அவள் ஆரணி 27 – 1

ஆரணிக்கு மூன்று நாட்களும் செமினார் நன்றாகவே போனது. தவறவிடாமல் வந்தது மிகவும் நல்லதாகப் போயிற்று என்று நினைக்கிற அளவில் மிக மிகப் பிரயோசனமாகவே இருந்தது. காலை எட்டுக்கு ஆரம்பித்தால் பன்னிரண்டுக்கு முடியும். ஒரு மணி நேரம் இடைவேளை. மீண்டும் மத்தியானம் ஒன்றுக்கு ஆரம்பித்து மாலை ஐந்துக்கு முடியும். மூன்று நாட்களும் மின்னலாக விரைந்துவிட, இதோ செமினார் முடிந்த நொடியே புறப்பட்டுவிட்டாள்.

நொடி நேரத்தை வீணாகக் கடத்தவும் மனமில்லை. இந்த மூன்று நாட்களும் அவளுடைய நிக்கியைப் பார்க்காமல் இருந்ததே போதும் போதும் என்றாயிற்று. எல்லோரிடமும் விடைபெற்று, அறையின் திறப்பையும் கையளித்துவிட்டு ஹோட்டலை விட்டு வெளியே வந்தவளின் ஒவ்வொரு அசைவிலும் அவசரம். அந்தளவில் மனம் அவனைத் தேடியது. எவ்வளவு விரைவாகச் செயல்படுகிறாளோ அவ்வளவு விரைவாக அவனிடம் போய்விடுவாளே. வேக நடையில் தன் ட்ரொல்லியையும் இழுத்துக்கொண்டு வெளியே வந்து, ஆட்டோ ஏதும் கிடைக்குமா என்று விழிகளைச் சுழற்றியபோது கண்முன்னே நின்றிருந்த நிகேதனைக் கண்டதும் அப்படியே நின்றுவிட்டாள்.

வருவான் என்று நினைக்கவே இல்லை. முகம் பூவாக மலர்ந்துவிட அவனிடம் ஓடினாள்.

“நிக்கி..”

அவளின் முகம் பாராமல், “இது மட்டும் தானே.” என்றபடி அவளின் பெட்டியைத் தூக்கி பின்னால் வைத்தான் அவன்.

அவளின் முகம் அப்படியே வாடிப்போயிற்று. இன்னும் கோபம் தீரவில்லையா? வேதனையோடு அவனைப் பார்த்தாள்.

“ஏறு, நேரமாகுது!” யாருக்கோ சொல்வதுபோல் சொல்லிவிட்டு தன் இருக்கையில் ஏறி அமர்ந்து பெல்ட்டை மாட்டினான் அவன்.

“இவவா உங்கட வைஃப் தம்பி?” என்ற குரலில் தான் ஒரு வயதான கணவன் மனைவி வேனில் இருப்பதைக் கவனித்தாள் ஆரணி. ஹயர் வந்திருக்கிறான் என்று புரிந்தது. வேகமாகத் தன் முகத்தைச் சீர் படுத்தி, அவர்களைப் பார்த்து முறுவலித்துவிட்டுத் தானும் அவனருகில் ஏறிக்கொண்டாள்.

வீதியில் கவனத்தை வைத்து வாகனத்தைச் செலுத்திக்கொண்டிருந்தான் அவன். தூரத்தில் இருந்தபோது கூட அவனுடைய கோபத்தை ஏற்றுக்கொண்டவளுக்கு அருகில் இருந்து அவன் காட்டுகிற இந்த விலகல் மிகவுமே பாதித்தது.

அன்று, அவள் புறப்பட்டுவிட்டாள் என்று கோபத்துடன் அழைப்பைத் துண்டித்தவன் கொழும்பு வந்து இறங்கியதுமே அழைத்தான். இன்னுமே கோபமாக இருக்கப் போகிறான், என்ன சொல்லி சமாதானம் செய்யப் போகிறேன் என்று கலங்கிக்கொண்டு இருந்தவள் நிச்சயம் இதை எதிர்பார்க்கவில்லை. வியப்புடன் ஏற்று, “நிக்கி?” என்றதுமே, “போயிட்டியா?” என்றுதான் கேட்டான். வேறு பேசவில்லை.

“ம்ம் வந்து இறங்கிட்டன். ஹோட்டலுக்கு ஆட்டோ பிடிக்கப்போறன்.” அவனிடம் தெரிந்த விலகளில் அவள் குரல் உள்ளே போயிற்று.

“பிடி. நான் லைன்லையே இருக்கிறன்.” அதன் பிறகு அவனுடைய வாகனத்தில் ஒலிக்கும் பாட்டுத்தான் அவளுக்குக் கேட்டது. ஆட்டோ பிடித்து, ஹோட்டல் போயிறங்கி, அவள் செக்கின் செய்து, அறைக்குள் செல்கிறவரைக்கும் அவன் அழைப்பிலேயேதான் இருந்தான்.

“அறைக்க வந்திட்டன் நிக்கி.”

‘வசதியா இருக்கா? பாதுகாப்பான இடமா? பயமா இல்லையே? உன்னோட செமினாருக்கு வேற பெண்களும் வந்திருக்கினமா எண்டு பார்’ என்று அவளின் பாதுகாப்பை முழுமையாக அங்கிருந்தே கவனித்துக்கொண்டான். எல்லாம் திருப்தி என்றதும் கடைசியாக, “எதுக்கும், அந்த ஹோட்டல், செமினார் நடக்கிற ஹோல், செமினார் பற்றின அறிவிப்பு இருக்கும் எல்லா அது எல்லாத்தையும் எனக்குப் போட்டோ எடுத்து அனுப்பிவிடு.” என்றான்.

“ம்ம் சரி.”

“வேற என்ன? கவனமா இரு. அந்த ஹோட்டலிலேயே வாங்கிச் சாப்பிடு. பீச்சுக்கு போறன் பார்க்குக்குப் போறன் எண்டு வெளில எங்கயும் போகாத. நான் பின்னேரம் எடுக்கிறன்.” என்றுவிட்டு வைத்திருந்தான் அவன்.

பாதுகாக்கிறேன் என்கிற பெயரில் வீட்டுக்குள் அடைக்காமல் அவளைச் சுதந்திரமாக விட்டுப் பின்னிருந்து அவளின் பாதுகாப்பை உறுதி செய்கிறவனின் அக்கறை அவள் இதயத்தைத் தொட்டது. அவன் எப்போதுமே அப்படித்தானே.

அதன் பிறகும் காலையில், இடைவேளையின் போது, மாலையில் என்று அழைத்து விசாரித்துக்கொண்டான். ஆனால், எல்லாவற்றிலுமே ஒரு விலகல். மேலே அவளைப் பேச விடவுமில்லை. “நிக்கி! பிளீஸ் கொஞ்சம் நான் கதைக்கிறதை கேளன்.” என்று அவள் குரலடைக்கச் சொன்னபோதுகூட, “முதல் போன வேலைய முடிச்சுக்கொண்டு வா. அதுக்குத்தானே அவசரம் அவசரமா ட்ரெயின் பிடிச்சு போனனீ.” என்றுவிட்டான் அவன்.

இப்போதும் அதே விலகல். பிறகு எதற்கு அழைத்துக்கொண்டு போக வந்தானாம் என்று ஊடல் கொண்டது அவள் உள்ளம். ‘ஏனடா இப்பிடி என்னைப்போட்டு வதைக்கிறாய்?’ என்று அவன் சட்டையைப் பிடிக்க வழியில்லாமல் ஆட்கள் வேறு வாகனத்தினுள். இல்லையோ இன்றைக்கு அவனை ஒரு வழி செய்திருப்பாள்.

“என்ன பிள்ளை? ஏறினதில இருந்து ஒண்டுமே கதைக்காம வாறாய்.” என்றார் அந்த அம்மா.

“என்ர மனுசி கொஞ்சம் கூச்ச சுபாவம். பெருசா கதைக்க மாட்டாள்.” பார்வை வீதியிலே இருக்கப் பதில் சொன்னான், நிகேதன்.

இவ்வளவு நேரமாகத் திரும்பியும் பாராமல் இருந்துவிட்டு இப்போது மட்டும் எதற்காக அவளைப் பற்றிப் பேசுகிறானாம். அவனை முறைத்தாள், ஆரணி.

“ஓ.. பாத்தாலே தெரியுது. இந்தக் காலத்தில இப்பிடி அருமையான, அமைதியான பிள்ளை கிடைக்காது தம்பி. சந்தோசமா வச்சுக்கொள்ளும்.” என்றார் அவர்.

“ஓமோம். இந்தப் பீஸ் எங்க தேடினாலும் கிடைக்காது. எனக்கு எண்டே எக்ஸ்ட்ராவா செஞ்சு அனுப்பி இருக்கு.” என்றான் அவன் கடுப்புடன்.

அவளுக்கு இருந்த கோபம், ஊடல், உரசல் எல்லாம் போய்ச் சிரிப்பு வந்துவிடும் போலிருந்தது. இன்னுமே நன்றாக அவனை முறைத்தாள்.

“தம்பிக்கு பகிடி. அவரின்ர கதையை விட்டுட்டு நீ சொல்லு பிள்ளை, உனக்கு என்ன பெயரம்மா?”

“ஆரணி ஆன்ட்டி.” என்று திரும்பிப் பார்த்துச் சொன்னாள். அவரின் அருகில் அமர்ந்திருந்த அவரின் கணவரைப் பார்த்து முறுவலித்தாள். அதுவே போதுமாக இருந்தது அந்த அம்மாவுக்கு. என்ன செய்கிறாள்? ஏன் தனியாகக் கொழும்பு வந்தாள் என்று அவளின் வாழ்க்கையையே பிடுங்கியிருந்தார்.

கூடவே, “ஒரு செத்த வீடம்மா. இவரின்ர மச்சானாரின்ர மாமா. தூரத்துச் சொந்தம் தான். எண்டாலும் கேள்விப்பட்ட பிறகு வராம இருக்கிறது சரியில்லை எல்லோ. அதுதான் ஒரு எட்டு வந்திட்டுத் திரும்புறோம்.” என்று, அவள் கேட்காத விபரத்தையும் தந்தார்.

“எங்களுக்கு ரெண்டு மகன்மார் மட்டும் தான். மூத்தவன் சுவிஸ். சின்னவன் பிரான்ஸ். பிள்ளை குட்டி எண்டு இருக்கிறாங்கள். வருசத்தில ஒருக்கா மூண்டு மாதத்துக்கு ரெண்டு பிள்ளைகளிட்டயும் போயிட்டு வருவம். மற்றும்படி இங்கதான். அங்கிளுக்கு நடக்கேலாது. கால் வீங்கிடும். அதால தூர பயணம் எண்டா வாகனம் தான் பிடிக்கிறது. இவ்வளவு நாளும் ராமன் எண்டு, எங்கட வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு தம்பி இருக்கிறார். அவரைத்தான் பிடிக்கிறனாங்க. அவர் வேற ஒரு ஹயர்ல நிக்கிறாராம் எண்டு உன்ர மனுசனை அவர்தான் பிடிச்சு விட்டவர். இளம் பெடியா இருக்கிறார். வாகனத்தை எப்பிடி ஓட்டுவாரோ தெரியாது எண்டு பயந்துகொண்டுதான் ஏறினாங்க. ஆனா, நிகேதன் நிதானமா அளவான வேகத்தில் கூட்டிக்கொண்டு வந்தவராச்சி. நேரா நேரத்துக்குச் சாப்பாட்டுக்கு, பாத்ரூமுக்கு எண்டு ஒண்டும் மறக்க இல்ல. நல்ல பிள்ளை..” என்று சிலாகித்து நற்சான்று வழங்கினார், அவர்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock