதும் மனநிலையையும் கணிக்க முடிந்தது.
அதற்குள் கொதித்துவிட்டிருந்த தண்ணீரில் அமராவதி அம்மா சொன்னதுபோலவே அவர்களுக்கான தேநீரைத் தயாரித்துவிட்டு கூடவே நிகேதனுக்கும் அமராவதிக்கும் சேர்த்து ஒரே தட்டில் எடுத்துக்கொண்டாள்.
கயலினியை அழைத்துப் பிஸ்கட் ட்ரேயினைக் கொடுத்து அனுப்பிவிட்டு, தேநீர் தட்டினை எடுத்துக்கொண்டுபோய், சகாதேவனுக்கு முதலிலும் பிறகு நிகேதனுக்கும் கொடுத்துவிட்டு மாலினி அமராவதி என்று வர, கவனித்துக்கொண்டிருந்த மாலினிக்கு முகம் கடுத்தது.
நிகேதனுக்கு ஆரணியின் செயலில் மனதில் இதம் பரவிற்று! அதுநாள் வரையில் அந்த வீட்டில் அவன் ஒரு செல்லாக்காசு; பொறுப்பற்றவன். ஏன், சற்று முன் வரையிலும் கூட அவனைப்பற்றிய இளக்காரமான பேச்சுத்தான் நடந்துகொண்டிருந்தது. மனதில் வெம்பியபடி அமைதியாக அமர்ந்திருந்தவனுக்கு அவள் ஆற்றிய அச்சிறு செயல் மனத்துக்குப் பெரும் ஆறுதலைத் தர, சிறு முறுவலை அவளுக்குப் பரிசளித்தபடிதான் கோப்பையை வாங்கிக்கொண்டான்.
“கயல், உனக்கு கிட்சனுக்க இருக்கு போய் எடுத்துக்கொண்டு வா!” என்றுவிட்டு, பால் தேநீரை எடுத்துச் சின்னவர்களுக்குப் பக்குவமாகக் கொடுத்தாள்.
அவளுக்கு ஏனோ குறுகுறு என்று அவளைப் பார்ப்பதும் அவள் பார்க்கையில் சிறு கூச்சத்துடன் வேறிடம் பார்ப்பதுமாக இருந்த அவர்களை மிகவுமே பிடித்துப் போயிருந்தது.
“உங்களுக்கு என்ன பெயர்?” எட்டுவயதான மூத்தவனிடம் கேட்டாள்.
“ஆரியன்..” வெட்கத்தோடு சிரித்துக்கொண்டு சொன்னான் அவன்.
“உங்களுக்கு சேர்?” அவள் போட்ட சேரில், ஆரியன் கிளுக் என்று சிரிக்க, சின்னவருக்கோ பெரும் வெட்கமாயிற்று. அதை அடக்க முயன்றபடி, “ஆதவன்.” என்றான் அவன்.
“உங்களுக்குத்தானே நாளைக்குப் பிறந்தநாள்? என்ன கேக் வாங்குவம்? ஸ்பைடர் மேன், பேட் மேன்? இல்ல மேக் குயின்?”
அவன் தாயைப் பார்க்க, பதில் சொன்னால் அது ஆரணியை மதித்தது போலாகிவிடும் என்று மகனின் பார்வையை அலட்சியம் செய்து, “என்ன நிகேதன், ட்ரைவர் வேலை எப்படிப் போகுது?” என்று ஆரம்பித்தார், மாலினி.
“இந்த ஜொப் கிடைக்கோணும் எண்டுதான் இத்தனை வருசமா அலைஞ்சீங்க போல. கோட்டு சூட்டுப் போட்டுத்தான் போறனீங்களோ?” அவரின் எள்ளல் சிரிப்பில் அவனின் தன்மானம் ஊசலாடியது.
ஆரணி ஒருகணம் துடித்துப்போனாள். அவள் நாயகனாகப் போற்றும் ஒருவனை எள்ளி நகையாடுகிறார் அவனின் அண்ணி. கல்லூரியில் அவளைக் கட்டியிழுத்த அவனது நிமிர்வு இங்கே நசுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. அவளின் வாயையும் அல்லவா கட்டிப்போட்டுவிட்டான். தன்னால் இயன்றதாகக் கண்ணால் தேற்ற முனைந்தாள்.
“நல்லா போகுது!” என்றான் நிகேதன் எதையும் காட்டிக்கொள்ளாத குரலில்.
“நல்லாத்தானே போகவேணும். சொந்தக்காரன் எண்டுற உரிமையோட எங்கட பாக்டரில வேலை செய்ய விரும்பாத உங்களுக்கு, உங்கட மனுசி வாங்கித் தந்த ட்ரை..வர் வேலை எல்லா.” அந்த ட்ரைவரை அவர் இழுத்த இழுவையில் அத்தனை நக்கல்.
“இது நிரந்தரம் இல்லத்தானே!” என்றான் அவனும் தளராமல்.
“ஓமோம்! உண்மைதான். உங்கட மாமனார் கூப்பிட்டுச் சொத்தையெல்லாம் எழுதி வைக்கப்போறாராம் என்ன! பேப்பர்ல நியூஸ் வந்திருந்தது.”
வேகமாக நிகேதன் ஆரணியைப் பார்த்தான். அவள் வாயைத் திறந்தால் மாலினியே தாங்கமாட்டார். ஆனால், அவளோ ஆதவனின் பக்கத்தில் அமர்ந்திருந்து அவன் அருந்துவதைப் பார்த்துக்கொண்டிருந்தாள். முகத்தில் எந்த உணர்வும் இல்லை.
அவனுக்காக.. அவன் கேட்டதற்காக மட்டுமே இந்த அமைதி! ஆனால், இந்த அமைதியைக் கடைப்பிடிப்பதற்காகத் தனக்குள் எத்தனை தூரத்துக்குப் போராடுவாள் என்று அவனுக்குத் தெரியும்.
“மாமனாரின்ர சொத்தில வாழ எனக்கு விருப்பமில்லை அண்ணி. ட்ரைவர் வேலையா இருந்தாலும், நானா தேடின வேலை. நானா உழைச்சு சம்பாதிக்கிற காசு. அதுதான் எனக்கும் மரியாதை. என்ர மனுசிக்கும் கௌரவம்!” இதற்குமேல் பேச்சை வளர்த்தால் தன் தமயனைப் பற்றிப் பிழையாகத் தானே கதைக்கவேண்டி வந்துவிடுமோ என்று அஞ்சி அங்கிருந்து எழுந்தான் அவன். “இரவு சாப்பாட்டுக்கு என்னவோ வாங்கவேணும் எண்டு சொன்னனீ எல்லா ஆரா. வந்து என்ன எண்டு சொல்லு வாங்கிக்கொண்டு வாறன்!” என்றபடி தங்களின் அறைக்குள் சென்றான்.
ஆரணியும் பின்னால் செல்ல, “காசு கணக்கு வழக்கு எல்லாம் மருமகளின்ர கைல குடுத்திட்டிங்க போல மாமி.” என்று மாலினி சொல்வதும், “என்னவோ நானா ஆசைப்பட்டுக் குடுத்தமாதிரி கேக்கிறாய் பிள்ள. அவளின்ர புருசன் உழைக்கிறான். அவள் வச்சிருக்கிறாள். எங்களை வீட்டைவிட்டுத் துறத்திவிடாமல் வச்சிருக்கிறதே பெருசு எண்டு இருக்கிறம் நாங்க.” என்று அமராவதி சொல்வதும் இருவரின் காதிலும் விழுந்தது.
அறைக்குள் வந்ததும் நிகேதன் என்னவோ சொல்ல வெளிக்கிட, வாயில் விரலை வைத்துத் தடுத்து வெளியே கேட்கும் என்று சைகை செய்தாள் ஆரணி.
“நீ போய்ச் சின்ன ஆட்களுக்கு அப்பமும் எங்களுக்கு மசாலா தோசையும் கட்டிக்கொண்டு வா! கொஞ்சமா பழங்களும். நாளைக்கு விடிய சாப்பிட்ட பிறகு பிள்ளைகளுக்குக் குடுக்கலாம்.” என்றவள், கப்போர்ட்டின் உள்ளிருந்து காசினை எடுத்துக் கொடுத்தாள்.
அவள் அருகில் நெருங்கி, “நாளைக்கு அண்ணி என்ன செலவு வைப்பா எண்டு தெரியா ஆரா. வேணும் எண்டே செய்யக்கூடிய ஆள். சமாளிக்க இருக்கா? இல்ல யாரிட்டையும் மாறவேணுமா?” என்று மெல்லக் கேட்டான் அவன்.
யாரிடம் போய் மாறுவான்? ஆயினும், சமாளிக்க நினைத்து அப்படிக் கேட்டது மனத்தைத் தொட நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். தன் வீட்டினரைப்பற்றி மாலினி கதைத்தபோது அவன் முகத்தில் தெரிந்த கோபம் மனதுக்கு இதமளித்திருந்தது. அறை வாயிலை ஒருமுறை பார்த்துவிட்டு, கண்ணால் அவனை இன்னுமே தன்னருகில் அழைத்தாள். என்னவோ சொல்லப்போகிறாளாக்கும் என்று அவன் குனிய, தன் உதடுகளை அவன் கன்னத்தில் ஒற்றி எடுத்துவிட்டு, “அதெல்லாம் இருக்கு. நீ யோசிக்காம போய்ட்டுவா!” என்றாள் அவள்.
வெளிச்சம் போட்டது போன்று அவன் முகம் மலர்ந்தது. உதட்டசைவால் அவளுக்குத் தானும் ஒன்றைக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டான்.