“உன்னில ஒரு பிழையும் இல்ல. இனி அப்பிடிக் கேக்காத எண்டு சொல்லுறன். அதைவிட, சாப்பிடுற சாப்பாட்டுக்கு சண்டை வாறது ஒரு மாதிரி கேவலமா இருக்கு ஆரா.” என்று தன் மனதைச் சொன்னான் அவன்.
அவளுக்கும் புரிந்தது. ராஜேந்திரன் மூலம் உருவான ஒருவிதக் கோபம் தானே அவளுக்குள்ளும் புகைந்துகொண்டு இருப்பது. அதை அவனிடம் சொல்ல முடியாதே. “இனி இப்பிடி கதைக்கேல்ல.” என்றவள், “சம்பள விசயம் நான் சொன்னது சொன்னதுதான்!” என்றாள் அழுத்தமாக.
அவன் உதட்டினில் முறுவல் மலர்ந்தது. “சரியடி வாயாடி! ஆனா இந்தக் காசையெல்லாம் வச்சு என்ன செய்யப்போறாய்?” என்று வினவினான்.
“காரணம் சொன்னாத்தான் தருவியோ?” கோபத்துடன் கேள்வி எழுப்பியவளின் சிவந்திருந்த மூக்கைப் பிடித்து ஆட்டினான் நிகேதன். “என்ன ஆளடி நீ? சூடேறினாத்தான் கடுகு கூட வெடிக்குது. உன்ன லைட்டா தட்டினா காணும் போல இருக்கே.” என்று கேலி செய்து சிரித்தான்.
——————-
அன்று அவர்களின் கலைநிகழ்ச்சி. நிகேதனையும் விடுமுறை எடுக்கவைத்து அழைத்துக்கொண்டு டேக்கெயார் செண்டருக்கு வந்திருந்தாள் ஆரணி. பார்க்கும் இடமெங்கும் பலவண்ண மலர்களாய் குழந்தைகள். பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை நிகேதனுக்கு. கூடவே, மிகுந்த கவனத்துடன் ஓடி ஓடி அவர்களைக் கவனித்த ஆரணியையும் தனக்குள் வியந்து பார்த்தான். அதுவரை, அவள் அவனுக்குச் செல்லப் பெண்டாட்டி. இங்கோ பொறுப்புள்ள பெண்ணாக மிடுக்குடன் மிளிர்ந்தாள்.
மண்டபத்தில் பெற்றோர்களோடு ஒருவனாக அவனும் அமர்ந்திருக்க, அடுத்ததாக அவளின் நிகழ்ச்சி தொடங்க இருந்ததில் மேடையின் அருகில் குழந்தைகளோடு நின்றிருந்தாள் ஆரணி. இத்தனை நாட்களாகச் சொல்லிக் கொடுத்தத்தை மறக்காமல் செய்வார்களா இல்லை மேடையில் நின்று திருதிரு என்று விழிப்பார்களா என்கிற பதட்டம் அவளுக்கு. கூடவே, அவள் பொறுப்பெடுத்த நிகழ்வு ஒன்று முதன் முதலாக மேடையேறப்போகிற பரபரப்பும்.
நிலா நிலா ஓடிவா பாடல் தான் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. நிலாவாக, மலையாக, மல்லிகைப்பூவாக, பட்டமாக, பம்பரமாக என்று குழந்தைகளே உருமாறி இருந்தனர். அந்தந்தப் பாத்திரம் ஏற்றவர்கள் பாடிக்கொண்டே அதற்கேற்ப நடிக்கவும் வேண்டும்.
ஒரு வழியாக அவளின் குழந்தைகள் மேடையேறினர். அவர்கள் விட்ட குட்டிக் குட்டித் தவறுகளும், மறந்துபோனதில் வாயில் கையை வைத்துக்கொண்டு விழித்ததும் பேரழகைக் கொடுத்துவிட, அவர்களின் மேடையேற்றம் கண்கொள்ளாத காட்சியாக அமைந்துபோயிற்று. என்னவோ தன் சொந்தக் குழந்தையே மேடை ஏறியது போன்று ஆரணிக்குச் சொல்லில் வடிக்க முடியாத சந்தோசம்.
அவர்கள் மேடையிலிருந்து இறங்கியதுமே நிகேதனைத்தான் திரும்பிப் பார்த்தாள்.‘வாவ் ஆரா!’ என்று விரல்களால் அபிநயித்துக் காட்டினான் அவன். அதில் மலர்ந்து சிரித்தாள் ஆரணி. ஒருவழியாக நிகழ்ச்சிகள் முடிய, பெற்றவர்களோடான நட்புடன் கூடிய உரையாடல்கள், உபசரிப்புக்கள் எல்லாம் முடிந்து கையில் ஒரு இரண்டு வயது சுட்டியுடன் நிகேதனிடம் வந்து சேர்ந்தாள் ஆரணி.
குழந்தையை இடுப்பில் பாந்தமாக வைத்திருந்தவளின் தாய்மையில் அவன் மனம் சிக்குண்டது. “மாமாட்ட வாறீங்களா செல்லம்?” ஆசையோடு கையை நீட்டிக் கூப்பிட்டான்.
அவள் மறுத்து இவளின் கழுத்தில் முகம் புதைக்க, “எனக்கு எப்ப பேபி பெத்துத் தரப்போறாய் ஆரா?” என்று, ஏக்கமும் ஆசையுமாகக் கேட்டான் நிகேதன்.
அவள் மனமும் ஏங்கிற்று. “எனக்கும் ஆசையாத்தான் இருக்கு நிக்கி.” என்றாள் கையிலிருந்த குழந்தையைப் பார்த்தபடி.
“பெறுவமா?” என்று கேட்டவனை வேதனையோடு ஏறிட்டாள் ஆரணி. கணவன் மனைவி இருவருக்குமே குழந்தை மீதான ஆசை வந்திருந்தாலும் காலம் இன்னும் அதற்கு வழிவகுக்கவில்லையே.
“பெத்தா, நான் வேலைக்குப் போகேலாது. உனக்கு வீட்டுல நிக்கவே நேரமில்லை. பிறகு எப்பிடிடா பிள்ளையச் சந்தோசமா வளப்பம்?” நிகழ்காலத்தின் நிதர்சனத்தை எடுத்து உரைத்தாள் ஆரணி. அவனுக்கும் புரிந்தது. தன் இயலாமை கொடுத்த சினத்தில் அதுவரை இருந்த மலர்ச்சி குன்ற முகத்தைத் திருப்பிக்கொண்டான்.
ஆரணிக்கும் அவன் மனநிலை விளங்கிற்று! “மாமாட்ட போறீங்களா செல்லம்?” அவனைச் சமாளிக்க எண்ணிக் கொடுக்கப்போக அவளோ மறுத்து இவளை இன்னுமே இறுக்கிக் கட்டிக்கொண்டு உதடு பிதுக்கினாள்.
“சரிசரி! நீங்க அழவேண்டாம்!” என்று சமாதானம் செய்துவிட்டு, “மாமா கூடாது என்ன? அவருக்கு அடிப்பமா? பிள்ளையை அழவைக்கிறார்.” என்றபடி அவள் அடிக்க, அவன் விலக, இவள் துரத்தி அடிக்க, இதைப் பார்த்துக்கொண்டிருந்த குழந்தையோ வட்ட விழிகள் விரிந்து மின்ன சிரிக்கத் தொடங்கியிருந்தாள்.
அதில் நிகேதனின் மனவாட்டமும் மறைந்துபோய் முகத்தில் சிரிப்பு வந்திருந்தது. “நான் அடிவாங்கினா உங்களுக்குச் சிரிப்பா இருக்கா டார்லிங்!” அவளைக் கிச்சுக் கிச்சு மூட்டி இன்னும் சிரிக்க வைத்தான்.
“இவ்வளவு ஆசை இருக்கிறவே சொந்தமா ஒரு குழந்தைக்குச் சொந்தக்காரர் ஆகவேண்டியது தானே.” என்று ஒரு குரல் பின்னிருந்து கேட்டது.
இருவரும் திரும்பிப் பார்க்க அங்கே சுகிர்தன் வந்துகொண்டிருந்தான்.
“நிக்கி, இவர்தான் சுகிர்தன். சுகிர்தன் இவ..” என்று அவள் சொல்லும்போதே, “உங்கட அவன் அவர்.” என்றான் அவன்.
“சுகிர்தன்ன்ன்ன்..”
“ஓகே ஓகே நான் ஒண்டும் சொல்லேல்ல!” என்று அவளைச் சமாதானப்படுத்திவிட்டு, “ஹாய் நிகேதன், நான் சுகிர்தன். உங்கட வைஃப்போட சண்டை பிடிச்சவன்.” என்று கரம் நீட்டினான் அவன்.
“அந்த வைஃபை கட்டின பாவப்பட்ட புருசன் நான்தான்.” என்று தானும் கையைக் கொடுத்தான் நிகேதன்.
பக்கென்று சிரித்துவிட்டிருந்தான் சுகிர்தன்.
“நிக்க்கி!” என்று ஆரணி பல்லைக்கடிக்க, “சுகிர்தன்! நீங்க சும்மா சும்மா என்ர ஆராவ பகிடி செய்றேல்ல சரியோ? எனக்குப் பிடிக்காது!” என்று, முகத்தைத் தீவிரமாக வைத்துக்கொண்டு மெய்போலவே சொன்னான் நிகேதன்.
“நடிக்காதடா நீ! உன்னைப்பற்றி எனக்குத் தெரியும்!” என்று கணவனின் முதுகிலேயே ஒன்று போட்டாள் ஆரணி.
“என்ன அநியாயம் இது? ஆண்வர்க்கம் அடிவாங்கியே வாழவேணும் போல இருக்கே. யார் போட்ட சாபம் இது?” என்று நிகேதனுக்காகக் குரல் கொடுத்தான் சுகிர்தன்.
“ஹல்லோ! ரெண்டுபேருக்கும் என்னைப் பாத்தா எப்பிடித் தெரியுது? என்னை வச்சுத்தான் உங்க ரெண்டு பேருக்கும் பழக்கமே வந்திருக்கு. இப்ப என்னையே போட்டுத் தாக்குறீங்களா? இருங்க சேர்த்த மாதிரியே ரெண்டுபேருக்கையும் சண்டையை போட்டு பிரிச்சு விடுறன்!” என்று கருவினாள் அவள்.
ஒருவரை ஒருவர் வாருவதும் சிரிப்பதுமாய் நட்புடன் கூடிய உரையாடல் வெகு இயல்பாய் அவர்களுக்குள் உருவாகிப்போக, நிகேதனை சுகிர்தனுக்கும் சுகிர்தனை நிகேதனுக்கும் மிகவுமே பிடித்துப் போனது.
“ஒரு நிமிசம் நிக்கிறீங்களா? நான் கூட்டிக்கொண்டு போற பிள்ளைகள் எல்லாம் ரெடியா எண்டு பாத்துக்கொண்டு வாறன்.” என்று நடந்தவனிடம், “அவே பி ப்லோக்ல நிப்பினம் எண்டு நினைக்கிறன் சுகிர்தன்; பாருங்கோ.” என்று சொல்லியனுப்பினாள் ஆரணி.
அவன் போனதும், “நிக்கி, அந்த வேன் எவ்வளவுக்கு வாங்கினவர், என்னென்டு வாங்கினவர் எண்டு அவரிட்ட ஒருக்கா விசாரி.” என்றாள் ஆரணி.
கேள்வியாக அவன் பார்க்க, “அவரின்ர குடும்பமும் எங்களை மாதிரித்தான். முழுக்காசும் குடுத்து வாங்கியிருக்க மாட்டார். ஒருக்கா ஏதோ கதையில லோன் ஓடுது எண்டு சொன்னவர். நீ ஒருக்கா வடிவா விசாரி.” என்று மீண்டும் சொன்னாள் ஆரணி.
காரணம் பிடிபடாதபோதும், சுகிர்தன் வந்தபோது விபரம் கேட்டுக்கொண்டான் நிகேதன்.