நண்பகல் ஆகிவிட்டதில் உச்சிவெயில் மொத்த மன்னாரையுமே ஒரு கை பார்த்துக்கொண்டிருந்தது. வீட்டுக்குள் இருக்கவே முடியாத அளவில் உடம்பே எரிவது போலிருந்தது அமராவதி அம்மாவுக்கு. உண்ட களைப்பும் சேர்ந்துகொள்ள, வீட்டின் முன்னே ஒரு கரையாக இருந்த மரத்தின் கீழே, பாயை விரித்து அமர்ந்துகொண்டார். அதற்காகவே காத்திருந்தது போல, தாயின் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டாள், கயலினி.
அவள், ஆறாவது விரலாகிப்போயிருந்த ஃபோனில் கவனமாயிருப்பதைக் கவனித்துவிட்டு, “அந்தக் கண்ராவியைத் தூக்கிப்போட்டுட்டுப் பேசாம இரு பாப்பம்! எப்ப பாத்தாலும் ஃபோன்! இதே வந்து உனக்குச் சாப்பாடு போடப்போகுது.” என்று, எரிந்து விழுந்தார் அமராவதி.
“சின்னண்ணாவில இருக்கிற கோபத்துக்கு என்னோட கத்தாதீங்கம்மா.” என்றபடி ஹெட்ஃபோனை மாட்டிக்கொண்டாள் அவள்.
“அவனிட்ட கத்தினா மட்டும் எதுவும் மாறவா போகுது!”
நன்றாகப் படிக்க வைத்தாயிற்று. தகுதிகளையும் வளர்த்துவிட்டாயிற்று. பிறகும் முன்னேற்றம் இல்லை என்றால் எப்படி? குடும்ப நிலைமையை உணராமல் நினைத்த வேலைதான் கிடைக்க வேண்டுமென்றால் எங்கே போவது? கிடைப்பதைப் பற்றிக்கொண்டு அதிலிருந்து முன்னுக்கு வருவதுதானே புத்திசாலித்தனம்.
மூத்தவன் சகாதேவன் மாதம் முப்பதுனாயிரம் தான் சொல்லி வைத்ததுபோல் அனுப்புவான். அதிலே அவனுக்குச் செலவுக்கு, இவளுக்குச் செலவுக்கு, ஃபோனுக்கு நெட் போட என்று எத்தனை செலவுகள். அதைவிட ஒவ்வொரு மாதமும் நிகேதன் போகும் இன்டெர்வியுக்கு என்று கொடுக்கும் காசு ஒருபக்கம். மாதக் கடைசியை ஓட்டுவதற்குள் மூச்சுத் திணறித்தான் போவார் அமராவதி. அந்த முப்பதைத் தாண்டி ஒரு ரூபாயும் வராது. கேட்டுவிடவும் முடியாது. மாலினி வதைத்துவிடுவார். மாமியார் என்பதால் வார்த்தைகளில் மரியாதை குறையாதுதான். அதன் அர்த்தங்கள் தான் அவரைக் குற்றுயிராக்கிவிடும்.
பிள்ளைகள் சிறுவர்களாக இருந்தபோது, நல்லபடியாகப் படிப்பித்து வளர்த்துவிட்டால் போதும் வீட்டின் வறுமை ஒழிந்துவிடும் என்று நினைத்து நினைத்தே வளர்த்தார். இன்று வளர்ந்தும் எதுவும் மாறியதாகத் தெரியவில்லை. அதே வறுமை, அதே பிரச்சனைகள்.
‘இவன் எங்க இன்னும் காணேல்ல. வேலையும் கிடைக்கேல்ல எண்டான். சாப்பிடவும் வராம என்ன செய்றான்?’ என்று எண்ணிக்கொண்டிருந்தவர் தன்னை அறியாமலேயே கண்ணயர்ந்த நேரம் நிகேதனின் பைக் வீட்டுக்குள் நுழைந்தது.
நல்ல உறக்கத்துக்குப் போய்க்கொண்டிருந்தவர் அந்தச் சத்தத்தில் திடுக்கிட்டு எழுந்தார். அவனோடு ஒரு பெண்ணும் பின்னால் அமர்ந்திருந்து அவன் தோள்களைப் பற்றியிருந்தாள். பார்த்ததும் அவர் கண்ணில் விழுந்த காட்சி அதுதான். அவரால் அதை ரசிக்க முடியவில்லை. ‘யார் இவள்? என்ர மகன்ர தோளை பிடிச்சுக்கொண்டு?’ வண்டியை நிகேதன் நிறுத்த இறங்கியவளின் கையில் இரண்டு மாலைகள். நிகேதனும் வேட்டி சட்டையில் இருக்கிறான் என்பதும் அப்போதுதான் அவரது புத்திக்குள் ஓடிப்போய் அபாய மணியை ஒலிக்கவிட்டது. அவள் கழுத்தில் தாலிக்கொடி வேறு. நெற்றியில் குங்குமம். புத்தி கணித்த விசயத்தை நம்ப முடியாமல் அதிர்ந்த முகத்தோடு மகனைப் பார்த்தார்.
ஒருகணம் தடுமாறி விலகிய அவன் விழிகள் ஆரணியைச் சந்தித்துவிட்டு மீண்டும் அவரிடம் திரும்பின. “எங்களுக்கு இண்டைக்குக் கல்யாணம் அம்மா!”
எப்படிப் பிரதிபலிப்பது என்று தெரியாமல் திகைத்துப்போய் அமர்ந்திருந்தார் அமராவதி. வேலைக்குப்போன கணவர் விபத்து என்று படுக்கவைத்துக் கொண்டுவரப்பட்டபோது எப்படி இடிந்துபோய் அமர்ந்திருந்தாரோ அப்படித்தான் இருந்தது இப்போதும். கடைசிவரைக்கும் வைத்துக் காப்பாற்றுவான் என்று நம்பிய மகன், மாலையும் கையுமாக வந்து நிற்கிறான். ஆத்திரத்தில் கத்தக்கூட வாய் வரவில்லை. அவ்வளவு அதிர்ச்சி. ஏமாற்றம்.
கயலினியின் நிலையும் அதேதான். தாயையும் தமையனையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தாள். தாயிடம் அசைவே இல்லை என்றதும் பயத்தோடு, “அம்மா..” என்று அவரின் கரம் பற்றி உசுப்பினாள். விருட்டென்று எழுந்தவர் ஒரு வார்த்தை சொல்லாமல் விறுவிறு என்று வீட்டுக்குள் நுழைந்து மூத்தவனுக்கு அழைத்தார். அவரின் பின்னே கயலினியும் ஓடினாள்.
பைக்கின் அருகிலேயே நின்றனர் இருவரும். “என்னடா? பயந்த அளவுக்குச் சீன் சீரியஸா வரேல்ல போல இருக்கு!” என்று கிசுகிசுத்தாள் ஆரணி. குற்ற உணர்ச்சியில் தடுமாறிக்கொண்டிருந்த நிகேதன் அவளை முறைத்தான்.
“கொஞ்சமாவது சீரியஸா இரு!”
“இருந்து?”
அதற்குள் அங்கே, “என்னது? கல்யாணமோ?” என்று அண்ணா அண்ணியின் அதிர்ச்சி நிரம்பிய குரல்கள் மாறி மாறிக் கேட்டன. இவர்களுக்கும் கேட்கட்டும் என்றே மைக்கில் போட்டிருந்தார் அமராவதி.
“இனி என்ன? அவர் கூட்டிக்கொண்டு வந்தவளையும் வச்சு நாங்க சாப்பாடு போடவேணுமோ? பிள்ளை குட்டி எண்டு குடும்பத்தைப் பெருக்கிற வேலையை அவர் பாக்கட்டும். நாங்க அதையும் சேர்த்துப் பாக்கிறம். நல்லாத்தான் பிள்ளைகளை வளத்து வச்சிருக்கிறீங்க. காலத்துக்கும் உழைச்சுப்போட ஒருத்தன். அதுல சொகுசா வாழ இன்னொருத்தன்.” சகாதேவன் அதிர்ச்சியில் இருக்க மாலினிதான் மாமியாரை ஒரு கை பார்த்துக்கொண்டிருந்தார்.
“என்னை ஏனம்மா குறை சொல்லுறாய். எனக்கே பாத்த நிமிசம் நெஞ்சு வெந்துபோச்சு. வேலை தேடிப்போனவன் மாலையும் கையுமா வந்து நிப்பான் எண்டு கனவா கண்டன்.”
“ஓம் ஓம்! இனி எதையாவது சொல்லிச் சமாளிக்கத்தானே வேணும்! நல்ல ஆக்கள் நீங்கள். குடும்பமே குந்தி இருந்து என்ர தலையில மிளகாய் அரைங்கோ. நானும் உங்கட மகனை நம்பின பாவத்துக்கு அனுபவிக்கிறன்.” வார்த்தைகளை நஞ்சாகக் கக்கினார் மாலினி.
“நீ கொஞ்சம் பேசாம இரு. நான் கதைக்கிறன். அம்மா இங்க பாருங்கோ! பொம்பிளையைக் கூட்டிக்கொண்டு வாற அளவுக்குப் பெரிய மனுசன் எண்டால் குடும்பத்தையும் பாக்கட்டும். நான் இனி ஒரு ரூபாயும் தரமாட்டன். என்னை என்ன இளிச்சவாயன் எண்டு நினைச்சிட்டானா? நாலு வேலை பாத்து வேர்வை சிந்தி ஒரு ரூபா காசைக் கண்ணால கண்டாத்தான் எல்லாம் விளங்கும். கேக்கமுதல் காசு குடுக்க ஒருத்தன் இருந்தா இப்பிடித்தான் நடக்கும். ஒரு உழைப்பு இல்ல. வேலை இல்ல. பொம்பிளை மட்டும் கேக்குதாமோ அவனுக்கு? எனக்கு வாற விசருக்கு இப்பவே வந்து அவனுக்குச் சாத்தட்டோ எண்டு வருது.”
ஆரணிக்கு எவ்வளவு முயன்றும் முடியாமல் முகம் கன்றிப்போக, சுர் என்று சினம் பொங்கிற்று நிகேதனுக்கு. வீட்டுக்குள் வேகமாக நுழைந்து தாயின் கையிலிருந்த ஃபோனைப் பிடுங்கினான்.
“அவளைக் கூட்டிக்கொண்டு வந்த எனக்கு வாழுறதுக்கு வழி தெரியாம இல்ல. இனி இந்தக் குடும்பத்தை நீங்க பாக்கத்தேவையில்ல. நானே பாக்கிறன். இப்ப சந்தோசம் தானே உங்களுக்கு. ஆனா அவளை மரியாதையில்லாம கதைச்சீங்களோ உங்கட மரியாதை கெட்டுடும். அவள் என்ர மனுசி. அதுக்கேத்த மரியாதையைக் குடுக்கவேணும். இப்ப வைங்க ஃபோனை!” என்றவன் தானே அழைப்பைத் துண்டித்துவிட்டிருந்தான்.
அதே வேகத்தில் திரும்பி வந்து, இன்னும் வெளியிலேயே நின்றவளின் கையைப் பிடித்து, வீட்டுக்குள் அழைத்துக்கொண்டு வந்தான். அமராவதியைக் கடக்கும் வேளையில் தயக்கத்தோடு அவள் அவரைப் பார்க்க, வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக்கொண்டார் அவர். அவளின் கால்கள் அப்படியே தயங்கி நின்றன. அவன் விடவில்லை. “நீ வா! இனி இது உன்ர வீடும்தான்!” என்று அழைத்துக்கொண்டு போனான்.
இரண்டு அறைகள், விறாந்தை, சமையலறை அவ்வளவுதான் அந்த வீடு. ஆசையாகப் பார்ப்பதற்கோ ஆர்வமாகப் பார்ப்பதற்கோ எதுவுமில்லாத பல வீடுகளில் ஒன்று. அவனுடைய அறைக்குள் நுழையும் முன்னே, அவனின் கரத்தை இழுத்துத் தடுத்தாள் ஆரணி.
“இனி இதுதானே நானும் நீயுமா வாழப்போற வீடு. வலதுகாலை எடுத்துவச்சுப் போவம்!” என்று புன்னகைத்தாள். அத்தனை நேரமாக நெஞ்சை அழுத்திய கோபங்கள் அனைத்தும் கரைந்து காணாமல் போக, அவன் முகத்திலும் புன்சிரிப்பு மலர்ந்தது.
“எங்கட ராஜ்ஜியம்! சின்னதா இருந்தாலும் இதுக்கு நீதான் ராணி. நான்தான் ராஜா. வா!” என்று அழைத்துப்போனான் அவன்.