அவளின் ஸ்கூட்டியின் சத்தம் கேட்டதுமே நிகேதனின் கவனம் வாசலுக்குப் பாய்ந்தது. வீட்டுக்குள் வந்துகொண்டிருந்தவளின் பூ முகம் வாடியிருக்க இன்னுமே கண் மடல்களின் தடிப்பு இலேசாகத் தெரிந்தது. அவளும் அவனைத்தான் பார்த்தாள். இருவரின் பார்வையும் ஒன்றுடன் ஒன்று கலந்தாலும் உணர்வுகளைப் பரிமாறிக்கொள்ளாமல் மறைத்தன. ராகவனைப் பார்த்து முறுவல் சிந்திவிட்டு அப்படியே ஹாலை கடந்து அறைக்குள் நுழைந்துகொண்டாள்.
நிகேதனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. எழுந்து உள்ளே செல்ல மனம் உந்தியது. ராகவனும் இருக்கையில் போகமுடியாமல் அங்கேயே அமர்ந்திருந்தான். “உங்கட மற்ற வேன அந்த ட்ரைவர் பெடியன் தான் வச்சிருக்கிறவனா?” என்று கேட்டுக்கொண்டிருந்தான் ராகவன்.
“ம்.. இங்க நிப்பாட்ட இடமும் இல்லத்தானே. அதைவிட ஒவ்வொரு நாளும் அவன் இங்க கொண்டுவந்து விட்டுட்டு பிறகு திரும்ப வந்து எடுக்க வேணும். அது ரெண்டு வேல. அவனே வச்சிருந்தா எங்க போகவேணும் எண்டு சொன்னா நேரத்துக்கே போவான்.” வாய் பதில் சொன்னாலும் ஆரணி குளிக்கக் கிணற்றடிக்கு நடப்பது தெரிந்தது. இது தெரிந்துதான் டேங்கில் தண்ணீர் நிரப்பிவிட்டான்.
அவள் குளித்துவிட்டு வந்து சாப்பிட்டாள். ஒரு வழியாக ராகவனும், “எனக்குக் கொஞ்சம் பேப்பர் கரெக்ஷன் இருக்கு நிகேதன். அத பாக்கப் போறன்.” என்றுவிட்டு எழுந்துகொண்டான்.
‘அப்பாடி… இப்பயாவது விட்டானே..’ யாரும் அறியாமல் மூச்சை இழுத்துவிட்டு அறைக்குள் புகுந்துகொண்டான். வருவாள் பேசுவோம் என்று அவன் காத்திருக்க அவளோ சமையலறையைக் கிண்டிக்கொண்டிருந்தாள்.
‘இவள் ஒருத்தி.. தனியா மாட்டுறாளே இல்ல..’ இனி ஐந்து நாட்களுக்குப் பார்க்க முடியாது. சண்டை வேறு. மனம் வெகுவாகவே அவளின் அண்மையை நாடியது. அவளை சமாதானம் செய்ய உந்தியது. அவளோ அவனைப் புரிந்துகொள்ள மாட்டேன் என்று அடம் பிடித்துக்கொண்டு நிற்கிறாள். கோபத்துடன் வந்து மீண்டும் ஹாலில் அமர்ந்துகொண்டான்.
“எத்தனை மணிக்கு தம்பி வெளிக்கிடுறாய்?” சோபாவில் சாய்ந்திருந்த அமராவதி மகனிடம் விசாரித்தார். ஆரணியிடம் பார்வை ஒருமுறை சென்று வர, “எட்டு மணிபோல வெளிக்கிட்டா காணும் அம்மா. திரும்பி வர ஒரு கிழமை(வாரம்) ஆகும்.” என்றான். அப்போதாவது அவள் அறைக்கு வருவாள் என்று பார்க்க அவள் அசையவே இல்லை. அவன் பல்லைக் கடித்தான்.
அங்கே அவள் அங்கிருந்த அவகாடோ பழங்களை வெட்டி சீனியும் பாலும் சேர்த்து ஜூஸாக்கி கொஞ்சமே கொஞ்சம் ஏலக்காய் பவுடர் தூவி, பெரிய கப் ஒன்றில் நிரப்பி எடுத்துக்கொண்டு வந்து கயலினிக்குக் கொடுத்தாள்.
அதைக் கவனித்துவிட்டு, “இன்னும் இருந்தா அவனுக்கும் குடு.” என்றார் அமராவதி.
“எனக்கு என்னத்துக்கு? சாப்பிட்டதே இன்னும் செமிக்க இல்ல.” என்றான் அவன். கவனம் மட்டும் அவளிலேயே இருந்தது.
“நல்ல கனிஞ்ச பழம் தம்பி. குடி! இந்தப் பக்கம் லேசுல கிடைக்காது. சொல்லிவச்சு வாங்கினான்.”
எந்தக் கதையும் இல்லை. சற்று நேரத்திலேயே ஒரு தட்டில் மூன்று கிளாஸ்களைக் கொண்டுவந்து ராகவனுக்கானதை கயலிடம் கொடுத்துவிட்டு அவருக்கும் அவனுக்கும் நீட்டினாள் அவள். கிளாஸ் எடுக்கும்போது அவள் முகம் பார்த்தான். எந்த உணர்வுமே இல்லை. கல் போன்று இருந்தது.
எந்த நிமிடமும் என்ன நினைக்கிறாளோ அதை அப்படியே கொட்டுகிற அருவி அவள். அப்படிச் சலசலவென்று பாயும் அருவிக்குப் பெரிய பூட்டாகப் பூட்டி அடைத்துவைத்தால் எப்படி இருக்கும்?
“உனக்கு?” நெஞ்சு அடைக்கக் கேட்டான்.
அவள் ஒன்றும் சொல்லாமல் போக, “இன்னொரு கிளாஸ் கொண்டுவா, எனக்கு இது கூட.” என்றான் மீண்டும்.
“அவள் எந்தநேரமும் கிட்சனுக்குத்தானே நிக்கிறாள். வேணும் எண்டால் குடிப்பாள். நீ குடி.” என்றார் அமராவதி.
“கிச்சனுக்க நிண்டா? கண்ட நேரமும் சாப்பிடுற பழக்கம் அவளுக்கு இல்ல.” என்றவன் தானே எழுந்துபோய் ஒரு கிளாஸ் எடுத்துத் தன்னுடையதில் பாதியை வார்த்து அவளுக்கு நீட்டினான்.
“குடி!”
ஜூஸ் தயாரித்த பாத்திரங்களைக் கழுவிக்கொண்டு இருந்தவள் ஒன்றுமே சொல்லவில்லை. வேகமாகக் கையைக் கழுவி அருகிலிருந்த துண்டில் துடைத்துக்கொண்டு வேகமாக வாங்கி ஒரே மூச்சில் வாய்க்குள் ஊற்றிவிட்டு அந்தக் கிளாஸையும் சேர்த்துக் கழுவத் தொடங்கினாள்.
அதிர்ந்து நின்றான் அவன். மறுத்தால் அவன் பிடி என்பான். வற்புறுத்துவான். ‘எதற்கு உன்னோடு ஒரு வாக்குவாதம். நான் குடிக்கோணும். அவ்வளவுதானே. தா! குடிக்கிறேன்’ என்பது போலிருந்தது அவளது செய்கை.
“இரவுக்கு இடியப்பம் சாப்பிட்டா நல்லாருக்கும் என்னம்மா? இறால் தலை போட்டு சொதியும் சம்பலும் நினைக்கவே வாயூருது.” என்று தாயிடம் கேட்டுக்கொண்டே டிவியின் முன்னே போயிருந்தாள், கயலினி.
சட்டென்று தண்ணீரை கொதிக்க வைத்துவிட்டு, மாவை எடுத்துப் பாத்திரத்தில் இட்டுவிட்டு, இடியப்பத் தட்டுகளை மேலிருந்த கப்பபோர்ட்டில் இருந்து எடுத்தாள், ஆரணி.
மாலை உணவுக்கு ஓடர் அவளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதையே அவன் அப்போதுதான் உணர்ந்தான். கொடுத்த விதம்?
சுர் என்று ஏறியது. ‘அண்ணி, இண்டைக்கு இடியப்பம் அவிப்பமா?’ என்று கேட்டால் என்னவாம்? கோபத்துடன் அவன் விறாந்தைக்குப் போக முனைய, “ஒரு நிமிசம்!” என்று தடுத்தாள் அவள்.
யாரையோ யாரோ அழைப்பது போல் என்ன இது என்று புருவம் சுழித்துப் பார்த்தான் அவன்.
“ஏதோ ஒண்ட(ஒன்றை) சமைக்கத்தான் போறன். அத அவளுக்குப் பிடிச்சதா சமைச்சிட்டுப் போறன். அத கேக்கப்போய் உன்ர வீட்டுச் சந்தோசத்தை, உன்ர நிம்மதிய எனக்காகக் கெடுக்காத. திரும்பவும் என்னால ஒரு சண்டை இங்க வரவேண்டாம்.” என்று அவன் கண்களைப் பார்த்து சொல்லிவிட்டு திரும்பி வேலையைப் பார்த்தாள், ஆரணி.
சட்டென்று சமாளிக்கமுடியாமல் நிலைகுலைந்துபோனான் நிகேதன். என்ன சொல்கிறாள்? அவனுடைய வீடாமா? அவனுடைய சந்தோசமாமா? அப்போ அவள்?
அவ்வளவு நேரமும் அந்தச் சண்டையை அவன் சாதாரணமாகத்தான் கடக்க நினைத்தான். இவ்வளவு காலமும் நடந்ததைப்போல இதுவும் ஒன்று என்று எண்ணினான். அப்படி இல்லை என்று ஆரணி காட்டினாள். நிகேதனுக்கு மிகுந்த திகைப்பு.
கூடவே அவன் வீட்டினர் நடந்துகொள்ளும் முறை? கயல் தாய்மை உற்றிருக்கிறாள் தான். அதற்கென்று சும்மாவே இருந்து வேலை ஏவிக்கொண்டே இருப்பதா? வேலைக் கள்ளிக்குப் பிள்ளை சாட்டாம். அவனுடைய தங்கைக்கு வயிற்றிலேயே இருக்கும் குழந்தை சாட்டோ? என்னதான் தலை சுற்றல், வாந்தி இருந்தாலும் கல்லூரி சென்று வருகிறாள் தானே. இங்கே ஒருத்தி செய்ய இருக்கிறாள் என்றதும் சோம்பி இருந்து அனுபவிக்கச் சொல்லுகிறதோ? மனம் கொதித்துப் போயிற்று.
ஆரணி சொன்னதுபோல இதைக் கேட்டுக்கொண்டுபோய் இன்னொரு பிரச்சனையாக மாற்றாமல் சத்தமே இல்லாமல் அதற்குத் தீர்வு கண்டான் நிகேதன்.