அவள் ஆரணி 14 – 1

நிகேதனின் கையணைப்பில் தான் கண்விழித்தாள் ஆரணி. அதை உணர்ந்தநொடி நெஞ்சமெங்கும் சுகம் பரவிற்று. ஆசையாக தன் மனம் கொய்தவனின் முகத்தைப் பார்த்தாள். நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தான். உறக்கத்தில் மட்டும் தானோ இந்த நிம்மதி? ஏழ்மை அவனை எத்தனை இடத்தில் நெருக்குகிறது? எது எப்படியானாலும், அவள்மீது அவன் காட்டும் பாசத்துக்கு மட்டும் அளவேயில்லை.

முதல்நாள் இரவு, விருப்பமே இன்றி அவன் கையணைப்புக்குள் இருந்து விலகி, விறாந்தைக்குச் செல்ல எழுந்தவளைத் தடுத்து, அறைக்குள் அழைத்துக்கொண்டு வந்து, தரையிலேயே ஒரு விரிப்பை விரித்துவிட்டு அவளோடு சரிந்துவிட்டான், நிகேதன்.

ஆசை பொங்க அவன் கேசம் கோதி நெற்றியில் உதடுகளைப் பதித்தாள். மெல்ல அவன் கரங்களை விலக்கிவிட்டு எழுந்துபோய் முகம் கழுவிக்கொண்டு வந்தபோது அவனோடு சேர்த்துச் சின்னவர்களும் விழித்திருந்தனர்.

அவளைக் கண்டதும் சினேகமாக முறுவலித்தவர்களை கிணற்றடிக்கு அழைத்துக்கொண்டுபோய் முகம் கழுவி, உடை மாற்றி, தலைவாரி முகத்துக்கு பௌடர் போட்டுவிட்டாள். இதையெல்லாம் இளம் முறுவலுடன் பார்த்திருந்தான், நிகேதன்.

அவனின் பார்வையின் குறுகுறுப்பைத் தாங்கமுடியாமல், “உங்கட சித்தப்பா இண்டைக்கு எழும்பவே மாட்டார் போல இருக்கு. என்ன எண்டு பாருங்கடா!” என்று ஏவிவிட்டாள்.

அடுத்தகணமே, “எழும்புங்க சித்தப்பா!” என்றபடி அவன்மீது பாய்ந்திருந்தனர் பிள்ளைகள். சற்று நேரத்துக்கு அவர்கள் மூவரினதும் சிரிப்புச் சத்தமே அந்த அறையை நிறைத்தது.

“தேத்தண்ணி ஊத்தப்போறன். நீயும் முகத்தைக் கழுவிக்கொண்டு வா, நிக்கி.” என்றவள் சின்னவர்களோடு வெளியே வந்தபோது யாருமே எழும்பியிருக்கவில்லை.

ஒரு சுதந்திர உணர்வு தலைதூக்க, இருவரையும் சமையலறைக் கட்டில் ஏற்றி இருத்திவிட்டு, காலையில் பால் தேநீர் தான் என்று கேட்டுத் தெரிந்து ஆற்றிக்கொடுத்தாள்.

முதல் நாளே யு டியூபில் பார்த்து வைத்ததுக்கு ஏற்ப, மாவோடு வாழைப்பழம் கலந்து, கொஞ்சமாய்ப் பேக்கிங் பவுடர், உப்புச் சேர்த்து, அதில் பாலும் கலந்து தோசைப் பதத்தை விட மெல்லிய இறுக்கமான பதத்தில் கட்டியில்லாமல் கரைத்து எடுத்தாள். தோசைக்கல்லை இதமான சூட்டில் வைத்து பட்டர் தடவி பேன் கேக்கினை செய்தாள். அதன்மீது நுட்டெல்லாவும் பூசி பிள்ளைகளுக்குக் கொடுக்க, விரும்பிச் சாப்பிட்டனர்.

அதற்குள் நிகேதனும் வந்துவிட, அவனுக்கும் தேநீர் கொடுத்தாள்.

“உனக்கு?”

“நான் பிறகு குடிக்கிறன். நீ குடி.”

அங்கேயே நின்று கொஞ்சமாக அருந்திவிட்டு அவளிடமும் நீட்டினான். அவள் திரும்பிப் பார்க்க அவன் கண்கள் சிரித்தது. சத்தமில்லாமல் வாங்கிப் பருகினாள் ஆரணி. சின்னவர்களையும் வைத்துக்கொண்டு ஒரு ரகசிய விளையாட்டு! ஒரு கோப்பையே இருவருக்குமான தேநீராயிற்று.

அவனுக்கும் பேன் கேக் செய்துகொடுத்தாள். “இப்பவேவா? பசிக்கேல்ல ஆரா.” அவனுக்கு இனிப்பு வகை பெரிதாகப் பிடிக்காது. அதுவும் காலையில் என்றால் சாப்பிடவே மாட்டான்.

“இண்டைக்குத்தான் முதன் முதல் செய்திருக்கிறன். எப்பிடி இருக்கு எண்டு சொல்லன்.” அவள் கெஞ்சிக் கேட்டபோது சிரித்துக்கொண்டு வாங்கிச் சாப்பிட்டான்.

“உங்கட சித்தி, சமையல்ல வரவர பரவாயில்லாம வாறாளடா!” அவளின் கண்களின் எதிர்பார்ப்புக்குப் பிள்ளைகளிடம் பதில் சொன்னான் அவன். கரண்டியாலேயே அவனுக்கு ஒன்று போட்டாள் ஆரணி. சின்னவர்களுக்குப் பெரிய சிரிப்பு. “சித்தப்பாக்கு சித்தி அடிக்கிறாள். என்ன எண்டு கேக்காம சிரிக்கிறீங்களேடா.” என்று அவர்களுக்குக் கிச்சுக் கிச்சு மூட்டி இன்னுமே சிரிக்க வைத்தான் அவன்.

அவன் உண்டதிலும் பாதி அவள் வயிற்றுக்கு உணவானது அவர்கள் இருவர் மட்டுமே அறிந்த ரகசியம்.

அமராவதி அம்மாவோடு மற்றவர்களும் எழுந்துகொள்ள, அதுவரையிருந்த அந்தச் சந்தோசம் மங்கிப்போயிற்று! காலை உணவை முடித்துக்கொண்டு, பிள்ளைகளை நிகேதன் ஆரணியோடு விட்டுவிட்டு நால்வருமாகக் கடைக்குக் கிளம்பினர்.

இவர்களைத் தவிர்த்துவிட்டுச் செல்வதாக அவர்கள் காட்டிக்கொள்ள, நிம்மதியாகத்தான் உணர்ந்தனர் இருவரும். அந்தளவில் நேற்றைய ஒரு நாளிலேயே மனதளவில் மிகவும் காயப்பட்டுப் போயிருந்தனர். அன்று மாலையே பிறந்தநாளை முடித்துக்கொண்டு கிளம்புகிறார்கள் தான் என்றாலும், எப்போதடா அந்தப்பொழுது வரும் என்று காத்திருந்தனர்.

பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு தோட்டத்துக்குச் சென்றான் நிகேதன்.

“நீயும் வாவன்.”

“சாப்பிடுறதுக்கு ஏதாவது எடுத்துக்கொண்டு வாறன். நீ போ!” என்று அவர்களை அனுப்பிவிட்டு, வாங்கி வைத்திருந்த மரவள்ளிப் பொரியலும் தண்ணீரும் எடுத்துக்கொண்டு சென்றாள். டெரெசில் அவள் அமர்ந்துகொள்ள மூவரும் ஓடிப்பிடித்து விளையாடத் தொடங்கினர்.

பாத்திருந்த ஆரணிக்கு அத்தனை அழகாயிருந்தது அக்காட்சி. நான்கு எட்டில் அவர்களைப் பிடித்துவிடலாம் என்று தெரிந்தும் பொய்யாகத் துரத்தும் நிகேதன். அவர்களின் கையில் அகப்பட்டுக்கொண்டு முகத்தைச் சோகமாகச் சுருக்கும் நிகேதன். மீசைக்கடியில் மிளிரும் அவன் சிரிப்பு. சிலநேரங்களில் பெரியவன் நெருங்கிவிட அவனிடம் அகப்படாமல் உண்மையாகவே வேகமெடுத்து ஓடும் நிகேதன். சின்னவனைத் தோளில் தூக்கிக்கொண்டு ஓடும் நிகேதன். வாய்விட்டுச் சிரிக்கும் நிகேதன். வியர்த்து வழியும் நிகேதன் என்று அவளின் கண்களிலும் மனதிலும் நிறைந்துகொண்டிருந்தான் அவளின் நாயகன்!

இப்படித்தான் பல்கலைக்கழகத்திலும். விளையாட்டு என்று வந்துவிட்டால் பேய் மாதிரி விளையாடுவான். சளைப்பதும் இல்லை களைப்பதும் இல்லை. அவள் போய் நீண்டநேரமாகக் காத்திருந்தாலும், அவனை அங்கிருந்து இழுத்துக்கொண்டு வருவது என்பது சுலபமான காரியமே அல்ல. நன்றாக விளையாடு விளையாடு என்று விளையாடிவிட்டு, “சாப்பிட என்னடி இருக்கு?” என்று அருகில் இடித்துக்கொண்டு வந்து அமருவான். “டேய் குப்பையா! வேர்வை நாறுது தள்ளி இரடா.” என்று தள்ளிவிட்டாலும் விடமாட்டான். வேண்டுமென்றே அவளோடு உரசுவான்.

“அடேய்! விடுங்கடா என்ன!” என்ற குரலில் சிந்தனை கலைந்து பார்த்தாள். அவனை நிலத்தில் விழுத்தி, அவன் மேலே அமர்ந்திருந்து உள்ளங்கால்களிலும் கழுத்திலும் இடுப்பிலும் என்று அவர்கள் கிச்சுக் கிச்சு மூட்ட அடக்கமுடியாமல் சிரித்துக்கொண்டிருந்தான் அவன்.

‘இப்படித்தானே நம் பிள்ளைகளோடும் விளையாடுவான்..’ அவள் விழிகளில் அந்தக் கனவு அழகாய் விரிந்தது. ‘குறைஞ்சது நாலு பிள்ளையாவது வேணும். சும்மா எல்லாரையும் மாதிரி ஆண் ஒண்டு பெண் ஒண்டு எல்லாம் காணாது.’ அவனின் குழந்தைகள் நால்வரும் அவனைச் சுற்றி நின்று ஆளுக்கு ஒரு பக்கமாக இழுத்துக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? இதழ்களில் புன்னகை அரும்பிற்று அவளுக்கு!

“எதுக்காம் இந்தச் சிரிப்பு?” அவளை உரசிக்கொண்டு அமர்ந்தபடி கேட்டான் அவன். பார்வை மட்டும் ஒருவரை ஒருவர் பிடிக்க என்று ஓடித்திருந்த சின்னவர்களின் மீது இருந்தது.

“நமக்கே நமக்கு எண்டு நாலு பிள்ளைகள் வேணும் நிக்கி. ஆசையாசையா நீயும் நானும் சேர்ந்து கண்ணுக்க வச்சு வளக்கவேணும். நல்லா படிப்பிக்கவேணும். அவேக்கு நாங்க நல்ல அம்மா அப்பாவா இருக்கோணும். இது எல்லாத்துக்கும் முதல் கயலின்ர கல்யாணம் நடக்கவேணும்.” அவள் சொல்வதை எல்லாம் சின்னப் புன்னகையோடு கேட்டிருந்தவனின் உடல், கடைசி வரியில் இறுகிப்போனது.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock