திருமணம் செய்துகொள்ளலாம் என்று முடிவானதும் நிகேதன் பார்த்தது தன்னுடைய பர்சினைத்தான். இரண்டாயிரத்துச் சொச்சங்களில் தான் காசிருந்தது. அதுவும், எதற்கும் வைத்துக்கொள் என்று அன்னை காலையில் இண்டர்வியூக்காக கொடுத்ததும் அவனிடம் ஏற்கனவே இருந்த கொஞ்சமும் தான். முகம் இறுகிப்போயிற்று. முடிவுகளை எந்தச் செலவுகளும் இல்லாமல் எடுத்துவிடலாம். அதனைச் செயலாற்றக் காசு வேண்டுமே!
‘காசேதான் கடவுளப்பா. கடவுளுக்கே அது தெரியுமப்பா’ இந்த வார்த்தைகளின் வலிமையை உணர ஆரம்பித்த நேரம், ஆரணியும் பர்சினை எட்டிப் பார்த்து சூழ்நிலையை உள்வாங்கிக்கொண்டாள்.
“மச்சி! இங்க பார்! போட்டிருக்கிற உடுப்புக் காணும். நான் கழுத்தில போட்டிருக்கிற செயின் மூண்டு பவுன் வரும். கைச்செயின் இருக்கு. மோதிரங்கள் இருக்கு. எல்லாத்தையும் குடுத்துப்போட்டு தாலிக்கொடியும் தாலியும் வாங்குவம். கோயில்ல வச்சு அதை நீ எனக்கு கட்டினா நான் உனக்கு மனுசி; நீ எனக்கு மனுசன். விசயம் முடிஞ்சது!” அவள் சொன்னதை ஜீரணிக்கவே முடியவில்லை அவனுக்கு. அதெல்லாம் அவளின் தந்தை வாங்கி கொடுத்தவை. அவனுடைய உழைப்பு அல்ல. அவளே அவரின் மகள் தான் என்கையில் இதில் ரோசம் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை என்று புத்திக்குப் புரிந்தாலும் ரோசம் கொண்ட மனம் முரண்டியது.
அவள் ஒரு முக்கால் காற்சட்டையும் சட்டையும், அவன் ஒரு ஜீன்சும் சேர்ட்டும் அணிந்திருந்தனர். திருமண ஆடைகளா இவை? அவசரத்தில் செய்தாலும் அந்தரத்தில் செய்தாலும் திருமணம் திருமணம் தானே. என்ன செய்வது?
“பிரெண்ட்ஸ் ஆரிட்டையும்(யாரிடமும்) கேட்டுப்பாப்பம்.” அதைச் சொல்லவே நாக்கூசியது. அதுவரை எந்த நிலையிலும் ஒரு ரூபாய் கூட யாரிடமும் மாறியதில்லை. சுயமரியாதையை இழக்காதவன். இன்று.. அவனுடைய பிடிவாதம் வெல்லும் நேரமல்ல இது என்று எண்ணியபடி ஃபோனை எடுத்தான்.
உடனேயே கையைப் பிடித்துத் தடுத்தாள் ஆரணி. “வேண்டாம் நிக்ஸ். கடனோட எங்கட வாழ்க்கை ஆரம்பிக்க வேண்டாம். இருக்கிறதை வச்சு சமாளிப்பம்.”
“இதுக்குத்தான் சொன்னனான்..” பொங்கிய சினத்துடன் ஆரம்பித்தவன் உடனேயே நிறுத்திவிட்டான். முடிவெடுத்த பிறகு கதைப்பதில் பிரயோசனமில்லை. “இந்த ரெண்டாயிரத்த வச்சு என்னடியப்பா செய்றது? ஒரு சாரி கூட வாங்கேலாது.” கையாலாகாத கோபத்தில் மொழிந்தான் அவன்.
“அப்பிடி எண்டு ஆரு சொன்னது உனக்கு? நீ வா, நான் வாங்கிக் காட்டுறன்!” என்று கடைக்கு அழைத்துச் சென்றாள் அவள்.
அங்கே, ‘திருமணச் சேலைகள்’ என்கிற பிரிவில் அவனது மொத்தக் காசுக்கும் கூடச் சேலை இல்லை. பொதுவான பகுதிக்கு வந்து விலை குறைந்ததாகத் தேடித் தேடி அவள் பார்ப்பதைப் பார்க்க முடியாமல் வெளியே வந்துவிட்டான் நிகேதன். ஒரு திருமணச் சேலையைக்கூட வாங்கிக் கொடுக்க வழியில்லை. இதில் அவளைத் திருமணம் செய்யப்போகிறான்.
அவனை நம்பி வந்தவள் அந்த நிமிடத்தில் காலில் அணிந்திருப்பதின் விலையே பல ஆயிரங்களில் இருக்கும். திருமணத்துக்காக அணியப்போகும் சேலையை ஐநூறுக்குள் தேடிக்கொண்டிருக்கிறாள். எதிர்காலத்தின் மீதான பயம் மெல்லப் பிடித்துக்கொண்டது. இனிவரும் நாட்கள் அவர்களுக்கு என்ன வைத்திருக்கிறது? வீட்டினர் என்ன சொல்லுவார்கள்?
“என்னடா? இங்க வந்து நிக்கிறாய்?” மக்களால் நிறைந்து வழிந்துகொண்டிருந்த அந்தக் கடைவீதியை வெறித்துக்கொண்டிருந்தவனின் கரம் பற்றிக் கேட்டாள், ஆரணி.
ஒன்றும் சொல்லாமல் அவளைத் திரும்பிப் பார்த்தான். அவனுக்குள் ஓடும் பல கேள்விகளில் ஒன்று கூட அவளுக்குள் ஓடவில்லை போலும். நிர்மலமான முகத்தில் நம்பிக்கை நிறைந்திருக்க, அவனைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டிருந்தாள். எது கொடுத்த திடம் அவளை இப்படி நிற்க வைத்திருக்கிறது?
“என்ன நம்பிக்கைல திருமணம் வரைக்கும் வந்து நிக்கிறாய் ஆரா?”
“உன்ன நம்பித்தான்!” பளிச்சென்று பதில் சொன்னாள் அவள்.
எப்படி உணர்ந்தான் என்று சொல்லத்தெரியாமல் அப்படியே நின்றான் நிகேதன். வேலை இல்லை. ஓரளவுக்கு வசதி என்று சொல்லும் அளவிலும் இல்லை. அண்ணனின் தயவில்தான் வாழ்கிறான் என்று நன்கு தெரியும். இருந்தும் நம்புகிறாள். கர்வம் கொள்வானா? இல்லை இந்த நம்பிக்கையை எப்படிக் காப்பாற்றுவேன் என்று கலங்குவானா?
அவன் கரத்தை அழுத்திக் கொடுத்தாள் ஆரணி.
“கண்டதையும் யோசிக்காத நிக்ஸ். ரெண்டுபேரும் படிச்சிருக்கிறம். புத்தி இருக்கு. உடம்புல பலம் இருக்கு. எல்லாம் சமாளிக்கலாம். இப்ப நான் எடுத்த சாரி நல்லாருக்கா எண்டு பார்!” என்று கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனாள்.
குங்கும நிறத்தில் ஒரு கொட்டன் சேலை. தோளில் போட்டுக் காட்டினாள். அவளின் நிறத்தை இன்னுமே தூக்கிக் காட்டியதுதான். ஆனாலும், வெகு சாதாரணம். அவனுக்குப் பிடிக்கவேயில்லை. ஒன்றுமே சொல்லாமல் நின்றான்.
“அடேய்! என்னைச் சத்தியநாதனின்ர மகளா பாக்காத! இனி அவரே அப்பிடி நினைக்கமாட்டார். வேலை வெட்டி இல்லாத நிகேதனின்ர மனுசியா பார். நல்லாருக்கும்.” என்றாள் கண்ணடித்து.
அவன் உதட்டிலும் சிரிப்பு முளைத்தது. இருக்கும் மிக மோசமான நிலமையைக் கூடி கேலிபேசிச் சிரிக்க அவளால் மட்டுமே முடியும். நெஞ்சில் நேசம் பொங்கப் பார்த்தான். பேரழகியாகத் தெரிந்தாள்.
உள்ளத்தின் அழகை ஆடைகள் கூட்டிக் குறைத்துவிடுமா என்ன? “வடிவா இருக்கடி!” அவள் காதோரமாய்க் கண்களில் காதல் மின்னச் சொன்னான் அவன்.
அவள் முகம் பூவாக மலர்ந்து போயிற்று!
“நிக்ஸ்! இருக்கிறத வச்சு வாழுறது தான்டா வாழ்க்கை. இப்ப எங்களிட்ட இருக்கிறது இவ்வளவுதான். கட்டாயம் ஒருநாள் நல்லா வருவம். அப்ப வாங்கித்தா, கட்டுறன். இது முடிவில்ல ஆரம்பம். அதால சிரிச்சமாதிரியே இரு!” உற்சாகத்தோடு சொன்னவள், அந்தச் சேலைக்குப் பொருந்தும் ரெடிமேட் பிளவுஸ், அவனுக்கு வேட்டி சட்டை என்று ஆயிரத்தி ஐநூறுக்குள்ளேயே தேவையானவற்றை எடுத்து முடித்தாள்.
அப்படியே, அவள் அணிந்திருந்த நகைகளை எல்லாம் கழற்றிக் கொடுத்து மிக மிக மெல்லிய, நூல் போன்ற தாலிக்கொடியும் தாலியும் வாங்கியபோது என்ன முயன்றும் முடியாமல் நொறுங்கியேபோனான் நிகேதன். அவனை நம்பி வந்த முதல் நாளே அவளிடமிருந்து அனைத்தையும் பறித்துவிட்டானே. இயலாமையுடன் அவன் பார்க்க, அவன் கரத்தை அழுத்திக்கொடுத்தாள் ஆரணி.
“சும்மா கவலைப்படாத நிக்ஸ். இப்போதைக்கு இது காணும். பிறகு, நீ உழைக்கிற காலத்தில என்ர வயசுல தாலிக்கொடி வாங்கித்தரவேணும். நானும் போட்டுக்கொண்டு அப்பாக்கு முன்னால அப்பிடியும் இப்பிடியும் நடந்திட்டு வாறன், சரியோ!” அவன் முகத்தின் முன்னேயே விரலை நீட்டி மிரட்டல் போன்று சொன்னாள் அவள்.
அவனால் சிரிக்க முடியவில்லை. ஆனால், அவள் கொடுத்த தைரியமும் நம்பிக்கை வார்த்தைகளும் அவனுக்குத் தெம்பூட்டின. ‘இப்பிடியேவா இருக்கப் போறம். நிச்சயம் நல்லா வருவோம். அப்ப அவளுக்கு எல்லாம் செய்து குடுப்பன்!’ என்கிற உறுதியை எடுக்க வைத்தது. அதில் தானும் அவளின் கரம் பற்றி அழுத்தி, “கட்டாயமடி!” என்றான் அடைத்த உரலில்.
இலங்கையின் கரையோரங்களில் சிவனுக்கெனக் கட்டப்பட்ட பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான, மன்னாரில் அமைந்திருக்கும் திருக்கேதீஸ்வரத்தில் மணமாலை மாற்றி, தம்பதியராகப் பதவியேற்க வந்திருந்தனர் நிகேதனும் ஆரணியும்.
மாலையும் கையுமாக வந்தவர்களைப் பார்த்ததுமே ஐயரின் பார்வை மாறியது. ஒரு இறுக்கம். கண்களில் கண்டிப்பு. “வீட்டுக்குத் தெரியாம திருமணமா?”
“அந்தளவுக்குக் கோழைகள் இல்லை ஐயா. வீட்டுல சொல்லிப்போட்டுத்தான் வந்திருக்கிறம். ஆனா, ஐயா எங்களிட்ட காசில்லை. நல்லா வருவோம் எண்டு முழுமையா நம்புற ரெண்டு மனசு மட்டும் தான் இருக்கு. அப்பாவைப்போல நிண்டு இந்தத் தாலிய சுவாமிக்கு முன்னால வச்சு எடுத்துத் தருவீங்களா?” அவர் முகம் பார்த்துக் கேட்டாள் ஆரணி.
எதையும் படபடப் பட்டாசாகப் படபடத்தே பழக்கப்பட்டவளின் பக்குவமான பேச்சில் நிகேதன் அசந்துதான் போனான். அவரிடம் எப்படி விசயத்தைச் சொல்லிக் கேட்பது என்று தடுமாறிக்கொண்டு அவனிருக்க, ஒரே கணத்தில் சொல்லிவிட்டாளே.
அங்கே வந்த அய்யர் அம்மாவுக்கும் அவள் சொன்னது கேட்டது. “வருசா வருசம் இலவசமா எத்தனையோ திருமணம் செய்து வைக்கிறோம். அப்பிடி நினச்சு முழுமனதோட வாங்குங்கோவன்!” என்று, தானே வாங்கிக் கணவரிடம் கொடுத்தார்.
“ரெண்டுபேரும் போய் வெளிக்கிட்டுக்கொண்டு வாங்கோ. அறை அந்தப் பக்கமா இருக்கு.” என்று, கோயிலின் பின்னே ஒரு மரத்தின் கீழே இருந்த அறையைக் காட்டினார்.
அதற்குள் புகுந்து ஒரே நிமிடத்தில் வேட்டி சட்டைக்கு மாறினான் நிகேதன். என்னதான் மனம் முழுக்கப் பயமும் பதட்டமும் இருந்தாலும் நடக்கப்போகிற நிகழ்வின் இனிமை அவன் முகத்தில் மலர்ச்சியை உண்டாக்கிற்று. வெளியே வந்தவனை ஒற்றைப் பார்வையில் மேலும் கீழுமாக அளந்துவிட்டு, “மாப்பிள்ளைக்குக் கல்யாணக்களை வந்திட்டு போல இருக்கே!” என்று கேலிசெய்தாள் ஆரணி.
“இவ்வளவு நாளும் தனிப்பெடியன். இனி குடும்பஸ்தன். நினைக்கவே பயமா இருக்கடியப்பா! நீ சிரிக்கிறாய்.” என்றான் அவன் சிரித்துக்கொண்டு.
“நான் இருக்கிறன் மச்சி! இந்த ஆரணி இருக்கிறாள். ஒண்டுக்கும் பயப்படாத!” என்றபடி அறைக்குள் போகப்போனவள் நின்று திரும்பினாள்.
“டேய்! சாரி கட்டி விடுறியா?”
“‘முதல் பகல்’ முடிச்சுத்தான் தாலி கட்டவேண்டி வரும், பரவாயில்லையா?” அவளின் காதலன் தானே அவனும். விசமச் சிரிப்புடன் கேட்டான்.
“விடுடா! முடிச்சிட்டுக் கட்டினா என்ன இல்ல கட்டிட்டு முடிச்சா என்ன? எல்லாம் நடக்கத்தானே போகுது! சீட்டுக் குழுக்கிப் பாப்பமா? அறை வேற இருக்கு மச்சி?” அசராமல் பதில் கொடுத்தாள் அவள்.
அவனோ முறைத்தான். “ரெண்டுக்கும் எனக்கு நீதான் வேணும். சாரி இல்ல. கட்டத் தெரியாட்டிப் போத்திக்கொண்டு வா. இப்ப உள்ளுக்குப் போ!” அவளைத் தள்ளிக் கதவைச் சாற்றிவிட்டு வந்தான் அவன்.
பல்கலைக் கழகத்தில் சேலையில் கலக்கியவளுக்குச் சேலை கட்டத் தெரியாதா என்ன?
சற்று நேரத்திலேயே தயாராகி வெளியே வந்தாள் ஆரணி. எத்தனையோ நாட்கள் கம்பஸில் சேலையில் அவளைக் கண்டிருக்கிறான் தான். அவளுக்குச் சேலை மிகுந்த அழகைக் கொடுக்கும் என்பதும் அவனுக்குத் தெரியும் தான். ஆனால் இன்று.. அவனுக்குச் சொல்லத் தெரியவில்லை. அப்படியே நெஞ்சைப் பறித்தாள். திருமணமாகப் போகிறது என்கிற எண்ணம் கொடுத்த உந்துதலோ என்னவோ அவன் விழிகள் அவள்மீது உரிமையோடு படிந்தது.
அதை உணர்ந்தவளின் மனதினில் புதிய படபடப்பு. காட்டிக்கொள்ளாமல், “சைட் அடிச்சது காணும், வா! நேரமாகுது!” என்று அவனையும் இழுத்துக்கொண்டு நடந்தாள்.
“நல்ல வடிவா இருக்கிறாயடி!” காதோரமாகக் கிசுகிசுத்தவன் சும்மா சொல்லவில்லை என்று அவன் விழிகளில் தெரிந்த மயக்கம் சொல்லியது.
“பாத்தியா? அழகும் அன்பும் விலையில இல்லத்தானே? காசுல எதுவுமே இல்லையெண்டு இப்ப விளங்குதா?”
ஐய்யரம்மா தானே கோர்த்த பூச்சரத்தையும் சூடிவிட முழுமையான திருமணப்பெண்ணாகவே மாறிப்போனாள் ஆரணி. திருக்கேதீச்சரத்தானின் முன்னிலையில் பெற்றவர்களுக்குச் சமமாய் ஐயாவும் ஐய்யரம்மாவும் நிற்க, அவர்களின் கையாலேயே வாங்கிய தாலியை ஆரணியின் கழுத்துக்குப் பரிசளித்தான் நிகேதன்!
கண்ணோரம் பூத்துவிட்ட ஒற்றைத் துளிக் கண்ணீருடன் அவனுடைய துணைவியாக அவள் மாறிக்கொள்ள, கசிந்த விழிகளோடு உனக்கு நானிருக்கிறேன் என்று காட்டி அவள் நெற்றியில் திலகமிட்டான் அவன்!
எதிர்காலம் எதைப் பரிசளித்தாலும் அதை இருவரும் ஒருவருக்கு மற்றவர் துணையாக நின்று வாழ்ந்துகாட்டுவோம் என்று உறுதி பூண்டுகொண்டனர்!