ஒருவித பரபரப்புடன் செண்டரில் இருந்து வீட்டுக்குப் புறப்பட்டாள் ஆரணி. காரணம், காலையிலேயே மட்டக்களப்பில் இருந்து புறப்பட்டுவிட்டதாக மெசேஜ் அனுப்பியிருந்தான் நிகேதன். இப்போது வந்திருப்பான், வீட்டில் நிற்பான் என்கிற நினைவே அவளுக்குள் இனிமையைப் பரப்பிற்று. என்னதான் அவனோடு கோபதாபம் என்றாலும், அவனுடைய வார்த்தைகள் காயப்படுத்தி இருந்தாலும் அவனில்லாத நாட்கள் காற்றில்லா உலகில் வசிப்பதுபோல் பெரும் புழுக்கமாகத்தான் கழிந்து போயிற்று.
அன்று, எல்லோருக்கும் பொதுவான போய்வருகிறேனுடன் புறப்பட்டுப் போனவன் அவ்வப்போது தான் எங்கே நிற்கிறேன் என்று அவளுக்குக் குறுஞ்செய்தியில் தெரியப்படுத்தினானே தவிர இந்த ஐந்து நாட்களும் அழைத்துப் பேசவே இல்லை. அவளோடு பேசாமல் இருந்து கோபத்தைக் காட்டியபடியே அவள் தன்னைக் குறித்து யோசித்துக் கவலையுறக் கூடாது என்று குறுஞ்செய்தி அனுப்பி அக்கறையையும் காட்டினான்.
வீட்டுக்கு வந்தவளின் முகம், அவனுடைய வேன் நிற்கும் இடம் வெறுமையாக நிற்கவும் வாடிப்போயிற்று. ‘இன்னும் வரேல்லையா? இல்ல வந்திட்டு திரும்ப ஹயர் போய்ட்டானா?’ கேள்வியுடன் அறைக்குள் விரைந்தாள்.
அங்கே, அவன் களைந்து போட்டிருந்த ஆடைகளும் கட்டிலில் கிடந்த டவலும் அவன் வந்துவிட்டான் என்பதைச் சொல்லிற்று. ஓடிப்போய் அவன் சட்டையை எடுத்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள். விழிகள் மெல்லக் கரித்தன. அவனுடைய வார்த்தைகள் அவளின் நெஞ்சை ஆழமாகக் கீறியது மெய். அந்தக் காயம் இன்னுமே ஆறாமல் வலிப்பதும் மெய். அதைப்போலவே, அவனைக் கண்டுவிட, அவன் கைகளுக்குள் கரைந்துவிட இந்த நொடியில் அவள் துடிப்பதும் மெய்யே.
உடைமாற்றி முகம் கழுவி அவள் சாப்பிட்டு முடித்தபோது அவன் வந்து சேர்ந்தான். வந்தவன் அறைக்கு வராமல் ஹாலிலேயே அமர்ந்து அவளைப் பார்க்க ஆரணியாலும் அவனிடமிருந்து விழிகளை அகற்ற முடியவில்லை. பயணக்களை முற்றிலும் தீராத தோற்றம். கண்களின் சிவப்பு உறக்கமின்மையைச் சொல்லிற்று.
அமராவதியும் கயலினியும் ஹால் சோபாவிலேயே இருந்ததில், “ராகவன் எங்க கயல்? நிண்டா வரச்சொல்லு.” என்றான் தங்கையிடம்.
“ரகு! உங்கள அண்ணா வரட்டாம்.” என்று, இருந்த இடத்திலிருந்தே தங்களின் அறையைப் பார்த்துக் குரல் கொடுத்தாள், அவள். அன்னை மகன் இருவரின் பார்வையும் ஒருமுறை சந்தித்து மீண்டது. ராகவன் வர, “நீயும் வா, ஆரா.” என்று அவளையும் அழைத்தான்.
என்னவோ முக்கியமானது பேசப்போகிறான் என்று எல்லோருக்குமே புரிந்தது. அவனையே பார்க்க, “நாங்க வேற வீட்டுக்குப் போகலாம் எண்டு இருக்கிறம் அம்மா. கயலுக்கும் பிள்ளை பிறந்தா ஒரு அறையோட சிரமம். நீங்களும் எவ்வளவு நாளைக்குத்தான் இங்கயே படுப்பீங்க?” என்றான் அன்னையிடம்.
ஆரணிக்கு மெல்லிய அதிர்ச்சி. கூடவே, ஒரு மகிழ்ச்சி குமிழியிடுவதையும் தவிர்க்க முடியவில்லை. அமராவதிக்கு என்ன இருந்தாலும் மகன் தனியாகப் போகப்போகிறேன் என்றதில் மெல்லிய வருத்தம். “அதுக்கு ஏன் தம்பி வேற வீட்டுக்கு போக? கயல் சொன்னமாதிரி இன்னொரு அறையைக் கட்டிப்போட்டு இங்கயே இருக்கலாமே?” என்று தடுத்துப் பேசினார்.
“அந்தளவுக்குச் செலவு செய்ய இப்ப ஏலாது அம்மா. அதைவிட, எங்களுக்கு எண்டு ஒரு வீடு இருக்கிறதுதான் எல்லாத்துக்குமே நல்லது.”
முகம் சற்றே கருத்துவிட, “இதுக்கு நாங்களா காரணம் நிகேதன்?” என்று கேட்டான் ராகவன். “உண்மையிலேயே இது இந்தளவு தூரத்துக்கு வந்து நிக்கும் எண்டு நான் நினைக்கேல்ல.” என்றுவிட்டு தன் மனைவியைக் கண்டனத்துடன் நோக்கினான்.
இல்லை என்று தலையை அசைத்தான் நிகேதன். “இது கயலுக்குத் தந்த வீடு. அதுல நாங்க இருக்கிறது சரியில்ல. ரெண்டாவது, ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு அறைக்க மட்டுமே வாழுறது இட்டுமுட்டா இருக்கு ராகவன். வெளிப்படையா சொல்லப்போனா ஒரு சுதந்திரம் இல்லாத மாதிரி இருக்கு. அம்மாவும் பாவம், வயசான காலத்தில நிம்மதியில்லாத நித்திரை. மற்றும்படி குடும்பம், சொந்தபந்தம் எண்டு இருந்தா சின்னச் சின்னச் சண்டை சச்சரவுகள் வந்து போறது வழமை தானே. அதால நீங்க காரணமில்லை. ஏன் யாருமே காரணமில்லை.” யாரையும் குற்றம் சொல்லாமல், யாரையும் குறையாக நினைக்க விடாமல் சுமூகமாகவே அந்த விடயத்தை முடிக்க நினைக்கிறான் என்று எல்லோருக்குமே புரிந்தது.
அவன் சொல்வதில் நியாயம் இருந்தாலும் இது நடப்பதற்கு ஆரம்பப்புள்ளி தாங்கள் இருவரும் தான் என்று ராகவன் கயல் இருவருக்குமே தெரிந்தது. இருந்தும் அதற்குமேல் என்ன பேசுவது என்று தெரியாது அமைதியானான் ராகவன்.
அவளிடம் வார்த்தைகளை விட்டுவிட்டாலும் அவளின் வார்த்தைகளைச் சும்மா கடந்துபோகமாட்டான் என்று ஆரணிக்குத் தெரியும். இருந்தாலும் இத்தனை விரைவில் இதை எதிர்பார்க்கவில்லை.
“உடுப்ப மாத்திக்கொண்டு வா. வீடு பாத்துக்கொண்டு வருவம்.” என்றான் நிகேதன். அவள் தயாராகி வந்தபோது அவன் தன் பைக்குடன் வாசலில் நின்றான்.
ஆரணிக்குள் மெல்லிய ஆச்சரியம். அவள் விழிகள் அவனை நோக்கிற்று. அவனும் கண்ணாடி வழியே அவளைத்தான் பார்த்தான். பேசாமல் ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு அவன் பின்னால் ஏறி அமர்ந்துகொண்டாள், ஆரணி.
அமைதியாகவே கழிந்த பயணம் அச்சறுக்கையான(அடக்கமான/பாதுகாப்பான) ஒரு வீட்டின் முன்னே நின்றது. அங்கே நின்ற சுகிர்தனைக் கண்டு விழிகளை விரித்தாள், ஆரணி.
“நீங்க என்ன செய்றீங்க இங்க?”
“உங்கட ஆள் மட்டக்களப்பில நின்றுகொண்டு வீடு பாத்து வைக்கச் சொன்னவர். அதுதான் பாத்து வச்சிருக்கிறன். பிடிச்சிருக்கா எண்டு நீங்கதான் சொல்லவேணும்.” என்றான் அவன்.
‘ஓ..’ அவளுடைய வேதனை அவனை விரைந்து செயலாற்ற வைத்திருக்கிறது. மனதினுள் ஒரு சந்தோசம் பொங்க தன்னுடன் கூடவே நடந்து வந்துகொண்டிருந்தவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு வீட்டைக் கவனித்தாள்.
பெரிய காணி இல்லை என்றாலும் சுற்றிவர மதில் கட்டியிருந்தார்கள். அவர்களின் வாகனம் உள்ளே வந்து போவதற்கு ஏற்ப நல்ல பெரிய கேட். அடக்கமான இரண்டு அறைகள் கொண்ட வீடு. வீட்டுக்குள் பைப் லைன், அட்டாச் பாத்ரூம் எல்லாம் இருந்தது. முக்கியமாக வீட்டின் முன் கதவுக்கும் பின் கதவுக்கும் இரும்புக் கதவு போட்டிருந்தார்கள். அவன் இல்லாத பொழுதுகளில் அவள் தனியாக இருப்பாள் என்பதால் பாதுகாப்பை முக்கியமாகக் கவனித்திருக்கிறான் என்று புரிந்தது. நிச்சயமாக இது யாரோ வெளிநாட்டில் இருப்பவர்கள் கட்டிவிட்டிருக்க வேண்டும் என்று ஊகித்தாள் ஆரணி. சுகிர்தனும் அதையேதான் சொன்னான்.
“இந்த வீட்டுக்குச் சொந்தக்காரர் ஜெர்மன்ல இருக்கிறாராம், ஆரணி. பக்கத்து வீடுதான் இந்த வீட்டுக்காரரின்ர அம்மா வீடு. அவா கொஞ்சம் வயசானவா. அதால திறப்பை என்னட்டையே தந்தவா. பிடிச்சிருந்தா மேற்கொண்டு கதைக்க அங்க வரச்சொன்னவா.”
“வாடகை என்னமாதிரியாம்?” ஜன்னல் கதவுகளை திறந்து மூடிப்பார்த்தபடி விசாரித்தாள் ஆரணி.
“வாடகை பத்தாயிரம். மூண்டு மாத அட்வான்ஸ் குடுக்க வேணும். அந்த அம்மா சோலி இல்லாதவா. அவவுக்கு நீங்க துணை உங்களுக்கு அவா துணை. நிகேதன் ரெண்டு மூண்டு நாள் எண்டு வெளில போனாலும் பயமில்லை.” என்றான் அவன்.
“ம்ம்..” அவன் சொன்னவற்றைக் கேட்டுக்கொண்டே இன்னுமொருமுறை வீட்டைப் பார்க்கப் போனாள் அவள்.
வெளியே வந்து சுற்றுச் சூழலை பார்வையால் அளந்துகொண்டிருந்த நிகேதனிடம் வந்தான் சுகிர்தன்.
“பிடிச்சிருக்கா நிகேதன்? ஒண்டும் சொல்லாம நிண்டா என்ன அர்த்தம்?”
“வீட்டுக்காரி அவள் தானே. அவளே சொல்லட்டும். அவளுக்குப் பிடிச்சா எனக்கு ஓகேதான்.” என்றான் அவன். “அக்கம் பக்கம் சனம் எப்பிடியாம்?”
“எல்லாரும் சொந்த வீட்டுக்காரர் தானாம். காலம் காலமா இங்கயே இருக்கிற ஆக்கள் தானாம். பிரச்சனை இல்லாத மனுசர் எண்டு சொன்னா அந்த அம்மா.”