அவளுக்கும் செய்யவேண்டும் என்கிற பெரும் விருப்பம் அவனுக்கு இருந்தாலுமே அவள் சொல்வதுபோலக் கயலுக்கு முடித்துவிட்டால் அதன் பிறகு எல்லாமே அவளுக்குத்தானே என்றுதான் பொறுத்திருந்தான். ஆனால், இன்று அது சரியாக வராது என்று புரிந்து போயிற்று.
சீரும் சிறப்புமாகப் பெரிய மண்டபத்தில் ஊரையே கூட்டி நடக்கப்போகிற தங்கையின் திருமணத்தில் அவனுடைய ஆரணி நகைகளற்று நிற்பதா? குறைந்தபட்சமாக தாலிக்கொடியாவது அவளின் கழுத்துக்கு வேண்டும். தன் வயது எத்தனையோ அத்தனையில் தான் கொடி செய்து தரவேண்டும் என்று சொல்லியிருக்கிறாள். அவளின் அந்த ஆசையை நிறைவேற்றுவது என்றால் நிச்சயம் பல லட்சங்கள் வேண்டும். எப்படியாயினும் அதைச் செய்துவிட வேண்டும் என்று இப்போது அவன் மனம் அழுத்தமாய் எண்ணிற்று!
“நிக்கி! இங்க தனியா நிண்டு என்ன செய்றாய்?” ஆரணியின் குரல் அவன் சிந்தனையைக் கலைத்தது. அப்போதுதான், யோசித்தபடி தோட்டத்துக்கு வந்துவிட்டதை அவனும் கவனித்தான். ஒன்றும் சொல்லாமல் திரும்பி அவளைப் பார்த்தான்.
அவள் அவனைப்போன்று தன்னை மாலினியோடு ஒப்பிடவில்லை போலும். எந்த வாட்டமும் இல்லாமல் மலரப் புன்னகைத்தபடி அவனை நோக்கி வந்துகொண்டிருந்தாள். சீதன பேச்சின் போதோ திருமணம் பற்றிய முடிவுகளின் போதோ, ‘இவ்வளவு காசுக்கு நாங்க எங்கயடா போறது?’ என்று ஒரு வார்த்தை கேட்கவே இல்லை. மாறாக, ‘கயலுக்கு ராகவனை நல்லா பிடிச்சிருக்கு நிக்ஸ். அவே என்ன கேட்டாலும் பெருசா மறுக்கப் போகாத. என்ன குடுத்தாலும் எங்கட கயலுக்குத்தானே குடுக்கப்போறம். அதால ஓம் எண்டு சொல்லு.’ என்றுதான் சொன்னாள். இந்த மூன்றரை வருடங்களாக அவனுக்காகத் தானும் சிலுவை சுமக்கிறவளின் பால் அவன் நேசம் மிகுந்து போயிற்று.
தன்னையே பார்த்துக்கொண்டு நின்றவனை வேண்டுமென்றே கூர்ந்து பார்த்தாள், ஆரணி.
“என்னடா இது? பாசமா பாக்கிற?”
“நான் பாக்காம அண்ணியா பாப்பா?” என்றான் அவனும் வேண்டுமென்றே.
கலகலவென்று நகைத்தாள் அவள். “அவா இன்னுமே என்னைப் பாத்து முடியேல்ல மச்சி. எனக்கே என்னில டவுட் வந்திட்டுது. கண்ணாடியில போய்ப் பாத்தன். ஒரு வித்தியாசமும் தெரியேல்ல. எப்பவும் மாதிரித்தான் இருக்கிறன். உனக்கு ஏதாவது தெரியுதா, பார்.” என்றவள் ஒரு சுற்றுச் சுற்றித் தன்னைக் காட்டினாள்.
“நிறைய!” என்றான் அவன் உதட்டுக்குள் சிரிப்பை மென்றபடி.
அந்தக் கள்ளனின் எண்ணம் போகும் திசையை அவள் கண்டுகொண்டாள். “ஏய்.. ஏய்.. இதுதானே வேண்டாம் எண்டுறது. எனக்குத் தெரியுமடா உன்னைப் பற்றி!” என்று விரல் நீட்டி எச்சரித்தபடி நகைத்தாள், அவள்.
சிரிக்கும் இதழ்களைச் சிறை செய்யும் ஆவல் எழுந்தது. வீடு முழுக்க ஆட்களை வைத்துக்கொண்டு அது முடியாமல் போனதில், “நீ போ. நான் வாறன்.” என்றான் அவன்.
“போறன். ஆனா என்ன யோசிச்சுக்கொண்டு நிக்கிறாய். அத சொல்லு.”
“கலியாணத்துக்கு நிறையச் செலவாகும் போல ஆரா. கடன் படவேண்டி வந்தாலும் வரும்.” என்றான் அவளையே கவனித்தபடி.
“அதுக்கு?” என்றாள் உடனேயே.
“இல்ல.. அதுதான் கொஞ்சம் யோசனையா இருக்கு.”
“டேய் லூசா! என்ன மனுசனடா நீ. நடக்கப்போறது தங்கச்சின்ர கலியாணம். அதுக்குக் கணக்குப் பாப்பியா? எவ்வளவு எண்டாலும் சமாளிக்கலாம். வா!” என்றாள் அவனை முறைத்துக்கொண்டு.
அதற்கு மேலும் அவனால் முடியவில்லை. “இந்தக் கலியாணத்துக்கு உனக்கு ஒண்டும் வேண்டாமா ஆரா? ஏதாவது விருப்பம் இருந்தா சொல்லு, வாங்கித் தாறன்.” என்றான்.
அவனின் குரலில் தெரிந்த பேதத்தை ஆரணியும் உணர்ந்தாள். தனக்காகவும் ஏதாவது செய்யப் பிரியப்படுகிறான் என்று விளங்கிற்று. “நல்ல பட்டுச்சாறி, அது எவ்வளவு விலை எண்டாலும் எனக்குப் பிடிச்சதை நான் காட்டுவன். நீ வாங்கித் தரவேணும். சரியோ.” என்றாள் அவள்.
அவனுக்கு மனது பிசைந்தது. இப்போதும் தாலிக்கொடி பற்றி அவள் சொல்லவே இல்லையே. ஏன் இத்தனை புரிதல்? இத்தனை விட்டுக்கொடுப்பு? இத்தனை அன்பு? எல்லாம் அவனுக்காகவா? அவனைத் தானும் நெருக்க வேண்டாம் என்கிற நேசமா? அந்தளவுக்கு அவளுக்கு அவன் என்ன செய்தான்?
“டேய்! என்னடா திரும்பவும் உன்ர அண்ணி மாதிரி என்னையே பாக்கிறாய்?”
“ஒண்டுமில்ல. நீ போ. ரெண்டுபேரும் இங்க நிண்டா சரியில்ல.” அவனுக்குத் தன்னைச் சமாளித்துக்கொள்ளத் தனிமை தேவைப்பட்டது.
“நீ வராம நான் போகமாட்டன்!”
“கொஞ்சமாவது நான் சொல்லுறத கேக்கிறியா நீ?” என்று பல்லைக் கடித்துவிட்டு வேறு வழியற்று அவளுடன் நடந்தான்.
“ஆ.. பிறகு? இவர் பெரிய இவர். இவரின்ர பேச்சு நான் கேக்கோணுமாம். போடா டேய்!” என்றுவிட்டுப் போனாள் அவள்.
அவன் முகத்தில் மென்னகை மலர்ந்தது. கூடவே, நொடியில் தன் உலகையே பலவர்ணங்களால் அலங்கரித்துவிட்டுப் போகிறவளுக்காக என்னவும் செய்யலாம் என்றும் தோன்றிற்று.
————————-
கயலின் திருமண அழைப்பிதழ்கள் அச்சடித்து வந்திருந்தது. அதைக் கோவிலில் சுவாமியின் காலடியில் வைத்து எடுக்கக் குடும்பமே புறப்பட்டனர். அப்படியே நெருங்கிய உறவுகளுக்கும் கொடுப்பதற்காக மீண்டும் தன் குடும்பத்துடன் வந்திருந்தார் சகாதேவன்.
அன்று காலையிலேயே, “இந்தச் சாறியை கட்டு ஆரா.” என்று ஒரு பட்டுச் சேலையைக் கொண்டுவந்து கொடுத்தான், நிகேதன்.
“கோயிலுக்குப் போறதுக்கு என்னத்துக்குக் கலியாண வீட்டுக்கு கட்டுற ரேஞ்சில இருக்கிற சாறி?”
சொன்னதைச் செய்யாமல் கேள்வி கேட்டவளை முறைத்தான் நிகேதன். “எப்பயாவது நான் சொல்லுறதையும் கொஞ்சம் கேளு!”
“ம்க்கும்!” என்று சிலுப்பிக்கொண்டாலும் அதையேதான் கட்டிக்கொண்டாள்.
அமராவதி அம்மா பார்வையாலும் மாலினி, “நாங்க என்ன கலியாணத்துக்கோ போறம்?” என்று வார்த்தைகளாலும் கேட்டாலும் நிகேதனை முறைத்தாளே தவிர மாற்றிக்கொள்ளவில்லை, அவள்.
கோயிலில், அழைப்பிதழ்களை சுவாமியின் பாதங்களில் வைத்து அர்ச்சனை செய்து முடிந்ததும் புறப்படலாம் என்று நினைக்கையில், “கொஞ்சம் பொறுங்க அம்மா.” என்றுவிட்டு நொடியில் மறைந்தான் நிகேதன். வரும்போது பட்டு வேட்டி சட்டையில் வந்தான்.
“என்னடா தம்பி இது? கலியாண மாப்பிள்ள கோலம்?” அமராவதியின் கேள்விதான் அங்கிருந்த எல்லோரின் பார்வையிலும்.
“கலியாண மாப்பிள்ளை தானம்மா. இண்டைக்கு ரெண்டாவது முறையா ஆராக்கு தாலி கட்டப்போறன்.” என்றவன் ஐயரைப் பார்த்தான்.
அவரும் இரண்டு மாலைகளைக் கொண்டுவந்து கொடுத்தார். ஒன்றை அவன் அவளின் கழுத்தில் போட்டுவிட்டுக் கண்ணால் சிரித்தான். ஆரணிக்கும் திகைப்புத்தான். அவள் அணிந்துகொண்டிருக்கும் சேலைக்கான பொருளும் இப்போது புரிந்தது. ஒன்றும் சொல்லாமல் அவளும் மாலையைத் தன் மணவாளனுக்குப் போட்டுவிட்டாள். நெஞ்சம் காரணமற்று விம்மிற்று. விழிகளை அவனிடமிருந்து அகற்றமுடியாமல் நின்றாள். சகாதேவனின் பிள்ளைகள் அவர்களின் ஒவ்வொரு அசைவுகளையும் தம்முடைய கைப்பேசிகளுக்குள் புகைப்படங்களாக அடக்கிக்கொண்டிருந்தனர்.
பெரியவர்கள் மூவரும் அதிர்ச்சி விலகாமலே நின்றனர். நிகேதன் ஏற்கனவே ஐயரிடம் கொடுத்து வைத்திருந்த தாலிக்கொடியை, தாம்பூலத் தட்டில், தேங்காயின் மேல் வைத்து, மங்கள அரிசியோடு பெரியவர்களிடம் நீட்டினார், ஐயா. அர்ச்சதையை அவர்களின் கைகள் தாமாக எடுத்துக்கொண்டது. தன் குடும்பத்தினரின் முன்னிலையில் தன்னவளின் கழுத்தில் முகமெல்லாம் பூரிப்புடன் மங்கள நாணைப் பூட்டினான், நிகேதன்.
அவனுடைய கரங்கள் கழுத்தோரம் உரசியபோது ஆரணியின் தேகம் ஒருமுறை சிலிர்த்து அடங்கிற்று. கண்ணில் கண்ணீரும் உதட்டில் சிரிப்புமாக அவனையே பார்த்தாள்.
அமராவதி அம்மாவின் முகம் அப்படியே கடுத்துப் போயிற்று. எத்தனை பவுன் என்று சரியாகக் கணிக்க முடியாமல் போனாலும் அதன் மொத்தமே பெரும் தொகை என்று சொல்லியதில் அவரின் அடிவயிறு எரிந்தது. நெஞ்சு காந்தியது. அங்கே அடிபடப்போவது அவரின் பெண்ணுக்கான செலவுகளாயிற்றே.
எரிச்சலும் ஆத்திரமும் மிகுந்துவிட, விறுவிறு என்று கோயிலை விட்டு வெளியேறி நடக்கத் தொடங்கினார்.