“அண்ணா.. அது.. எங்களுக்கு உங்கட அறைய தாறீங்களா?”
நிகேதனுக்கு அவளின் கேள்வி புரியவில்லை. அவர்களின் அறைக்கு என்ன குறை? அப்போதுதான் குளித்துவிட்டு வந்த ஆரணியிடம் பார்வை சென்றுவர, தங்கையைத் திரும்பிக் கேள்வியாகப் பார்த்தான்.
“இல்ல.. இவருக்கு உங்கட அறை பிடிச்சிருக்காம். தோட்டத்துக்குப் போகக் கதவு இருக்கு. விருப்பமான நேரம் வெளிலயும் இருக்கலாம் எண்டு சொன்னவர். அதுதான்..” என்றாள் அவள்.
நிகேதன் ஆரணி இருவருக்குமே அதிர்ச்சிதான். என்ன சொல்வது என்று தெரியாமல் நிகேதன் நிற்க, “ஏய் கயல். அதெல்லாம் தரேலாது. நான் மெனக்கெட்டு டெரெஸ் எல்லாம் செய்து வச்சிருக்கிறன். அது எங்கட அறை.” என்று இலகுவாகவே மறுத்தாள், ஆரணி.
அவளுக்குப் பதில் சொல்லாது, “அண்ணா பிளீஸ்..” என்றாள் கயல். அதுவே ஆரணிக்குக் கோபத்தை உண்டாக்கிற்று. ஆனாலும் அடக்கிக்கொண்டு, “நான் இந்த வீட்டுக்கு வந்த நாளில இருந்து அந்த அறையில தான் இருக்கிறன். என்னால உங்கட அறைக்கு மாறேலாது கயல். நீயும் கொஞ்சம் என்னை விளங்கிக்கொள்ளு, பிளீஸ்!” என்றாள் ஆரணி.
மனதில் பாரமேற தன்னுடையவளைப் பார்த்தான், நிகேதன். அந்த அறையை அவளுக்கு எவ்வளவு பிடிக்கும் என்று அவனுக்கும் தெரியும். வீடு என்று அந்த வீட்டைச் சொன்னாலும் அவளின் வீடு அந்த அறை தான். ஆரணியும் சம்மதித்துவிடாதே என்று விழிகளால் அவனிடம் கெஞ்சிக்கொண்டிருந்தாள்.
அந்தப் பார்வையில் தமையன் மறுத்துவிடப் போகிறாரோ என்று பயந்துபோனாள், கயல்.
“அண்ணா பிளீஸ் அண்ணா. இவர் ஆசையா கேட்டவர். அதுதான்..” இப்படிக் கேட்கிற தங்கையிடம் எப்படி மறுப்பது என்று தெரியாமல் நின்றான், நிகேதன்.
“நிக்கி பிளீஸ். ஓம் எண்டு சொல்லாத. என்னால எங்கட அறையைக் குடுக்கேலாது.”
அவன் தங்கையைப் பார்த்தான். அவன் முகம் பாராமல், “எனக்கு வேணும் அண்ணா.” என்றாள் அவள்.
“இல்ல கயல்..”
“ஆரா பேசாம இரு! ரெண்டு நாள் டைம் தா. நான் மாறுறன்.” எதையும் காட்டிக்கொள்ளாத குரலில் சொல்லி விடயத்தை முடித்தான், நிகேதன்.
ஆரணி நிகேதனையே பார்த்தாள். அவ்வளவு கெஞ்சியும் சம்மதித்துவிட்டானே. கண்கள் மளுக்கென்று குளமாகிற்று. வேகமாக எழுந்து அவ்விடம் விட்டு அகன்றாள். அவள் பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு வெளியேறியபோது கூட இந்தளவுக்கு துயருறவில்லை. ஆனால் இன்றைக்கு.. நெஞ்சில் வலி குடைந்தது. உயிரும் உணர்வுமாக வாழ்ந்த அறையை விட்டுத் துரத்துகிறாள் ஒருத்தி. அதற்கு வாயை மூடி அடங்கிப் போகிறான் அவளின் நிகேதன்.
அந்த வலி கோபமாய் உருவெடுக்க ஆரம்பித்தது.
இது அவளின் வீடு. அதனால் தானே இந்த அதிகாரம். அவளின் வீட்டில் இவள் எங்கு இருந்தால் தான் என்ன? கண்ணுக்குத் தெரியாத ஆத்திரமும் அகங்காரமும் பொங்க, விறுவிறு என்று அறைக்குள் புகுந்து தன் உடைகளை எல்லாம் இழுத்து ஒரு பெட்டிக்குள் போடத்தொடங்கினாள்.
நிகேதனுக்கு அவளின் கோபம் புரிந்தது. அவளை எப்படிச் சமாதானம் செய்வது என்றுதான் தெரியவில்லை. “என்ன செய்றாய்?” என்று வினவினான்.
“ஏன் உனக்கு கண் இல்லையா?” என்று திருப்பிக் கேட்டுவிட்டு உடைகளை எடுத்துக் பெட்டிக்குள் வீசினாள்.
“இப்ப என்ன அவசரம்? இன்னும் ரெண்டு நாள் இருக்குத்தானே. நான் செய்றன் நீ விடு.” என்று தோள் தொட்டவனைப் பட்டென்று தட்டிவிட்டாள், ஆரணி.
“தொடாத நிக்கி!”
அவனுக்கும் பொறுமை பறந்தது. “என்னை என்னடி செய்யச் சொல்லுறாய்? நீயும் தானே இருந்தனி. நீ அவ்வளவு கெஞ்சியும் வேணும் எண்டு ஒற்றைக் கால்ல நிக்கிறவளிட்ட சின்னப்பிள்ளை மாதிரி என்னையும் சண்டை பிடிக்கச் சொல்லுறியா?” என்று கேட்டான் அவன்.
“அப்ப என்னை வேற வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போ. என்னால அந்த அறையில இருக்கேலாது.” என்றாள் முடிவுபோல்.
அவன் அதிர்ந்து நின்றான். அவனுக்கும் அதுதான் ஓடியது. ஆனால் ஒரு சண்டையில் வெளியேறியதாக இருக்க வேண்டாம் என்று எண்ணினான். ராகவன் புதிதாக அவர்களின் வீட்டுக்கு வந்திருக்கிற வேளையில் இந்தச் சண்டைகள் கயலின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்று பயந்தான். முதலில் வீடு பார்க்க வேண்டும். பொருட்கள் வாங்க வேண்டும். அது ஒன்றும் நினைத்த நொடியில் நடக்கிற காரியம் அல்லவே. எல்லாவற்றையும் விட கோபத்தில் கொந்தளித்துக்கொண்டு நிற்கிறவளை ஆற்றுப்படுத்துவதே முதன்மையாகப் பட்டது.
“அத பிறகு பாப்பம். இப்ப வெளிக்கிடு. வெளில போயிட்டு வந்து செய்யலாம்.” என்றான் அவன் சமாதானக் குரலில்.
“நீயும் உன்ர தங்கச்சியும் செய்த வேலையிலேயே நான் நல்ல சந்தோசமாத்தான் இருக்கிறன். அதால வெளில போகவே தேவையில்லை. நீ வேலைய பார்!” எரிச்சலுடன் சிடுசிடுத்துவிட்டு போய் கயலினியின் அறையைப் படபடவென்று தட்டினாள்.
கதவைத் திறந்தவளிடம், “எனக்கு இண்டைக்கே இந்த அறை வேணும். கெதியா உன்ர சொத்து பத்து எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு வெளில வா!” என்றாள் உத்தரவாக.
பக்கத்து அறையில் நடந்ததை எல்லாம் கேட்டுக்கொண்டுதானே இருந்தாள். ஆரணியின் கோபத்தில் அவளுக்கு மெல்லிய பயம் உண்டாயிற்று. தேவையில்லாத வேலை பார்த்துவிட்டோமோ என்று இப்போதுதான் யோசித்தாள்.
“இவர் இல்ல அண்ணா..” என்று ஆரணிக்குப் பின்னால் நின்றிருந்த தமையனிடம் அவள் இழுக்க, “ஏய்! என்ன பாத்து கதையடி. அதென்ன நான் கேள்வி கேட்டா அங்க பதில்?” என்றாள் ஆரணி.
திடுக்கிட்டாள் கயலினி. முகமெல்லாம் சிவந்து கண்களில் கோபம் கொப்பளிக்க நின்றிருந்தவளைப் பார்க்க அவளின் பயம் இன்னுமே மிகுந்து போயிற்று. “அண்ணா..” அச்சத்துடன் தமையனை அழைத்தாள்.
மனைவி ஒரு பக்கம் கூடப்பிறந்தவள் மறுபக்கம் என்று நிற்க யாருக்காகப் பேசுவது என்று தெரியாமல் தடுமாறினான் நிகேதன்.
“ஆரா அமைதியா இரு! ராகவனும் வரட்டும் நாங்க இண்டைக்கே மாறுவம்.” என்று, அப்போதும் அவளைச் சமாதானப்படுத்த முயன்றான் அவன்.
“என்னத்துக்கு நான் அமைதியா இருக்கோணும்? எல்லாத்தையுமே உன்ர தங்கச்சிக்கு பாத்து பாத்து செய்தியே, இப்ப வரைக்கும் அவள் என்ன அண்ணி எண்டு சொன்னதே இல்ல. இப்ப சொல்லச் சொல்லு. நான் என்ன கேட்டாலும் உன்னட்ட பதில் சொல்லுறாள். அப்ப நான் ஆரு அவளுக்கு? இப்பவே அவள் என்ன அண்ணி எண்டு கூப்பிட வேணும். நீ அவளுக்கு ஒழுங்கான அண்ணன் எண்டா என்ர வாய அடைக்கிறத விட்டுட்டு அவளை சொல்லச் சொல்லு!”
அவனுக்கு முகம் சிவந்து போனது. தங்கையின் முன்னால் என்ன பேச்சு இது? கயலையும் முறைத்துவிட்டு, “வாடி முதல் அறைக்க!” என்று அவளை இழுத்துக்கொண்டு போனான். “என்னடி பிரச்சினை உனக்கு? ஒரு அறைய மாறச் சொன்னதுக்கு இந்தப் பாடா? சின்ன விசயத்த சும்மா பிரச்சினை ஆகாத ஆரா.”
அப்போதும் தன் தங்கையிடம் அதைப்பற்றிப் பேசாமல் தன்னை அடக்குகிறவனின் செய்கை அவளை இன்னுமே காயப்படுத்திவிட அப்படியே அமைதியானாள். விழிகளை இறுக்கி மூடித் தன்னைச் சமன்படுத்த முனைந்தாள். மனம் கொந்தளித்தது. வெடித்துச் சிதற முயன்றது. ஆனாலும் அடக்கினாள்!
அவளின் கோலம் நிகேதனின் நெஞ்சைப் பிசைந்தது. “ஆரா..” தவிப்புடன் அவளை நோக்கி ஓரடி எடுத்து வைத்தவனை கையை நீட்டித் தடுத்தாள். “சொறி! நான் தான் கொஞ்சம் கூடுதலா கோபப்பட்டுட்டன்!” என்றுவிட்டு அமைதியாகவே தன் பொருட்களை எல்லாம் வெளியே கொண்டுவந்து வைக்கத் தொடங்கினாள்.
அப்படியே நின்றுவிட்டான் நிகேதன். சுனாமியாகக் கொந்தளித்தவள் நொடியில் எப்படி இப்படி அமைதியானாள். அத்தனை கோபதாபங்களையும் தனக்குள் போட்டு அடக்கிக்கொண்டாளா? அவனுக்கு நெஞ்சுக்குள் என்னவோ செய்தது.
வேகமாக வெளியே வந்தான். “ராகவனை கூப்பிடு. இண்டைக்கே அறையை மாத்துவம்.” என்றவன் நிதானமாகக் கயலினியின் முகம் பார்த்தான்.
அவளின் பார்வை தானாக நிலம் நோக்கிற்று.
“அவளை அண்ணி எண்டு கூப்பிட விருப்பம் இல்லாட்டி இனி என்னையும் அண்ணா எண்டு சொல்லாத!” என்றுவிட்டு ஆரணியோடு சேர்ந்து பொருட்களை வெளியே கொண்டுவந்து வைக்கத் தொடங்கினான்.
அன்னை வீட்டுக்குச் சென்றுவிட்டு வீடு வந்த ராகவன் நடப்பதைக் கண்டு அதிர்ந்தான்.
“என்ன இதெல்லாம்?”
அவன் முகத்தில் தெரிந்த இறுக்கமே கயலினிக்குள் கலக்கத்தை உண்டாக்கிற்று. “நீங்கதானே அந்த அறை நல்லம் எண்டு சொன்னீங்க?” தயக்கத்துடன் சொன்னாள்.
“உனக்கு என்ன விசரா? சும்மா ஒரு கதைக்குச் சொன்னதைப்போய்ப் பெருசா எடுத்துக்கொண்டு..” என்று சினந்துவிட்டு வேகமாக நிகேதனிடம் ஓடினான்.
“நிகேதன் பிளீஸ், மாறவேண்டாம். அழகா பராமரிச்சு இருந்த டெரெச பாத்திட்டு ஒரு பேச்சுக்குத்தான் சொன்னனான். அத பிடிச்சுக்கொண்டு வந்து கயல் கேப்பாள் எண்டு நினைக்க இல்ல. ஆரணிக்கு இந்த அறையும் டெரசும் எவ்வளவு பிடிக்கும் எண்டு இங்க வந்த கொஞ்ச நாளிலேயே எனக்குத் தெரியும். பிளீஸ் மாறாதீங்க. எப்பவும் மாதிரியே இருப்போம்.” என்றான் மன்னிப்பு கோரும் குரலில்.
நிகேதன் வெறுமையாகப் புன்னகைத்தான். “இல்ல பரவாயில்ல ராகவன். கிட்டத்தட்ட எல்லாத்தையும் வெளில கொண்டு வந்தாச்சு. கட்டிலை மட்டும் தூக்கி போட்டா சரி. அதுக்குக் கொஞ்சம் ஹெல்ப் செய்ங்க, போதும்.” புதிதாக வந்த ராகவனுக்கே ஆரணிக்கு அந்த அறையை மிகவும் பிடிக்கும் என்பது தெரிந்திருகிறது. ஆனால் கயலுக்கு தெரியவில்லை எனும்போது யாரை நொந்து என்ன பயன்?
“ஆரணி சொறி..” ராகவனுக்கு பெரும் சங்கடம். தன்னால் இப்படி ஒரு பிரச்சனை உருவாகிவிட்டதே என்று எண்ணி வெட்கினான்.
“பரவாயில்ல விடுங்கோ.” என்று அவன் முகம் பாராமல் முடித்துக்கொண்டாள் ஆரணி.