இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த தர்மினி, “எனக்கு இப்பிடி ஒரு அண்ணா இல்லாம போயிட்டாரே. இருந்திருக்க அறைக்குப் பதிலா நானும் ஒரு பி.எம்.டபிள்யு கார் வாங்கி விட்டிருப்பன். என்ன ஆரணி அக்கா, உங்களுக்கும் அண்ணா இல்லை என்ன? நானும் நீங்களும் சரியான பாவம். கயல் குடுத்து வச்சவள்.” என்று கயலினியைச் சீண்டினாள்.
“உங்களுக்குப் பொறாமை தர்மினி. நான் என்ர அண்ணாக்களுக்குச் சுத்திப்போட போறன்.” என்ற கயலுக்குமே உண்மையிலேயே பெருமையாகத்தான் இருந்தது.
“அண்ணாக்களுக்கு மட்டுமில்ல அண்ணிக்களுக்கும் சுத்திப்போட வேணும். அவே சம்மதிக்காம அண்ணாக்கள் என்ன செய்ய ஏலும் சொல்லுங்கோ?”
“என்னத்துக்கு எங்கட பெயர் அடிபடுது?” என்று, இலகுவாகக் கேட்டபடி அறைக்குள் நுழைந்தான் நிகேதன்.
“நீங்க அறை கட்டுறதுக்குக் காசு குடுத்தீங்களாம் எண்டு பெருமையா பீத்துறா உங்கட தங்கச்சி. எங்களுக்கு இப்பிடி ஒரு அண்ணா இல்லாம போயிட்டார் எண்டு நானும் ஆரணி அக்காவும் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறம் அண்ணா.” என்று கலகலத்தாள் தர்மினி.
சட்டென்று நிகேதனின் விழிகள் ஆரணியிடம் ஓடியது. அவளும் அவனைத்தான் பார்த்தாள். இதையெல்லாம் எனக்குச் சொல்லாமல் நீயா செய்தாய்? என்று கேட்பது போலிருந்தது அவனுக்கு. அந்த விழிகளை எதிர்கொள்ள மிகவுமே சிரமப்பட்டான். பக்குவமாகச் சொல்லவேண்டும் என்று நினைத்து நினைத்தே தவிர்த்த விடயம் இப்படி வெட்ட வெளியில் அவளின் காதுக்குப் போகும் என்று அவனும் எண்ணியிருக்கவில்லை.
ஆரணிக்கு அதற்குமேல் அங்கே இருக்க முடியவில்லை. “நான் சாப்பாட்டைப் போடுறன்.” எழும்பாத குரலில் சொல்லிவிட்டு எழுந்து சமையலறைக்குள் விரைந்தாள்.
கைகால்கள் எல்லாம் நடுங்கியது. நெஞ்சுக்குள் என்னவோ அடைத்துக்கொண்டு வந்தது. அவளின் நிகேதன் அவளிடம் ஒன்றை மறைப்பான் என்று கனவிலும் நினைக்கவில்லை. அப்படி அவளிடம் மறைத்து ஒன்றைச் செய்கிற அளவுக்கு அவள் பொல்லாதவளா என்ன? கலங்கிய விழிகளை சிமிட்டி அடக்கினாள்.
அவன் மறைத்ததன் பொருள் தடுப்பாள், கொடுக்க விடமாட்டாள் என்பதுதானே. தடுத்தாலும் கயலுக்குக் கொடுக்கக்கூடாது என்கிற எண்ணத்திலா தடுப்பாள்? அவனை எல்லோரும் மாடாக்குகிறார்கள் என்கிற பாசத்தில் தானே. குறையில்லாமல் அவளுக்கு எல்லாம் செய்திருக்கிறான். பிறகும் அவனை உறிஞ்சுவது என்றால்? இதுதானே அவளின் ஆதங்கம். அதை அவன் புரிந்துகொள்ளவில்லை என்றால்.. அவர்கள் காதலித்து, மணந்து, இத்தனை வருடங்களாகக் கருத்தொருமித்து வாழ்ந்து என்ன பிரயோசனம். எல்லாமே பொய்த்துப் போனதோ? மனது விண்டு விண்டு வலித்தது. நெஞ்சை நீவி விட்டுக்கொண்டாள்.
நிகேதனும் பின்னால் வருவது தெரிந்தது. இப்போது அவளால் அவனின் முகம் கூட பார்க்க முடியாது. “தர்மி” என்று அழைத்தபடி வேகமாக அவனைக் கடந்து மீண்டும் அந்த அறைக்குள் போனாள்.
செய்வது அறியாது அப்படியே நின்றான், நிகேதன். என்ன சொல்லிச் சமாளிப்பது என்று விளங்கவே இல்லை. அதன்பிறகும் அவன் பார்வை தன்னைத் தொடர்வது தெரிந்தாலும் அவன் முகம் பார்க்க மறுத்தாள், ஆரணி. பெரும் வாதை ஒன்று அவளைப் போட்டு நசுக்கியது.
எல்லாம் முடிந்து புறப்பட்டனர். வீட்டுக்குள் வந்து கதவைச் சாற்றியதும், “ஆரா..” என்று தயக்கத்துடன் அழைத்தான், நிகேதன். பேசாமல் சென்று குழந்தையைக் கட்டிலில் கிடத்திவிட்டு உடைமாற்றத் தயாரானவளை கையைப் பிடித்து வெளியே கூட்டிக்கொண்டு வந்தான்.
என்ன என்பதுபோல் அவன் முகம் பார்த்தாள் அவள்.
“சொல்லாம விட நினைக்கேல்ல ஆரா. மறந்திட்டன்.”
“நீ செய்தது சரி எண்டு நினைக்கிறியா நிக்கி?”
அந்தக் கேள்வியே சுருக்கென்று குத்தியது. “ப்ச்! அதுதான் மறந்திட்டன் எண்டு சொல்லுறேனே.”
“நீ கும்பிடுற அந்தக் கடவுள் சத்தியமா சொல்லு, உண்மையாவே மறந்திட்டியா?”
“இப்ப என்ன கற்பூரம் அணைச்சுச் சத்தியம் செய்தாத்தான் நம்புவியா?” தவறு தன் மீதுதான் என்பதில் அவனுக்குக் கோபம் வந்தது. “சும்மா துள்ளிக்கொண்டு நிக்கிறாய். இப்ப குடுத்தா என்ன? அதால உனக்கு ஏதாவது குறை வச்சேனா?” எப்படியாவது தன்னை நியாயப்படுத்திவிட உன்னைத்தான் அவன்.
அவள் வறட்சியாகச் சிரித்தாள். “நீ குடுத்தது காச இல்ல நிக்கி. என்னை. என்னை விட்டுக் குடுத்திட்டாய். என்னை யாரோவா ஒதுக்கி வச்சிட்டாய். மாமியோ கயலோ என்னை ஒதுக்குறது புதுசு இல்ல. ஆனா நீ?” என்றவளுக்குக் குரல் நடுங்கியது. வேகமாக முகத்தைத் திருப்பித் தன்னை அடக்க முயன்றாள். இன்னுமே இதயத்தில் யாரோ எதையோ விட்டுக் குடையும் வலி.
திகைத்துப்போனான் நிகேதன். “ஏய் என்னடி? நான் எங்க உன்ன ஒதுக்கினான்?” என்றான் வேகமாக.
“எனக்குத் தெரியாம உன்ன மட்டும் கூப்பிட்டு கேட்டு இருக்கிறா உன்ர அம்மா. நீயும் எனக்குத் தெரியாம கொண்டுபோய்க் குடுத்திருக்கிறாய். இண்டு வரைக்கும் நீயா எனக்குச் சொல்லவும் இல்ல. இதுக்கெல்லாம் வேற என்ன பெயர்?”
“அம்மா கூப்பிடேக்க ஏன் கூப்பிடுறா எண்டு எனக்குத் தெரியாது ஆரா. போன இடத்திலதான் கேட்டவா. என்னால மறுக்கேலாமா போச்சு.” என்றான் இயலாமையுடன்.
“அண்டைக்கு என்னவோ பிரச்சனைகளை எனக்குக் கையாளத் தெரியாதா எண்டு கேட்டாய்? இதுதான் நீ கையாண்ட விதமா?”
“வேற என்ன செய்திருக்கோணும் எண்டு சொல்லுறாய்? உன்னை மாதிரி வாய்க்கு வாய் கதைச்சு சண்டை பிடிச்சிருக்கோணும் எண்டு சொல்லுறியா?” என்றான் சுள் என்று.
அவள் விழிகள் வேதனையில் அகன்றது. அவளை சண்டைக்காரி என்கிறானா நிகேதன்?
“அப்ப நீ ஏன் எனக்கு மறைச்சனி? இத சொல்லியிருக்க வேண்டியதுதானே. இப்பிடி இன்னும் எத்தனைய மறைச்சு வச்சிருக்கிறாய்?”
“அறஞ்சன் எண்டா தெரியும்! அப்பிடி என்னடி மறைச்சனான்? வெளில கண்டவளோடையும் கூத்தடிச்சனா இல்ல குடும்பம் நடத்தினேனா மறைக்க? வந்திட்டா கேள்வி கேட்டுக்கொண்டு. பேசாம போடி!”
அவன் இரைந்த இரையலில் ஆரணியே நடுங்கிப்போனாள் என்கையில் குழந்தை? வீறிட்டு அழுதாள் அவள். அறைக்குள் ஓடினாள் ஆரணி. “இல்ல செல்லம். ஒண்டும் இல்ல குஞ்சு..” கண்ணீர் மார்பை நனைக்க நனைக்கக் குழந்தையைத் தூக்கி மார்பிலும் தோளிலும் போட்டுச் சமாதானம் செய்தாள்.