அதன்பிறகு விறாந்தையில் நிற்கவில்லை ஆரணி. நிற்க முடியவில்லை. பாவித்த பாத்திரங்களை எல்லாம் ஒதுக்கிக்கொண்டு போய்க் கழுவ ஆரம்பித்தாள்.
ஒழுங்காக சோப் போடமுடியாமல் கைகள் இரண்டும் நடுங்கியது. விழிகளைக் கண்ணீர் மறைத்தது. சவற்கார நுரை அப்பியிருந்த கைகளைக் கழுவிக்கொண்டு கண்களை அழுத்தித் துடைத்தாள். அழுகையைக் கட்டுப்படுத்த ஒரு கிளாஸ் தண்ணீரைப் பருகினாள்.
குளிர்ந்த நீர் அவளைச் சற்றே ஆற்றுப்படுத்தியது. எதையும் யோசிக்காமல் பிடிவாதமாக எல்லாவற்றையும் ஒதுக்கி வைக்க ஆரம்பித்தாள்.
கல்லைப் போன்ற இறுக்கத்துடன் விறாந்தையிலேயே அமர்ந்திருந்தான் நிகேதன். சகாதேவன், “சாப்பிடடா பசிக்கும்!” என்று சொல்லியும் அசையவில்லை.
அமராவதி, தன் கண்ணீரையும் புலம்பலையும் நிறுத்தவில்லை. “என்ர பிள்ளையிட்ட நான் காசு கேட்டது ஒரு பிழையா? என்னவோ அவனை வாழவிடாம நசுக்கின மாதிரி ஒளிச்சேன், மறைச்சேன் எண்டு சொல்லிப்போட்டாள். விட்டா களவுக்கும் சாட்டியிருப்பாள். தப்பிட்டன்.”
என்னவோ வாயில்லாத பூச்சி போன்ற அவரின் பேச்சு மாலினிக்குச் சினமூட்டியது. “போதும் மாமி. சும்மா அதையே பிடிச்சு தொங்காதீங்க. என்ர மகன் என்ர மகன் எண்டுறீங்க. இந்தப் பாசம் நிகேதன் வேலை இல்லாம இருந்த காலத்தில எங்க போனது? இப்ப நிகேதன் உங்கட மகன் மட்டும் இல்ல ஆரணிக்கு மனுசனும். கட்டின மனுசன் சொல்லாம கொள்ளாம மறைச்சு காசு தந்தா எந்த மனுசிக்கும் கோவம் வரத்தான் செய்யும்! இதையே உங்கட மருமகன் கயலுக்குச் செய்தா விடுவீங்களா?”
“அண்ணி, விடுங்கோ! என்ன எண்டு நான் பாக்கிறன்.” என்றான் நிகேதன் இறுக்கமான குரலில்.
“நீர் பாத்த விதத்தைத்தான் கொஞ்சத்துக்கு முதல் நான் பாத்தனே. அம்மாவில பாசம் இருக்கத்தான் வேணும். அதுக்கெண்டு இது ஆக ஓவர்.” அவனையும் அவர் விட்டுவைக்கவில்லை.
“மாலினி விடு. நீயும் கதைச்சு பெருசாக்காத!” என்று கண்டித்தார் சகாதேவன். அவருக்குத் தன் அன்னையின் மீதுதான் கோபம். இப்போது அதைக் கதைக்க ஆரம்பித்தால் மீண்டும் இது பெரும் பிரச்சனையாக மாறும் என்பதில் தானும் கதைக்காமல் மாலினியையும் அடக்கினார்.
“அதுதான் போதுமான அளவுக்கு உங்கட அம்மா பெருசாக்கிட்டாவே. இன்னும் என்னத்த நான் செய்யக் கிடக்கு?” எரிச்சலுடன் சொல்லிவிட்டு குசினிக்குள் புகுந்து ஆரணி கழுவி வைத்த பாத்திரங்களைத் துடைத்து எடுத்துவைக்கத் தொடங்கினார் மாலினி.
கயலினியும் ராகவனும் வந்தபோதும் சரி, வீட்டுச் சூழ்நிலை சரியில்லை என்று கணித்து மற்றவர்களைக் கேள்வியாகப் பார்த்தபோதும் சரி, அவர்கள் சாப்பிட்டு முடித்து எல்லோரும் கிளம்பியபோதும் சரி, நிகேதன் இருந்த இடத்தை விட்டு அசையவே இல்லை.
புறப்படுவதற்கு முன், “ஆரணியில ஒரு பிழையும் இல்ல. அம்மாவைப் பற்றித் தெரியும் தானே உனக்கு. அந்தப் பிள்ளையிட்ட கோவப்படாத.” என்று சகாதேவன் சொல்லிவிட்டு போனதைக்கூட அவன் காதில் விழுத்தவில்லை. அப்படியே அமர்ந்திருந்தான்.
ஆரணிக்கு அவனுடைய இந்த அமைதியும் இறுக்கமும் பீதியைக் கிளபிற்று. அவள் வாழ்வில் மீண்டுமொரு புயல் வீசப்போகிறதா? சமாளிப்பாளா? பேசாமல் அவனைப் பார்த்தபடி நின்றாள்.
அவர்கள் நிதானமாகப் பேசிக்கொள்ளட்டும் என்றெண்ணிய பார்வதி அம்மா, “குழந்தையை நான் கொஞ்ச நேரம் வச்சிருக்கிறன். பிறகு வந்து வாங்கு ஆச்சி.” என்றுவிட்டு, பூவினியுடன் அங்கிருந்து வெளியேறினார்.
இப்போது இருவரும் மட்டுமே. அவனிடம் பேச வேண்டும். தன்னை விளக்க வேண்டும். ஆனால் எப்படி?
என்றைக்குமே அவனிடம் எதைப் பேசவும் சொல்லவும் அவள் தயங்கியதில்லை. உள்ளும் புறமும் தன்னுடைய பிம்பமாகத்தான் அவனைக் கண்டிருக்கிறாள். ஆனால் இன்று.. அவன் வேறு ஒருவனாகத் தெரிந்தான். அதுவே நெஞ்சை அடைக்கச் செய்தது. ஆனால், பேசாமல் தீராதே.
தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “நிக்கி, நான் சொல்லுறதை கொஞ்சம் கேளு, பிளீஸ்.” என்றாள் கெஞ்சல் குரலில்.
“என்ன சொல்லப் போறாய்? அம்மா தேவையில்லாம கதைச்சவா. எனக்கு வாய மூடிக்கொண்டு இருக்கேலாம போச்சுது. திருப்பிக் கதைச்சனான் எண்டா?” என்று வினவினான் அவன்.
“சொல்லு, ஒரு மனுசர சாப்பாட்டுக்கு வாங்கோ எண்டு வீட்டுக்குக் கூப்பிட்டுப்போட்டு இப்பிடித்தான் சண்டை பிடிச்சு, அழவச்சு, கேவலப்படுத்தி அனுப்பி வைப்பியா?” அவன் பேச்சினில் மெல்ல மெல்ல சூடேறியது.
“கொஞ்சமாவது வயசான மனுசி, என்ர அம்மா எண்டு யோசிச்சியா நீ?”
அன்னைக்காக இவ்வளவு பார்க்கிறவன் அவளுக்காக ஒரு துளியேனும் யோசிக்க மாட்டானா? அவளுக்குக் கண்ணைக் கரித்துக்கொண்டு வந்தது. “நானா எதையும் ஆரம்பிக்க இல்ல நிக்கி. அவா கதைக்கக் கதைக்கப் பொறுத்துத்தான் போனனான். ஒரு கட்டத்துக்கு மேல முடியேல்லடா. அம்மா அப்பாட்ட போய்ச் சீதனம் வாங்கிக்கொண்டு வரட்டாம் எண்டு சொன்னவா.” கரகரத்த குரலில் நடந்ததை எடுத்துச்சொல்ல முனைந்தாள்.
“சொன்னா சொல்லிப்போட்டுப் போகட்டும். நீ வாயை மூடிக்கொண்டு இருந்திருக்க வேண்டியது தானே. அப்பிடியே முடிஞ்சிருக்க வேண்டிய விசயத்த கதைச்சு பெருசாக்கி சண்டையா மாத்தினது நீதான்.” அவன் எதையும் கேட்க மறுத்தான். அவளையே குற்றம் சாட்டினான்.
யாரில் சரியோ பிழையோ வீட்டுக்கு வந்தவர்களை அவனுடைய மனைவியாக அவள் நல்ல முறையில் அனுசரித்து அனுப்பியிருக்க வேண்டும் என்பது அவன் வாதமாயிருந்தது.
இனி, என்றைக்கு அவர்கள் இந்த வீட்டுக்கு வர எண்ணினாலும் இந்த நிகழ்வு நெருஞ்சிமுள்ளாய் நிற்குமே. மாலினி சந்தர்ப்பம் கிடைக்கிறபோதெல்லாம் குத்திக் காட்டுவாரே. யாரின் முன்னெல்லாம் தான் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்று ஆசைப்பட்டானோ அவர்களின் முன்னாலேயே அவமானப் பட்டிருக்கிறான்.
ஆரணிக்கும் அவன் சொல்ல வருவது புரிந்தது. ஆனால், அவளின் எல்லை எதுவோ அதுவரைக்கும் தானே அவளாலும் பொறுக்க முடியும். வில்லம்புகளைக் காட்டிலும் சொல்லம்புகள் இதயத்தை ஆழமாகக் கிழிக்கும் என்றதை மறந்து போனானா? கோபமா வலியா பிரித்தறிய முடியாத உணர்வொன்று அவளைத் தாக்கியது.
“எப்ப பாத்தாலும் என்னையே வாய மூடச் சொல்லுறியே நிக்கி. மாமி கதைக்கிறது எனக்கு வலிக்கவே வலிக்காதா? என்னைப் பற்றிக் கொஞ்சமும் யோசிக்கவே மாட்டியா? இது எல்லாத்துக்கும் ஆரம்பப் புள்ளி என்ன எண்டு யோசி. நீ எனக்குச் சொல்லாம விட்டது. என்னட்ட மறைச்சது. மாமி என்ன சொன்னவா தெரியுமா? தெரிஞ்சா நான் விடமாட்டேன் எண்டுதானாம் நீ மறைச்சனி. நீ சொல்லியிருந்தா இந்தப் பிரச்சனையே வந்திருக்காதே?”
“சொல்லியிருந்தா இண்டைக்குப் போன நிம்மதி அண்டைக்கே போயிருக்கும்!” என்றான் அவன் பட்டென்று. “அம்மா சொன்னதில என்ன பிழை? நீ சண்டைக்கு வருவாய், விடமாட்டாய் எண்டு தெரிஞ்சுதான் சொல்ல இல்ல.” திரும்பத் திரும்ப அவன் மறைத்தான் என்பதிலேயே அவள் வந்து நிற்க அவன் நிதானத்தை இழந்திருந்தான்.
“நான் சொல்ல இல்லை எண்டுறதுலையே நிக்கிறாய். நீ கொஞ்சமாவது பொறுத்துப் போறியா? எல்லாத்துக்கும் வாக்கு வாதம்! எல்லாத்துக்கும் பிடிவாதம். எல்லாத்துக்கும் சண்டை. என்ன பொம்பிளையடி நீ?”
அவனுடைய கேள்வியில் துடித்து நிமிர்ந்தாள் ஆரணி. ‘என்ன பொம்பிளையடி நீ?’ அமராவதி சொல்லும் அதே வார்த்தைகள். அவன் வாயிலிருந்தும் வந்துவிட்டது. இன்னும் எத்தனையைத்தான் கேட்கப்போகிறாள்?
“இப்ப என்ன நிக்கி? மாமி சீதனம் கேட்டது சரி. அதுக்கு நான் திருப்பிக் கதைச்சது பிழை. அப்பிடியா?” என்றாள் கரகரத்த குரலில்.
“சும்மா அதையே பிடிச்சுத் தொங்காம போடி பேசாம! இப்ப என்ன சீதனத்தைக் கொண்டுவா எண்டு அவா உன்ன வீட்டை விட்டுத் துரத்தியா விட்டவா? இல்லை தானே. பிள்ளையைக் குடுத்ததைத் தவிர வேற என்ன கிழிச்சனி எண்டு உன்ர அம்மா என்னைக் கேட்டவா. அதுக்கு உன்னோட வந்து சண்டை பிடிச்சேனா நான்? இல்ல உன்ர அம்மாவோட சண்டைக்குப் போனேனா?” என்று திருப்பிக் கேட்டான் அவன்.
அதிர்ச்சியில் விழிகளை விரித்தாள் ஆரணி. இது எப்போது நடந்தது? அவளுக்குத் தெரியாதே. ஆனால், இவன் ஏன் தன் அன்னைக்குச் சார்பாகவே பேசுகிறான்?
“ஏன் நிக்கி, உனக்கும் சீதனம் தேவையா இருக்கா? என்னட்ட நேரா கேக்க ஏலாம(இயலாமல்) மாமி சொன்னதுக்கு மறைமுகமா சப்போர்ட் செய்றியா?” என்று அவள் கேட்டு முடிக்க முதலே, “அறைஞ்சன் எண்டா!” என்று கையை ஓங்கியிருந்தான் அவன்.
சுவரோடு சுவராக ஒன்றினாள் ஆரணி. நம்பவே முடியாத உச்ச பட்ச அதிர்ச்சியில் அகன்றன அவள் விழிகள். உயர்ந்திருந்த அவன் கையையே இமைக்க மறந்து பார்த்தாள்.
அப்போதுதான் அவனுக்கும் தான் செய்த காரியம் புரிந்தது. வேகமாகக் கையைக் கீழே இறக்கிக்கொண்டான். ஆனாலும் அவன் கோபம் அடங்கவே இல்லை. அவனை இந்த நிலைக்குத் தள்ளியது அவளின் பேச்சுத்தானே.
“யாருட்டயடி வந்து உன்ர பணத்திமிரக் காட்டுறாய்? உனக்கு உன்ர வீட்டுச் சொத்துப்பத்து வேணும் எண்டா அங்கயே போ. இங்க இருக்காத! இந்த நிமிசமே நீ போகலாம்.” என்றான் வாசலைக் காட்டி.
ஆரணி அசையக்கூட முடியாதவளாய் நின்றாள். அவளின் பெரிய விழிகளில் மெல்ல மெல்ல நீர் நிரம்பி வழிந்தது. அதற்குமேல் அவள் எதுவும் பேசவில்லை. எல்லாமே விட்டுப்போன உணர்வு. அவளுக்குள் இருந்த எதுவோ ஒன்று உடைந்துபோயிற்று.
ஆனால் அவன் உக்கிரம் அடங்கவேயில்லை. “என்னைப் பாத்தா எப்பிடி தெரியுது உனக்கு? கட்டின மனுசிய வச்சு பாக்க தெரியாத பெட்ட மாதிரியா? இல்ல உன்ர அப்பரிட்ட சீதனம் தாங்கோ எண்டு கையேந்திற பிச்சைக்காரன் மாதிரியா?”
இரவு பகல் பாராமல், அவனுடைய சந்தோசங்களைப் பற்றி யோசிக்காமல் அவளை நல்ல ஒரு இடத்தில் வாழவைக்க வேண்டும்; அவளின் தாய் தந்தையின் முன்னே தலை நிமிர்ந்து நிற்க வைக்க வேண்டும் என்று அவன் உயிரைக்கொடுத்து ஓடிக்கொண்டு இருக்க, உனக்குச் சீதனம் வேண்டுமா என்று அவள் கேட்பாளா?
ஒரு மாமி மருமகனிடம் என் மகளுக்கு நீ பிள்ளையைக் கொடுத்ததை தவிர வேறு என்ன செய்தாய் என்று முகத்துக்கு நேரே கேட்பது எவ்வளவு பெரிய கேவலம்? இருந்தும் இன்றுவரை அதைப் பற்றி அவன் அவளிடம் சொன்னதே இல்லை. ஏன்? அவள் கவலைப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக. அப்படியானவனைப்போய்… “ச்சேய்! மனுசன் இருப்பானா இந்த வீட்டில?” என்றவன் விறு விறு என்று வெளியே போக அதிர்ந்தாள் ஆரணி.
“நிக்கி! எங்க போறாய்?” என்றாள் பதட்டத்துடன்.
“நீ இல்லாத ஒரு இடம். உன்ர முகத்தையே பாக்காத ஒரு இடம். உன்ர குரலையே கேக்காத ஒரு இடம். போதுமா?”
அவனுடைய கர்ஜனையில் அவளின் சுவாசம் அடங்கியது. வலி வலி வலி! அவன் இப்படிச் சொன்னபிறகும் இந்த இதயம் ஏன் நின்றுபோகாமல் வேகமாகத் துடிக்கிறது. செத்துப்போ! இதயமே இன்னும் எதற்கு அதிகமாய்த் துடிக்கிறாய்? செத்துப்போ! அவனிடமிருந்து இதையெல்லாம் கேட்டபிறகும் ஏன் துடிக்கிறாய்? செத்துப்போ!
அவளே இல்லாத இடத்துக்குப் போகப்போவதாகச் சொன்னவன் வாசலைத் தாண்ட முடியாமல் நின்றான். கண்கள் இரண்டும் இரத்தக் கட்டிகளாகச் சிவந்திருந்தன. ஆத்திரத்தில் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியதில் அவன் தேகமே ஏறி இறங்கியது.
மெல்ல நடந்து அவன் முன்னே சென்று நின்றாள் ஆரணி. அவன் முகத்தைத் திருப்பிக்கொண்டு நின்றான்.
அவன் தாடையைப் பற்றித் தன்னை நோக்கித் திருப்பினாள். அவன் அவளின் கையைத் தட்டிவிட்டான். ஆரணிக்குக் கையில் வலிக்கவில்லை. ஆனால், நெஞ்சில் வலித்தது.
“இந்த முகத்தைப் பாக்க பிடிக்க இல்லையா நிக்கி? பாக்காட்டி நித்திரை வராது எண்டு சொன்னாய்? உன்ர தேவதை நான் எண்டு சொன்னாய். நான்தான் உன்ர சந்தோசம் எண்டு சொன்னியேடா?”
“அம்மா தாயே என்ன விட்டுடு! தெரியாம சொல்லிட்டன். இப்பிடி ஒரு நரகம் கலியாண வாழ்க்கை எண்டு தெரிஞ்சிருந்தா உன்ர கண்ணிலையே விழாம ஓடித்தப்பி இருப்பன்!”
“ஓ…!” அவளுக்கு மேலே பேச வரவில்லை. அவள் விழிகள் அவனிடமே நிலைத்தன. இனி பேசவோ விளக்கவோ எதுவுமில்லை. எதுவுமே இல்லை!
“இவ்வளவு காலமும் நடந்த எல்லாத்துக்கும் என்னை மன்னிச்சுக்கொள்ளு நிக்கி. இனி எந்தக் காலத்திலையும் உனக்குத் தொந்தரவா நான் இருக்க மாட்டன்!” கலங்கித் தழுதழுத்த குரலில் சொல்லிவிட்டுப் போனாள் ஆரணி.