அவள் ஆரணி 33 – 1

அன்று, மாலை நான்கு மணிபோல் வீட்டுக்கு வந்தான் நிகேதன். அவன் விழிகள் யாருக்கும் சொல்லாமல் ஆரணியைத் தேடியது. அறை, கிணற்றடி, சமையலறை எங்கும் அவளைக் காணவில்லை. இந்த நேரத்துக்கு செண்டரில் இருந்து வந்திருப்பாள் என்று கணித்துத்தான் வந்தான். இன்னும் வீட்டுக்கு வராமல் என்ன செய்கிறாள்?

எப்போதும் காலையில் அவன் எழுகிற அரவத்துக்கே எழுந்து, அவன் தயாராவதற்குள் உணவு தயாரித்துவிடுவாள். இன்று, அவன் தயாராகியும் அவள் எழுந்துகொள்ளவில்லை என்றதும் அவனுக்கு எழுப்ப மனமில்லை.

அவளருகில் சென்று மெல்ல அமர்ந்தான். இரவிரவாக அழுத்திருக்கிறாள் என்பதற்கு அடையாளமாகக் கண்மடல்கள் வீங்கியிருந்தது. எப்போதும் அவன் மார்புக்குள் ஒண்டிக்கொள்கிறவள் நேற்று அவன் கோபத்தில் இருந்ததில் அநாதரவான குழந்தை ஒன்றினைப் போலத் தனக்குள்ளேயே சுருண்டிருந்தாள்.

ராகவனின் மேலிருந்த கோபத்தை அவளிடம் காட்டிவிட்டது புரிந்தது. அவளின் தலையை வருடிக்கொடுத்தான். தன்னையே உலகமாக நம்பி வாழும் அவளை நோகடித்துவிட்ட தன் முட்டாள் தனத்தை எண்ணி நொந்துகொண்டான்.

நிம்மதியான உறக்கமேனும் அவளுக்குக் கிட்டட்டும் என்கிற கரிசனையுடன் சத்தமிடாமல் எழுந்து வெளியே வந்து அறைக்கதவைச் சாற்றினான். அதற்குள் விழித்திருந்த அமராவதி, “சாப்பிடேல்லையா தம்பி? இன்னும் எழும்பாம உன்ர மனுசி என்ன செய்றாள்?” என்று வினவினார்.

“இரவு லேட்டா சாப்பிட்டது பசி இல்லை அம்மா. அவள் படுக்கட்டும். எழுப்பாதீங்க.” என்றுவிட்டு புறப்பட்டவனைத் தடுத்து நிறுத்திவிட்டு, ஒரு தேநீரை ஊற்றிக்கொண்டுவந்து கொடுத்தார், அவர்.

அதை அருந்திவிட்டுப் புறப்பட்டான் அவன்.

“நில்லன். அஞ்சு நிமிசத்தில சாப்பிட ஏதாவது செய்றன்.” என்றவரிடம் மறுத்துவிட்டு வாசலுக்கு நடந்தான். பின்னாலேயே அவரும் வந்தார்.

அவன் கேள்வியாகப் பார்க்க, “உன்னோட கதைக்கோணும் தம்பி.” என்றார்.

இவருமா என்று மனம் சலித்தது. அவர் சொல்ல முதலே ஆரணியைப் பற்றித்தான் என்பதும் தெரிந்து போயிற்று. உள்ளே ஒரு எரிச்சல் சுறு சுறு என்று எழுந்தாலும் ஒன்றும் சொல்லாமல் நின்றான்.

அவன் முகத்தைப் பார்த்தே அவனைப் படித்தார் அன்னை.

“உன்ர மனுசிய பற்றிச் சொன்னா உனக்குப் பிடிக்காது எண்டு தெரியும். அதாலதான் சொல்லிப் பிரயோசனம் இல்லை எண்டு இவ்வளவு காலமும் விட்டுட்டன். ஆனா இப்ப… என்னால சொல்லாம இருக்கேலாது. முந்தியாவது நாங்க மட்டும் தான் இருந்தோம். என்ர மகன எனக்கு முன்னாலேயே அவள் வாடா போடா எண்டு கதைச்சாலும் பல்லைக் கடிச்சு பொறுத்துபோனன். ஆனா இப்ப ராகவனும் இந்த வீட்டில இருக்கிறார். ராகவனுக்கு முன்னால அவள் உன்ன அப்பிடிக் கதைக்கிறது எனக்குப் பிடிக்கேல்ல. நாளைக்கு அந்தப் பெடியனும் உன்ன மதிக்காது. ஒரு பயம், மரியாதை இருக்காது. அது நல்லதில்லை. நேற்று நீ அவள அடக்காட்டி இன்னும் கதைச்சிருப்பாள். பிறகு எங்களைப் பற்றி ராகவன் என்ன நினைச்சிருக்கும். நீங்க தனியா இருக்கேக்க அவள் எப்பிடி எண்டாலும் கூப்பிடட்டும். ஆட்களுக்கு முன்னால மரியாதையா கதைக்கச் சொல்லு. இதையெல்லாம் என்னால அவளிட்ட போய்ச் சொல்லேலாது. சொன்னேன் எண்டு வை அதுக்கு ஆயிரம் பதில் சொல்லுவாள்.” என்றவரின் பேச்சில் அவனுக்குக் கோபம் வந்தது.

“உங்கட காலத்தில அப்பாவ பெயர் சொல்லிக் கூப்பிட்டு இருக்கிறீங்களாம்மா?”

அவர் மறுத்துத் தலையசைத்தார். “கயல் ராகவனை ரகு எண்டு கூப்பிடுறாள். அது சரியா?”

“என்ன விசர் கதை கதைக்கிறாய்? பெயர் சொல்லிக் கூப்பிடுறதும் டா போட்டுக் கதைக்கிறதும் உனக்கு ஒண்டா?” என்றார் அவர் எரிச்சலுடன்.

“எனக்கு ரெண்டும் ஒண்டுதான். இதெல்லாம் பாக்கிறவையின்ர பார்வையில இருக்கு. அவரவரின்ர மன விசாலத்தில இருக்கு.”

“அதுதானே. அவளைப்பற்றி ஒண்டு சொல்லி எண்டைக்கு நீ கேட்டிருக்கிறாய் இண்டைக்குக் கேக்க? எனக்குச் சுருங்கின மனதாவே இருக்கட்டும். எண்டைக்கோ ஒரு நாள் நீயே பட்டுத் தெளிவாய். அப்ப விளங்கும்! அவளை மாதிரியே உன்னையும் அடங்காபிடாரியா…” எனும்போதே, “அம்மா!” என்று அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் இரைந்தான் அவன்.

“அவள் என்ர மனுசி. என்ன கதைக்கிறதா இருந்தாலும் யோசிச்சு கதைங்க.” என்றுவிட்டு விறுவிறு என்று வெளியேறியவனுக்கு என்னவோ மனதெங்கும் ஒரே உளைச்சல்.

ஏன் எல்லோரும் அவளையே குறை சொல்கிறார்கள்? அவனுக்குப் புரியவே இல்லை. கொஞ்சம் படபட என்று பேசுவாளே தவிர மனதில் எதையும் வைத்திருக்கத் தெரியாது. கள்ளமில்லை. பொய் இல்லை. தன் அடாவடியில் கூட அன்பைக் கொட்டுகிறவள். அப்படியானவளைப்போய்.. இவர்களின் பேச்சைக் கேட்டு அவனும் கோபப்பட்டு ஆத்திரப்பட்டு அவளை அழவைத்து.. கடவுளே.

அன்று முழுக்க அவள் நினைவாகவே இருந்தது. தான் கோபப்பட்டபோது அடிவாங்கிய குழந்தையாக அவள் கலங்கி நின்ற காட்சியே அவனை வதைத்தது. ‘உனக்கும் ஓவராத்தான் கோவம் வருது நிகேதன். கொஞ்சம் அடக்கு!’ என்று தன்னைத் தானே திட்டியும் கொண்டான். இனியும் சமாளிக்க முடியாது என்று அவளைப் பார்க்க ஓடிவந்தால் அவள் இல்லை.

கைபேசியை எடுத்து அவளுக்கு அழைத்தான்.

“ஹலோ..” மெல்லிய தயக்கம் நிரம்பிய குரலே அவன் நெஞ்சைப் பிசைந்தது. அவன் என்று தெரிந்தாலே, “டேய் நிக்கி!” என்றுதான் கூவுவாள். இன்று யாரோவுக்குப்போல் ஹலோ என்கிறாள்.

“எங்க நிக்கிறாய் ஆரா?”

“இங்க செண்டரில..”

“இன்னும் அங்க நிண்டு என்ன செய்றாய்? ஏதும் பிரச்சனையா? இல்லத்தானே?” அவனுக்கு அந்த நிமிசமே அவளைப் பார்க்க வேண்டும் போலிருந்தது.

அவனுடைய அக்கறையில் அவள் விழிகளை சிமிட்டித் தன்னை அடக்கினாள். “இல்ல. ஆண்டுவிழா பற்றி அபிராமி மிஸ் கூப்பிட்டுக் கதைச்சுக்கொண்டு இருந்தவா. அதுதான்..”

“சரி கவனமா வா. நான் வீட்டுலதான் நிக்கிறன்.” என்றுவிட்டு வைத்தான். இருவருக்குமே மற்றவரின் நினைவுதான்.

அவளின் பேச்சில் விலகல் என்பதை விட மிகுந்த கவனம் தெரிந்தது. அனாவசியமாக ஒரு வார்த்தை வரவில்லை. ‘தயவு செய்து வாயத் திறக்காத’ என்றானே. அதைக் கடைப்பிடிக்கிறாளா அவனின் ஆரா?

மனம் தவித்துப்போக அவளின் வரவுக்காக ஹாலிலேயே வந்து அமர்ந்துகொண்டான். இப்படிப் பகல் பொழுதில் அவனை வீட்டில் காண்பது என்பது அரிதிலும் அரிது என்பதில், “என்ன அண்ணா வீட்டுல நிக்கிறீங்க?” என்று கேட்டாள் கயலினி.

“இண்டைக்கு மட்டக்களப்புக்கு போகவேணும். அதுதான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திட்டு வெளிக்கிடப்போறன்.” என்று பதில் அளித்துவிட்டு, அவள் வைத்தியரிடம் போய் வந்தாளா, அவர் என்ன சொன்னார் என்று அக்கறையாகக் கேட்டுத் தெரிந்துகொண்டான்.

“எத்தனை நாள் ட்ரிப் நிகேதன்? உடனேயே திரும்பி வாறது கஷ்டம் என்ன?” முதல் நாள் சறுக்கலை தானும் நேராக்க அவனோடு வந்திருந்து பேசிக்கொண்டிருந்தான், ராகவன்.

“நாலு நாள். ஒரு கலியாண வீட்டுக்கு ரெண்டு குடும்பம் சேர்ந்து வருகினம். அப்பிடியே மாமாங்கப் பிள்ளையார் கோவில், பீச் எல்லாம் பார்த்துக்கொண்டு வரவாம். இங்க திரும்பி வர அஞ்சு நாள் ஆகிடும்.” இப்படி இவர்கள் பேசிக்கொண்டு இருக்கையிலேயே ஆரணி வந்து சேர்ந்தாள்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock