எல்லாப் பெண் பிள்ளைகளையும் போல்தான் அவளும். அப்பா என்றால் உயிர். அவருக்கும் அவள் அப்படித்தான். என்ன, அவருக்கு மற்ற அப்பாக்களைப்போல அவளின் உயரத்துக்கு இறங்கி வந்து, மண்டியிட்டு, தலைகோதி, மிட்டாய் வாங்கித்தரத் தெரிந்ததில்லை.
பாவாடை சட்டை கேட்டால் சேலை வரும். ஃபோன் கேட்டால் ஐபாட் வரும். சைக்கிள் கேட்டால் ஸ்கூட்டி வரும். கார் கேட்டால் புத்தம் புதிது வரும். ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் அவளைக் கேளாமலேயே அவளுக்குப் பிடித்ததைச் செய்து அசத்திவிட்டு, குறுஞ்சிரிப்புடன் அவளைக் கடக்கும் அப்பா. திடமான முடிவெடுக்கப் பழக்கிய அப்பா. நிமிர்ந்து நின்று எதையும் எதிர்கொள்ளப் பழக்கிய அப்பா. பிழை செய்தாலும் பரவாயில்லை பொறுப்பை எடுத்து முடிவுகளையும் நீயே எடு என்று கம்பனியில் அவளை அமர்த்திய அப்பா. அந்த அப்பா வளர்த்த வளர்ப்புத்தான் இன்றுவரை எந்தச் சூழ்நிலையிலும் தெளிவாகச் சிந்தித்து அவளைச் செயலாற்ற வைப்பதும். அப்படியான அப்பா ஏன் அவளின் மனதைப் புரிந்துகொள்ளாமல் விட்டுவிட்டார்?
ஒரு நெடிய மூச்சுடன் நிமிர்ந்தவளின் பார்வையில் பட்டார் யசோதா. எதிர்பாராமல் கண்டதில் மெல்லிய அதிர்வுடன் இலேசாக விழிகள் கலங்கிற்று. அவரையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
“வாங்கோ வாங்கோ யசோம்மா. இண்டைக்கு ஐயாவுக்குப் பிறந்தநாள் தானே. நான் மறக்கேல்ல பாத்தீங்களா?” ஐய்யரே முன்னுக்குவந்து பூசைப் பொருட்களை வாங்கினார்.
‘எழும்பிப் போ ஆரா. அம்மா உன்ன காணமுதல் எழும்பிப் போ!’ என்று உள்மனம் உத்தரவிட்டபோதும் அவளால் அசையமுடியவில்லை. இன்னொரு பக்க மனமோ, ‘நான் ஏன் போகவேணும். அவா வந்தா வந்திட்டு போகட்டும். கோயிலுக்கு ஆரும் வரலாம் தானே.’ என்று அடம்பிடித்தது.
கண்மூடி கடவுளிடம் பிரார்த்தித்துக்கொண்டு இருந்த யசோதாவின் மனதிலும் ஏதோ ஒரு நிரடல். நிர்ச்சலனமாக கடவுளை கும்பிட முடியாத ஒரு தடை. ஏன்? காரணம் புரியாமல் தன்னைச் சுற்றி விழிகளைச் சுழற்றினார். ஆரணியைக் கண்டதும் கோபமும் கண்ணீரும் சேர்ந்தே வந்தது. கொடியிடையில் விலையுயர்ந்த ஆடைகள் அணிந்து, மிடுக்குடனும் முகத்தில் சிரிப்புடனும் வளைய வந்தவள் எங்கே. வாடி, வதங்கி, கருத்து, மெலிந்து யாரோபோல் இருக்கும் இவள் எங்கே?
“கல்யாண வாழ்க்கை அமோகமாத்தான் போகுது போல.” நேரே அவளின் முன்னால் வந்து நின்று குமுறினார். ஆரணியின் முகம் சுருங்கிப் போயிற்று. அம்மா அப்பா இருவர் மீதும் மனக்குறைகளைச் சுமந்துகொண்டு இருந்தவளுக்கு எதிர்பாராமல் அன்னை வந்து நின்று கேள்வி கேட்டபோது சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை. கண்ணீர் தான் வந்தது. அவரின் கைகளுக்குள் புகுந்துவிட வேண்டும் போலொரு துடிப்பு எழுந்தது.
“இப்ப விளங்குதா என்னத்துக்கு அவன வேண்டாம் எண்டு சொன்னோம் எண்டு. ஆளும் கோலமும். கருகரு எண்டு கருத்து, மெலிஞ்சு, சாயம்போன ஒரு சட்டையோட. போட்டிருந்த செயின் எங்க? வெறும் கழுத்தோட நிக்கிறாய். இந்த வாழ்க்கையை வாழத்தான் ஓடி போனியா?” அவளை நல்லதொரு கோலத்தில் கண்டிருந்தாலாவது மனம் ஆறியிருக்கும் போலும்.
அன்னையின் பேச்சு ஆரணியைச் சுட்டது. “ஓடி போகேல்ல அம்மா. எனக்குப் பிடிச்ச வாழ்க்கையை வாழப்போறன் எண்டு சொல்லிப்போட்டுத்தான் வந்தனான்.” என்றாள் ரோசத்தோடு.
“உண்மைதான். நீ சொல்லிப்போட்டுத்தான் வந்தனி. பெத்த தாய் தகப்பனுக்கு ஒரு மகள் இதைவிடப் பெரிய பெருமையைத் தேடித்தரவே ஏலாது!” தான் அவளுக்கு அன்னை என்று பேச்சில் நிரூபித்தார், யசோதா.
முகம் கன்றிப்போயிற்று அவளுக்கு.
“நல்லபடியா உன்ன வளத்து விட்டுட்டோம் தானே. இனி உனக்கு நாங்க தேவையில்லை. வெளில வந்திட்டாய். எங்களை வயசு போற காலத்தில தனியா விட்டுட்டாய் என்ன? ஒற்றைப் பிள்ளை எண்டு பாத்துப் பாத்து வளத்தத்துக்கு நல்ல கைம்மாறு செய்திட்டாய். அதுவும் உன்ர அப்பா அந்த மனுசன் உனக்கு என்ன குறை வச்சவர் எண்டு இப்படி நடந்தனி?”
அன்று காலையில் இருந்தே அவருக்குத் தான் செய்தது பெரும் தவறு என்று தனக்குள்ளேயே குமைந்துகொண்டு இருந்தவள் அன்னையின் பேச்சில் இன்னுமே உடைந்து போனாள். ஆனாலும், என்னை மட்டுமே குற்றம் சாட்டுகிறார்களே என்கிற சிறுபிள்ளைக் கோபமும் உண்டாயிற்று. அதில், “அதுதான் ஒற்றை மகளின்ர மனுசனுக்கு வேலை தாறன் எண்டு சொன்ன அங்கிளிட்ட குடுக்க வேண்டாம் எண்டு அப்பா சொன்னவர் போல.” என்று நியாயம் கேட்டாள் அவள்.
முதலில் புருவம் சுருக்கி யோசித்துவிட்டு, வறட்சியான சிரிப்பு ஒன்றைச் சிந்தினார் யசோதா. “உன்ன நாங்க விளங்கிக்கொள்ள இல்லையோ எண்டு நிறையத்தரம் யோசிச்சு இருக்கிறன். ஆனா, நீதான் எங்களை விளங்கிக்கொள்ளவே இல்லை எண்டு இப்ப விளங்குது. உன்ர அப்பாக்கு எதிரியை கூட நேரடியா மோதி முன்னுக்கு வரத்தான் தெரியுமே தவிர முதுகுல குத்தத் தெரியாது. அப்பிடியானவர் உன்னைப் பின்னுக்கு நிண்டு தள்ளிவிடுவார் எண்டு நினைக்கிறியா?” என்று கேட்டார்.
சொல்கிறவர் சொன்னால் கேட்ட இவளுக்கு எங்கே போனது புத்தி என்று கோபம் வந்தது யசோதாவுக்கு. “அந்த வேலைய பறிச்சது அப்பாவா இருந்தா உன்ர மனுசன் பாக்கிற ட்ரைவர் வேலைய பறிக்க எவ்வளவு நேரமாகும்? இல்ல டெலிவரி போயா பாக்கிற வேலைய பறிக்க எவ்வளவு நேரமாகும். உன்ர மனுசன்ர டிரைவிங் லைசென்ஸை பறிச்சா எல்லாக் கதையும் முடிஞ்சுதே.” என்று சொல்லவும், அதுதானே என்று திகைத்துப்போய் அன்னையைப் பார்த்தாள், ஆரணி.
“உனக்கு உன்ர அப்பாவைப்பற்றியும் தெரிய இல்ல. உன்னைச் சுத்தி இருக்கிற மனுசரைப் பற்றியும் தெரிய இல்ல. முதல்ல மனுசரை படிக்கப்பழகு. இல்லாம வாழ்க்கைல முன்னுக்கு வரவே மாட்டாய்.” என்றவர் அதற்குமேல் அங்கே நிற்கவே இல்லை.
திகைப்புடன் அமர்ந்திருந்தாள் ஆரணி. யாரைப் படிக்கவில்லை என்கிறார் அம்மா. ராஜேந்திரன் அங்கிளையா? அன்று, ஒரு வேலை கிடைத்தாலே போதும் என்று இருந்தவர்கள் அதன் பின்னிருந்த அரசியலை ஏன் யோசிக்கப் போகிறார்கள்? ஆனால், இன்று யோசிக்க யோசிக்கத் தலை வெடிக்கும் போலிருந்தது.
உண்மைதானே. அலுவலக உத்தியோகம் கொடுக்கவேண்டாம் என்று தடுத்த அப்பா ட்ரைவர் வேலைக்கு மட்டும் எப்படிச் சம்மதிப்பார்? இதெல்லாம் அங்கிளின் வேலையா? ஏன்? அப்பாவோடான தொழில் போட்டியா. அல்லது அவள் மீது ஏதும் கோபமா? மகளைப்போன்று கொண்டாடுவாரே. என்னதான் நல்லமாதிரி பழகினாலும் அப்பாவோடான தொழில் போட்டி அவர்களை நசித்துப் பார்த்துவிட்டதோ? ராஜேந்திரனின் ராஜதந்திரம் மெல்லப் புரிந்தது. ஆனால், அதற்கு அவளின் நிகேதன் தான் கிடைத்தானா?
மனம் துடித்தது. ஆனாலும் அடக்கினாள். இது அவசரப்பட்டோ ஆவேசப்பட்டோ முடிவெடுக்கிற விடயமல்ல. யாருக்கெல்லாம் அவள் முன்னேறி காட்டவேண்டும் என்று நினைத்தாளோ அந்தப் பட்டியலில் ராஜேந்திரனும் சேர்ந்துகொண்டிருக்கிறார். அவ்வளவுதானே!
மெல்ல எழுந்து வீடு நோக்கி நடந்தாள். போகிற வழியிலேயே இப்போதைக்கு இதைப்பற்றி நிகேதனிடம் சொல்வதில்லை என்று முடிவெடுத்துக்கொண்டாள். இது தெரிந்தபிறகு அவரிடம் அவனால் வேலை பார்க்க முடியாது. முதலில் அதற்கு ஒரு வழி பார்க்கவேண்டும்.
இது எல்லாம் ஒரு பக்கம் ஓடினாலும் அவளுடைய அப்பா தன் உயரம் விட்டு இறங்கிவிடவில்லை என்பதில் அவள் மனம் பெரும் ஆறுதல் உற்றது.
———————-
செண்டரில், அடுத்த வருடம் பள்ளிக்கூடம் போகிற குழந்தைகளின் கலைநிகழ்ச்சிக்கான பயிற்சிகள் ஆரம்பித்திருந்தது. பத்துப் பிள்ளைகள் கொண்ட குழுவிற்கு பாடல் ஒன்றினைப் பழக்கவேண்டிய பொறுப்பு அவளுக்கு வழங்கப்பட்டிருந்தது. அதில், அன்று வேலை முடியவே ஐந்துமணி ஆகிப்போயிற்று. முற்றிலும் களைத்துப் போயிருந்தாள். தளர்ந்துபோன நடையில் வீட்டை நோக்கி நடந்து வந்துகொண்டு இருந்தவளின் பின்னால் கேட்ட வாகன ஒலிப்பானின் சத்தத்தில் திரும்பிப் பார்த்தாள். அது அவன். அந்த வாகனக்காரன் வேனைக் கொண்டுவந்து இவளருகில் நிறுத்தினான். கேள்வியுடன் ஏறிட்டாள் ஆரணி.
“வாங்க போற இடத்தில இறக்கி விடுறன்.”
அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “கேட்டதுக்கு நன்றி. நான் நடந்தே போவன்.” என்றுவிட்டு நடையைத் தொடர்ந்தாள் ஆரணி.
“மிஸ் மிஸ்! கோவிக்காம ஏறுங்க. அண்டைக்கு நடந்தது அண்டையோட முடிஞ்சுது. இன்றையில இருந்து சமாதானம் சரியோ. ஏறுங்க மிஸ்.” மீண்டும் அவளருகில் கொண்டுவந்து நிறுத்திவிட்டு வெகுவாகவே கெஞ்சினான், அவன்.
அவளுக்கு இருந்த களைப்பையும் மீறிச் சிரிப்பு வந்தது. ஆனாலும், செண்டரின் வாசலில் பார்த்த ஒரே காரணத்துக்காக அவனைப்பற்றி எதுவும் தெரியாமல் எப்படி ஏறுவது? “கோவம் ஒண்டும் இல்லை. உண்மையாவே நான் நடந்து போவன். நீங்க போங்கோ.” என்றுவிட்டு நடந்தாள்.
“ஐயோ மிஸ் நில்லுங்க. நீங்க நினைச்சு வச்சிருக்கிற அளவுக்கு நான் ஒண்டும் கெட்டவன் இல்ல. கொஞ்சம் கோவக்காரன் அவ்வளவுதான். அதுவும் அண்டைக்கு நேரம் போயிட்டு எண்டுற அவசரத்தில தேவையில்லாம கதைச்சிட்டன். இறங்கி வந்து தோப்புக்கரணம் போடவா?” என்றான் அவன்.
இப்போது வெளிப்படையாகவே முறுவலித்தாள் அவள்.
“இல்ல. இப்படியே விட்டுட்டு போனாலே போதும்.”
“நீங்க முதல் உங்கட கணவருக்கு ஃபோனை போடுங்கோ.”
அவள் கேள்வியாகப் பார்த்தாள்.
“போட்டு என்ர வேன் நம்பரை சொல்லுங்கோ. இதுல வீட்டை போறன். இன்னும் பத்து நிமிசத்தில ஃபோன் பண்ணாட்டி போலீஸ்ல சொல்ல சொல்லுங்கோ.” என்றான் அவன்.
விழிகளை விரித்தாள் ஆரணி. எப்படியாவது அவளை அழைத்துப்போக வேண்டும் என்று ஏன் அடம் பிடிக்கிறான்? அதற்கும் பதில் சொன்னான் அவன்.
“செய்த பிழை மனதுக்கையே கிடந்து குத்துது மிஸ்.” என்றான் சிரிப்புடன்.
உண்மையை ஒப்புக்கொண்டவனின் மீது நல்லபிப்பிராயம் ஒன்று மெதுவாக உதித்தது. அவனுடனேயே போய்விட்டால் பரவாயில்லையோ என்று இப்போது அவளும் யோசித்தாள். இல்லாவிட்டால் இருபது நிமிட நடை நடக்கவேண்டும். எனவே, அவன் சொன்னதுபோலவே வாகனத்துக்கு முன்னால் போய்நின்று வாகன நம்பர் தெரிகிற மாதிரி கூடவே அவனையும் விழுத்தி ஃபோட்டோ எடுத்து நிகேதனுக்கு அனுப்பி வைத்தாள். யார், என்ன என்று கேட்டுக்கொண்டு அடுத்த நொடியே அழைத்தான் அவன்.
அவனது அன்பில் கண்ணும் முகமும் மலர, அழைப்பை ஏற்று, நடந்ததைச் சொல்லி, “பத்து நிமிசத்தில வீட்டை வந்து நான் ஃபோன் பண்ணாட்டி போலீஸ்ல சொல்லு நிக்கி. ஃபோட்டோல இருக்கிறவர் தான் ஆள்.” என்றவள், “உங்கட லைசென்ஸ் தாங்கோ.” என்று கேட்டுவாங்கி அதிலிருக்கும் புகைப்படமும் அவனும் ஒன்றா என்று பார்த்து, “பெயர் சுகிர்தன் சண்முகநாதன்.” என்று சொல்லிவிட்டு ஏறிக்கொண்டாள்.
“சும்மா ஒரு கதைக்குச் சொன்னா கச்சிதமா பிளான் பண்றீங்க மிஸ் நீங்க.” என்று சிரித்தான் சுகிர்தன்.
“பின்ன வேலை செய்ற இடத்தில வாசல்ல பார்த்த ஒருத்தர நம்பேலுமா சொல்லுங்க?” அவனிடமே கேட்டாள் அவள்.
“இவ்வளவு மோசமா என்னைப்பற்றி நினைக்காதீங்க மிஸ்.” என்று சிரித்தாலும் அவள் சொன்னதை அவனும் ஏற்றுக்கொண்டான்.
“லவ் மேரேஜா?”
“ஓம். என்னெண்டு கண்டுபிடிச்சீங்க?”
“வா போ எண்டு கதைக்கிறீங்க. அதைவிடத் தெரியாதவனோட ஏறிப்போகாம நடந்து போ எண்டு அந்தப்பக்கம் இருந்து அதட்டலும் வரேல்ல. அதுதான்.” என்றான் அவன்.
அவளுக்குச் சிரிப்பு வந்தது. அவனை வா போ என்று அழைப்பது எல்லார் கண்ணிலும் படுகிறதே. “கம்பஸ்ல படிக்கேக்க பழக்கம். அங்க கூப்பிட்டது அப்பிடியே வருது.”
இல்லாவிட்டாலும் அவள் அப்படித்தான் அழைத்திருப்பாளாக இருக்கும். கம்பஸிலும் அவன் அவளுக்கு சீனியர் தானே. என்னவோ, அது அவளுக்கு வரவே இல்லை என்று எண்ணியவளின் முகத்தில் புன்னகை அரும்பிற்று.
“உங்கட ஆளைப்பற்றி நினைச்சு சிரிச்சது காணும். என்னைப்பற்றியும் விசாரிங்க மிஸ்.” என்றான் அவன்.
“அதுக்கு முதல் என்ர பெயர் ஆரணி. ஆரணி நிகேதன். ஆரணி எண்டே கூப்பிடுங்கோ.” என்றுவிட்டு, “இனி சொல்லுங்கோ உங்களைப்பற்றி.” என்றாள் அவனிடம்.
“சொல்லுறதுக்குப் பெருசா இல்ல ஆரணி. ஒரு அக்கா ஒரு தங்கச்சி. ரெண்டுபேரையும் கட்டிக்குடுத்திட்டன். இனி நான்தான் ஆராவது ஒருத்திய பாத்து தூக்கவேணும். அம்மா அப்பா வீட்டோட இருக்கினம். கொஞ்சம் கடன் இருக்கு. அதைக் குடுத்திட்டு கட்டினா வாறவளை சந்தோசமா வச்சிருக்கலாம் எண்டு பிளான்.” என்றான் அவன்.
அதற்குள் வீடு வந்துவிட இறங்கி, “உள்ளுக்கு வாங்கோ. ஒரு டீ குடிச்சிட்டு போகலாம்.” என்று இன்முகமாகவே அழைத்தாள் ஆரணி.
“இன்னொரு நாளைக்கு உங்கட அவரும் நிக்கேக்க கட்டாயம் வாறன் ஆரணி. இப்ப எனக்குக் கார்மெண்ட்ட்ஸ் ட்ரிப் ஏத்த நேரமாயிற்று. குறை நினைக்காதீங்கோ. வாறன் போயிற்று!” என்று வாகனத்தைத் திருப்பினான் அவன்.
“கொண்டுவந்து விட்டதுக்கு நன்றி சுகிர்தன்.”
“அண்டைக்குக் கதைச்சதுக்கு சொறி ஆரணி.” பதிலுக்குச் சொல்லிவிட்டுப் பறந்தவனை எண்ணிச் சிரித்துக்கொண்டு வீட்டுக்குள் நடந்தாள் ஆரணி.