அவள் ஆரணி 20

நிகேதன் அவர்களைப் பஸ் ஏற்றி அனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்தபோது, “என்ர மாமி ஊருக்கு போய்ட்டா! என்ர மச்சாளும் சேர்ந்து போய்ட்டா! யேஏஏ..!” என்று, கத்திக்கொண்டு ஓடிவந்து அவன் தோள்களைப்பற்றித் துள்ளினாள் ஆரணி.

அவனோ முறைத்தான். “என்ர அம்மாவும் தங்கச்சியும் உனக்கு அவ்வளவு கொடுமைக்காரராவோ தெரியினம்?” அவனும் சற்று ஆசுவாசமாகத்தான் உணர்ந்தான். என்றாலும் காட்டிக்கொள்ளவில்லை.

“ஹல்லோ பொஸ், எனக்கு இல்ல எங்களுக்கு! உண்மையைச் சொல்லு, இப்ப உன்ர மனது என்ன சொல்லுது? அப்பாடி போயிட்டினம். இனி கொஞ்ச நாளைக்கு நிம்மதி எண்டு சொல்லுதா இல்லையா?” அவன் முகத்தின் முன்னே விரல் நீட்டிக் கேட்டவளின் விரலைப் பற்றி இழுத்தான் அவன்.

“கட்டின மனுசனிட்ட விரல் நீட்டிக் கதைப்பியா?” அவனது பார்வை மாறியதிலேயே என்ன செய்யப்போகிறான் என்று புரிந்துவிட, வேகமாக அவனிடமிருந்து நழுவி கலகலவென்று சிரித்தபடி ஓடத் தொடங்கினாள் ஆரணி.

“தப்பி ஓடினதா நினைப்போ?” இடுப்பில் கைகளை வைத்துக் கிண்டல் சிரிப்புடன் கேட்டான் நிகேதன்.

“முடிஞ்சா பிடிடா!” என்றவளை அவள் எதிர்பாரா நொடியில் துரத்தத் தொடங்கினான் அவன்.

ஒருகணம் திகைத்து நின்றாலும் அடுத்தகணமே வேகமாக அவர்களின் அறைக்குள் நுழைந்து, அங்கிருந்து டெரஸ் கதவைத் திறந்துகொண்டு தோட்டத்துக்குப் பாய்ந்திருந்தாள் ஆரணி.

“எங்க ஓடுறாய் எண்டு நானும் பாக்கிறன்.”

அடக்க முடியாமல் சிரித்தபடி, “முதல்ல பிடிடா! மிச்சத்தைப் பிறகு பாக்கலாம்!” என்று, போக்குக்காட்டி அவனை இன்னுமே உசுப்பேற்றி அவன் வேகம் கொண்டதும் பிடித்துவிடப்போகிறான் என்று தெரிந்து கிணற்றைச் சுற்றி ஓடத்தொடங்கினாள்.

நிகேதன் நிதானித்தான். கிணற்றைச் சுற்றி ஓடினால் ஓடிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். நடுவால் பாயவும் முடியாது. எனவே, “ஒழுங்கு மரியாதையா நீயே வந்திடு. நானே பிடிச்சனோ மகளே அனுபவிப்பாயடி!” என்று இப்போது அவன் விரல் நீட்டி மிரட்டினான்.

“முதல் பிடி மச்சி! பிறகு வீரத்தை காட்டலாம்.” என்று சவால்விட்டாள் அவள்.

மனதுக்குள் அவளைச் சிக்கவைக்கத் திட்டம் தீட்டியபடி, “அப்ப உன்ன பிடிக்கேலாது எண்டு சொல்லுறாய்!” என்று பேச்சை வளர்த்தான் அவன்.

“ம்ஹூம்!”

“பிடிச்சா?”

“நீ என்ன கேட்டாலும் தருவன்!” என்று அவள் பேச்சில் கவனம் செலுத்திய கணத்தில் வாளியில் இருந்த தண்ணீரை வேகமாக அவளை நோக்கி வீசியிருந்தான் அவன்.

“அடே…ய்!” அவள் சமாளித்து நிமிரும் முன்னே பாய்ந்து, அவளைப் பிடித்தான்.

“ஆருக்கு(யாருக்கு) விளையாட்டு காட்டுறாய்? இதுல வீரத்தை காட்டுறதோ?” என்றவன் கொடுத்த தண்டனையில் அவனுக்குள்ளேயே புதைந்திருந்தாள் ஆரணி.

—————-

அன்று செண்டரில் இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து குழந்தைகளோடு பில்டிங் பிளாக்ஸ் விளையாடிக்கொண்டிருந்தாள் ஆரணி. கூடவே மெல்லிசையாய் அறையின் ஒரு மூலையில் இருந்து சிறுவர்களுக்கான பாடல் கசிந்து வந்து கொண்டிருக்க, அதற்கு ஏற்ற பாவங்களை அவர்களைச் செய்யவைக்கப் பழக்கிக்கொண்டிருந்தாள்.

அதாவது விளையாட்டோடு விளையாட்டாக ஒரு பாட்டுக்கு ஆடக்கற்றுக்கொடுக்க வேண்டும்.

ஒரு குழந்தை தூங்கி வழிந்தது. மற்றவள் அவளைத் தட்டிவிட்டு, “அனு! படுக்கிறேல்ல. படுக்கிற நேரம் முடிஞ்சுது. இங்க பாருங்கோ இப்படிச் செய்யவேணும்.” என்று அசைவுகளைச் சொல்லிக்கொடுக்க குழந்தை அனுவோ கொட்டாவி விட்டபடி சிணுங்கினாள்.

பார்த்துக்கொண்டிருந்த ஆரணிக்குத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

அங்கு அப்படித்தான். ஒன்பதுக்குக் காலைச் சாப்பாடு. கொஞ்ச நேரம் வெளியே விளையாட்டு. பிறகு ஏதும் ரைம்ஸ். பிறகு அறைக்குள் ஏதும் கைவினைகள் செய்வது, கிளேயில் விளையாடுவது, வரைவது, பாட்டுக் கேட்பது இப்படிக் கழியும். பன்னிரண்டுக்கு டான் என்று வந்திறங்கும் உணவைக் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். ஒரு மணிக்கு உறங்கவிட வேண்டும். இரண்டரையில் இருந்து எழுப்பி அவர்களை இப்போது மாதிரி ஏதாவது செய்யவைக்க வேண்டும். எல்லாமே புரோகிராம் செய்யப்பட்ட கணணி போன்று இயங்கவேண்டும். அதுதான் செண்டரின் நிர்வாகி அபிராமியின் சட்டத்திட்டம்.

குழந்தைகளால் அப்படி நேரா நேரத்துக்கு அனைத்தையும் செய்ய முடியுமா, என்ன? இதை ஒருமுறை அவரிடம் கேட்டபோது, “ஆரணி! இந்த செண்டரை பத்து வருசமா நடத்திறன். உம்மை விட எனக்கு அனுபவம் கூட, ரூல்ஸ்ஸ மட்டும் ஃபாலோ பண்ணுங்கோ பிளீஸ்!” என்றுவிட்டிருந்தார் அபிராமி.

மீண்டும் மற்றவள் தட்டி அனுவை எழுப்பிவிட, அவளின் சிணுங்கல் அழுகையாக மாறிற்று. அதற்குமேல் பொறுக்கமாட்டாமல், “சிந்து மிஸ்! அனுவுக்கு இண்டைக்கு முழுக்க உடம்பு சோர்வாத்தான் இருக்கு. அதால நான் கொஞ்சநேரம் அவளைப் படுக்கவைக்கிறன்.” என்றுவிட்டு, அவளின் பதிலை எதிர்பாராமல் அருகிலிருந்த குழந்தைகள் உறங்கும் அறைக்கு அனுவைக் கொண்டு நடந்தாள்.

அபிராமி பார்த்தால் திட்டுவார் என்று தெரிந்தும் இப்படி நடந்துகொள்ளும் ஆரணியை என்ன செய்வது என்று தெரியாமல் மற்றக் குழந்தைகளைக் கவனித்தார் சிந்து.

சிந்து பயந்தது போலவே வகுப்புகளை மேற்பார்வையிட்டுக்கொண்டு வந்த அபிராமி, நடப்பதைக் கண்டுவிட்டு புருவங்களைச் சுருக்கி ஆரணியை ஏறிட்டார்.

நடந்ததை அவள் சொல்ல, “அப்பிடிக் கண்ட கண்ட நேரம் படுக்க விடேலாது ஆரணி. அதுக்கு எண்டு ஒரு நேரகாலம் இருக்கு. நீங்க நினைச்சபடிதான் நடப்பீங்க எண்டால் பிறகு என்னத்துக்கு இங்க ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் எல்லாம் போட்டுவச்சிருக்கு?” என்று கேட்டார் அவர்.

“இல்ல மிஸ் குழந்தை அவள். நித்திரை வரேக்க தானே நித்திரை கொள்ளலாம்.” தன்மையாகவே பதிலுரைத்தாள் ஆரணி.

“அப்ப எப்ப பிள்ளைகள் டிசுப்லின் பழகிறது. அந்த அந்த நேரத்தில தான் அதை அதைச் செய்யவேணும். ‘இவ்வளவு காசு கட்டுறோம், பிள்ளைகளுக்கு என்ன சொல்லிக் குடுத்தீங்க’ எண்டு பேரன்ட்ஸ் வந்து பிறகு எங்களிட்டத்தான் கேப்பீனம். . அதுக்கு நீங்களா பதில் சொல்லுவீங்க?” கறார் குரலில் மறுத்துரைத்தார் அவர்.

“மூண்டு வயசுக் குழந்தைக்கு என்ன டிசுப்லின் மிஸ் பழக்கிறது?”

அவர் அவளை நிதானமாக ஏறிட்டார். “இங்க இருக்கிற விதிமுறைகளின்படி குழந்தைகளைக் கவனிக்கிறதுதான் உங்கட வேலை. விதிமுறைகளை மாற்றியமைக்கிறது இல்லை! இனியும் இப்பிடி நடந்தா உங்கள வேலையில வச்சிருக்கிறதைப்பற்றி நான் யோசிக்கவேண்டி வரும்!” என்றுவிட்டுப் போனார் அவர்.

ஆரணிக்கு முகம் கருத்துப்போயிற்று. ஆத்திரம் வந்தாலும் அதிகாரம் அவளிடம் இல்லையே. அன்று, வாடிய முகத்துடன் சோர்ந்த நடையுடன் வேலை முடிந்து வந்தவளை வேனில் ஏற்றிக்கொண்டான் சுகிர்தன்.

“என்ன ஆரணி? முகம் சரியில்ல.”

நடந்ததைச் சொன்னாள் ஆரணி.

வாகனத்தைக் கவனமாகச் செலுத்திக்கொண்டே சற்று யோசித்தான் சுகிர்தன். பிறகு, “இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டியது பெற்றோர் ஆரணி. தரமான கிண்டர் கார்டனா, பள்ளிக்கூடமா எண்டு பார்க்கிற மனுசர் பிள்ளைகள் அங்க சந்தோசமா நிம்மதியா இருக்கினமா எண்டு பாக்கிறேல்ல. இதுல நாங்க கதைக்கவோ மாத்தவோ எதுவும் இல்ல.” என்றான் ஆறுதலாக.

உண்மைதான். என்றாலும் அவளுக்கு மனம் ஆற மறுத்தது. அவளின் சிந்தனையை மாற்றும் பொருட்டு, “அண்டைக்கு வேன் பற்றி நிகேதன் விசாரிச்சவர். வாங்கப்போறீங்களாக்கும் எண்டு நினைச்சன். பிறகு சத்தமே இல்ல.” என்றான் அவன்.

“வாங்க விருப்பம் தான் சுகிர்தன். ஆனா கைல முதல் இல்ல.” அதை எண்ணி இன்னுமே சோர்ந்துபோனாள்.

“அந்தக் காணி வீடு சொந்தம் தானே.”

அவள் தலையை ஆட்டவும் சற்றுச் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டுக் கேட்டான்.

“முதல் கொஞ்சமும் இல்லையா?”

அவளுக்கு முகம் வாடியது. “கைல ஒரு ஒரு லட்சம் வச்சிருக்கிறன். அதுவும் இந்த மாத சம்பளம் வந்தாத்தான் ஒண்டு வரும். சீட்டுப் போடுறன் ரெண்டரை லட்சம். அது இப்பதான் தொடங்கினது. நாங்க புதுசு. இப்ப எடுக்கலாமா தெரியாது. பக்கத்துவீட்டு அக்காதான்; கேட்டுப்பார்க்கலாம். அப்பிடி எடுக்கிறது எண்டாலும் அநியாயக் கழிவுலதான் எடுக்கவேண்டி வரும். இவ்வளவுதான் இருக்கு.” என்றாள் அவள்.

“முதல் ஹயர் ஓடி உழைக்கலாமா சுகிர்தன்? வருமானம் வருமா?” அன்று நிகேதன் எழுப்பிய கேள்வியை இன்று அவனிடம் கேட்டாள், ஆரணி.

“எங்கட முயற்சி தானே ஆரணி உழைப்பு.” என்றான் அவன். “நிச்சயமா வருமானம் இருக்கு. எப்ப இருக்கு? நாங்க ஓடி ஓடி உழைச்சா இருக்கு. என்னைப் பாருங்கோ கார்மெண்ட் ஹயர் ஓடுறன். சென்டர் ஹயர். கல்யாணத்துக்குப் பண்டபாத்திரம் ஏற்றி இறக்கக் கூப்பிட்டாலும் போவன். ஹொஸ்ப்பிட்டலுக்கு வா எண்டாலும் போவன். அதால எனக்கு போதுமான வருமானம் வருது.” என்றான் அவன்.

ஒரு வீட்டின் முன்னே நிறுத்தி, குழந்தையை அதன் பெற்றவளிடம் கொடுத்துவிட்டு மீண்டும் வாகனத்தை எடுத்தான் அவன்.

“நீங்க சொன்னமாதிரியே கணக்குப் பார்த்தாலும் எங்களிட்ட இருக்கிறது காணாது என்ன?”

“என்னட்ட ஒரு சீட்டு இருக்கு ஆரணி. எட்டு லட்சம். அது எப்பிடியும் கழிவு போக ஆறரை ஏழு எடுக்கலாம்.” என்றவனைத் திகைப்புடன் திரும்பிப் பார்த்தாள் அவள்.

அவன் சிரித்தான். “இண்டைக்கு ஆரணிக்கு என்ன நடந்தது? அடிக்கடி திகைச்சுப்போய்ப் பாக்கிறீங்க?”

“என்ன நம்பிக்கையில இப்பிடிச் சொல்லுறீங்க. வாங்கிப்போட்டு நாங்க ஏமாத்தினா?” அவளுக்கு மலைப்பு. சொந்தங்களே ஏறி மிதிக்க நினைக்கும் காலத்தில் குறுகிய காலத்தில் பழகிய பழக்கத்தை நம்பிக் காசைத் தருகிறேன் என்கிறானே!

அவன் மீண்டும் சிரித்தான். “முயல் பிடிக்கிற என்னத்தையோ மூஞ்சியில தெரியுமாம்.” என்றான்.

அவளின் பார்வை அப்போதும் மாறவில்லை. “ஆரணி இண்டஸ்ட்ரீஸ்ன்ர ஒற்றை வாரிசு ஏழை குடும்பத்தில வாழ வந்ததும் இல்லாம, முன்னுக்கு வரவேணும் எண்டதுக்காக நடந்து வேலைக்குப்போய் உழைக்கிறா எண்டா அவவின்ர மன உறுதியும், நேர்மையும் சொல்லாமையே விளங்கும். அதைவிட அவவின்ர நிகேதனை நான் ஒருக்காத்தான் சந்திச்சு இருக்கிறன். எண்டாலும் ஆரணிக்கு குறைஞ்ச ஆள் இல்ல நிகேதன் எண்டும் தெரியும்.” என்றான் அவன்.

அவளைப் பற்றியும் தெரிந்திருக்கிறது. நிகேதனையும் எடை போட்டிருக்கிறான். இலகுவானவன்; எல்லோருடனும் சட்டென்று பழகுவான் போலும் என்று அவள் எண்ணியிருக்க, ஆட்களை எடைபோட்டுத் தரமானவர்களுடன் நட்பு வைக்கிறான் என்று இப்போதுதான் புரிந்தது அவளுக்கு.

“நிறைய ஆட்களை ஹயர்க்கு ஏத்துறதாலையோ என்னவோ எனக்கு மனுசரை நல்லாவே படிக்கத்தெரியும் ஆரணி. நீங்க யோசிக்காதீங்கோ. நீங்க தருவீங்க எண்டு எனக்குத் தெரியும். நான் வேன் பாக்கவா?” என்றான் அவன்.

அவளால் சம்மதிக்க முடியவில்லை. அவனுடைய பரந்தமனம் தருகிறேன் என்கிறது. ஆனால் அவளுக்கு??

“என்ன சத்தமே இல்ல? என்னட்ட வாங்க விருப்பம் இல்லையா?”

“உண்மையா சொல்லப்போனா யாருக்கும் குடுத்துத்தான் எனக்குப் பழக்கம் சுகிர்தன். வாங்கிப் பழக்கம் இல்லை. உங்களிட்ட வாங்கிறதை நினைக்கவே மனம் கூசுது. நிக்கியும் என்ன சொல்லுவான் எண்டு தெரியாது.” உள்ளே போன குரலில் சொன்னாள் ஆரணி.

“இந்த மனம் தான் உங்க ரெண்டுபேரையும் என்னை நம்பச் சொன்னது ஆரணி. நீங்க பிறந்ததில் இருந்து மேல்த்தட்டு வர்க்கம். சோ.. காசு மாறுற தேவை உங்களுக்கு இருந்தே இருக்காது. ஆனா, மத்திய தர வர்க்கத்துக்கு மாறாம எதையுமே செய்யேலாது. நான் நிகேதனோட கதைக்கிறன். நீங்க அவரின்ர நம்பரை தாங்கோ.” என்று கையோடு அதை வாங்கிக்கொண்டான்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock