வேன் வாங்குவது முடிவாயிற்று. அவர்களது காணியின் மீதுதான் வங்கிக்கடன் எடுக்கலாம் என்பதுதான் முள்ளாக நின்றது. ‘அம்மா என்ன சொல்லுவாரோ? சம்மதிப்பாரா?’ என்கிற கேள்வி நிகேதன் முன்னே நின்றது. முன்னர் என்றால் அது வேறு. உரிமையாய் எந்தத் தயக்கமும் இல்லாமல் கேட்டிருப்பான். இன்று, அவருக்குப் பிடிக்காத காதல் திருமணம் ஒன்றைப் புரிந்தபிறகு, இன்னுமே அவருக்கும் அவனுக்கும் எல்லாம் சுமூகமாகிடாத வேளையில் கேட்க வாய் வரவேயில்லை. ஆனால், வேறு வழியும் இல்லையே.
மறுப்பார்; ஆயிரம் குத்தல் மொழி பேசுவார்; பொறுமையாக விளக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டு அழைத்து விசயத்தைப் பகிர்ந்தான் நிகேதன். அவரோ விவரம் தான் கேட்டார். அவனும் பொறுமையாக அனைத்தையும் விளக்கினான். “கவனம் தம்பி. நம்பித்தாறன்.” என்பதோடு பத்திரம் இருக்குமிடத்தைச் சொல்லிவிட்டு அவர் அழைப்பைத் துண்டிக்க ஒன்றும் விளங்காமல் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். இத்தனை இலகுவில் சம்மதிப்பார் என்று நினைக்கவே இல்லை.
“டேய் நிக்ஸ், நாங்க மாமிய வடிவா விளங்கிக்கொள்ள இல்லையோ?” அவனை வம்பிழுக்கும் சிரிப்புடன் வினவினாள் ஆரணி.
அவளின் தலையில் கொட்டிவிட்டு, “உன்ர மனுசனில அவவுக்கு நம்பிக்கை வந்திருக்கலாம்.” என்றான் அவன்.
“உன்னில.. அவவுக்கு.. நம்பிக்கை.. போடா டேய்!” கண்ணில் குறும்புடன் வேண்டுமென்றே சொல்லிவிட்டுப் போனாள், அவள்.
ஆனால், நிகேதன் சொன்னதுபோல ஓய்வே இல்லாமல் ஓடி ஓடி உழைக்கிறவன் மீது அவருக்குள் நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்துத்தான் இருந்தது. இன்னுமே கோபமும் குமுறலும் இருந்தபோதிலும் கூடவே இருந்து அவனின் அயராத உழைப்பைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார். எதிர்காலம் மீதான பயம் கூட இப்போதெல்லாம் குறையத் தொடங்கிவிட்டது. என்ன, எதையும் வெளிக்காட்டிக்கொள்ள மனமில்லை; விருப்பமில்லை.
இப்போதோ, அவன் வாகனம் வாங்கப்போகிறானாம் என்றதும் உள்ளுக்குள் சந்தோசம்தான் பெருகியது. ஒரு பெருமை, ஒரு பூரிப்பு. கணவரின் மறைவுக்குப் பிறகு சொத்து என்று ஒன்றை வாங்கும் வரம் அவர்களுக்கு அமையவேயில்லை. இருப்பதைக் கொண்டு வாழ்ந்தார்கள். அப்படியிருக்க, அவர்களின் வீட்டுக்கு என்று முதன் முதலாக ஒரு சொத்து வரப்போகிறது. அயலட்டையின் மத்தியில் குடும்பத் தராதரம் ஒருபடி உயரப்போகிறது. இதெல்லாம் சாதாரணமாக நிகழ்ந்து விடாதே.
வங்கியின் மேலதிகாரி சேதுராமனின் புருவங்கள் ஆரணியைப் பார்த்ததுமே அவர்கள் அறியாமல் சுருங்கிற்று!
அதற்குமுதல் நிகேதனும் சுகிர்தனும் தான் வந்து அவரைச் சந்தித்து, என்னென்ன பத்திரங்கள் தேவை, வங்கிக்கடனுக்கு எப்படி விண்ணப்பிக்கவேண்டும், வாங்கப்போகும் வாகனத்தின் தொகைக்கு எவ்வளவு முற்காசு கொடுக்கவேண்டும் போன்றவற்றை எல்லாம் விசாரித்துக்கொண்டு போயிருந்தனர்.
இப்போது அவர்களோடு வந்திருப்பது திரு. சத்தியநாதனின் மகள்! இங்கேயே தகப்பனுடன் பலமுறை வந்து போயிருக்கிறாள். செல்வந்தரின் மகளுக்கு எதற்கு வங்கிக்கடன்? அவள் நெற்றியில் இட்டிருந்த குங்குமம், அணிந்திருந்த சாதாரணப் பாவாடை சட்டை, நிகேதனை ஒட்டி அமர்ந்திருந்த விதம் அனைத்துமே அவரின் சிந்தனைக்கான பதிலைச் சொல்லிற்று!
ஆரணிக்கும் அவரைத் தெரியும். அறிமுகப் புன்னகையைச் சிந்திவிட்டு வந்த காரியத்தைச் சொல்லி, கொண்டு வந்திருந்த பத்திரங்களைக் கொடுத்தாள். அதையெல்லாம் சரிபார்த்தபோது முழுத் திருப்தி. நிச்சயமாக அவர்களுக்கு வங்கிக்கடன் கிடைக்கும். ஆனால், இந்தப் பெண் சத்தியநாதனின் மகள் என்பது மட்டுமே மண்டைக்குள் நின்று குடைந்தது.
இவள் மூலம் அவருக்கு ஏதாவது பிரச்சனை வந்துவிட்டால்? “ஒரு நிமிடம்!” என்று அவர்களிடம் சொல்லிவிட்டு எழுந்து, அறையை விட்டு வெளியே வந்து சத்தியநாதனுக்கு அழைத்து விடயத்தைச் சொன்னார்.
“அதுக்கு எதுக்கு எனக்கு ஃபோன் பண்ணினீங்க?” அவரின் அழுத்தமான கேள்வியிலேயே இவருக்கு உதறியது.
“இல்ல சேர். உங்கட மகளுக்கு இந்த லோன் காசு எல்லாம் ஒரு விசயமே இல்ல. ஆனா வந்திருக்கிறா. அதுதான் எதுக்கும் உங்களுக்கு இன்போர்ம் செய்றது பெட்டர் எண்டு நினைச்சன். நாளைக்கு நீங்க கோவிக்கிற மாதிரி நான் நடந்திட கூடாது எண்டுதான்.” தயங்கிக்கொண்டு விசயத்தைச் சொன்னார் அவர்.
“ஸீ மிஸ்டர் சேதுராமன்! நீங்க பேங்க் மேனேஜர். வந்திருக்கிறது உங்கட கஸ்டமர். இது உங்கட தலைவலி. என்னைத் தேவையில்லாம டிஸ்டப் செய்யாதீங்க!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தார் அவர்.
அவ்வளவுதான் இதற்கு அவர் ஆற்றிய எதிர்வினை.
செயல் இழந்துவிட்ட கைப்பேசியை ஒருமுறை பார்த்துவிட்டு பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டாலும் தன் தலை தப்பிவிட்ட நிம்மதிதான் சேதுராமனுக்கு.
அங்கே, தன் அலுவலகத்தில், குளிரூட்டப்பட்ட கண்ணாடி அறைக்குள் நடுநாயகமாக நிமிர்ந்து நின்றிருந்த சத்தியநாதனின் விழிகள், தன் நாற்காலிக்குப் பின்னால் இருந்த சுவரில் தொங்கிக்கொண்டிருந்த படத்தில் நிலைத்தது.
ஆரணிதான். பத்துவயது சிறுமியாகப் பள்ளிச் சீருடையில் ஓட்டப்போட்டியில் முதலிடம் பெற்றதற்காகக் கிடைத்த கப்புடன் முகம் முழுக்கப் புன்னகையைப் படரவிட்டபடி நின்றிருந்தாள். தலை கலைந்து, முகம் களைத்திருந்தாலும் அதையும் தாண்டிக்கொண்டு வெற்றிபெற்ற பூரிப்பில் மின்னும் விழிகளுடன் நிற்கும் மகளை அப்படிப்பார்க்க அவருக்கு மிகவுமே பிடிக்கும்.
கடின உழைப்பின் பின்னே கிடைக்கும் வெற்றி. அதைப்போலொரு போதை எதுவுமில்லை என்பார்! அந்த உழைப்பின் வெற்றிதான் அவள் முகத்தில் தெரியும் அந்தச் சிரிப்பு! அதனால் தான் அந்தப் புகைப்படத்துக்கு அவரின் அலுவலகத்தில் இருக்கும் அனுமதி கிடைத்திருக்கிறது.
ஒற்றை மகளுடனேயே அவரின் சந்ததி நின்றுவிட்டதை எண்ணி அவர் வருந்தியதே இல்லை. ஆளுமைக்கு ஆண் என்ன பெண் என்ன? நான்தான் இதற்கெல்லாம் காரணகர்த்தா என்று தன்னை முன்னிலைப்படுத்திக் காட்டிக்கொண்டது இல்லையே தவிர, அவரின் வழிநடத்தல் தான் யசோதா மூலம் ஆரணியைச் சென்று சேரும். தைரியமானவளாக, என்ன என்றாலும் துணிந்து நிற்கிறவளாக, எதையும் எதிர்கொள்கிறவளாக அவர் வளர்த்துவிட அவரின் மார்பிலேயே நிமிர்ந்து நின்று எட்டி உதைத்துவிட்டுப் போய்விட்டாள் அவள்!
வளர்த்தகடா மார்பில் பாய்ந்திருக்கிறது!
நெஞ்சின் எங்கோ ஓர் மூலையில் முணுக்கென்று வலித்தது. ஆயினும் அசையவில்லை சத்தியநாதன். அவரின் உதட்டினில் மீண்டுமொரு சிரிப்பு வந்துவிட்டுப் போனது! நரைத்தடர்ந்திருந்த மீசையை நீவி விட்டுக்கொண்டார்!
காலம் மட்டுமல்ல அவரும் காத்திருக்கிறார் சில கேள்விகளின் பதில்களுக்காக!
இங்கே, அவர்களை அமரவைத்துவிட்டு அவர் வெளியே போனபோதே அப்பாவுக்குச் செய்தி போகப்போகிறது என்று ஊகித்துவிட்டாள் ஆரணி. இப்போது, வங்கிக்கடன் கிடைக்குமா கிடைக்காதா என்பதைப்பற்றி அவளுக்குக் கவலை இல்லை. இந்த வங்கி போனால் இன்னொரு வங்கி. ஆனால், அவளின் அப்பா என்ன சொல்லியிருப்பார்? அன்று யசோதா சொன்னதைப்போல அவர் அவளின் முன்னேற்றத்துக்குத் தடைக்கல் இல்லை என்று நேரடியாக அறிந்துகொள்ள அவளுக்குக் கிடைத்திருக்கும் சந்தர்ப்பம் இது!
உள்ளே வந்தவரையே கவனித்துக்கொண்டிருந்தாள் ஆரணி.
தெளிந்த முகத்துடன், “ரெண்டுநாள் கழிச்சு வாங்க, அப்ரூவல் வாங்கி வைக்கிறன். சைன் பண்ணலாம்.” என்றார் அவர்.
“தேங்க் யு சேர்!”
ஆண்களோடு விடைபெற்று வெளியே வந்த ஆரணிக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஒன்று இனி ராஜேந்திரனிடம் இருந்து நிகேதன் வெளியே வரப்போகிறான். இரண்டாவது அப்பாவைப்பற்றி அவர் சொன்னது உண்மையில்லை.