அதற்குள் பூவினி எழுந்து சிணுங்குவது கேட்டது.
“பூவாச்சி எழும்பிட்டிங்களோ?” என்று கேட்டபடி அறைக்குள் விரைந்து மகளைத் தூக்கிக்கொண்டு வந்தாள். வீட்டில் இருந்த ஆட்களைக் கண்டு சற்றே மிரண்டு அவள் சிணுங்கவும் அதற்குள் சாப்பிட்டு முடித்திருந்த அமராவதி அவளை வாங்கினார்.
சின்னவளோ அவரிடம் நிற்கமாட்டேன் என்று சிணுங்கி பார்வதி அம்மாவிடம் போக நின்றாள். இருவரும் பிள்ளைகளை மாற்றிக்கொண்டனர்.
அதைக் கவனித்துவிட்டு, “என்ன மாமி இது? சொந்த அப்பம்மாட்ட சேராம பக்கத்துவீட்டு அம்மம்மாவோட சேருறா உங்கட பேத்தி.” என்றார் மாலினி சிரிப்புடன்.
அமராவதிக்கு மெலிதாக முகம் கறுத்தது. அதைக் கவனித்துவிட்டு, “நான் பக்கத்திலேயே இருக்கிறன் தானே. ஒவ்வொரு நாளும் இங்க வருவன். அதுதானம்மா. மற்றும்படி ரெத்த உருத்து(ரெத்த சொந்தம்) அவதானே. ரெண்டு நாள் நிண்டா செல்லம் பழகிடுவா.” என்றார் பார்வதி, பூவினிக்கு விளையாட்டுக் காட்டியபடி.
“ம்ம் பரவாயில்ல. ஆரணிக்கு அம்மா மாதிரி இருக்கிறீங்க. அதனாலதான் ஆரணியும் தனியா இருந்தாலும் சமாளிக்கிறா.”
“வேற வழி?” என்றார் அமராவதி.
மாலினி சொன்னதுபோல் அன்றிலிருந்து இன்றுவரை எதற்காகவும் ஆரணி அவரிடம் வந்து நின்றதே இல்லை. அது அவருக்கு மிகப்பெரிய அடியே. அதில், “பெத்த தாய் தகப்பன் பக்கத்தில இருந்தும் திரும்பியும் பாக்காம இருந்தா இப்பிடித்தான் நடக்கும். அயலட்டையில இருக்கிற மனுசரைத்தான் நம்பி இருக்கோணும். கேட்டா ஊருக்கையே வசதியான மனுசராம். ஆனா மகளுக்குச் சொத்து சுகம் ஒண்டும் குடுக்கேல்ல. கூட வச்சுப் பாக்கவும் இல்ல.” என்றார் சட்டென்று.
அங்கிருந்த யாருமே இதை எதிர்பார்க்கவில்லை. ஆரணிக்கு எல்லோரையும் வைத்துக்கொண்டு இதென்ன பேச்சு என்று சினம் வந்தது. பார்வதி அம்மாவின் பார்வை அவளைக் கட்டுப்படுத்தியது. அதற்குப் பணிந்து ஆரணியும் காதில் விழாதவள் போல் இருக்க, அமராவதிக்கு ஆரம்பித்துவிட்ட பேச்சை விட மனமில்லை.
“அண்டைக்கு இவளின்ர தாய்க்காரி துள்ளின துள்ள நீங்க பாக்க மாட்டீங்க பார்வதி அம்மா. என்னவோ என்ர மகன் இவளைக் கட்டி நாசமாக்கின மாதிரி ஒரு நகை இல்லையாம், சந்தோசமா வாழ இல்லையாம் எண்டு ஆயிரம் குறை குற்றம். அவ்வளவு பாசம் இருக்கிற மனுசர் குடுக்க வேண்டியதைக் குடுத்து குறையில்லாம வாழ வச்சிருக்க வேணும். இல்லையோ ஒட்டும் இல்ல உறவும் இல்லை எண்டு வெட்டி விட்டிருக்க வேணும். சும்மா என்ர பிள்ளையைக் குறை சொன்னா சரியா?” என்றார் திடீரென்று உருக்கொண்டவர் போன்று.
“அம்மா, இப்ப என்னத்துக்கு இதையெல்லாம் தேவையில்லாம கதைக்கிறீங்க?” என்ற சகாதேவனையோ, “விடுங்கோ அம்மா. அவே பொம்பிளை பிள்ளைய பெத்த தாய் தகப்பன். பாசத்தில் கூடக்குறைய கதைக்கிறதை எல்லாம் நாங்க பெருசா எடுக்க வேண்டாம்.” என்று சமாளித்த பார்வதி அம்மாவையோ அவர் பொருட்படுத்துவதாக இல்லை.
கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எப்படியாவது மகனுக்குச் சீதனம் வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்.
“அண்டைக்கு நடந்ததை நீ பாக்கேல்லை தம்பி. அதுதான் உனக்கு நான் சொல்லுறது விளங்க இல்ல. பேத்தியும் பிறந்தாச்சு. இனியாவது செய்யவேண்டியதை செய்றது தானே முறை; மரியாதை. இவள் போடுற உடுப்பில இருந்து, நாங்க இருக்கிற இந்த சோபா தொடங்கி இப்ப வாங்கிப்போட்டு இருக்கிற காணி வரைக்கும் என்ர மகன்ர உழைப்பு. அவன் இன்னும் எவ்வளவு காலத்துக்குக் கஷ்டப்பட்டு உழைக்கிறது? இப்பதான் ஒரு காணியே வாங்கிப்போட்டு இருக்கிறான். அதுல ஒரு வீடு கட்டி முடிக்கிறதுக்கிடையில அவனுக்கு வயசே போயிடும். பிறகு எப்ப அவன் வாழுறது?” என்று மகனிடம் சொல்வதுபோல் ஆரணியைச் சாடினார் அவர்.
“இதை எல்லாம் யோசிக்க வேண்டியது நிகேதன். நீங்க சாப்பிட வந்த இடத்தில தேவை இல்லாம கதைக்காம பேசாம இருங்க!” என்று அதட்டினார் சகாதேவன். மாலினிக்கும் அவர் பேச்சுப் பிடிக்கவில்லை. நிகேதன் தலையெடுக்கிறவரை பூனையாக இருந்தவர் இன்றைக்கு ஆளே மாறி நிற்பதைக் கண்டு உள்ளூர திகைப்பாய்த்தான் இருந்தது.
“அப்பிடி எப்பிடித் தம்பி இருக்கிறது? நான் பெத்தவள் எல்லா. நீங்க சந்தோசமா இருந்தா தானே எனக்கும் நிம்மதி. இவளாவது போய்க் கேக்கலாம் தானே. அதெல்லாம் செய்ய மாட்டாள். என்ர பிள்ளைய மட்டும் நல்லா மாடாக்குவாள்.”
அதோடு ஆரணிக்கு இருந்த பொறுமை எல்லாம் ஓடிப்போயிருந்தது. “இத மட்டும் ஏன் மாமி என்னட்ட சொல்லுறீங்க? கயல் அறை கட்டுறதுக்கு நிக்கிய மட்டும் கூப்பிட்டு காசு கேட்ட மாதிரி இதையும் அவனைத் தனியா கூப்பிட்டு கேட்கலாமே.” என்று கேட்டாள்.
“என்ன கதைக்கிறாய்? என்ர மகனோட நான் கதைக்கிறதுக்கு நாலுபேர கூப்பிட்டு வச்சுக்கொண்டா கதைக்க வேணும்?”
“நீங்க நிக்கிட்ட கதைச்சது பிழை இல்ல. ஆனா எனக்குத் தெரியாம ஒளிச்சு மறைச்சுக் காசு கேட்டதுதான் பிழை.” என்றதுமே அமராவதி கொதித்து எழுந்துவிட்டார்.
“பாத்தியா தம்பி, உனக்கு முன்னாலேயே என்ன கதைக்கிறாள் எண்டு. ஒளிச்சேனாம் மறைச்சேனாம். அவன் வந்த இடத்தில கேட்டனான். தெரிஞ்சா இவள் விடமாட்டாள் எண்டு அவன் சொல்லாம விட்டிருக்கிறான் போல. இவள் ஒழுங்கா இருந்தா அவன் ஏன் சொல்லாம இருக்கப்போறான். கடைசில என்னில பழியைப் போடுறாள்.”
சகாதேவனுக்குத் தாயை என்ன செய்வது என்று தெரியாது தலையை வலித்தது.
“பேசாம இருங்க அம்மா. தேவையில்லாம கதைக்காதீங்க எண்டு சொல்லியும் கேக்காம கதைச்சு பேச்ச வளத்துப்போட்டு.. என்ன இது? அவனும் இல்லாத நேரத்தில..”
அவருக்கும் ஆரணிக்குத் தெரியாமல் அவர் நிகேதனிடம் பேசியது பிடிக்கவில்லை.
ஆரணி அதற்குமேல் ஒன்றுமே கதைக்கவில்லை. ‘தெரிஞ்சா இவள் விடமாட்டாள் எண்டு அவன் சொல்லாம விட்டிருக்கிறான் போல.’ என்றவரின் வார்த்தைகளில் அவள் உள்ளம் அடிபட்டுப் போனது.
அவன் மறைத்தது அவருக்குத் தெரிந்திருக்காது. ஒரு ஊகத்தில் தான் சொல்லுகிறார் என்று புரிந்தது. ஆனால், அதுதானே உண்மையும். அவன் அவளிடம் சொல்லவே இல்லை தானே.
அந்த நேரம் சரியாக வீட்டுக்குள் வந்தான் நிகேதன்.
அவனைக் கண்டதும் அமராவதிக்குக் கண்ணீர் பொல பொல என்று ஊற்றியது.
“என்னம்மா?” என்றான் ஒன்றும் புரியாமல்.
“ஒண்டுமில்ல. நீ போய்ச் சாப்பிடு!” என்ற சகாதேவனை முந்திக்கொண்டு, “போதுமடா. இனி நீ எனக்கோ உன்ர தங்கச்சிக்கோ ஒரு சதமும் தந்துபோடாத. அவளுக்குத் தெரியாம நான் உன்னட்ட ஒளிச்சு மறைச்சு காசு வாங்கினேனாம் எண்டு சொல்லுறாள். இந்த வயதில இப்பிடி ஒரு பேச்சு கேக்கவேணும் எண்டு எனக்கு எழுதி இருக்கு போல. கடவுளே..” என்று அவர் அழவும் நிகேதனின் முகம் இறுகிப் போயிற்று.
ஆரணி கலங்கிப்போனாள். நேற்றைய சண்டையே இன்றைக்கு வேறு வடிவத்தில் வந்து நிற்கிறதே. “நிக்கி..” தன்னை விளக்கிவிடும் நோக்கத்தில் அழைத்தாள்.
விசுக்கென்று திரும்பியவனின் விழிகளில் தெறித்த கோபத்தில் அப்படியே நின்றாள். வாயில் விரலை வைத்து, ‘வாயை மூடு!’ என்றான் அவன். விழிகள் அதிர்வில் விரிய அப்படியே நின்றாள் ஆரணி.
அமராவதியிடம் திரும்பி, “அம்மா இங்க பாருங்க, நான் உங்கட மகன். கயல் என்ர தங்கச்சி. நீங்க என்னட்ட கேக்கிறதையோ நான் அவளுக்குக் குடுக்கிறதையோ இங்க யாரும் குறுக்குக் கேள்வி கேக்கேலாது. விளங்கினதா? சும்மா கண்ணைக் கசக்காம பேசாம இருங்க!” என்றான் அழுத்தம் திருத்தமாய்.
இது அவருக்கான பதில் அல்ல. அவளுக்கானது! விரிந்த விழிகளில் நீர் சேர அவனையே பார்த்தாள் ஆரணி.