அவள் ஆரணி 16

செண்டரின் நாட்குறிப்பேட்டில் தான் வந்துவிட்டதைப் பதிவு செய்துவிட்டு தனக்கான அறையை நோக்கி நடந்தாள் ஆரணி.

“போய்ட்டியா?” அதற்குள் நிகேதனிடமிருந்து வந்தது கேள்வி.

உதட்டினில் முறுவல் அரும்ப, “லவ் யூ டா!” என்று அனுப்பிவிட்டாள்.

இரண்டு வாரங்கள் அவளைக் கவனித்துத் திருப்தி உண்டானதால் வேலைக்குச் சேர்த்துக்கொண்டிருந்தார், அபிராமி. குறையில்லாத சம்பளம். நல்ல வேலை. தான் போடுகிற சட்டதிட்டங்களுக்குள் நடக்கவேண்டும் என்பதில் மட்டும் மிகவும் உறுதியாக இருந்தார். இதோ, அங்கே நான்காவது வாரத்தில் ஆரணி காலடி எடுத்துவைத்திருந்தாள். வேலையும் ஓரளவுக்குப் பிடிபட்டிருந்தது. பிடித்திருந்தது.

சொந்த நிறுவனத்தில், முதலாளியின் மகளாக ஏசி அறையில் கணனிக்கு முன்னே வேலை பார்த்துப் பழகியவளுக்கு இந்த வேலை ஆரம்பத்தில் முடியவே இல்லை. அந்த அளவுக்கு குழந்தைகள் அவளை இருத்தி எழுப்பினர். மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைக் கவனிப்பதற்குத் தான் முதலில் அவளுக்குப் பயிற்சி வழங்கப்பட்டது. குனிந்து குனிந்து குழந்தைகளைத் தூக்கியே நாரி(இடுப்பு) வலித்தது. அவர்களுக்கு உணவு கொடுத்து, பால் கொடுத்து, டயப்பர் மாற்றி என்று எல்லாமே முன்பின் பார்த்தறியாதவை. தாய்மையை உணரமுன்னே ஒரு தாய்க்கான பயிற்சியைப் பெற்றுக்கொண்டாள். சிரமமாகவே இருந்தாலும் அந்தச் சம்பளம் வேண்டும், அதைச் சேமிக்க வேண்டும், பழகினால் சரியாகிவிடும் என்று தன்னை அந்த வேலைக்குப் பழகுவதில் குறியாக இருந்து ஓரளவுக்கு வெற்றியும் கண்டிருந்தாள்.

நிகேதனிடம் இது எதையுமே பகிர்ந்துகொள்ளவில்லை. சொன்னால் நில் என்று ஒரே பிடியாக நின்று நிறுத்திவிடுவான். அவனைப்போலவே தன்னைத் தாங்கிய தந்தையின் நினைவும் வேலைக்கு என்று புறப்பட்டபிறகு அடிக்கடி வந்து போனது. அவர் கோபக்காரர் என்பதை அவள் அறிவாள் தான். ஆனால், ஒரு வேலைகூட கிடைக்கக்கூடாது என்கிற அளவுக்கு இறங்கி யோசிப்பாரா? ஒரு பக்கம் நம்பமுடியவில்லை என்றால் இன்னொரு பக்கம் என் அப்பாவா என்று வேதனை மனதை அரித்தது. பரவாயில்லை, என் தெரிவு தவறில்லை என்று அவருக்கு காட்டுகிற காலம் வராமலா போய்விடப்போகிறது? அன்றைக்கு அனைத்தையும் கேட்பாள்!

———–

அன்று சுகிர்தன் எழுவதற்கே நேரம் போயிற்று. இரவு கொழும்புக்கு ஒரு ஹயர் போய்வந்ததில் உடல் முழுவதும் அப்படி ஒரு சோர்வு. இன்னும் கொஞ்ச நேரம் என்னை உறங்கவிடேன் என்று கெஞ்சிய உடலைத் தூக்கிக்கொண்டு ஓடிப்போய் குளித்துவிட்டு வந்து அரக்கப்பரக்கத் தயாரானதில் ஒரு சினமும் கூடவே தொற்றிக்கொண்டது. அம்மா தந்த உணவை வேகமாக விழுங்கிவிட்டு வேனை எடுத்துக்கொண்டு குழந்தைகளை ஏற்ற ஓடினான்.

பத்து வீட்டுக் குழந்தைகளைத் தினமும் காலையில் கொண்டுபோய் டேக்கெயார் செண்டரில் விட்டுவிட்டு, கார்மெண்ட்ஸ் பெண்களை ஏற்றப் போகவேண்டும். கார்மெண்ட்டில் சரியாக அந்த நேரத்துக்கு அவர்களை இறக்காவிட்டால் அன்றைய ட்ரிப்புக்கான பணத்தை வெட்டிவிடுவார்கள். வங்கி லோனில் ஓடும் வேனுக்கு அப்படிச் செய்தால் லோனை எப்படிக் கட்டுவான்? வீட்டுச் செலவுகளை எப்படிப் பார்ப்பான்?

ஒருவழியாக குழந்தைகளை ஏற்றிவந்து டேக்கெயார் சென்டர் வாசலில் வேக வேகமாக இறக்கினான். ஒரு குழந்தையை வானிலிருந்து தூக்கித் தரையில் விட்டபோது தடுமாறி விழுந்துபோனாள். அந்த வாரம், இப்படி வந்திறங்கும் குழந்தைகளை வாசலில் இருந்து வளாகத்துக்குள் அழைத்துச் செல்லும் பொறுப்பு ஆரணிக்கும் இன்னொருத்திக்கும் வழங்கப்பட்டிருந்தது. முதல் வந்த வேனிலிருந்து இறங்கியவர்களை அழைத்துக்கொண்டு மற்றப்பெண் சென்றிருக்க, இந்தக் குழந்தைகளை அழைத்துப்போகக் காத்திருந்த ஆரணி ஓடிவந்து வீறிட்டு அழுத குழந்தையை வேகமாகத் தூக்கினாள்.

“இல்ல இல்ல. பிள்ளைக்கு ஒண்டும் நடக்கேல்ல. டொம்மா விழுந்திட்டாவா எங்கட செல்லம். நாங்க மண்ணுக்கு அடிப்பம் சரியா.” என்று தேற்றி, தரைக்கு ஒரு அடியையும் போட்டு அழுகையை நிறுத்தி முகத்தைத் துடைத்துவிட்டாள். காயம் எதுவும் படவில்லை என்பதை ஆராய்ந்து, அதற்குள் வந்துவிட்ட மற்றப் பெண்ணிடம் அவர்களை ஒப்படைத்தாள்.

“கொஞ்சம் கவனமா பாத்து இறக்குங்கோ. என்னவோ அரிசி மூட்டையைத் தூக்கிப் போடுற மாதிரி தூக்கிப் போடுறீங்க. உங்களை நம்பித்தானே தாய் தகப்பன் பிள்ளைகளை அனுப்பினம்.” என்றாள் அவனிடம்.

“பாக்காம கண்ணை மூடிக்கொண்டா இறக்கிறன். தவறுதலா நடந்திட்டுது. அதுக்குப் பெரிய லெக்சரே எடுக்காதீங்க! குழந்தை பயந்து அழுததே தவிரக் காயம் படேல்ல.” இருந்த சினத்துக்கு அவனும் சிடுசிடுத்தான்.

“செய்ற வேலையை ஒழுங்கா செய்யத் தெரியேல்ல. இதுல கோவம் வேற வருதா உங்களுக்கு? பயத்தில பிள்ளைக்கு மூச்சு அடைச்சிருந்தா என்ன செய்வீங்க? இதுவே உங்கட குழந்தையா இருந்தாலும் இப்பிடித்தான் தூக்கி எறிஞ்சிட்டு போவீங்களா?” அவனுடைய சினம் ஆரணியின் கோபத்தை இன்னுமே கிளறிவிட்டிருந்தது.

“அம்மா தாயே, செய்தது பிழைதான். மன்னிச்சுக் கொள்ளுங்க. போதுமா? பெரிய நியாய தேவதை. கதைக்க வந்திட்டா.” என்றுவிட்டு வேனுள் ஏறி, கதவை அறைந்து சாற்றிக்கொண்டு புறப்பட்டான் அவன்.

மாலை பிள்ளைகளை ஏற்ற வந்தவனிடம் முகமே கொடுக்கவில்லை ஆரணி. அவனும், “செல்லங்களே மெதுவா மெதுவா ஏறுங்க. விழுந்துடாதீங்க. அசைஞ்சிடாதீங்க. பிறகு ஆளாளுக்குக் கேக்கிற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிக் கட்டாது எனக்கு.” என்று, மறைமுக நக்கலோடும்,
அளவுக்கதிகமான நிதானத்தோடும் ஏற்றினான்.

“செய்றதை சரியா செய்தா கேள்வி என்னெண்டு வரும்?” என்றாள் ஆரணி.

“போதும்மா. என்னை விட்டுடுங்க. அதுதான் மன்னிப்பே கேட்டுடன் தானே. இப்ப என்ன கால்ல விழவோ?”

அப்போதும் தன் தவறை ஏற்றுக்கொள்ள அவன் தயாரில்லை என்றதும் நிதானமாக அவனை நோக்கினாள், ஆரணி.

“கைய நீட்டி வாங்குற காசுக்கு நியாயமா வேலை செய்றீங்க எண்டு உங்கட மனச்சாட்சி சொன்னா சரிதான். மற்றும்படி என்னட்ட நீங்க மன்னிப்புக் கேக்க வேண்டிய அவசியமே இல்ல.” என்றுவிட்டு அங்கிருந்து நடந்தாள், ஆரணி.

அவனுக்கே ஒருமாதிரி ஆகிவிட்டது. காலையில் இருந்த பதட்டம் இப்போது வடிந்திருந்தது. போகிறவளையே பார்த்துக்கொண்டு நின்றான். தான் சற்று அதிகமாகத்தான் கதைத்துவிட்டோம் என்று விளங்க தன்னையே மனதுக்குள் திட்டிக்கொண்டு புறப்பட்டான்.

——————————

அன்று சத்தியநாதனின் பிறந்தநாள். கோயிலுக்குப்போய் அப்பாவின் பெயரில் அர்ச்சனை செய்ய விரும்பினாள், ஆரணி. நிகேதனையும் அழைத்தாள்.

“நீ போ ஆரா. என்னைக் கூப்பிடாத.” என்று மறுத்தான் அவன்.

“அவருக்காக கோயிலுக்குப் போயிட்டு வாறதுல என்ன இருக்கு? எனக்காக வரமாட்டியா?”

“உனக்காக எங்கயும் வருவன். ஆனா ஒரு வேலையைக் கூடக் கிடைக்கவிடாம செய்து உன்னை வருத்தினவருக்காக வரமாட்டன்.”

“மாமியும் தான் எங்களைப் பற்றி நிறையச் சொன்னவா. அதுக்காக அவா நல்லா இருக்கோணும் எண்டு நினைக்கமாட்டியா நீ?”

அதன்பிறகு அவன் மறுக்கவில்லை. இருவருமாகச் சென்றனர். அப்பாவின் பெயரில் அர்ச்சனை செய்து, அவர் என்றைக்குமே நன்றாக வாழவேண்டும் என்று வேண்டிக்கொண்டு, அங்கேயே அமர்ந்துகொண்டவளுக்கு ஏனோ மனம் அவரையே சுற்றிச் சுற்றி வந்தது.

“வேலைக்கு நேரமாகுது. போவமா?” என்று அழைத்தான் அவன்.

“நீ போ நிக்கி. நான் கொஞ்சநேரம் இங்க இருந்திட்டு வீட்டை போறன். என்னவோ இங்க இருக்கோணும் மாதிரி இருக்கு.”

அவள் முகத்தையே ஒருநொடி கூர்ந்துவிட்டு அவளின் அருகில் தானும் அமர்ந்தான். “அப்பான்ர நினைவா இருக்கா?” கனிவோடு நோக்கிக் கேட்டான்.

கண்கள் இலேசாகக் கலங்கத் தலையை அசைத்தாள் அவள். “முன்னுக்கு வரவேணும், காசு பணம் சேர்க்க வேணும் எண்டு நினைச்சு ஓடி ஓடி உழைக்கிற இப்பதான் அவரைப்பற்றி கூட விளங்குது நிக்கி. உன்னைத் தவிர நான் கேட்ட எதையுமே அவர் மறுத்ததே இல்ல. எனக்காக என்ர சந்தோசத்துக்காக எண்டு மட்டுமே அவர் செய்த செலவுகளை இப்ப யோசிச்சுப் பாக்க மலைப்பா இருக்கு. பாசம் இல்லாம அப்பிடி வளக்கேலாதடா. என்ர பக்கம் எனக்கான நியாயம் ஆயிரம் இருந்தாலும் அவரின்ர மகளா அவருக்கு நான் செய்தது பெரிய பிழை தானே.” என்றாள் தன் தவறை உணர்ந்தவளாய்.

அவன் தலையை அசைத்து ஆமோதித்துக்கொண்டான். என்றைக்கு வீட்டை விட்டு வெளியே வந்தாளோ அன்றே அவள் செய்தது பெரும் தவறு என்று அவனுக்கும் தெரியும். அதனாலும்தான் திரும்பிப் போ என்று சொன்னான். அவள் கேட்கவில்லை. அதன் பிறகு அதைப்பற்றி பேசி அவளை நோகடிக்க அவனால் முடியாது. இன்று அவளே அதைச் சொல்லவும் அவளின் கரம் பற்றி அழுத்திக் கொடுத்தான்.

“கொஞ்ச நாள்ல இதெல்லாம் சரியாகும் எண்டு பொய் சொல்லமாட்டன் ஆரா. கொஞ்சக் காலம் எடுக்கும். அப்ப எல்லாம் சரியாகும். நான் சரியாக்கித் தருவன். என்னை நம்புறியா?” என்று கேட்டான் அவன்.

கண்ணீருடன் புன்னகைத்தாள் அவள். “உன்ன மட்டும் தான்டா நம்புறன். எனக்குத் தெரியும், எனக்காக என்ர நிக்கி என்னவும் செய்வான் எண்டு!” என்றாள் மனதில் இருந்து.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock