அவள் ஆரணி 37 – 2

அந்தக் கலக்கம் தேவை இல்லை என்பதுபோல் உடனேயே உள்ளே அழைக்கப்பட்டான், நிகேதன். நீண்ட நேரான காரோடும் பாதை. அது நேராகச் சென்று அந்த வீட்டு வாசலில் தான் நின்றது. இரு பக்கமும் சோலையாக இருக்க ஒரு பக்கத்தில் மூன்று கார்கள் நிற்பதற்கான மேடை அமைக்கப் பட்டிருந்தது. அதில் ஒரு இடம் வெற்றிடமாக இருக்க இரண்டு கார்கள் நின்றது.

அதில் நின்ற சிவப்பு நிற மினி அவனின் மின்மினியை கண்ணுக்குள் கொண்டுவந்து நிறுத்தியது. அந்தக் காரை அவனும் ஓடியிருக்கிறான். இன்றைக்கு ஒரு ஸ்கூட்டியில் பயணிக்கிறாள் அவள். எங்கிருந்தவளை எங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறோம் என்கிற மனதின் குன்றலுடன் வாசலில் சென்று நின்றான். யாரையும் காணவில்லை. உள்ளே செல்லத் தயங்கினான்.

“இந்த வீட்டு பிள்ளைய அபகரிக்கேக்க வராத தயக்கம் வீட்டுக்க வாறதுக்கு மட்டும் வருதோ?” என்று கேட்டுக்கொண்டே வந்தார் யசோதா. முகம் கன்றிப் போயிற்று அவனுக்கு. அப்போதும் உள்ளே செல்லாமல் நின்றவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு இருக்கை ஒன்றைக் கையால் காட்டினார், அவர்.

செருப்பைக் கழற்றிவிட்டுச் சென்று அமர்ந்துகொண்டான். இயல்பாக இருக்க முடியாமல் தடுமாறினான்.

“என்ன விசயம்?” நேரெதிரில் அமர்ந்து வினவினார் அவர்.

அவனால் இலகுவாகப் பேச முடியவில்லை. மனதின் ஏக்கத்தைச் சொன்னால் அவன் கவலைப்படுவான் என்று தன் ஆசையைத் தனக்குள்ளேயே மறைத்துக்கொண்டு எதையும் காட்டிக்கொள்ளாமல் இருக்கும் தன்னுடையவளுக்காக வீடு வரை வந்துவிட்டவனுக்கு அதை எப்படி அவரிடம் சொல்வது என்று தெரியவில்லை.

“அது மாமி…” என்று ஆரம்பித்துவிட்டு, தான் மாமி என்றதும் என்ன சொல்லுவாரோ என்று அவரைப் பார்த்தான்.

யசோதாவுக்கும் மெல்லிய அதிர்வுதான். அவன் அவருக்கு மருமகனாகி ஐந்து வருடங்கள் கடந்திருந்தாலும் அந்த அழைப்பை இன்றுதானே அவரும் கேட்கிறார். காட்டிக்கொள்ளாமல் அவனைப் பார்த்தார்.

ஒரு பெரு மூச்சுடன், “நடந்த எல்லாத்துக்கும் நான் மட்டும் தான் காரணம் மாமி. எனக்காகத்தான் ஆரா இந்த வீட்டை விட்டு வந்தவள். மற்றும்படி அவள் பாவம். அவளைக் கோவிக்காதீங்கோ. அதுவும் இப்ப.. தாயாகி இருக்கிறாள். இந்த நேரத்தில எங்களை மன்னிக்க மாட்டீங்களா?” என்றதும் அத்தனையையும் மீறிக்கொண்டு அவரின் கண்ணும் முகமும் மின்னிற்று.

“எத்தனை மாசம்?”

“இப்பதான் ஏழு கிழமை.” தான் தந்தையான செய்தியைச் சொல்லுகையில் இருந்த மனக்குமைச்சல்கள் அத்தனையையும் மீறி அவன் முகத்திலும் மெல்லிய மலர்ச்சி.

“இத கூட அவளுக்கு இங்க வந்து சொல்லேலாது?”

“இல்ல அப்பிடி இல்ல. அவளுக்கு உங்களைப் பாக்க ஆசைதான். ஆனா..”

“அவ்வளவு ரோசம்! போகாத போகாத எண்டு சொல்லச் சொல்ல கேக்காம போனவளுக்கே அவ்வளவு இருந்தா எங்களுக்கு எவ்வளவு இருக்கும். அப்பிடி போய்மட்டும் என்ன பெரிய வாழ்க்கை வாழுறாள்? நாங்க கோபத்தை மறந்து இறங்கி வந்து சந்தோசப்பட என்ன இருக்கு?” ஆத்திரத்துடன் படபடத்தவருக்கு, மகள் தாய்மை உற்றிருக்கிறாள் என்கிற சந்தோசம் கூடப் பின்னுக்குத் தள்ளுப்பட்டுப் போயிற்று.

ஐந்து வருடங்களாகியும் சிறு நகைகூட இல்லாமல் திருமண வீட்டில் அவள் நின்ற காட்சியே கண்முன் வந்து அவரைக் கொதிக்க வைத்தது.

“சொல்லும்! உமக்காகத்தான் எங்களை எல்லாம் விட்டுட்டு வந்தவள் எண்டு சொன்னீரே, அப்பிடி வந்தவளுக்குப் பிள்ளையைக் கொடுத்ததைத் தவிர வேற என்ன பெருசா செய்து கிளிச்சனீர்?” என்றார் கட்டுப்பாட்டை இழந்த கொதிப்புடன்.

பெருத்த அவமானத்தில் குன்றிப்போனான் நிகேதன். அதற்குமேல் அவரின் முன்னால் அமர்ந்திருக்க முடியாமல் உடலும் உள்ளமும் கூசிவிட விருட்டென்று எழுந்து வெளியே வந்தான். காவலாளி என்னென்னவோ கேட்டது கூடக் காதில் விழவில்லை.

வாகனத்தை எடுத்துக்கொண்டு வந்து சற்றுத் தள்ளி நிறுத்தியவனுக்கு அவமானத்தில் உடம்பெல்லாம் நடுங்கிற்று. எவ்வளவோ சமாளிக்கப் பார்த்தும் முடியவில்லை. நெஞ்செல்லாம் எரிந்து கண்கள் சிவந்து போயிற்று. மனம் ஆவேசம் கொள்ள வேனை சீறாவிட்டான்.

—————————

ஆழ்ந்து உறங்கிக்கொண்டு இருந்தாள் ஆரணி. நான்காம் மாதத்தின் ஆரம்பத்தில் இருந்தவளின் வயிறு மிக மெலிதாக மேடிட ஆரம்பித்து இருந்தது. மெல்லிய சிரிப்புடன் அவளருகில் வந்து அமர்ந்து கலைந்திருந்த கேசத்தை மென்மையாகக் காதோரம் ஒதுக்கிவிட்டான் நிகேதன். முன்னரெல்லாம், அவன் எழுகிற அரவத்துக்கே எழுந்து காலை உணவைத் தயாரிக்கிறவளுக்கு இப்போதெல்லாம் அது முடிவதில்லை.

நான்கு மணிக்கே எழுந்து காலை, பகல் இரு பொழுதுக்கும் சமைத்து வைத்துவிட்டுக் கார்மெண்ட்ஸ் ஹயரை முடித்துவிட்டு அவன் வந்து சேர்ந்தபோதும் அவள் எழுந்திருக்கவில்லை. அந்தளவில், வாந்தி பெரிதாக இல்லாதபோதும் தலைசுற்றலும் சோர்வும் அவளைப்போட்டு வாட்டியது.

அமராவதி வருவதில் இவளுக்குப் பெரிய நாட்டமில்லை. அவரும் அவ்வப்போது வந்து பார்த்துக்கொண்டு போவார், உணவுகள் கொடுத்துவிடுவாரே தவிர வந்து நின்றதும் இல்லை இவனிடம் வந்து நிற்கவா என்று கேட்டதும் இல்லை. கயலினியை எப்படிப் பார்த்துக்கொண்டார் என்பதை பக்கத்திலேயே இருந்து பார்த்தவனுக்கு தன்னவளை அவர் கவனிக்காமல் விட்டதில் மிகுந்த வருத்தம் தான்.

ஆனாலும், எதையும் காட்டிக்கொள்ளாமல் விட்டுவிட்டான். யசோதாவைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அவர் தந்த அவமானமே போதும். இரு பக்கமிருந்தும் கிடைத்த அவமானமும் வலியும், அவளுக்கு நான் இருக்கிறேன், வேறு யாரும் தேவையில்லை என்று அவனை வைராக்கியம் கொள்ள வைத்தது. அன்றிலுருந்து அவன்தான் அவளுக்குச் சகலதும். அதே நேரம் வேலையையும் அவன் கைவிடவில்லை.

அவனுடைய தொடுகையில் மெல்ல விழிகளைத் திறந்து பார்த்தாள் ஆரணி. அவன் தோற்றத்திலேயே எல்லாம் புரிந்துவிட, “இண்டைக்கும் அலாரம நிப்பாட்டிட்டியா படவா!” என்று கேட்டுவிட்டு மீண்டும் விழிகளை மூடிக்கொண்டாள்.

அவன் சிரித்தான். இந்த நான்கு மாதங்களும் இதுதான் நடக்கிறது. அவள் அவனுக்கு உணவு செய்ய அலாரம் வைப்பதும், அது அடிக்க முதலே எழுந்து நிறுத்திவிட்டு அவளுக்கும் சேர்த்து எல்லா வேலையையும் காலையிலேயே முடித்துவிட்டு அவன் புறப்படுவதும் வாடிக்கையாகிப் போயிருந்தது.

நேரம் எட்டுமணி. இன்னும் உறக்கம் கலைந்து எழ முடியாமல் சோர்வில் சுருண்டு கிடக்கிறவளை எப்படி அவன் வேலை வாங்குவான்.

“ஏய் கும்பகர்ணி. என்ர பிள்ளையைச் சாட்டி நீ நல்லா படுத்து எழும்புறியாடி?” என்றான் ஆசையோடு அவளின் நெற்றியில் முத்தமிட்டு.

“ம்ஹூம்! கொஞ்சக் காலம் நீ படுக்க விடேல்ல. அதுக்கு இப்ப உன்ர மகன் என்னை மயக்கத்திலேயே வச்சிருந்து பழிவாங்குறான்.”

“வாங்குறான் இல்ல வாங்குறாள்.”

“வாங்குறான்!” விழிகள் மூடியே இருந்தாலும் பதிலுக்குப் பதில் பேசிக்கொண்டிருந்தாள் அவள்.

“சரி விடு. உனக்கும் இல்ல எனக்கும் இல்ல. வாங்குறானும் வாங்குறாளும் வரட்டும். இப்ப மெல்ல எழும்ப பாக்கிறியா? கயலுக்கு ஆம்பிளை பிள்ளை பிறந்திருக்காம்.”

“ஹேய் உண்மையாவா..” என்று விருட்டென்று எழுந்தவள் முடியாமல் தலை சுற்றிவிட மீண்டும் கட்டிலில் சரிந்தாள்.

“உன்ன..” என்று பல்லை கடித்தான் அவன். “எத்தனை தரமடி சொல்லி இருக்கிறன் இப்பிடி அவசரப்படாத எண்டு. கேக்கவே மாட்டியா நீ? முதல் எழும்பி சாஞ்சு இரு!” என்றவன் அவளைத் தன் தோளிலேயே சாய்த்து, அவள் சற்றே நிதானப்பட்டதும் முகம் கழுவி, உணவு கொடுத்து அவளையும் கூட்டிக்கொண்டு வைத்தியசாலைக்குப் புறப்பட்டான்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock