அவள் ஆரணி 41 – 1

எப்போதும்போலக் காலையில் நான்கு மணிக்கு எழுந்து ஹயருக்குத் தயாரானான் நிகேதன். கூடவே எழுந்து அவனுக்கான தேநீரை ஊற்றிக் கொண்டுவந்து கொடுத்தாள், ஆரணி. நேற்றைய சண்டையின் நீட்சியாய் இருவரிடமும் பெருத்த மௌனம்.

இவர்களின் நடமாட்டத்தில் உறக்கம் கலைந்த பூவினி சிணுங்கவும் அறைக்குச் சென்று அருகில்படுத்துத் தட்டிக்கொடுத்தாள். அவள் உறங்கியதும், மெல்ல எழுந்து வெளியே வந்து அறையின் கதவை இவள் சாற்றவும், அவன் வீட்டைவிட்டு வெளியே செல்லவும் சரியாக இருந்தது.

ஒன்றும் செய்யத் தோன்றாமல் போகிறவனையே பார்த்தாள். அவனுக்கான தேநீர் அவள் வைத்த இடத்திலேயே குளிர்ந்திருந்தது. சாப்பிடவும் இல்லை. சத்தமே இல்லாமல் தன் கோபத்தைக் காட்டிவிட்டுப் போகிறவனின் செய்கை, அவளை மீண்டும் காயப்படுத்திற்று.

இதன் மூலம் என்ன சொல்ல வருகிறான்? அவன் செய்தது தவறு இல்லை என்றா? உறங்கி எழுந்ததில் சற்றே அமைதியடைந்திருந்த மனது மீண்டும் கலங்கிப் போயிற்று. மனமும் உடலும் சோர சோபாவில் சென்று தன் உடலைச் சரித்தாள்.

மறைத்தது அவன். அது மிகப்பெரிய அதிர்ச்சியையும் வேதனையையும் உண்டாக்கியபோதும் எதையும் பேசாமல் தவிர்க்கத்தான் முயன்றாள். அப்போதும் கூப்பிட்டு வைத்து விளக்கம் என்கிற பெயரில் சமாளிக்கப் பார்த்ததும் அவன்தான்.

ஆனால், மறைத்தாயா என்கிற ஒற்றைக் கேள்விக்கு இவ்வளவு பெரிய எதிர்வினையா? ஏன் எதற்கு என்று சொல்லத்தெரியாத ஒருவிதக் கலக்கம் அவளுக்குள் உண்டாயிற்று.

சகாதேவன் குடும்பத்தைப் பகல் சாப்பாட்டுக்கு அழைத்திருந்தார்கள். கூடவே, கயல் குடும்பமும் அமராவதி அம்மாவும் வருவார்கள் என்பதில் பூவினி எழுவதற்கு முதல் பாத்திரங்களைக் கழுவி தேவையான பொருட்களை எடுத்து வைத்து என்று பார்க்க முடிந்த வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள்.

பூவினி எழுந்ததும் உடம்பு துடைத்து, பசியாற்றி, உடைமாற்றி என்று அவளைக் கவனித்தாள். பார்வதி அம்மாவிடம் அவளைக் கொடுத்துவிட்டு, சகாதேவனின் மகன்களுக்கு அவள் செய்கிற பிரியாணி பிடிக்கும் என்பதில் அதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டாள்.

“ஏனம்மா, முகம் வாடிப்போய் இருக்கிறாய்?” இந்தக் கொஞ்சக் காலத்தில் பெற்ற அன்னையைப்போலவே மாறிவிட்ட பார்வதி பரிவுடன் விசாரித்தார்.

“ஒண்டும் இல்லை அம்மா. நிக்கியோட குட்டிச் சண்டை.” சிறு சிரிப்புடன் சாதாரணம்போல் சொல்லிவிட்டு சீனி போடாத பால் தேநீரை, தரையில் அமர்ந்து இருந்த அவரிடம் கொண்டுவந்து கொடுத்தாள்.

“உனக்கும் கொண்டுவா ஆச்சி.” என்றவரின் பேச்சுக்குக் கட்டுப்பட்டுத் தனக்கும் எடுத்துக்கொண்டு வந்து தரையில் அமர்ந்தாள். பூவினி அவர்கள் இருவருக்கும் நடுவில் ஒரு விரிப்பில் படுத்திருந்து விளையாடிக்கொண்டு இருந்தாள். மௌனமாகவே தேநீரைப் பருகினர்.

மனதை அலைக்கழிக்கும் கலக்கத்தை அவரிடம் சொல்லி ஆறினால் நன்றாக இருக்கும் போலிருந்தது. அப்படி, அவனைப் பற்றி அவரிடம் சொல்லவும் பிடிக்கவில்லை. ஆனால், அவரின் பரிவு மிகுந்த பார்வை அவளில் இருப்பதை உணர்ந்தவளுக்கு நெஞ்சுக்குள் அடைத்துக்கொண்டு வந்தது.

“மனுசன் மனுசி எண்டா சண்டை வாறதும், சமாதானம் ஆகிறதும் வழமை தானம்மா. நீயும் தம்பில நல்ல பாசம்; தம்பிக்கும் நீ எண்டா உயிர். மிச்சம் எல்லாம் சும்மா அலையடிக்கிற மாதிரி அப்பப்ப வந்திட்டு போற விசயங்கள். பெருசா எடுத்து முகம் வாடக் கூடாது.” என்ன நடந்தது என்று கேட்காமலேயே அவளைத் தேற்றியவரைப் பார்த்து விழிகள் கலங்க முறுவலித்தாள், ஆரணி.

உண்மைதானே, சரியோ பிழையோ எப்போதோ நடந்து முடிந்த ஒன்றுக்காக, கோபத்தை இழுத்துப்பிடிப்பதால் என்ன ஆகப்போகிறது?

தத்தளித்துக்கொண்டிருந்த ஓடம் ஒன்று கரை சேர்ந்ததுபோல், அதுவரை நேரமும் அமைதியற்று அலைப்புற்றுக்கொண்டிருந்த அவள் மனதும் அமைதியாயிற்று.

இருண்டு கிடந்த மனதுக்குள் வெளிச்சம் ஊடுருவியதில், “எனக்காகவே இங்க இருந்தீங்களாம்மா?” என்று வினவினாள்.

உண்மையிலேயே அவளுக்கு அப்படித்தான் பலமுறை தோன்றி இருக்கிறது. கற்பகாலத்தின்போது, பச்சை உடம்பாய் பிள்ளை பெற்று வந்தபோது, குழந்தை வளர்ப்பின்போது என்று எல்லாப் பொழுதுகளிலும் அவர்தான் அவளை வழிநடத்தி இருக்கிறார். இன்னுமே வழிநடத்திக்கொண்டு இருக்கிறார்.

சிறு சிரிப்புடன் தேநீரைப் பருகினார், பார்வதி. அவளுக்காக அவர் இருந்தாரா இல்லை அவருக்காக அவர்கள் இங்கே குடி வந்தார்களா என்று அந்த ஆண்டவனுக்கு மட்டுமே வெளிச்சம். இல்லாமல், கணவரும் போனபிறகு பிள்ளைகள் எல்லோரும் வெளிநாட்டில் வசிக்கையில், வயதுபோன காலத்தில் தனி ஒருத்தியாக உயிரற்ற இந்த வீடுகளை மாத்திரம் பராமரித்துக்கொண்டு, ஏன் வாழ்கிறோம் என்றே தெரியாமல் நாட்களைக் கடத்தியவருக்கு, பெரும் வரம் தான் இந்த இளம் குடும்பம். அதுவும் பூவினி பிறந்தபிறகு அவரின் நாட்களே அழகாயிற்று.

நேரமாவதை உணர்ந்து பிரியாணிக்கான வேலைகளை ஆரம்பித்தாள். நேரம் பதினொன்று ஆனதும் பூவினி சினுங்க அவளுக்குப் பசியாற்றி, உறங்க வைத்துவிட்டு இவள் வந்தபோது பார்வதி அம்மாவும் இருந்த இடத்திலேயே சரிந்து ஒரு குட்டி உறக்கத்தைப் போட்டு முடித்திருந்தார். மீண்டும் மிகுதி வேலைகளை இருவருமாகப் பார்த்தனர்.

பகலை நெருங்கும்போது ராகுலையும் அமராவதி அம்மாவையும் அழைத்துக்கொண்டு சகாதேவன் மாலினி, பிள்ளைகள் சகிதம் வந்து சேர்ந்தார். கயலும் ராகவனும் கல்லூரி முடிந்து நேரே இங்கே வருவதாகச் சொல்லியிருந்தனர்.

முகம் மலர வரவேற்று, உபசரித்து அவர்களை அமரவைத்தாள் ஆரணி. பார்வதி அம்மாவுடன் அவர்கள் பேசிக்கொண்டு இருக்க, “சமையல் முடிஞ்சுது. ஒரு பத்து நிமிசத்தில சாப்பிடலாம் அண்ணா.” என்றுவிட்டு, ஓடிப்போய் அவித்த முட்டைகளைத் தோள் உரித்து ஒரு பாத்திரத்தில் இட்டாள்.

“ஒரு காலம் சமையலே தெரியாது. ஆனா இண்டைக்கு ரோட்டுக்கே வாசம் வருது ஆரணி.” என்றபடி குசினிக்குள் வந்தார் மாலினி.

அவரின் பேச்சில் இருந்த உண்மையில் ஆரணி சிரித்தாள். “எப்பவும் ஒரே மாதிரி இருக்கேலுமா அக்கா. எல்லாத்தையும் பழகத்தானே வேணும்.” இலகுவாகப் பேசியபடி இருவருமாக எல்லாவற்றையும் கொண்டுபோய் உணவு மேசையில் வைத்தனர்.

“அங்க நல்ல ஹோட்டல் வழிய வாங்கிக் குடுத்தாலும் ஆரணி சித்தின்ர பிரியாணிதான் டேஸ்ட்டாம் எண்டு ரெண்டுபேரும் சொல்லுவாங்கள். அப்பிடி என்ன போட்டு சமைக்கிறீர் எண்டு தெரியேல்ல. ஆனா நல்லாருக்கு.” இப்போதும் கரண்டி ஒன்றினால் ஒரு வாய் எடுத்துச் சுவை பார்த்துவிட்டுச் சொன்னார் மாலினி.

“வேணும் எண்டா சொல்லுங்கோ நான் ரெசிபி தாறன். ரோசி கஜனின்ர யூ டியூப் சேனல் பத்துத்தான் எல்லாம் பழகினான்.” இருவருமாகச் சேர்ந்து உணவு, உண்ணும் தட்டுகள் எல்லாவற்றையும் கொண்டுவந்து மேசையில் வைத்தனர். எல்லோருக்கும் உணவு பரிமாறினாள் ஆரணி.

அமராவதியின் கையில் இருந்த ராகுலைத் தான் வாங்கிக்கொண்டு அவரையும் சாப்பிட விட்டார் பார்வதி.

“நீங்க?”

“நானும் ஆரணியும் கொஞ்சத்துக்கு முதல்தான் டீ குடிச்சனாங்க. எனக்கு இப்ப பசி இல்ல. நீங்க சாப்பிடுங்கோ.” என்றார் பார்வதி. புதியவர் என்று இல்லாமல் அவருடன் சேர்ந்துகொண்டான் ராகுலன்.

“நல்ல சுவையா இருக்கம்மா.” என்று பாராட்டியபடி இரண்டு மடங்கு உண்டார் சகாதேவன். “நிகேதன் வாறன் எண்டு சொன்னான், இன்னும் ஆள காணேல்ல?”

விழிகள் தானாகச் சுவர் மணிக்கூட்டுக்குச் சென்றுவர, “இப்பதான் ஸ்கூல் ஹயர் முடிஞ்சிருக்கும் அண்ணா. இனித்தான் வருவான்.” என்று பதிலளித்தாள் ஆரணி.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock