அவள் ஆரணி 25

அமராவதியின் மனம் சினத்தில் குமுறிக்கொண்டிருந்தது. வாயைத் திறந்தாலே எதிரில் அகப்படுகிறவரை குதறிவிடுவோம் என்கிற அளவில் கொந்தளித்துக்கொண்டு இருந்தார்.

இரண்டு மாதத்தில் திருமணத்தை வைத்துக்கொண்டு, இவ்வளவு பெரிய தொகையைக் கொண்டுபோய் அவளுக்குப் போட்டால் அவரின் மகளின் திருமணம் என்னாவது?

சீதனப் பேச்சின்போது நீங்கள் கேட்பதை எல்லாம் தருகிறோம் என்று பெரிதாக அளந்துவிட்டு, இனிப்போய் அது முடியாது, குறையுங்கள் என்று சொன்னால் என்னாகும்?

மனம் முழுக்கச் சந்தோசம் ததும்பித் ததும்பி வழிய, அச்சடித்து வந்த அழைப்பிதழ்களைக் கொண்டு கோயிலுக்குப் புறப்பட்டது என்ன, அத்தனை திட்டங்களையும் தவிடுபொடியாக்கிவிட்டு வீட்டில் வந்து குந்திக்கொண்டு இருப்பது என்ன?

இன்றே நெருங்கிய உறவினர்களை அழைக்கத் திட்டமிட்டு இருந்ததில், அவரின் மனதில் மகளின் கல்யாணக் கொண்டாட்டம் இன்றே ஆரம்பித்திருந்தது. அதை தன் காரியத்தால் சுக்கு நூறாக நொறுக்கிவிட்டானே மகன்.

முகம் முழுக்க மலர்ந்து விகசிக்க வருங்காலக் கணவனோடு கரம் கோர்த்துத் திரிந்த மகள் கண்ணுக்குள் வந்து நின்று கலங்கடித்தாள்.

இந்தத் திருமணத்துக்கு ஏதாவது பாதகம் நடந்துவிட்டால் அவள் என்ன ஆவாள்? நினைக்கவே நெஞ்சு நடுங்கியது. எல்லாம் அந்தப் பாதகியால்!

என்னவோ அவன் செய்யக் கூடாத ஒன்றைச் செய்துவிட்டதுபோல் ஆளாளுக்கு ஒவ்வொரு மூலையில் முடங்கிக்கொண்டு இருந்தது நிகேதனின் பொறுமையைச் சோதித்தது.

“ப்ச் அம்மா! இப்ப என்ன நடந்திட்டுது எண்டு இப்பிடி இருக்கிறீங்க? என்ன பிரச்சினை உங்களுக்கு?” அதற்குமேலும் அங்கே நிலவிய அமைதியைப் பொறுக்க மாட்டாமல் கேட்டான்.

“இன்னும் என்ன நடக்கோணும்? அதுதான் ஒரேடியா என்ர தலையில மண்ணை அள்ளி போட்டுட்டியே. போ போய் இன்னும் என்ன உன்ர மனுசிக்கு வாங்கிக் குடுக்கலாம் எண்டு யோசி!” இருந்த சினத்துக்கு சுள் என்று எரிந்து விழுந்தார் அவர்.

அண்ணா அண்ணியையும் வைத்துக்கொண்டு என்ன பேச்சு இது? “கோபத்தில என்ன கதைக்கிறது எண்டு யோசிக்காம கதைக்காதீங்கம்மா! கயலுக்கு கலியாணம் நடக்கேக்க அவள் வெறும் கழுத்தோட நிண்டா நல்லாவா இருக்கும்? அதுதான் தாலிக்கொடி செய்தனான். அத அண்ணா குடும்பமும் நிக்கிற நேரம் கோயில்ல வச்சு கட்டினான். அதுக்கு என்னத்துக்கு இந்தக் குதி குதிக்கிறீங்க.”

அவர்களின் வாழ்வின் மிக மிக இனிமையான தருணம். அவள் ஆசைப்பட்ட ஒன்றை முதன் முதலாகச் செய்திருக்கிறான். அதனை அனுபவிக்க முடியாமல் என்ன துன்பம் இது என்று இருந்தது அவனுக்கு.

“அதுக்கு அவ்வளவு மொத்தக் கொடி அவளுக்குத் தேவையே? அதுவும் கயலுக்கு கலியாணம் நடக்கப்போற இந்த நேரம். கூடப்பிறந்தவளில கொஞ்சமாவது பாசம் இருந்திருந்தா இப்பிடி நடந்திருப்பியா? இனி அவளின்ர கலியாணத்துக்கு என்ன செய்யப்போறாய்? ரோட்டுல பிச்சை எடுப்பியே?”

“நீங்களே இவ்வளவு யோசிக்கேக்க நான் யோசிக்காம இருப்பனா? பேசாம போய் பாக்கிற வேலைய பாருங்கம்மா. கயலின்ர கலியாணம் ஒரு குறையும் இல்லாம நடக்கும்.” எரிச்சலுடன் சிடுசிடுத்தான் அவன்.

அவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த சகாதேவனும் இப்போது நிகேதனுக்குத் துணையாக வந்தார். “அதுதான் அவனே சொல்லுறான் தானே அம்மா. நீங்க வாங்க நாங்க கார்ட் குடுக்கிற வேலைய பாப்பம்.” என்று அழைத்தார்.

அவருக்கும், நிகேதன் செய்தது சரி என்றே தோன்றிற்று. என்ன பவுனின் அளவைக் குறைத்திருக்கலாம். ஆனால், கயலின் திருமணம் எந்தக் குறையும் இல்லாமல் நடக்கும் என்றால் அதைப்பற்றியும் யோசிக்க ஒன்றுமில்லை என்றுதான் எண்ணினார்.

மகளின் திருமணம் பேசிய பேச்சுப்படி நடக்காதோ என்கிற ஒற்றை விடயத்திலேயே நிலைகுலைந்து போயிருந்த அமராவதி எதையும் விளங்கிக்கொள்ள மறுத்தார்.

“நீயும் இவன்ர கதையை நம்புறியா தம்பி? இவன் மனம் வச்சாலும் அவள் விடமாட்டாள். உனக்கு அவளைப்பற்றித் தெரியாது. நல்லவள் மாதிரி நடிச்சு இவனை முட்டாளாக்கி வச்சிருக்கிறாள்.”

“இப்ப என்னத்துக்கு தேவை இல்லாம அவளை இழுக்கிறீங்க. அவளுக்கு ஒண்டும் தெரியாது. என்ன கதைக்கிறதா இருந்தாலும் என்னைப்பற்றி மட்டும் கதைங்க!” என்றான் நிகேதன் சுள்ளென்று. தமையனிடமே தன் மனைவியைப் பற்றி அவர் குறை சொன்னதைப் பொறுக்க முடியவில்லை அவனுக்கு.

“பாத்தியா அவளைப்பற்றி ஒண்டு சொன்னதும் இவனுக்கு எப்பிடி கோபம் வருது எண்டு. எல்லாம் அவள் போட்டு வச்சிருக்கிற தூபம்.” என்று பெரிய மகனிடம் முறையிட்டுவிட்டு,

“ஒண்டும் தெரியாமத்தான் சும்மா போற கோயிலுக்கு காலியாண பொம்பிளை மாதிரி சீவி சிங்காரிச்சுக்கொண்டு வந்தவளோ? அவளின்ர நடிப்பை நீ வேணுமெண்டா நம்பு. நான் நம்ப மாட்டன். ஆனா, உன்ன சொல்லி குற்றமில்லை. அவள் எல்லாம் தண்ணிக்கால நெருப்பை கொண்டு போறவள். நல்லவள் மாதிரி இந்தப் பக்கம் நடிச்சுக்கொண்டு உள்ளுக்க உன்ன ஏவி காரியம் சாதிச்சிருக்கிறாள். அந்தக் கெட்டித்தனம் இந்த வயசிலையும் எனக்கு வருது இல்லையே!” என்று தலையில் அடித்துக்கொண்டார் அவர்.

“பெத்தது ஒரேயொரு பொம்பிளை பிள்ளையை. அவளை கரை ஏத்துறதுக்கிடையில நான் படுற பாடு இருக்கே.. கடவுளே..”

அவர் அரற்ற ஆரம்பிக்கவும் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான் நிகேதன். ஆரணிக்கு ஆனந்த அதிர்ச்சி கொடுக்க எண்ணி செய்த காரியங்கள் இப்படி அவனுக்கு எதிராகவே திரும்பும் என்று அவன் கனவிலும் எண்ணியிருக்கவில்லை.

நிமிர்ந்தவன் அவர்களின் அறை வாசலில் நின்ற ஆரணியைக் கண்டு திகைத்தான். அவனைக் காதலித்த பாவத்துக்கு இன்னும் என்னவெல்லாம் கேட்கப் போகிறாள் அவனுடையவள். அந்த இடத்தில் தன்னால் முடிந்த ஒன்றாக அவளை விழிகளால் தேற்ற முயன்றான்.

பெற்ற தாயின் முன்னால் இயலாமையுடன் அமர்ந்திருந்தவனின் தோற்றம், அவளின் நெஞ்சைக் கீற, அதைக் காணமுடியாமல் மீண்டும் அறைக்குள் புகுந்துகொண்டாள், ஆரணி.

வார்த்தைகள் வெளிவந்துவிடத் துடித்தன. அவன் இன்னும் காயப்பட்டுப் போவானோ என்கிற பயத்தில் வாயை இறுக்கி மூடிக்கொண்டு நின்றாள்.

சகாதேவனுக்கும் ஆரணியைப் பற்றி அவர் பேசிய பேச்சு முற்றிலும் பிடிக்கவில்லை. “அவன் தான் சொல்லுறானே அம்மா. அப்பிடி ஒரு பிரச்சனை வந்தா நானும் இருக்கிறன் தானே. இப்ப பேசாம வாங்க. தேவையில்லாம கதைச்சு பிரச்சினையை பெருசாக்க வேண்டாம்.” என்று அன்னையை அடக்க முயன்றார்.

“என்ன தம்பி நான் தேவையில்லாம கதைக்கிறன்? இந்தக் கலியாணம் ஒண்டை தானே நீங்க ரெண்டுபேரும் அவளுக்கு செய்யப் போறீங்க. அதை ஒரு குறை இல்லாம செய்யிறதுக்கு என்ன? இனி எனக்கு நம்பிக்கை இல்ல. சத்தமே இல்லாம காரியம் சாதிச்சுப்போட்டு எப்பிடி பூனை மாதிரி அறைக்க பதுங்கிக்கொண்டு இருக்கிறாள் பாத்தியா? அவளுக்கு ஆரம்பம் முதலே கயலின்ர கலியாணம் நடக்கிறதில விருப்பமே இல்ல.” என்று சொல்லி முடிக்க முதலே அவரின் முன்னால் வந்து நின்றாள், ஆரணி.

“நானும் கதைச்சு பிரச்சனை பெருசாக வேண்டாம் எண்டு வாயை மூடிக்கொண்டு இருந்தா என்னவோ களவு செய்தவள் மாதிரி பதுங்கிக்கொண்டு இருக்கிறன் எண்டு சொல்லுறீங்க. மொத்தத் தாலிக்கொடிதான். நிறையக் காசு போய்த்தான் இருக்கும். இப்ப என்ன அதுக்கு?” அவளின் நிதானமான கேள்வியே நிகேதனுக்குப் பிரச்சனை பெருக்கப் போவதைச் சொல்லிற்று.

வேகமாக வந்து அவளைத் தடுத்தான். “ஆரா உள்ளுக்கு போ. அம்மா நீங்களும் உங்கட வேலைய பாருங்க. கயலின்ர கலியாணம் சொன்னமாதிரி எந்தக் குறையும் இல்லாம நடக்கும். போங்க!” என்றான்.

“எப்பிடியடா நடக்கும். அதுதான் என்ர பிள்ளையின்ர சந்தோசத்தையே மொத்தமா சுருட்டி தன்ர கழுத்தில போட்டிருக்கிறாளே இவள். கொஞ்சமாவது மனம் குத்துதா அவளுக்கு? அதுக்கு என்ன எண்டு என்னட்டையே கேக்கிறாள்.”

“வேற என்ன கேக்கிறது? உங்கட மகளுக்கு வண்டி வண்டியா சீதனம் தாறோம் எண்டு சொல்லேக்க சந்தோசமா இருந்த உங்களுக்கு என்ர கழுத்துக்கு ஒரு தாலிக்கொடி வந்தது பொறுக்கேல்லையா? அப்ப உங்களுக்குத்தான் குத்துது. எனக்கு இல்ல.”

சகாதேவன் அவளிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை. அவள் பொல்லாதவள் என்று அமராவதி அடிக்கடி சொல்லியிருந்தாலும் அவர்கள் வந்துபோன ஒருமுறை கூட அப்படிக் கண்டதில்லை. மாலினி சுடுவதுபோல் பேசிய பொழுதுகளில் கூட பக்குவமாகக் கடந்து போயிருக்கிறாள். ஆனால் இன்று? திகைப்புடன் நிகேதனைப் பார்த்தார். அவன் முகம் கருத்துப் போயிற்று.

“ஆரா பேசாம இரு!” என்று பற்களுக்குள் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.

“இன்னும் என்ன பேசாம இருக்கச் சொல்லுறாய்? என்ன எல்லாம் சொல்லுறா என்னைப் பற்றி. தண்ணிக்கால நெருப்பை கொண்டு போறேனாம், நடிச்சு உன்ன ஏமாத்துறேனாம். இந்த மூண்டு வருசத்தில உன்ன ஏமாத்தி அப்பிடி என்ன சொத்துப்பத்த நான் சேத்து வச்சிருக்கிறன் எண்டு சொல்லு? எனக்கு தாலிக்கொடி வாங்கித்தா எண்டு உன்ன கேட்டேனா நிக்கி? இல்லையே. நீயா செய்த ஒண்டுக்கு என்னை என்னத்துக்கு இழுக்க வேணும்? அந்த மெல்லிய கொடிய கட்டின நேரம் கூட மனம் முழுக்கச் சந்தோசம் இருந்தது. ஆனா இந்த தாலிக்கொடி என்ர கழுத்த நெரிக்குது. நெஞ்ச அறுக்குது. இப்ப என்ன உன்ர அம்மாக்கு இந்தத் தாலிக்கொடி தானே கண்ணுக்க குத்துது. இது என்ர கழுத்தில இருக்கிறதால தானே இவ்வளவு பிரச்சனையும். எனக்கும் இது வேண்டாம். நான் கழட்டித் தாறன். கொண்டுபோய் வித்துப்போட்டு அவவுக்கு குடு.” என்றவள் செய்யப்போகிற காரியத்தை உணர்ந்து மின்னல் விரைவில் அவளின் கரம் பற்றித் தடுத்தான், நிகேதன்.

அவன் முகம் கோபத்தில் சிவந்து போயிருந்தது. அவளை இழுத்துக்கொண்டுபோய் அறைக்குள் தள்ளினான். கட்டிலில் போய் விழுந்தவளுக்கு நடந்ததை நம்பவே சில வினாடிகள் பிடித்தது. திகைப்புடன் அவனைப் பார்த்தாள். “வெளில வந்தியோ..” என்று விரல் நீட்டி எச்சரித்துவிட்டுப் போனான் அவன்.

அங்கிருந்த எல்லோருக்குமே என்ன சொல்வது ஏது செய்வது என்று தெரியாத நிலை. நேராக அன்னையிடம் வந்து நின்றான். “கயலின்ர கலியாணம் என்ர பொறுப்பு எண்டு உங்களிட்ட எப்பவோ சொல்லிட்டன். அதுல நம்பிக்கை இருந்தா பேசாம இருங்க. இல்லையா என்னை விட்டுடுங்க. எனக்கு எல்லாமே வெறுத்துப் போகுது.” அதற்குமேல் அங்கிருக்க முடியாமல் மூச்சு முட்டவும் வேனை எடுத்துக்கொண்டு வெளியேறினான்.

“பாத்தியா தம்பி என்ன சொல்லிப்போட்டு போறான் எண்டு..” என்றவரை மேலே பேசவிடாமல் கைநீட்டித்த தடுத்தார் சகாதேவன்.

“போதும் அம்மா. திரும்ப ஆரம்பிக்காதீங்க. இவ்வளவுக்கும் நீங்கதான் காரணம். கயலின்ர கலியாணம் நல்லமாதிரி முடியோணும் எண்டு நினைச்சா நீங்களும் கொஞ்சம் அமைதியா இருக்கப் பழகுங்க.” என்றார் இறுக்கமான குரலில்.

மூத்த மகனும் கடுமையைக் காட்டவும் அமராவதிக்கு கண்கள் கலங்கிப் போயிற்று. அதைப் பார்த்துவிட்டு, “விடுங்கோப்பா. நீங்களும் பேசாதீங்க.” என்று சமாளித்தார் மாலினி.

அவருக்கு அதுவே இன்னும் அழுகையை தூண்டிற்று.

“அம்மா, சும்மா கண்ண கசக்காம பேசம இருங்க. உங்கட நல்லதுக்கும் தான் சொல்லுறன். தேவையில்லாம கோபப்பட்டு, சண்டை பிடிச்சு, அழுது, அவனையும் உங்கள வெறுக்க வச்சு, நீங்க இன்னும் வருத்தக்காரியா தான் மாறுவீங்க. அது தேவையா? அவன் சொன்னத செய்வான் எனக்கு நம்பிக்க இருக்கு. நீங்க எழும்பி முகத்தை கழுவிக்கொண்டு வாங்கோ. எனக்கு இண்டைக்கே வேலைய முடிச்சிட்டு இரவுக்கே வெளிக்கிட வேணும்.” என்று அவரை அனுப்பி வைத்தார். அப்படியே, மாலினியையும் தயாராகச் சொன்னார்.

தங்களின் அறைக்குள் நுழையப்போன மாலினி பக்கத்து அறையை எட்டிப்பார்த்தார். ஆரணி அவர்களின் கட்டிலில் பிடித்துவைத்த சிலையாக அமர்ந்திருந்தாள். கடந்துபோகத்தான் நினைத்தார். முடியாமல் மனம் முரண்டியது. அவள் அவரை கவனித்ததுபோல் தெரியவில்லை.

“குடிக்க தேத்தண்ணி ஏதும் ஊத்தித் தரவா ஆரணி?” என்றார் தன் கட்டுப்பாட்டை மீறி.

திகைத்து நிமிர்ந்தவள் அதன் பிறகுதான் அவரின் கேள்வியை உள்வாங்கி வேண்டாம் என்று தலையை அசைத்தாள்.

“நாங்க கார்ட் குடுக்க போகப்போறம். தனியா இருப்பீரா?” அவளின் தோற்றம் அவரை அப்படிக் கேட்க வைத்தது.

அதற்கும் ஆம் என்று தலையைத்தான் அசைத்தாள். என்னவோ மாலினிக்குப் பாவமாயிற்று. “ஒண்டுக்கும் யோசிக்காதீர். குடும்பம் எண்டா இப்பிடித்தான்.” என்றார் தன்னை மீறி.

அவள் முறுவலிக்க முயன்றாள். முடியவில்லை. அதற்குமேல் என்ன சொல்வது என்று தெரியாமல் தயாராகப்போனார் மாலினி.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock