அவள் ஆரணி 38

வைத்தியசாலையில் ராகவனின் பெற்றோர், தங்கை என்று மொத்தக் குடும்பமும் நின்றிருந்தனர். எல்லோரின் முகத்திலும் புது வரவைக்கக் கொண்டாடும் மகிழ்ச்சி. “வாங்கோ நிகேதன்!” என்று பூரிப்பாக வரவேற்ற ராகவனை அணைத்துத் தன் மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தினான், நிகேதன்.

அவர்களோடு இரண்டொரு வார்த்தை பேசிவிட்டுக் கயலிடம் சென்றனர். இவர்களைக் கண்டதும், அமராவதியின் பார்வை ஆரணியின் கழுத்தில் கிடந்த தாலிக்கொடியில் படிந்து மீண்டது. கூடவே, “எப்ப சொன்னதுக்கு இப்ப வாறாய் தம்பி?” என்று நிகேதனிடம் கடிந்துகொண்டார்.

“ஹயர் முடிக்க வேண்டாமா அம்மா?” என்றுவிட்டு தங்கையை நலன் விசாரித்துக்கொண்டான். ஆரணியும் கயலினியின் கரத்தைப் பற்றி வருடிக்கொடுத்தாள். “கெட்டிகாரி கயல் நீ!” என்று பாராட்டினாள்.

பிள்ளை பெற்ற அயர்வு முகத்தில் அப்படியே இருந்தாலும் பூரிப்புடன் இருந்த கயலின் முகம் மிகுந்த அழகைக் கொடுத்தது. அருகிலேயே குட்டித் தொட்டிலில் படுத்திருந்தான் அவளின் மகன். அதற்குள் ஒரு நாற்காலியைக் கொண்டுவந்து அவளருகில் போட்டு, “இதுல இருந்து கதை.” என்றான் நிகேதன்.

தொட்டிலின் அருகில் நாற்காலியை இழுத்துப்போட்டுக்கொண்டு அமர்ந்து, “செல்லக்குட்டி…!” என்று அவன் கன்னத்தைத் தன் ஒற்றை விரலால் மெல்ல வருடினாள் ஆரணி. பூவின் இதழ் போன்று மிகுந்த மென்மை. அவளின் முகமும் அப்படியே மலர்ந்து போயிற்று. “எங்கட செல்லக்குட்டிக்கு நான் ஆரு தெரியுமா? உங்கட அத்தை.” அந்த மொட்டோ அவளின் தொடுகையில் செப்பு இதழ்களைச் சுருக்கியது. ஆரணியின் புன்னகை விரிந்தது. “நிக்கி, இங்க பார் நான் தொடுறது அவருக்குப் பிடிக்கேல்லையாம். வாயை சுருக்கிறார்.” கவனம் குழந்தையில் இருக்க அவனிடம் சிரிப்புடன் பகிர்ந்துகொண்டாள் அவள்.

“என்ர மருமகனுக்கே தெரியுது நீ ஆபத்தானவள் எண்டு.”

“போடா பொறாமை பிடிச்சவனே. என்ர செல்லம் இப்பதான் அத்தைய பழகிறார். ரெண்டு நாளில சேர்ந்திடுவார். அப்பிடித்தானே? அத்தையிட்ட வருவீங்க தானே?” என்றவளுக்கு அதற்குமேல் பொறுமை இல்லை. “எங்கட செல்லத்தை ஒருக்கா நான் தூக்கட்டோ.” என்றபடி தூக்க முயன்றாள்.

“பாத்து பாத்து! உன்ர அவசர குணத்தில் கீழ போட்டுடாத! பொறு நான் தூக்கித் தாறன்.” என்று விரைந்து வந்து குழந்தையைத் தூக்கி, பக்குவமாக அவளின் கையில் கொடுத்தார், அமராவதி. கூடவே எப்படிக் கையாள வேண்டும் என்பதையும் சொல்லிக்கொடுத்தார்.

ஆசையோடு தூக்கி மார்போடு அணைத்துக்கொண்டவளுக்குக் கை, மனது, உடம்பு எங்கும் புதுப் பரவசம். தேகம் எல்லாம் சிலிர்த்தது. நெஞ்சில் பாசம் சுரக்க உச்சி முகர்ந்தாள். அவள் விழிகள் தானாகவே நிகேதனை தேடிச் சென்றது. அவனும் அவளைத்தான் சிறு சிரிப்புடன் பார்த்திருந்தான். காதலியாக, மனைவியாக மட்டுமே பார்த்துப் பழகியவள், கையில் குழந்தையுடன் நின்ற தாய்மைக் கோலம் அவன் மனதை மயக்கிற்று. விழிகளை அவளிடமிருந்து அகற்ற முடியவில்லை. அடுத்து நம் குழந்தை என்கிற எண்ணம் இருவருக்குமே இனித்துக்கொண்டு இறங்கிற்று.

கயலினியின் களைத்த தோற்றத்தைக் கண்டு மெல்லிய அச்சம் அவனுக்குள். “நிறையக் கஷ்டப்பட்டவளா அம்மா?”

“பின்ன? முதல் பிள்ளை எல்லா தம்பி. அப்பிடித்தான் இருக்கும். நேற்று கொண்டுவந்து சேர்த்தாலும் இந்தக் குட்டி இண்டைக்குத்தானே பிறந்தவன்.”

“ஓ..” என்றவனின் எண்ணமெல்லாம் ஆரணியையே சுற்றி வந்தது. தன்னுடையவள் தாங்குவாளா? துடித்துவிட மாட்டாளா? அவள் துடிக்கிற அந்த நிமிடங்களை அவன் எப்படிக் கடப்பான்? மெல்லிய அச்சத்துடன் அவளை நோக்க, கண்களை மூடித்திறந்து அவனை ஆற்றுப்படுத்தினாள், ஆரணி.

ராகவனின் தங்கை எல்லோருக்கும் அருந்த குளிர்பானம் கொடுத்தாள். என்ன பெயர் வைப்பது? குறிப்பு எழுத கொடுத்ததா? குழந்தை பிறந்த நேரத்தை குறித்துக் கொண்டதா? எப்போது வீட்டுக்கு விடுவார்கள் என்று பொதுவாகச் சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு, ராகவனின் பெற்றவர்கள் புறப்பட ஆயத்தமாக, “நான் இங்கேயே இருக்கிறன். நீ அவேய கூட்டிக்கொண்டுபோய் விட்டுட்டு வா நிக்கி.” என்றாள் ஆரணி.

“இன்னும் என்ன பிள்ளை வா போ எண்டு கதைக்கிறது? பிள்ளையும் பிறக்கப்போகுது. நாளைக்குத் தகப்பனை குழந்தைகளே மதிக்காயினம்.” பட்டென்று சொன்னார் ராகவனின் அன்னை. முதலாவது அவள் அப்படிக் கணவனானவனை அழைப்பது அவருக்குள் ஒருவித ஒவ்வாமையை உண்டாக்கிற்று. அடுத்ததாக, இதைப் பார்த்து தன் மகனை மருமகளும் கூப்பிட்டு விடுவாளோ என்கிற பயமும் சேர்ந்துகொண்டது. அரணிக்குச் சொல்வது போன்று, ‘எனக்கு இதெல்லாம் பிடிக்காது’ என்பதை கயலினிக்கு மறைமுகமாகத் தெரிவித்திருந்தார்.

அதைக்கேட்டு அமராவதியின் முகம் கடுத்தது. மகனை நெருப்புப் பார்வை பார்த்தார். கவனித்தாலும் காட்டிக்கொள்ளாமல் அவர்களை அழைத்துக்கொண்டு புறப்பட்டான் அவன்.

அவர்கள் கண்ணுக்கு மறைந்ததும் விறுவிறு என்று ஆரணியிடம் வந்தார் அமராவதி. “இங்க பார். உனக்கு எத்தின தரம் சொன்னாலும் நீ கேக்கப் போறேல்ல. ஆனாலும் சொல்லாம இருக்க என்னாலையும் முடியேல்ல. ஆட்களுக்கு முண்ணுக்காவது அவனுக்கு மரியாதை குடு. நாலுபேர் இருக்கிற இடத்தில அவனைக் கேவலப் படுத்தாத. பெத்த தாய் எனக்கு எரிச்சலும் கோபமும் வருது. சொல்லுற எதையும் கேக்காத உன்ர குணத்தாலதான் இவ்வளவு காலமாகியும் எனக்கு உன்ன பிடிக்கிறதே இல்ல.” முகத்துக்கு நேராகவே காட்டிய அவரின் வெறுப்பில் அவள் விழிகள் மெலிதாகக் கலங்கிற்று. கையில் இருந்த குழந்தையைப் பார்ப்பதுபோல் தலையைக் குனிந்துகொண்டாள்.

“அவன் உனக்கு என்ன குறை வச்சவன் எண்டு அவனை இப்பிடி எல்லாருக்கும் முன்னுக்கும் கேவலப்படுத்துறாய்? மாடா உழைச்சு எல்லாத்தையும் கொண்டுவந்து உனக்குத்தானே கொட்டுறான். கொஞ்சம் மரியாதை குடுத்தா நீ என்ன குறைஞ்சா போவாய்?” என்று எரிந்து விழுந்துவிட்டுப் போனார் அவர்.

விழி நீரை அடக்குவதிலேயே முழுமூச்சாக முயன்றுகொண்டிருந்தாள், ஆரணி. அமராவதிக்கு மனம் அடங்குவேனா என்று கொதித்தது. குழந்தையின் தொட்டிலை தட்டிப் போட்டுக்கொண்டே, “உன்ர கொண்ணனிட்ட சொன்னா, நீ உன்ர மனுசனை பெயர் சொல்லி கூப்பிடுறியாம். அதுவும் இதுவும் ஒண்டா சொல்லு? ஒன்றில் சுய அறிவு வேணும் இல்ல சொல் புத்தி வேணும். இது ஒண்டும் இல்ல. இது யாருக்கும் அடங்காத குணம்.” நிகேதனும் இல்லாமல் ஆரணி அகப்பட்டதில் கயலிடம் பேசுவதுபோல் தன் கோபத்தை எல்லாம் கொட்டித் தீர்த்தார் அமராவதி. எவ்வளவு முயன்றும் முடியாமல் குழந்தையைச் சுற்றியிருந்த துணியில் இரு துளி கண்ணீர் விழுந்து சிதறிற்று.

சற்று நேரத்தில் ராகவனுடன் திரும்பி வந்த நிகேதன், ஒற்றைப் பார்வையிலேயே என்னவோ சரியில்லை என்று புரிந்துகொண்டான். அதற்குமேல் அங்கே தாமதிக்காமல், “என்ன தேவை எண்டாலும் கூப்பிடுங்கோ ராகவன். கயலை வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போகேக்க சொல்லுங்க வந்து கூட்டிக்கொண்டு போறன்.” என்றுவிட்டு, “நீங்க நிக்கப் போறீங்களா, வீட்டை போகப்போறீங்களா?” என்றான் அன்னையிடம்.

“வீட்டை போய் நான் என்ன செய்ய?” என்றார் அவர் அவனிடமும் முகம் கொடுக்காமல்.

“சரி, அப்ப நாங்க வெளிக்கிடப்போறம். வா ஆரா!” என்று எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டான் நிகேதன்.

வருகிற வழியில் மிகுந்த அமைதி.

“ஏன் நிக்கி? உனக்கு நான் மரியாதை தந்து கதைக்கட்டா?” என்றாள் ஆரணி திடீரென்று.

அவளைத் திரும்பிப் பார்த்தவன் சற்று நேரம் ஒன்றும் சொல்லவில்லை. வீதியில் கவனமாக இருந்தான். பின், “அம்மா ஏதும் சொன்னவாவா?” என்று விசாரித்தான்.

“அதைவிடு. நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு நீ?”

“அப்பிடி யோசிச்சு பாக்கவே கன்றாவியா இருக்கு. அதால தயவு செய்து கூப்பிடாத!” என்றான் அவன். அவ்வளவு நேரமாக நெஞ்சை அழுத்திய பாரம் இறங்க கலக்கலத்துச் சிரித்தாள் ஆரணி.

நாட்கள் வேகமாக விரைந்தன. கயலின் மகனின் முப்பத்தொன்றுக்கு சகாதேவன் குடும்பமாக வந்துவிட்டுப் போனார். குழந்தையும் இருப்பதில் வீடு பெரும் இடைஞ்சலாக இருந்ததில் ராகவனும் கயலும் சேமிப்புப் பணத்தோடு மிகுதிக்கு லோன் போட்டு இன்னுமொரு அறை கட்டுவதற்கு முடிவு எடுத்தனர்.

அதை அறிந்து நிகேதனை தனியாக அழைத்துப் பேசினார் அமராவதி. நிகேதனுக்குச் சினம் தான் வந்தது. “கயலுக்கு ஒரு குறையும் இல்லாம எல்லாம் செய்தாச்சு அம்மா. திரும்பவும் உதவி செய் எண்டு கேட்டா என்ன அர்த்தம்?”

“நீ சொல்லுறது சரிதான் தம்பி. நானும் செய் எண்டு கட்டாயப்படுத்த இல்ல. உனக்குக் கடன் எல்லாம் முடிஞ்சுது தானே. அதுதான் கேட்டுப் பாப்பம் எண்டு நினைச்சன். ராகவன் வேண்டாம் எண்டுதான் சொல்லும். ஆனா, ரெண்டுபேரும் மாதச் சம்பளக்காரர். கொஞ்சம் சேர்த்து வச்சிருக்கினம் போல. மிச்சத்துக்கு லோன் போடவாம். உன்னால முடிஞ்சத நீயும் குடுத்தா அந்த லோன் குறையும் தானே தம்பி. உன்ர தங்கச்சியும் சந்தோசப்படுவாள்.” என்றார் நயமாக. “எனக்குத் தெரியும், உன்ர மனுசிக்கு இது பிடிக்காது எண்டு. என்னவோ மனம் கேக்கேல்லை. அதுதான் உன்னட்ட கேட்டனான். இனி நீ பாத்து செய்.”

“என்னத்த பாத்துச் செய்யச் சொல்லுறீங்க? இத நீங்க என்னட்ட கேட்டே இருக்கக் கூடாது. இப்ப மாட்டன் எண்டு சொன்னா அது என்னவோ நான் பொல்லாதவன் மாதிரி இருக்காதா? கயல் சொந்த வீட்டில இருக்கிறாள். அந்த வீட்டுக்கு ஒரு அறை கட்ட காசு இல்ல எண்டு நீங்க சொல்லுறீங்க. ஆனா, நான் இன்னும் வாடகை வீட்டுல இருக்கிறன். எனக்கும் ஒரு பிள்ளை பிறக்கப் போகுது. அண்டைக்குச் சுகிர்தன் வீட்டு கலியாணத்தில மாமி ஆராவ எப்பிடியெல்லாம் கேட்டவா எண்டு பாத்தீங்க தானே. இன்னும் அந்தப் பேச்சை மாத்துற மாதிரி நான் ஒண்டுமே செய்ய இல்ல. இப்ப வந்து நீங்க இப்பிடிக் கேக்கிறீங்க.” என்று சலித்தான் அவன். எப்படியாவது மேலே வந்துவிடுவோம் என்று பார்க்கிற ஒவ்வொரு பொழுதுகளிலும் விடமாட்டேன் என்று அழுத்தியே பிடித்தால் அவனும் என்னதான் செய்வான்.

“பெருசா சீதனம் தந்த மாதிரி அந்த அம்மா கதைச்சத நீ பெருசா எடுப்பியா?” என்று முகத்தைத் திருப்பினார் அவர்.

“என்ன கதைக்கிறீங்க நீங்க? உங்கட மகள் லோன் வாங்கப் போறாள் எண்டுறதையே தாங்க ஏலாம காசு குடு எண்டு வந்து நிக்கிறீங்க நீங்க. அவே ராணி மாதிரி வளத்த மகள் அஞ்சு வருசமாகியும் கஷ்டப்பட்டா அந்தத் தாய்க்கு எவ்வளவு கோபம் வரும்? இதுல அவே எனக்குப் பின்னால் வந்து சீதனம் வேற தரவேணுமா? கொஞ்சமாவது மனச்சாட்சியோட கதைங்க அம்மா.” என்று எரிந்துவிழுந்தான் அவன்.

அவருக்கும் கோபம் வந்தது. “சும்மா எப்ப பாத்தாலும் அவளுக்கும் அவளின்ர ஆட்களுக்கும் காவடி தூக்காத தம்பி. அதுதான் அஞ்சு வருசம் ஆச்சுதே நீங்க கட்டி. பிள்ளையும் பிறக்க போகுது. இனியும் என்ன கோவம்? சமாதானமாகி தாறதை தந்தா நீ ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேணும்?” என்று திருப்பிக் கேட்டார் அவர்.

“அவே தந்தாலும் நான் வாங்க மாட்டன். அவேன்ர சொத்துக்காக நான் அவளைக் கட்டவும் இல்லை!” என்றான் அவன் பட்டென்று.

“என்னவோ தம்பி. எனக்கு இதுக்கு மேல என்ன சொல்ல எண்டு தெரியேல்ல. நீயா என்ன செய்தாலும் சரிதான்!” என்றார் அவர் உள்ளே போன குரலில்.

அதுவும் அவனுக்குச் சினத்தைத்தான் உண்டாக்கிற்று.

“முழுக்காசும் தாறதுக்கு அவ்வளவு என்னட்ட இல்ல. முடிஞ்சத தாறன். ஆனா இதுதான் கடைசி. இனி என்னட்ட சும்மா பேச்சுக்கு எண்டாலும் இப்பிடி எதுவும் கேக்காதீங்க. கேட்டு என்ர நிம்மதிய பறிக்காதீங்க!” விருப்பமே இல்லாமல் சொல்லிவிட்டு விருட்டென்று எழுந்து அங்கிருந்து வெளியேறினான் அவன்.

பஜாரில் இருக்கிற புடவைக் கடைகளுக்குக் கொழும்பில் இருந்து லோட் பறிக்க நல்லது என்று மினி வேன் வாங்குவதற்குச் சேர்த்த பணத்தை மனம் கனக்கத் தூக்கிக்கொண்டு வந்து ராகவனின் கையில் திணித்தான் நிகேதன்.

கேள்வியாகப் பார்த்தவனிடம், “என்ர மருமகனுக்கு என்ர சார்பில சின்னப் பரிசு. இந்தக் காசையும் போட்டு அறையைக் காட்டுங்கோ.” என்றான்.

ராகவனின் முகம் இறுகிற்று. “ஆர் கேட்டது?” என்றான் நேர் பார்வையாக. “கயலா? மாமியா?”

“ஒருத்தரும் கேக்க இல்ல. ஆனா, நீங்க அறை கட்டப்போறீங்களாம் எண்டு அம்மா எதேற்சையா சொன்னவா. அதுதான் என்னால முடிஞ்ச சின்ன உதவி.”

“இல்ல நிகேதன். எந்த உதவியும் எனக்கு வேண்டாம். இத நான் உங்களுக்குக் கிளியரா முதலே சொல்லிட்டேன்.”

ராகவனின் உறுதியான மறுப்பிலும் கோபத்திலும் நல்லவனைத்தான் தங்கைக்குக் கணவனாக்கியிருக்கிறோம் என்று மனம் நிறைந்தான் நிகேதன். “நீங்க இப்பிடி கோபப்படுறதே போதும் ராகவன். இனி நானும் எந்த உதவியும் செய்ய மாட்டன். இத மட்டும் வேண்டாம் எண்டு சொல்லாதீங்கோ. ஏன் எண்டால், இதை நான் என்ர மருமகனுக்குத்தான் செய்றன். உங்களுக்கு இல்ல.” என்றான் சிரித்துக்கொண்டு.

“என்ன நிகேதன் நீங்க? நீங்க எப்பிடிச் சொல்லித் தந்தாலும் எனக்குத்தான் சங்கடமா இருக்கு.”

“நானும் நீங்களும் பிறத்தியாரா சங்கடப்பட? ஒரு சங்கடமும் இல்லாம அறை கட்டுற வேலைய பாருங்கோ. என்ன உதவி எண்டாலும் யோசிக்காம கேளுங்கோ!” என்றுவிட்டு விடைபெற்றான், நிகேதன்.

நாட்கள் மிகவும் வேகமாக நகர்ந்தது. பார்வதி அம்மா இன்னொரு தாயாகவே மாறி ஆரணியைப் பார்த்துக்கொண்டார். வயிற்றில் குழந்தை அசைய ஆரம்பித்த பிறகு தாய் தந்தையரின் நினைவு அதிகமாகவே அவளை வாட்டியது. இருந்தும், நிகேதனிடம் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. ‘இன்னும் கொஞ்சக் காலம்..’ இதையே மந்திரமாகப் பிடித்துக்கொண்டு நாட்களைக் கடத்தினாள். நிகேதன் என்ன சொல்லியும் கேளாமல் செண்டருக்கு போவதை ஆரணி விடவில்லை. நிறை மாதத்தை எட்டியபோதும், “நீ விடிய போனா இரவுதான் வருவாய் நிக்கி. நாள் முழுக்க வீட்டில இருந்து என்னை என்ன செய்யச் சொல்லுறாய்? எப்பிடியும் பிள்ளை பிறக்கிற வரைக்கும் தானே.” என்றாள் அவள்.

ஒரு நாள் ஆரணிக்கு வயிற்றுவலியும் வந்தது. பதறித் துடித்துக்கொண்டு வைத்தியசாலைக்குக் கொண்டு ஓடினான் நிகேதன். உள்ளே அவள் வலியில் துடிக்க மூடிய கதவுக்குள் என்ன நடக்கிறதோ, என்னவளும் குழந்தையும் என்ன பாடு படுகிறார்களோ என்று தெரியாமல் அவன் துடித்தான். நகரவே மாட்டேன் என்று நகர்ந்த நரகமான மணித்துளிகளின் பின்னே ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள் ஆரணி.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock