அவள் ஆரணி 18 – 1

நாட்கள் மின்னலாய் நகர்ந்துகொண்டிருந்தது. சுகிர்தன் இப்போதெல்லாம் நல்ல நண்பனாக மாறியிருந்தான். அவன் கார்மெண்ட்ஸ் பெண்களை அழைக்கப்போகும் நேரத்தில் இவளைக் கண்டால் கொண்டுவந்து இறக்கிவிட்டுவிட்டுப் போனான்.

அன்றைக்கு நிகேதனுக்குச் சம்பள நாள். வரும்போதே கைநிறையப் பைகளோடு வந்தான். பார்த்தால் தின்பண்டங்கள். கொஞ்சமில்லை ஒரு தொகை. கூடவே அவன் வேலை செய்யும் இடத்திலேயே ஆளுக்கொரு பிட்சா வாங்கிக்கொண்டு வந்திருந்தான். பில்லை பார்த்தவளுக்குத் தலை சுற்றிவிடும் போலிருந்தது. அவர்களின் வாழ்வாதாரம் இருக்கும் நிலையில் இதெல்லாம் அதிகப்படியில்லை. அதற்கும் மேலே!

“என்ன நிக்கி இதெல்லாம்?”

அவனுக்கும் விளங்காமல் இல்லை. ஆனால், ஆசையாகக் கேட்ட தங்கையிடம் எப்படி மறுப்பான்? “இண்டைக்கு ஒரு நாளைக்குத்தான். விடு!” என்றான் சமாளிப்பாக.

“அவளுக்கு அதுவும் பொறுக்க இல்லையாம்.” என்றார் அமராவதி. எல்லாவற்றிலும் கணக்குப் பார்த்து கவனமாக இருக்கிற அவள் மீது அவருக்கு எப்போதுமே கோபம் தான். அதை இன்று காட்டினார்.

“இப்பிடி வீண் செலவு செய்றது சரி எண்டு சொல்லுறீங்களோ மாமி?” அவரிடம் நேராகவே கேட்டாள் ஆரணி.

“எங்களை மாதிரி ஆட்களுக்குச் சம்பளம் வாற திகதி மட்டும் தான் ஆசைப்பட்டதை வாங்கிச் சாப்பிடுற நாள். அதுவும் உன்ர கண்ணுக்கு குத்திட்டுது போல!” என்றார் அவர்.

“எல்லாம் சரி மாமி, எனக்கு விளங்குது. ஆனா, இதையே சொல்லி ஒவ்வொரு மாதமும் செலவு செய்தா எப்பதான் இந்த நிலமைல இருந்து வெளில வாறது? நாள் போகப்போக விலைவாசியும் செலவும் கூடுமே ஒழிய வாற வருமானம் கூடப்போறது இல்ல. அப்ப இப்பவே சேமிச்சு முன்னுக்கு வந்தாத்தானே உண்டு. ஒரு.. ஒரு வருசம் இறுக்கிப் பிடிச்சா கொஞ்சம் நாங்க முன்னேறலாம். பிறகு மாதத்துல ஒருநாள் சாப்பிட்டத பத்துநாள் சாப்பிடலாம் எல்லா.”

உழைப்புக்கு மாற்றுவழி ஒன்றைக் கண்டுபிடித்து நிகேதனை ராஜேந்திரனிடம் இருந்து வெளியே கொண்டுவந்துவிட வேண்டும் என்கிற வேகம் அவளைப் பேச வைத்தது. அவளின் மனதில் இருப்பதை அறியாத மாமியாரோ, “அவள் தானும் உழைக்கிறன் எண்டுற திமிர்ல கதைக்கிறாள். நீயும் கேட்டுக்கொண்டு இருக்கிறாய்.” என்றார் மகனிடம்.

‘வாய மூடு ஆரா!’ கண்ணாலேயே அதட்டினான் நிகேதன். அவனுக்கு இப்படி சாப்பாட்டு விசயத்துக்காகப் பிரச்சனை உருவாவது பிடிக்கவே இல்லை.

ஆரம்பித்துவிட்டதை அவளால் இடையில் விட முடியவில்லை. எப்படியாவது விளங்கப்படுத்தினால் அடுத்த மாதத்தில் இருந்தாவது இது மாறுமே. “ஒரு காலம் உங்கட மூத்த மகன் அனுப்பின காசுக்க வாழ்ந்தீங்க தானே. அப்ப நிக்கின்ர படிப்புச் செலவையும் பாத்து குடும்பச் செலவையும் நடத்தின எங்களுக்கு ஏன் இப்ப கூடுதலா வருமானம் வந்தும் மிச்சம் பிடிக்க முடியேல்ல? இப்பிடியே எல்லாத்தையும் செலவு செய்தா கயலினிக்கு கல்யாண செலவுக்கு என்ன செய்வீங்க?” என்று, விடாமல் கேட்டாள்.

“பாத்தியா, அவளுக்கு உன்ர தங்கச்சிக்கு செய்யப்போற கல்யாண செலவுதான் கண்ணுக்க குத்துது. எப்ப பாத்தாலும் அதையே சொல்லிக்காட்டுறாள். நீ செலவே செய்யவேண்டாம் தம்பி. நான் பெரியவனிட்ட கேக்கிறன். மாலினின்ர கால்ல விழுந்து எண்டாலும் அவளின்ர கல்யாணத்த செய்துவைப்பன். நீ உன்ர குடும்பத்தைப் பார். நல்லா மிச்சம்பிடி. முன்னுக்கு வா. நாங்கதான் உங்களை உருப்பட விடாம பிடிச்சு வச்சிருக்கிறோம். ஆசைப்பட்ட சாப்பாடு; அதை வாங்கினதுக்கு இந்தப் பாடா?” கண்கள் கலங்கிவிடச் சொன்னார் அமராவதி.

நிகேதனுக்கு ஆரணி மீதுதான் மிகுந்த கோபம். அடக்கிக்கொண்டு, “அவள் தான் என்னவோ கதைக்கிறாள் எண்டா நீங்களும் அத தூக்கிப்பிடிக்காம பாக்கிற வேலையைப் பாருங்கம்மா!” என்று அவரைச் சமாதானம் செய்தான்.

“இல்ல தம்பி. இது சும்மா கதைக்கிற கதையில்ல. எப்ப பாத்தாலும் அவளின்ர கல்யாணத்தைப் பற்றித்தான் கதை வருது. காசை மிச்சம் பிடிக்கோணும், நான் நல்லாருக்கோணும் எண்டு உங்கட அப்பா போனபிறகு நான் நினைச்சிருந்தா நீங்க மூண்டுபேரும் படிச்சு இருப்பீங்களா? இல்ல, தன்னைப்பற்றி மட்டுமே உன்ர அண்ணா நினைச்சிருந்தா நாங்க வாழ்ந்து இருப்போமா? ஒரு வேலைக்குப் போற திமிர்ல என்ன எல்லாம் கதைக்கிறாள் எண்டு நீயே பாக்கிறாய் தானே. அவளின்ர காசில நாங்க சாப்பிடுறதுக்குப் பதிலா பட்டினி கிடக்கலாம். உன்னால முடிஞ்சா ஒரு பிடி சோறு உன்ர காசுல போடு. இல்லாட்டி இப்பிடியே இருந்து செத்துப்போறன்.”

“என்ன கதைக்கிறீங்க..” என்றவளை பேசவிடாமல், “போதும் ஆரா!” என்று அதட்டி அடக்கினான் நிகேதன்.

“என்ன போதும்? அப்ப மாமி சொன்ன மாதிரித்தான் நான் நினைக்கிறன் எண்டு நீயும் நினைக்கிறியோ?”

அதோடு நிகேதனின் பொறுமை முற்றுப் பெற்றிருந்தது! “வாயை மூடிக்கொண்டு போடி உள்ளுக்கு!” என்றான் சத்தமாக.

அவனுடைய கோபத்தில் ஒருகணம் அதிர்ந்து நின்றுவிட்டாள், ஆரணி.

“எல்லாம் நீ குடுக்கிற இடம். உன்ர சொல்லுக்கு ஒரு மதிப்பில்ல. இனியாவது கொஞ்சம் கவனமா இரு! இல்ல உழைக்கிறன் எண்டுற துணிவில இன்னும் கதைப்பாள்!” வாய்க்கு வாய் காட்டுகிற அவளின் குணம் அமராவதி அம்மாவுக்குக் கொஞ்சமும் பிடிப்பதில்லை. இன்று மகனே அதட்டிவிட்டதில் தைரியமாகச் சொன்னார்.

“உழைக்காட்டியும் கதைப்பன் மாமி!” என்று அவரிடம் சொல்லிவிட்டு, “இனி என்ர சம்பளக்காச நான் தரமாட்டன் நிக்கி. அதேமாதிரி, ஹயர் போற காசும் அப்பிடியே என்ர கைக்கு வரவேணும். ராஜேந்திரன் அங்கிளிட்ட வாங்குற சம்பளத்தில் என்னவாவது செய்ங்கோ!” என்று அறிவித்துவிட்டு அறைக்கு நடந்துவிட்டாள் ஆரணி.

அவன் அறைக்குள் வந்தபோது அவள் இல்லை. வெளியே கொடியில் காய்ந்திருந்த உடைகளை எடுப்பது தெரிந்தது. வேண்டுமென்றே கதவு நிலையில் கையைக் கட்டிக்கொண்டு சாய்ந்து நின்றான். உடைகளைக் கையில் அள்ளிக்கொண்டு வந்தவள் அவன் முகத்தைப் பாராமல் நின்றாள். அவன் வழிவிடவில்லை. அவளைக் கதைக்க வைக்க முயல்கிறான் என்று புரிந்துவிட, ஒரு முறைப்பு முறைத்துவிட்டு அவனைப் பிடித்துத் தள்ளினாள். அவன் அசையாமல் நின்றான். விடாமல் அவள் தள்ள சிறு சிரிப்புடன் விலகினான்.

எப்போதுமே அவளின் கோபங்கள் அவனை வசீகரிப்பவை! இன்றும் அவளையே பார்த்திருந்தான்.

உடைகளைக் கட்டிலில் போட்டுவிட்டு, அயர்ன் பண்ணும் ஸ்டாண்டை எடுத்துவைத்து அயர்ன் பண்ண ஆயத்தமானாள். அவளின் ஒவ்வொரு செய்கையிலும் அவன் மீதான கோபம் தெறித்தது. இந்தக் கோபம் எவ்வளவு நேரத்துக்கு என்று பார்ப்போமே! கட்டிலில் கிடந்த உடைகளின் மீதே மல்லாந்து விழுந்தான் நிகேதன். கைகள் இரண்டையும் தலைக்குக் கொடுத்தபடி சிறு சிரிப்பும் ரசனையுமாக அவளையே பார்த்தான்.

ஆரணிக்கு வேலையே செய்ய முடியவில்லை. அவன் பார்வை போகுமிடங்கள் மிகவுமே தொந்தரவு செய்தது. இவன! வந்த ஆத்திரத்துக்கு நன்றாக நான்கு அடி போடவேண்டும் போல் கை துறுதுறுத்தது. அதைவிட எவ்வளவு நேரமாகத்தான் ஒரே பாண்ட்டை அயர்ன் பண்ணமுடியும்?

அவன் முகம் பாராமல் போய் மற்றதை எடுக்க முயல, அதற்கு விடாமல் அப்படியே கிடந்தான் அவன். அவளும் அவனைப் பாராமல் இழுத்து இழுத்துப் பார்த்தாள். இம்மியளவும் அசைக்கமுடியவில்லை.

அவள் கோபத்துடன் திரும்ப முயல, கையைப் பிடித்து இழுத்துத் தன்மேல் போட்டுக்கொண்டான்.

அவன் முகம் பாராமல் விடுபட முயன்றாள் ஆரணி. அதற்கு விடாமல் புருவங்களை உயர்த்தி என்ன என்று கேட்டான் நிகேதன்.

“நான் உன்னோட கோவம்!”

“என்னத்துக்குக் கோவமாம்?”

“மாமி கயலின்ர கலியாணத்தைப்பற்றி சொன்னதுக்குப் பேசாம இருந்தனி தானே. நீயும் என்னை அப்பிடித்தான் நினைக்கிற என்ன?”

“அமைதியா இருக்கிறதுக்கு அது மட்டும் அர்த்தமில்லை ஆரா. என்ர ஆராவைப்பற்றி எனக்குத் தெரியும் எண்டுறதும் வரும்.” என்றான் அவன்.

அவள் அவனையே பார்க்க, “எனக்கு உன்னிலதான் கோவம் வந்தது. அவா கதைச்சா அதையே நீ என்னட்டையும் கேப்பியா? என்ர நிக்கிக்கு என்னைப்பற்றித் தெரியும் எண்டு நினைக்க மாட்டியா?”என்று கேட்டான்.

அவள் மெல்ல உதட்டைக் கடித்தாள். தன் தவறு புரிவது போலிருக்க, “அப்ப என்னிலதான் பிழையா?” என்றாள் உள்ளே போய்விட்ட குரலில்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock