“வீட்டுக்காரிக்குப் பிடிச்சிருக்கு. வீட்டுக்காரன் என்ன சொல்லுறார் சுகிர்தன்.” என்றபடி வந்தாள், ஆரணி.
சிரிப்புடன் இருவரையும் ஏறிட்டான் சுகிர்தன். “ரெண்டுபேருக்கும் சண்டையோ? என்னை நடுவில வச்சு கதைக்கிறீங்க?”
எதையும் காட்டிக்கொள்ளாமல் அவன் கேள்விக்குப் பதிலும் சொல்லாமல் ஆரணி கண்களில் சிரிப்பைத் தேக்கி இருவரையும் பார்த்தாள். நிகேதனும் வாயைத் திறந்தான் இல்லை. ஆக, இருவரும் தங்களுக்குள் பிடுங்குப்பட்டாலும் எதையும் மூன்றாமவரிடம் காட்டிக்கொள்ளத் தயாராக இல்லை என்று சுகிர்தனுக்குப் புரிந்துபோயிற்று. அவனும் ஒரு சிரிப்புடன் அதை அப்படியே கடந்தான்.
அவளை ஒரு பார்வையால் அளந்துவிட்டு, “அவளுக்கு வீடு பிடிச்சிருக்கு. வா, மேல என்ன ஏது எண்டு அந்த அம்மாவோட கதைப்பம்.” என்று சுக்கிர்தனோடு சென்று அனைத்தையும் கதைத்துப்பேசி, வீட்டை வாடகைக்கு எடுப்பதாகச் சொல்லிவிட்டு வந்தான் நிகேதன்.
சுகிர்தன் விடைபெற்றுக்கொள்ள மீண்டும் இவர்களின் பயணம் தொடங்கிற்று.
வரும்போதும் சரி இப்போதும் சரி விலகி அமர்ந்து தன் தோளைக்கூடப் பற்றாமல் இருந்தவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, நேராக அவர்களின் பெருக்கை மரத்தடிக்கு பைக்கை விட்டான் நிகேதன்.
எங்குப் போகிறான் என்பதை ஊகித்துவிட்ட நிமிடத்தில் இருந்து ஆரணியின் உணர்வுகள் எல்லாம் ஒன்றாகக் குவிய ஆரம்பித்தன. ஒருவாரப் பிரிவின் பின் அவனைப் பார்த்த சாந்தசோசமும் துள்ளலும் காணாமல் போய், அவன் சொன்ன வார்த்தைகள் மேலெழுந்து வந்து அவளைப் பந்தாட ஆரம்பித்தன.
பேசாமல் கொண்டுபோய் அந்த மரத்தின் அருகில் பைக்கை நிறுத்தினான். அவள் இறங்க, தானும் இறங்கி மரத்தைச் சுற்றி அமைத்திருந்த குந்தில் சென்று அமர்ந்துகொண்டான். மெல்லச் சென்று தானும் அவனருகில் அமர்ந்தாள் ஆரணி. ஏதோ பேசப்போகிறான் என்று அவள் எதிர்பார்த்துக் காத்திருக்க அவனோ கையைக் கட்டிக்கொண்டு பார்வையைத் தெருவில் பதித்திருந்தான். அவனுடைய அந்த அமைதி அவளை வாட்டியது. அவனை அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவன் பேசப்போவதில்லை என்று புரிந்து போயிற்று.
“கதைக்க மாட்டியா நிக்கி?”
அவன் திரும்பி அவளைப் பார்த்தான். “நீயும் தானே கதைக்கேல்ல ஆரா?” என்றான்.
அவள் மௌனமாக இருந்தாள்.
“மூண்டு வருசக் காதல். அஞ்சு வருச வாழ்க்கை எல்லாமே அவ்வளவுதான், என்ன? ஒரு சின்னச் சண்டை எல்லாத்தையும் தலைகீழா மாத்திப்போட்டுது போல.”
அவளுக்கு நெஞ்சுக்குள் அடைத்துக்கொண்டு வந்தது. வேதனையோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“இல்லையே நிக்கி. எல்லாமே அப்பிடியே தான் இருக்கு. ஆனா துணையா நிண்ட நீதான் இப்ப எல்லாம் நிறையக் கோபப்படுறாய். அது எனக்கு வலிக்குதே. நான் என்ன செய்ய?”
“நீதான் ஆரா என்னை கோபப்பட வைக்கிற. முதல் உனக்கு ஏன் அவ்வளவு பதட்டம்? நான் பதில் சொல்ல முதல் வேகமா நீ கதைக்கிற. ஒரு பிரச்னையை எனக்குக் கையாளத் தெரியாது எண்டு நினைக்கிறியா? இல்ல, இவன் என்னை நல்லா வச்சிருப்பான் எண்டு இவ்வளவு காலமும் இருந்த நம்பிக்கை போயிட்டுதா? இல்ல, காலம் முழுக்கக் கடன்காரனுக்கு மனுசியாவே இருந்திடுவேனோ எண்டு பயப்பிடுறியா?” அவனுடைய கேள்விகளில் அதிர்ந்துபோனாள், ஆரணி.
“நீ சொன்னதுல எதைப்பற்றியும் நான் யோசிக்க இல்ல நிக்கி.” குரலடைக்கச் சொன்னவள் தன் நிலைப்பாட்டை அவனுக்கு விளக்கினாள்.
“நானும் நீயும் கலியாணம் கட்டின நேரம் எங்களை நம்பி ஒரு ரூபாய் தாறதுக்கு யாருமே இருக்க இல்ல. ஆனாலும், முட்டி மோதி படாத பாடெல்லாம் பட்டு நாங்க முன்னேறி வந்திருக்கிறோம். அவளுக்கு அப்பிடி இல்ல. சீதனம், காணி, வீடு எண்டு எல்லாம் குடுத்து அவளைக் கட்டிக் குடுத்து இருக்கிறோம். அவளின்ர வாழ்க்கைக்கு எந்தக் குறையும் இல்லாத அடித்தளம் நீ போட்டுக் குடுத்திருக்கிறாய். இனி அவளாத்தான் முன்னேறி வரவேணும். அத விட்டுட்டு இன்னும் உன்னை எதிர்பாக்கிறது எனக்கு விருப்பம் இல்ல. தங்கச்சிக்கா இருந்தாலும் குடுக்கிறதுல ஒரு நியாயம் வேணும். இதெல்லாம் என்ர பக்கத்து நியாயங்கள். ஆனாலும்..” என்றவள் தன் பேச்சை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்தாள்.
அவன் விழிகளும் அவளிடம் தான் இருந்தது. இப்போது அவனைப் பார்த்தே பேச ஆரம்பித்தாள் ஆரணி. “நீ சொன்ன மாதிரி அண்டைக்கு நான் கொஞ்சம் நிதானமா இருந்திருக்கலாம். உன்ன பதில் சொல்ல விட்டிருக்கலாம். அத நான் செய்யேல்லத்தான். எண்டாலும் உன்ர நிம்மதி சந்தோசம் எல்லாம் என்னால போகுது எண்டு நீ சொன்னது..” என்றவள் மேலே பேச முடியாமல் பேச்சை நிறுத்திவிட்டு அவனிடமிருந்து பார்வையை அகற்றிக்கொண்டாள்.
அன்று தான் சொன்னவை அதிகப்படிதான் என்று அவனுக்கும் தெரியுமே. ஒருவித வலி தாக்க அவளையே பார்த்திருந்தான். “என்ர நிக்கி கோபக்காரன் எண்டு தெரியும் தான். எண்டாலும் என்னட்ட இப்பிடியெல்லாம் கதைப்பான் எண்டு நான் கனவிலையும் நினைச்சது இல்ல. பெரிய அதிர்ச்சியா இருந்தது. நம்பேலாமா இருந்தது. சரியோ பிழையோ இதுவரைக்கும் நினைச்சதை யோசிக்காம கதைச்சது உன்னட்ட மட்டும் தான். நான் நானா இருந்ததும் உன்னட்ட மட்டும் தான். இனி உன்னட்டையும் கவனமாத்தான் கதைக்க வேணும் எண்டு அண்டைக்குத்தான் எனக்கு விளங்கினது.” என்றவள் தளும்பிவிட்ட விழிகளை அவனுக்குக் காட்டாமல் வேகமாக எழுந்து போக முயல, அவளைப் பற்றி நிறுத்தினான் அவன்.
அவள் விழிகள் அடக்க முடியாமல் கண்ணீரை நழுவ விட்டிருந்தன.
“ஆரா என்னடி?” என்றபடி அவன் அணைக்கப்போக, “இது பொது இடம் நிக்கி.” என்று விலகினாள் அவள்.
“சரிசரி அழாத. பக்கத்திலேயே இரு.” என்று இருத்திக்கொண்டவனுக்கு என்ன சொல்ல என்றே தெரியாத நிலை. திரும்பி அவளைப் பார்த்தான். அவளும் அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“என்னில கோவமா ஆரா?”
அவள் இல்லை என்று மறுத்துத் தலையசைத்தாள். அவன் மனம் கசிந்தது. மெல்ல அவளின் கையைப் பற்றிக்கொண்டான்.
“உண்மையா எனக்கு என்ன சொல்லி உன்ன சமாதானப்படுத்த எண்டு தெரிய இல்ல. ஆனா நான் கதைச்சது பிழை எண்டு மட்டும் தெரியும். அதுதான் இனி இந்தச் சண்டை சச்சரவே வேண்டாம் எண்டு தனி வீடு பாத்தனான். உனக்குச் சந்தோசம் தானே?”
அவள் ஆம் என்பதாகத் தலையை அசைத்தாள்.
“இனி என்னோட கதைக்க மாட்டியோ?”
அவள் உதட்டினில் மெல்லிய முறுவல் அரும்பிற்று. இல்லை என்று தலையை ஆட்டினாள்.
“இந்த வாய் அந்தளவுக்கு நல்ல பிள்ளையா இருக்குமா?” என்றான் பார்வை அவளின் இதழ்களுக்குச் சென்று வர.
சிரிப்புடன் வேகமாகப் பார்வையை அகற்றிக்கொண்டாள் ஆரணி. அவன் விரல்கள் அவள் விரல்களை அழுத்திப் பற்றின. “வீட்டை போவமா?” தன் ஆழ்ந்த குரலில் கேட்டான். அதுவே அவளுக்குள் என்னென்னவோ மாயங்களை நிகழ்த்திற்று.
“ம்ம்..” என்றாள் அவனைப் பாராமல்.
இருவரும் புறப்பட்டார்கள். அப்போதும் அவள் இடைவெளி விட்டு அமர்ந்தாள். ஒன்றுமே சொல்லாமல் திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தான் நிகேதன். முகத்தில் நன்றாகவே முறுவல் அரும்ப அவளின் கைகள் தானாக அவனது இடுப்பை வளைத்தது.