இன்று இரண்டு மணி நேரங்கள் கழிந்தும் அவன் திருப்பி அழைக்கவில்லை என்றதும் மனதில் பாரத்துடன் மீண்டும் அழைத்தாள். அரை மணித்தியாலம் கழித்து மீண்டும். ஏன் இவ்வளவு கோபம்? அவள் பேசியது பிழைதான். தாலிக்கொடியை கழற்ற முனைந்ததும் பிழைத்தான். அதற்கென்று இப்படித் தண்டிப்பானா? அதற்குமேல் முடியாமல் அரைநாள் விடுமுறையைப் பெற்றுக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டாள்.
அமராவதியிடம் சொல்லியாயிற்று. பெட்டியை அடுக்கியாயிற்று. அவள் குளித்துத் தயாரும் ஆகியாயிற்று. ஆனாலும் நிகேதன் திருப்பி எடுக்கவேயில்லை. கண்ணோரம் கரிக்க ஆரம்பித்தது. வாட்ஸ் அப்பில், “ஹாய் நிக்கி, நான் இண்டைக்கே கொழும்புக்கு போகவேணும். நாளையில இருந்து மூண்டு நாளுக்கு எனக்குக் கிளாஸ் இருக்காம். மிஸ் நேற்றே மெசேஜ் போட்டு இருக்கிறா. நான் கவனிக்க இல்ல. அதைச் சொல்லத்தான் உனக்கு எடுத்தனான். நீ எடுக்க இல்ல..” எனும்போதே அவளுக்குக் குரல் உடைய ஆரம்பிக்க, பேசுவதை நிறுத்திவிட்டு அதை அனுப்பினாள்.
மீண்டும் தன்னைத் தேற்றிக்கொண்டு, “நாளைக்கு விடியவே கிளாஸ் தொடங்குது. ஹோட்டலும் அவேயே(அவர்களே) அரேஞ் செய்திருக்கினம். மிஸ் அனுப்பின மெயிலை உனக்கும் போவேர்ட்(forward) செய்து இருக்கிறன். நான் ஈவ்னிங் ட்ரெயின் எடுக்கப் போறன். வேற என்ன.. கவனமா இரு. சொறி நான் நேற்று கதைச்சதுக்கு..” என்றுவிட்டு அனுப்பி விட்டவளுக்கு, ‘நீ வா. போக முதல் உன்ன பாக்கோணும் மாதிரி இருக்கு..’ என்பதைச் சொல்லமுடியாமல் இதழ்கள் நடுங்கிற்று.
மனம் கேளாமல் ரெயில்வேயில் நின்று மீண்டும் அழைத்தாள். வேகமாக அழைப்பை ஏற்று, “இப்ப என்ன வேணும் ஆரா உனக்கு? கதைக்கிறதை எல்லாம் யோசிக்காம கதைக்கிறது. பிறகு மனுசன இருக்க நிக்க விடாம திருப்பித் திருப்பி எடுத்துக்கொண்டே இருப்பியா? வை ஃபோனை!” என்று கத்திவிட்டு அழைப்பைத் துண்டித்தான் அவன்.
விழிகள் மளுக்கென்று நிறைந்து வழிந்துவிட ரெயில்வே பிளாட்போமில் இருந்த வாங்கிலில் அமர்ந்துவிட்டாள் ஆரணி. கண்ணீர் துடைக்கத் துடைக்கப் பெருகியது. அழக்கூடாது. நான் அழக்கூடாது என்று கண்களைத் துடைத்தாலும் கண்ணீர் நிற்பேனா என்றது.
நடுங்கும் இதழைப் பற்றியபடி விழிகளை இறுக்கி மூடித் தன்னைச் சமாளிக்க முயன்றாள். அவனுடைய கடுமையை அவள் தாங்கமாட்டாள் என்று அவனுக்குத் தெரியும். தெரிந்தும் தண்டிக்கிறான் என்றால் தண்டிக்கட்டுமே. அவளின் கண்ணீர் நின்றுபோயிற்று. முகத்தைத் துடைத்துக்கொண்டாள்.
புகையிரதம் புறப்பட நேரம் இருந்ததில் அப்படியே அமர்ந்திருந்தாள்.
கதவை அறைந்து சாற்றிவிட்டு வேனில் இருந்து இறங்கி நின்றான் நிகேதன். மூச்சை இழுத்துவிட்டான். இரண்டு கைகளும் தலையைக் கோதி சீர் செய்தது. உண்மையிலேயே இன்றைக்கு அவனுக்கு ஓய்வே இல்லை. இரவும் போதிய உறக்கமில்லை. காலையில் ஆரம்பித்ததில் இருந்து ஒரே ஓட்டம். பணச்சிக்கல், அன்னையின் பேச்சு, அவளின் பேச்சு எல்லாமே தலைக்குள் நின்று அவனை விசரனாகவே மாற்றிக்கொண்டிருந்தது. வெயிலுக்கு வீதியில் கவனம் வைத்து வைத்துக் கண் நெருப்பாக எரிந்தது. அவளும் திரும்பத் திரும்ப அழைக்க, இருந்த கோபம், சினம், எரிச்சல் எல்லாவற்றையும் அவளிடம் கொட்டியிருந்தான். அதன் பிறகுதான் கொஞ்சம் நிதானத்துக்கு வந்தான்.
இப்போதோ அவளை எண்ணி மனது பரிதவித்தது. அழுகிறாளோ? காலைச் சுற்றும் நாய்க்குட்டியாகக் காலையில் தன்னையே சுற்றிச் சுற்றி வந்தவள் கண்ணுக்குள் வந்து நின்றாள். தன் முகத்தையே பார்த்துக் கோபமாக இருக்கிறானா இல்லையா என்று அவள் அளந்தது இப்போது மென் சிரிப்பை வரவழைத்தது. ‘கதைக்கிறதை எல்லாம் கதைக்கிறது. பிறகு பாவி மாதிரி நடிக்கிறது. இவளை..’
‘என்னவோ மெசேஜும் அனுப்பி இருந்தாளே..’ ஃபோனை எடுத்துக் கேட்டதும் திகைத்துப்போனான். வேகமாக அவளுக்கு அழைத்தான்.
நிக்ஸ் என்று ஒளிர்ந்த பெயரிலேயே அவள் விழிகள் தளும்பிற்று. இதழ்கள் துடிக்க அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தாள்.
“ஆரா..”
அவளுக்குக் கண்ணீர் கரகரவென்று ஓடிற்று. மற்றக் கையால் துடைத்துக்கொண்டாள்.
“ஆரா, எங்க நிக்கிறாய்?” அவன் குரலில் மிகுந்த அவசரம்.
“ஸ்டேஷன்ல..”
கலங்கித் தெரிந்த குரலில், “அழுதியா?” என்றான் பரிதவிப்புடன்.
அவள் உதட்டைக் கடித்துத் தன் அழுகையை அடக்கினாள்.
“ஆரா.. கதைக்க மாட்டியா? அது நான் ட்ரிப்ல இருந்தன். அதுல ஃபோன் பாக்கேல்லை.” அவனுக்குப் பேச்சே வரமாட்டேன் என்றது.
கண்களைத் துடைத்து, அடைத்த தொண்டையை விழுங்கிச் சீர் செய்துகொண்டு, “இதுல என்ன இருக்கு நிக்கி. நீ உன்ர வேலைய பார். நான் ரெயில்வே வந்திட்டன். அது சொல்லத்தான் எடுத்தனான். பாய்.” என்றவள் அவசரமாக அழைப்பைத் துண்டித்தாள். மேலே பேச முடியவில்லை. அழுகை வந்தது.
அடுத்த நொடியே திரும்பவும் அழைத்தான் அவன்.
“ப்ச்! ட்ரைவ் பண்ணிக்கொண்டு இருந்ததில எடுக்கேல்ல எண்டு சொல்லுறன் தானே. பிறகும் என்ன உனக்கு அவ்வளவு கோபம்? நீ ட்ரெயின்ல போக வேண்டாம். நில்லு நான் கொண்டுபோய் விடுறன்.” என்றான் அவன் அவசரமாக.
“இல்ல. நீ வேலைய பார். எனக்காக மெனக்கெட வேண்டாம். நான் ட்ரெயின்லையே போறன்.”
அவனுக்குச் சுள் என்று ஏறியது. “ஓமடி! உனக்காக மெனக்கெடாம ஊருக்காகத்தானே ஓடி ஓடி உழைக்கிறன். வந்திட்டா கத சொல்லிக்கொண்டு. திரும்பவும் கோபத்தை வர வைக்காம அங்கேயே நில்லு. இப்ப வாறன். என்ன பாக்காம நீ போறேல்ல சொல்லிட்டன்.” என்றபடி அவன் வாகனத்தை வேகமாக எடுப்பது இவளுக்குத் தெரிந்தது.
அவள் விழியோரம் கரித்தது. வேகமாக இமைகளைச் சிமிட்டி அடக்கினாள். “இல்ல.. ட்ரெயின் வெளிக்கிடப்போகுது. நான் போயிட்டு வாறன்.”
“நில்லடி எண்டு சொல்லுறன். ஆகத்தான் செருக்குக் காட்டுறாய். நான் கொண்டுபோய் விடுறன். போகாத பிளீஸ். எனக்கு உன்ன பாக்கோணும் ஆரா.” தவிப்புடன் சொல்லிவிட்டு வேகம் கூட்டினான், நிகேதன்.
அவள் நிற்கவில்லை. புறப்பட்டு இருந்தாள். அவனைப் பார்த்தால் நிச்சயம் பெரிதாக உடைந்துவிடுவோம் என்று புரிந்தது. அதை விரும்பவில்லை அவள். வேனை அவசரம் அவசரமாகப் பார்க் செய்துவிட்டு, ஓடிவந்து பார்த்தான் நிகேதன்.
அந்தப் பிளாட்போமே வெறுமையாகக் காட்சி தந்தது. அவ்வளவு சொல்லியும் கேட்காமல் போய்விட்டாளா? நம்ப முடியாத ஏமாற்றம் அவனைத் தாக்கிற்று. மனதில் ஹோ என்று பெரும் இரைச்சல். வேகமாகக் கைபேசியை எடுத்து அவளுக்கு அழைத்தான். அவள் அழைப்பை ஏற்றதும் அவன் பேசவே இல்லை. புகையிரதத்தின் தடக் தடக் ஓசை காதில் வந்து மோதி, மெய்யாகவே அவள் புறப்பட்டுவிட்டதைச் சொல்லிற்று. தான் சொன்னதையும் மீறிப் போயிருக்க மாட்டாள் என்கிற அவனுடைய நம்பிக்கை பொய்த்துப் போனது.
பேசாமல் அழைப்பைத் துண்டித்தான். அவன் விழிகள் வெறுமையுடன் அவள் போன திசையையே வெறித்தது. ஓடிப்போய் அந்த ட்ரெயினைப் பிடிக்க முடிந்தால்? என்னடி உனக்கு அவ்வளவு கோபம் என்று அவளை உலுக்க முடிந்தால்? அவள் மீது தவறில்லை. அவளின் வார்த்தைகளின் மீதுதான் அவனுக்குக் கோபம். அதைக் காட்டினால் இப்படித்தான் அவனைத் தவிக்க விட்டுவிட்டுப் போவாளா? அவ்வளவு சொல்லியும்!