அப்படி அவள் சொன்னதற்குக் காரணம், நேற்று தாயிடம் அவன் கொடுத்த வாக்கு! வேதனையோடு விழிகளை அவன் மூடித் திறக்க, அவளின் விரல்கள் தேடிவந்து அவனுடைய விரல்களோடு பின்னிப் பிணைந்துகொண்டது! ஆறுதல் சொல்கிறாள்! அவளை அவன் எப்படி ஆற்றுப்படுத்தப் போகிறான்?
“இந்த நிலம நிறையக்காலத்துக்கு நீடிக்காது ஆரா! உன்ர நிகேதனை நீ நம்புற தானே?” அவள் முகத்தில் தன் விழிகளை நிறுத்தித் தீவிரமான குரலில் கேட்டான் அவன்.
“நான் நம்புற எல்லாத்துக்கும் இன்னொரு பெயர் என்ர நிக்கி!” என்றாள் அவள் தெளிவான புன்னகையோடு.
பிறந்தநாள் விழா அவர்களுக்குள்ளேயே ஆர்ப்பாட்டம் இல்லாமல் அழகாகவே நடந்தது. இரவு உணவையும் முடித்துக்கொண்டு ஒரு வழியாகப் புறப்பட்டனர். அதற்கு முன், “உங்கட அண்ணாவுக்கும் வயசு போகுது நிகேதன். எங்களுக்கும் ரெண்டு பிள்ளைகள் இருக்கினம். இனியாவது பொறுப்பா நடவுங்க. எல்லாத்திலையும் அவசரப் பட்ட மாதிரி பிள்ளை குட்டி பெறுகிறதிலையும் அவசரப்பட்டுடாதீங்க.” என்று நேராகவே சொல்லிவிட்டுப் போனார், மாலினி.
அறிவினால் சிந்தித்துப்பார்த்தால் அவர் சொன்னதில் பெரிய தவறில்லைதான். ஆனால், அவன் என்ன பெண்ணுக்கு ஆசைப்பட்டு மணந்தானா? இல்லை பொறுப்பற்று மணந்தானா? அவனுக்குத் தெரியாதா இந்த நிலையில் குழந்தை இன்னுமே அதிகப்படி என்று. இக்கட்டான சூழ்நிலையில் அவனைக் காலம் நிறுத்தியதை ஏன் யாருமே விளங்கிக்கொள்ள மறுக்கின்றனர்? டெரசில் நின்றிருந்தவனின் கொந்தளிக்கும் மனதைக் குளிர் காற்றாவது ஆற்றுமா என்று பார்த்தான். இல்லை என்று புரிந்து ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டான்.
அப்போது, மெல்லப் பின்னிருந்து அவனை அணைத்தாள் ஆரணி. அப்போதும் அவனிடம் அசைவில்லை.
“என்ர நிக்கிக்கு இந்த நேரத்தில என்ன யோசனை?” அவனுடைய வெற்று முதுகில் முத்தம் ஒன்றைக் கொடுத்துவிட்டுக் கேட்டாள்.
அவனிடம் எந்த மாற்றமும் இல்லை.
“அவனுக்குப் பிடிச்சமாதிரி சாரமும் சட்டையும் போட்டுக்கொண்டு நிக்கிறாள் அவனின்ர ஆரணி. ஆனாலும் பாக்காம நிக்கிறான். அவனுக்கு என்ன தண்டனை குடுக்கலாம்?” தனக்குத்தானே சொல்வதுபோலச் சொன்னவளின் பேச்சில் உதட்டினில் முறுவல் அரும்பப் பின்னால் கையைக்கொண்டுபோய் அவளை முன்னுக்குக் கொண்டுவந்தான் அவன்.
“ஆரான்ர நிக்கி எல்லாத்தையும் பாத்திட்டுத்தான் வந்தவன்.”
“என்னது? பாத்திட்டும்.. வந்தவனா? அவனுக்கு எவ்வளவு தைரியம்?” இருளிலும் ஈரலிப்பில் மின்னிய செவ்விதழ்கள் சிரித்துவிடத் துடித்தன. “இனி ஆரணி சாரமும் கட்டமாட்டாள் சட்டையும் போடமாட்டாள்.” என்றாள் அறிவிப்பாக.
அவளின் இடையோடு கைகளைக் கோர்த்தபடி, “நிக்கின்ர ஆராக்கு அவனுக்குப் பிடிச்சதை மட்டும்தான் செய்யத் தெரியுமாம்.” என்றான் அவன்.
“பிறகு என்னத்துக்காம் அவளின்ர நிக்கி யோசிக்கிறானாம்? அவன் கவலைப்பட்டா ஆரா தாங்கமாட்டாள் எண்டு தெரியாதாமா?” சொல்லும்போதே அவளின் குரல் உள்ளே போயிற்று.
மார்போடு தன்னவளைச் சேர்த்தணைத்துக்கொண்டான் அவன். மாலினி வார்த்தைகளால் எவ்வளவோ குத்தியும் திருப்பிக் கதைக்கவே இல்லையே. காரணம் அவன் சொன்ன ஒரு வார்த்தை! ‘என்ர ஆரா…’ அவன் நெஞ்சம் உருகிற்று.
“வாழ்க்கையில நிறையத்தூரம் நாங்க ஓடவேணும் போல இருக்கு ஆரா.” கனத்துவிட்ட குரலில் சொன்னான் நிகேதன்.
“ஓடுவம். எல்லாருமே மலைச்சுப்போய்ப் பாக்கிற அளவுக்கு ஓடுவம். ஆனா சேர்ந்து ஓடுவம். என்னை விட்டுட்டுத் தனியா ஓடாத. நான் தாங்கமாட்டன்.” என்றவளின் விழிகளிலும் தீவிரம்.
“உன்ன விட்டுட்டு நான் எங்கயடி போக?”
“இப்ப அறைக்க என்னை விட்டுட்டு நீ இங்க வர இல்லையா?” அந்தச் சின்ன விலகல் கூட அவளைக் காயப்படுத்தியிருக்கிறது. அதை ஈடுகட்டுகிறவன் போல அவளின் முகம் நோக்கிக் குனிந்து, தன் உதடுகளால் மருந்திட்டான். அறைக்குள் வந்து அவளுடனேயே கட்டிலில் சரிந்தான்.
“லைட் நிப்பாட்ட இல்ல.”
“பிறகு நிப்பாட்டு.” என்றவனின் நெருக்கம் இன்றைக்கு என்றுமில்லாத அளவில் இருந்தது.
“டேய்! இப்பிடியே போன எண்டு வை, அடுத்த மாசமே நீ ஒரு பிள்ளைக்கு அப்பா ஆகிடுவாயடா! விடு!” என்று, கிட்டத்தட்ட தன்னை அவனிடமிருந்து பிய்த்துக்கொண்டாள் ஆரணி.
நீண்ட நேரமாகியும் இருவரும் உறங்கவே இல்லை.
“என்ன யோசிக்கிறாய் நிக்கி?” அவன் மார்பில் தலை சாய்த்திருந்த ஆரணி மெல்லக் கேட்டாள்.
“பாக்கிற வேலை காணாது ஆரா. பின்னேரத்தில(மாலை) பார்ட்டைமா வேற வேலை ஏதும் பாக்கவேணும். அதுதான் என்ன செய்றது எண்டு யோசிக்கிறன்.” என்றான் அவன்.
இப்படியே போனால் படித்த படிப்புக்கான வேலை கிடைக்காமலேயே போகப்போகிறது. அதைத் தாங்கிக் கொள்வானா?
“உனக்குக் கவலையா இல்லையா?”
“உழைக்கவேணும் எண்டுறதை தவிர இப்ப வேற எந்த எண்ணமும் இல்லை.” என்றான் உறுதியான குரலில்.
தன்னையே உருக்கப்போகிறானா தன்னவன்? நெஞ்சில் பாரமேற, உனக்கு நான் இருக்கிறேன் என்று காட்டுகிறவளாக அவன் வயிற்றை இறுக்கிக் கட்டிக்கொண்டு மார்பில் முகம் புதைத்தாள் ஆரணி.
அடுத்தநாள் மாலை, கோதுமை மாவில் வெங்காயம் பச்சமிளகாய் கறிவேப்பிலை எல்லாம் சின்னச் சின்னதாக வெட்டிப்போட்டு, உப்பும் போட்டு ரொட்டிக்குக் குழைத்து வைத்திருந்தாள் ஆரணி. அனைத்தும் ரோசிகஜனின், ‘vvs cuisine’யின் உபயம். நிகேதனுக்குச் சுடச்சுட ரொட்டியும் உடன் சம்பலும் என்றால் மிகவுமே பிடிக்கும். எனவே, வேலை முடிந்துவந்து, உடம்பு கழுவி, ஹாலில் அமர்ந்தபிறகு அவனுக்கு ஒரு தேநீரை அருந்த கொடுத்துவிட்டு, ரொட்டி சுட ஆரம்பித்தாள்.
“கயல் வா சமையல் பழக.”
ஆரணி அழைத்தது காதில் விழாதது போன்று போனில் கவனமாக இருந்தாள் அவள்.
“சமையல் தெரியாம நான் மாமிட்ட பேச்சு வாங்குற மாதிரி நாளைக்கு நீயும் உன்ர மாமிட்ட பேச்சு வாங்கக் கூடாது. அதுதான் வா!” என்றவள், சமையல் கட்டில் இருந்தே நிகேதனைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டினாள்.
வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு முறைத்தான் நிகேதன். அண்ணியோடு சேர்ந்து அம்மா கதைத்தவற்றுக்குப் பழி வாங்குகிறாள். ‘பேசாம சமையடி!’ கண்ணாலேயே அவளை அடக்கினான். அவள் அடங்கினாள் தானே. “எனக்குச் சமையல் தெரியாது எண்டுறதுக்காக எவ்வளவு கதை கதைக்கினம். நாளைக்கு உன்ர மனுசன் வீட்டுல என்ர மாமிய பிழையா கதைச்சா எனக்குக் கோவம் வந்திடும்.” என்றாள் அவள் அப்போதும்.
“நீயும் வா நிக்கி! வந்து ஹெல் பண்ணு.” என்று அவனையும் விடவில்லை.
அவன் முறைக்க, “முந்தி(முன்னர்) மாதிரி நீ தனிப்பெடியன் இல்ல. குடும்பஸ்தன். பொறுப்பா இருக்கப் பழகு நிக்கி! வாவா வந்து வெங்காயத்தை வெட்டித்தா! கயல் நீ வந்து தேங்காயை துருவு. மாமியும் என்ர அம்மா மாதிரியே உங்களையெல்லாம் பொறுப்பில்லாம வளத்து வச்சிருக்கிறா!” என்றவளின் பேச்சில் பயந்துபோய்த் தாயைப் பார்த்தான் அவன்.
அவரோ கடுத்துவிட்ட முகத்தோடு எந்தக்கணமும் வெடிக்கலாம் என்கிற நிலையில் இருந்தார். இனியும் விட்டால் இது பிரச்சனையாக வெடித்துவிடும் என்று தெரிந்து சமையலறைக்கு விரைந்தான். “உனக்கு இப்ப என்னடி வேணும்?” அவளுக்கு மட்டுமே கேட்கும் குரலில் அவன் பல்லைக் கடிக்க, வராந்தாவை ஒருமுறை எட்டிப் பார்த்துவிட்டு உதடுகளைக் குவித்துக் காட்டினாள் அவள்.
தேங்காய் துருவ வந்த தங்கையிடம், “நான் அவளுக்கு ஹெல்ப் செய்றன். நீ போய்ப் படி!” என்று அனுப்பிவைத்தான். சொன்னதுபோலவே அவன் வெங்காயம் வெட்டிக்கொடுத்து, தேங்காயும் துருவிக்கொடுக்க, அதற்குள் ரொட்டி சுட்டு சம்பலும் அரைத்து முடித்தாள் ஆரணி.
அமைதியாகவே கழிந்தது அன்றைய இரவு உணவு.