அவரின் நல்ல பிள்ளையில் அவளுக்குச் சிரிப்பு வரும் போலிருந்தது. இந்த நல்ல பிள்ளையைப் பற்றி அவளுக்குத்தானே தெரியும். நிகேதனை ஒருமுறை நன்றாகப் பார்த்தாள். மீசைக்கடியில் இருந்த அவன் உதடுகளின் அசைவு அவனும் அந்த நல்ல பிள்ளையில் சிரிக்கிறான் என்று விளங்கியது. ஆனால், அவன் நல்ல பிள்ளை என்று அவளுக்கும் தெரியப்போய்த்தானே துரத்தித் துரத்திக் காதல் சொல்லிக் கைப்பிடித்தாள். என்ன இப்போதெல்லாம் அந்த நல்ல பிள்ளைக்குக் கொஞ்சம் அதிகமாகக் கோபம் வருகிறது.
“மூண்டு வருசமா இதுதான் எங்கட தொழில் ஆன்ட்டி. நிறைய ஆக்சிடெண்ட்ஸ் நடக்கிறத பாக்கிறம் தானே. அதோட, நீங்க சொன்ன மாதிரி நிதானமா ஓடினாத்தானே திரும்பவும் நீங்க எங்களைக் கூப்பிடுவீங்க. அப்பிடியே எங்கட உயிரும் எங்களுக்கு முக்கியம் எல்லோ.” இப்படியே நகர்ந்தது பேச்சு.
என்னவோ மனதிலிருந்த பாரம் கூடச் சற்றே விலகிய உணர்வு. இன்னுமே இருவரும் நேரடியாகப் பேசிக்கொள்ளவில்லை தான். ஆனாலும் ஆறுதலாக உணர்ந்தனர். கோபம் மட்டுப்பட ஆரம்பித்திருந்தது.
“பசிக்குது நிக்கி. எங்கயாவது நிப்பாட்டு. சாப்பிட்டுப் போவம்.” என்று, அவர்களின் பேசாமையை முடிவுக்குக் கொண்டுவந்தாள் ஆரணி.
“இதென்ன பிள்ளை, மனுசனை வா போ எண்டு கதைக்கிற பழக்கம்?” என்றார் அந்த அம்மா பின்னுக்கு இருந்து.
“இந்த உலகத்தில இருக்கிற ஒட்டுமொத்த சொந்தமும் எனக்கு அவன்தான் ஆன்ட்டி. அப்பிடி இருக்கேக்க கதைக்கிறதில என்ன இருக்கு?” என்றாள் அவள்.
நிகேதனின் பார்வை ஒருமுறை அவளைத் தொட்டு மீண்டது.
“எண்டாலும்..” என்று ஆரம்பித்தவரை, “நீ கொஞ்சம் சும்மா இரப்பா. அதுகள் இந்தக்காலத்துப் பிள்ளைகள். அதுகளிட்ட போய் எங்கட காலத்து நடைமுறையைச் சொல்லிக்கொண்டு இருக்காத.” என்று அடக்கினார் அவரின் கணவர். இதற்குள் நிகேதன் ஒரு உணவகம் பார்த்து வேனை நிறுத்தி இருந்தான்.
ஆரணிக்கு நிறையப் பசித்தது. இந்த மூன்று நாட்களும் சாப்பிடாததைச் சேர்த்து வைத்துச் சாப்பிட்டாள். வாகனம் ஓடவேண்டும் என்பதில் இரண்டு ரோலும் பால் தேனீருடனும் நிறுத்திக்கொண்டான் நிகேதன். தன்னுடைய தட்டில் இருந்த இன்னொரு ரோலை எடுத்து அவளுக்கு வைத்தான்.
“எனக்குக் காணும் நீ சாப்பிடு.” என்றாள் அவள். அவன் ஒரு பார்வை பார்க்க, அதைப் பாதிபாதியாக்கி அவனுக்கு ஒரு பாதியைக் கொடுத்தாள்.
உணவை முடித்துக்கொண்டு அவர்கள் மீண்டும் புறப்பட்டபோது, உண்ட களையா இருளின் ஏகாந்தமா என்னவோ அந்த அம்மா கூட அதன் பிறகு பெரிதாகப் பேசவில்லை. அழகான அமைதி. இருண்ட பொழுது. அவ்வப்போது மாத்திரம் கடந்துபோன வாகனங்கள். நீண்ட நெடுஞ்சாலை. அதில் வாகனத்தின் விளக்குகள் மாத்திரம் ஒளியைப் பாய்ச்ச, மெல்லிசை மனதை நிறைக்க, அவனருகில் அமர்ந்து வருவதே போதுமாக இருந்தது ஆரணிக்கு.
பின்னால் இருந்தவர்கள் உறங்கிவிட்டது தெரிந்தது. வாகனம் சீரான வேகத்தில் சென்று கொண்டிருக்க, நிகேதனின் கரம் ஒன்று நீண்டு வந்து அவளின் விரல்களைப் பற்றியது. அவனைத் திரும்பிப் பார்த்தாள் ஆரணி. அவனும் அவளைத்தான் பார்த்தான். விழிகள் நான்கும் இரண்டரக் கலந்தன. வாகனம் ஓட்டுகிறான் என்கிற எச்சரிக்கை உணர்வில் அவள் விழிகள் விலகிற்று. அவன் விரல்கள் அவளின் விரல்களை அழுத்திக் கொடுத்தது. ஆரணியின் விழிகள் ததும்பத் துவங்கின. ஏன் அழுகிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை. அவனோடு சண்டை என்கிற ஒற்றைப் புள்ளியில் இந்த மூன்று நாட்களாக அலைக்கழிந்து போயிருந்த உள்ளம் தன் பாரத்தை அழுதே கரைக்கத் துடித்தது. அவனறியாமல் யன்னல் புறமாக முகத்தைத் திரும்பிக் கண்களைத் துடைத்துக்கொண்டாலும் வழியும் கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
மீண்டும் வீதியோரம் நிறுத்தினான் நிகேதன்.
“என்ன தம்பி?” என்று, விழித்துக் கேட்டார் அந்த அங்கிள்.
“முகம் கழுவிக்கொண்டு வரப்போறன் அங்கிள். அஞ்சு நிமிசத்தில வெளிக்கிடலாம்.” என்றான் நிகேதன்.
“ஒரு அவசரமும் இல்ல. நீங்க நிதானமா வாங்கோ.” என்றுவிட்டு மீண்டும் தலையைச் சீட்டில் சாய்த்துக்கொண்டார் அவர்.
“இறங்கி வா!” என்றான் ஆரணியிடம். இருள் தம்மை மறைக்கும் தூரம் வந்ததும், “என்னடி பிரச்சனை உனக்கு?” என்று அதட்டினான்.
அவள் பேசாமல் நின்றாள். அவளை நெருங்கி, “ஆரா என்னைப்பார்!” என்றான். அவள் பார்க்க மறுத்தாள். அவன் உதட்டினில் மெல்லிய சிரிப்பு அரும்பியது. யாரும் தம்மைக் கவனிக்கிறார்களா என்று பார்த்தான். அந்த நடுச் சாமத்தில் தெரு நாய்கள் கூட அவர்களைக் கவனிக்கத் தயாராயில்லை.
“பாக்க மாட்ட.. அவ்வளவு கோபம்?” என்றபடி அவளை அணைத்தான். இவ்வளவு நேரமாக முறுக்கிக்கொண்டு நின்றுவிட்டு இப்போது மட்டும் என்னவாம் என்கிற கோபத்துடன் அவள் விலக முயன்றாள்.
“மூண்டு நாள் ஆச்சடி..” என்ற அவனின் கிசுகிசுப்பில் அப்படியே அடங்கியவளின் விழிகள் மீண்டும் உடைப்பெடுத்தது. அதைப் பார்த்து அவனுக்கு மீண்டும் கோபம் வந்தது. “அழாத ஆரா! விசர் வருது. இப்ப என்ன? செய்த பிழைக்குக் கால்ல விழாவா?” என்றான். அவளுக்கு அழுகை போய்ச் சிரிப்பு வந்தது. “விழு!” என்றாள் அவனின் அணைப்புக்குள் இருந்தபடியே.
“வீட்ட வா. விழுறன்!” கள்ளச் சிரிப்புடன் சொல்லிவிட்டு விலகப்போனவனை விடவில்லை ஆரணி. “கட்டிப்பிடி நிக்கி!” என்றாள் அவனை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு.
யாரும் பார்க்கச் சந்தர்ப்பம் இல்லை என்றாலும் விழிகளைச் சுழற்றியபடி, “பப்ளிக் பிளேஸ் ஆரா. உன்ன சமாதானம் செய்யக் கூட்டிக்கொண்டு வந்தா என்ன இது?” என்றான் அவன்.
“உன்ன என்ன அம்மா அப்பா விளையாட்டா விளையாட சொன்னான்? ஒரு கட்டிப்பிடி வைத்தியம் தானே?”
“உன்ன..” என்று முறைத்துவிட்டு ஒரு இறுக்கமான அணைப்போடு மின்னல் முத்தம் ஒன்றையும் அவளின் இதழ்களுக்கு வழங்கிவிட்டு, “வாடி!” என்று இழுத்துக்கொண்டு போனான்.
அதன்பிறகு ஆரணியின் அட்டகாசத்துக்கு அளவில்லாமல் போயிற்று. பல இடங்களில் அவனை முகம் கழுவ அவள் இறக்கினாள். கட்டிப்பிடி வைத்தியங்கள் காதலோடு இருளின் மறைவில் நடந்தேறின. ஒரு வழியாக அவர்களை இறக்கிவிட்டு வீடு வந்து சேர்ந்தனர். இரவு முழுக்க ஒரு துளி உறக்கமில்லை. ஆனாலும் இருவருக்கும் சோர்வு மருந்துக்கும் இல்லை. பயணக்களைத் தீர குளித்துவிட்டுப் படுக்கையில் விழுந்தவளை வேகமாக நெருங்கினான் நிகேதன்.
வழமையான எல்லைகளை இன்று அவன் தாண்ட முயலவும், “டேய்!” என்றாள் ஆரணி எச்சரிப்பாக.
அவன் அடங்க மறுத்தான். “கட்டிப்பிடி கட்டிப்பிடி எண்டு சும்மா இருந்தவன தூண்டிவிட்டுட்டு இப்ப என்ன?” என்று முறைத்தான்.
“இன்னும் கயலின்ர கலியாணம் முடியேல்ல.”
“இது நடந்தா அது நடக்காதோ?”
“அது முடிஞ்ச பிறகுதான்..”
“அதெல்லாம் முடியும் நீ பேசாம இரு. வந்திட்டா கத சொல்லிக்கொண்டு.” என்றவன் தன் விரதத்தை முடித்துக்கொள்வதில் முனைந்தான். இந்தச் சண்டையில் அலைபாய்ந்து போயிருந்த அவள் மனதும் ஆனந்தமாய் அவனுக்கு இணங்கிற்று.