அவள் ஆரணி 43

அத்தியாயம் 43

தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்து இருந்தான் ராகவன். நடந்ததை எல்லாம் அறிந்தவனின் முகம் சினத்தில் சிவந்திருந்தது. என்ன சொல்லி அவனைச் சமாளிப்பது என்று தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டிருந்தாள் கயலினி. ‘இந்த அம்மாக்கு வாய வச்சுக்கொண்டு இருக்கேலாது…’ அன்னையின் மீதுதான் அவளுக்கும் கோபம் வந்தது.

தன்னை அடக்கிப் பார்த்து முடியாமல் நிமிர்ந்து, “இது சரியா வராது சகாதேவன் அண்ணா. நீங்க உங்கட அம்மாக்கு வேற இடம் பாருங்கோ.” என்றான் ராகவன் நேரடியாக.

எல்லோருமே திகைத்துப் போயினர். அவன் எதையும் நேராகப் பேசுகிறவன் என்று தெரியும் தான். என்றாலும் இப்படி முகத்துக்கு நேராகச் சொல்லுவான் என்று எதிர்பார்க்கவே இல்லை.

அமராவதி திகைப்புடன் மருமகனையே பார்த்தார். அந்தக் காலத்தில், அவரும் கணவருமாக நிலம் வாங்கி, குருவி சேர்ப்பதுபோல் சிறுகச் சிறுகக் காசு சேர்த்து, அவர்களுக்கு என்று கட்டிய வீடு அது. அந்த வீட்டிலிருந்து மருமகனாக வந்தவன் நொடியில் அவரையே வேண்டாத குப்பையாக்கித் தூக்கி எறிந்துவிட்டானே. சிந்திக்கும் திறனை இழந்து நின்றார்.

தேவையில்லாத பிரச்னையை உருவாக்கி வைத்திருக்கிறார் என்று கயலினிக்கும் தாய் மீது கோபம் தான். அதற்காக வெளியே போ என்பதா? “ரகு, என்ன கதைக்கிறீங்க? அவா என்ர அம்மா! கடைசிவரைக்கும் என்னோடதான் இருப்பா! அப்பிடி நீங்க சொல்லேலாது.” என்று, வேகமாகச் சொன்னாள் அவள்.

“அப்ப நீ உன்ர அம்மாவோடயே இரு. நான் போறன்! என்னால இப்பிடி எல்லாம் கேவலப்பட்டுக்கொண்டு இருக்கேலாது.” என்றான் அவன் உறுதியான தொனியில்.

பயந்துபோனாள் கயலினி. அமராவதிக்கு மூச்சும் இல்லை பேச்சும் இல்லை. அவர் எதற்கோ ஆரம்பித்த பிரச்சனை தன் மகளின் தலையிலேயே வந்து விடியும் என்று எண்ணியும் பார்க்கவில்லை.

இந்த விடயம் இந்தளவு தூரத்துக்கு வரும் என்று எதிர்பாராத சகாதேவனும் செய்வதறியாது மாலினியைப் பார்த்தார். மாலினியும் இதை எதிர்பார்க்கவில்லை தான். ஆனால், கலகம் பிறந்தால் தானே நியாயம் பிறக்கும். எனவே பிறக்கப்போகிற நியாயத்துக்காகக் காத்திருக்க முடிவு செய்தார்.

கணவனின் பேச்சு கயலினியின் அடிவயிற்றையே கலக்கிற்று. “ரகு பிளீஸ்! என்னில இருக்கிற பாசத்தில தான் அம்மா கேட்டு இருக்கிறா. அதை அண்ணி பெருசாக்கினத்துக்கு நீங்க ஏன் இப்பிடியெல்லாம் கதைக்கிறீங்க?” என்றாள் மனத்தாங்கலோடு.

“ஆக, உனக்கும் உன்ர அம்மா செய்தது பிழையா தெரிய இல்ல. ஆரணி கதைச்சதுதான் பிழை, என்ன?”

அவனின் கேள்விக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தாள் அவள்.

“அப்ப நானும் உனக்குச் சொல்லாம உன்னட்ட கேக்காம என்ர தங்கச்சிக்கு என்னவும் செய்யலாம். அதைப் பற்றி நீ எதுவும் கேக்க மாட்டாய். ஆரணிய மாதிரி பிரச்னையைப் பெருசாக்க மாட்டாய். அப்பிடித்தானே?”

இதற்கு எப்படிச் சம்மதிப்பது? உண்மையில் அவனுக்கு ஒரு தங்கை அதுவும் திருமண வயதில் இருக்கையில். பதில் சொல்ல முடியாமல் தடுமாறினாள் கயலினி. அதுவே அவனுக்கு வெறுப்பையும் சினத்தையும் இன்னுமே மூட்டிற்று!

“நீ முதல் இங்க வா!” என்றான் சட்டென்று.

பயத்துடன் அவன் முன்னால் வந்து நின்றாள் அவள். “உனக்கோ பிள்ளைக்கோ நான் ஏதும் குறை வச்சிருக்கிறனா? இல்ல, நான் உழைச்சுக்கொண்டு வாறது உனக்குக் காணாதா?” என்று கேட்டான் அவன்.

அவள் அவசரமாக இல்லை என்று தலையை அசைத்தாள்.

“பிறகு என்னத்துக்கடி உன்ர அம்மா காசு கேக்கப்போனவா?” அவனுடைய டீயில் அவள் அதிர்ந்துபோனாள். அதையெல்லாம் உணரும் நிலையில் இல்லை அவன். “அம்மாவும் மகளுமா சேர்ந்து என்னை என்ன விக்கிறீங்களா?” என்று சீறினான்.

பதறிப்போனார் அமராவதி. அவரை வீட்டை விட்டுத் துரத்தினாலும் பரவாயில்லை. மகள் கணவனோடு வாழட்டும். அதைவிட, மகள் மருமகனின் முன்னே குற்றவாளியாக நிற்கும் கோலத்தைக் காணவும் முடியவில்லை. “தம்பி கேட்டது நான். அவளை ஏன் அதட்டுறீங்க?” என்றார் இடையிட்டு.

“நான் என்ர மனுசியோட கதைக்கிறன். நீங்க இதுல தலையிடாதீங்க!” என்றான் அவன் பட்டென்று.

முகத்தில் அடித்தது போன்ற அவனுடைய பதிலில் அவரின் முகம் கன்றிப்போனது.

“இது எல்லாத்துக்கும் காரணமே நீங்கதான். என்னவோ சிறப்பான காரியம் செய்த மாதிரி கேட்டது நான் எண்டு சொல்லுறீங்க. உங்கட மகளுக்கு எண்டதும் இப்பிடி துடிக்கிற உங்களால ஆரணிய பற்றிக் கொஞ்சம் கூடவா யோசிக்க ஏலாம போனது?”

பதில் சொல்ல இயலாமல் மருமகனின் முன்னே தலை குனிந்தார் அமராவதி. கண்ணீர் அதுபாட்டுக்கு வழிந்து மார்பை நனைத்தது. பேரப்பிள்ளைகளைப் பார்த்த வயதில் அதுவும் மருமகனிடம் பேச்சு வாங்கும் நிலை எவ்வளவு கேவலம்?

“ரகு பிளீஸ்…” அன்னையின் நிலைகண்டு துடித்துப்போய் மன்றாடினாள் கயலினி.

“நீ கதைக்காத!” என்றான் அவளிடமும். “நான் மாதச் சம்பளக்காரன். தந்த காச உடனே திருப்பித் தரேலாதுதான். எண்டாலும் சேர்த்துப்போட்டு தருவன். உன்ர சின்ன அண்ணனை வந்து வாங்கிக்கொண்டு போகச் சொல்லு!” என்று அறிவித்தான் அவளிடம்.

சகாதேவனுக்கு எல்லாமே வெறுத்துப்போன நிலை. தங்கையின் கணவனேயானாலும் ஒருவன் அவரின் கண் முன்னேயே தாயையும் தங்கையையும் நிற்கவைத்துக் கேள்வி கேட்கிறான். இருந்தும் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. நடுவில் சிக்கியிருப்பது தங்கையின் வாழ்க்கையாயிற்றே. வேறு வழியும் இல்லை. சமாளித்தே ஆகவேண்டும். “உங்கட கோபம் எனக்கு விளங்குது ராகவன். ஆனாலும், கொஞ்சம் நிதானமா இருங்கோ.” என்றார் தன்மையாக. “வயசான மனுசி. என்னவோ யோசிக்காம செய்திட்டா.”

“இல்லவே இல்ல!” என்றான் அவன் உறுதியாக. “நல்ல வடிவா யோசிச்சுத் திட்டம் போட்டுத்தான் செய்து இருக்கிறா. என்ர மனுசி பிள்ளையை எனக்குப் பாக்கத் தெரியும் எண்டு எப்பவோ தெளிவா சொல்லிப்போட்டன். அதோட, ஏற்கனவே இந்தப் பிரச்சனை இந்த வீட்டில வச்சே வந்து, உங்கட வீட்டுச் செலவை நீங்கதான் பாக்கவேணும் எண்டு ஆரணியும் சொல்லி இருக்கிறா. அப்பிடி இருந்தும் அவாவுக்குத்(அவளுக்குத்) தெரியாம நிகேதன கூப்பிட்டு காசு கேட்டு எனக்கும் தரவச்சு இருக்கிறா உங்கட அம்மா. இதெல்லாம் யோசிக்காம செய்ற காரியங்களா?” என்று அவரிடமே திருப்பிக் கேட்டான் அவன்.

பதில் சொல்லும் வழியற்று நின்றார் சகாதேவன். ராகவனுக்குத் தன்னை முட்டாளாக்கிய கோபம் அடங்கவேயில்லை.

“உங்கட வீட்டுக்கு மருமக்களா வந்த எங்களைப் பாத்தா எப்பிடி தெரியுது உங்களுக்கும் உங்கட அம்மாவுக்கும்? அடிமுட்டாளுகள் மாதிரியா? நாளைக்கு நான் ஆரணின்ர முகம் பாக்கிறேல்லையா? இல்ல ரெண்டு குடும்பமும் உறவா பழக வேண்டாமா? இல்ல சண்டையைப் பிடிச்சுக்கொண்டு ஆளுக்கொரு திசையா நாங்க பிரிஞ்சிருக்க வேணும் எண்டு நினைக்கிறாவா உங்கட அம்மா?” என்று கேள்விகளால் விளாசித் தள்ளினான்.

அவனது கேள்விகளில் இருந்த நியாயத்தில் சகாதேவனின் முகமும் கருத்துப் போயிற்று. அவனுக்கும் கயலுக்கும் திருமணம் நடந்ததிலிருந்து இன்றுவரை சகாதேவன் அண்ணா என்ற சொல்லுக்கு மேலே ஒரு சொல்லு பேசாதவன் ராகவன். அப்படியானவன் இன்று அவரிடமே கேள்வியாகக் கேட்கிறான்.

தன் கணவனை அந்த நிலையில் பார்த்த மாலினிக்கு பொறுக்கவே முடியவில்லை.

“இப்ப சந்தோசமா மாமி? உங்கட மருமகன் என்ர மனுசன நிக்க வச்சுக் கேள்வி கேக்கிறார். இதுக்குத்தானே ஆசைப்பட்டீங்க?”

அமராவதிக்கு வாழ்க்கையே வெறுத்துப் போனது. ஏனடா அப்படிச் செய்தோம் என்று தன்னையே நொந்தார்.

மாலினிக்கு மனம் இரங்கவே இல்லை. மாமியாராகவே பிறப்பெடுத்து வரவில்லையே அவர். ஒரு ஆணுக்கு மனைவியாக இருந்து, குடும்பத்தை நிர்வகித்து, ஓராயிரம் பிரச்சனைகளைச் சமாளித்துத்தானே இத்தனை வயதைக் கடந்திருப்பார். அப்படி இருந்தும் எதைப்பற்றியும் யோசிக்காமல் நடந்துவிட்டு இப்போது என்ன கண்ணீர் என்றுதான் கோபம் வந்தது. வயதும் கண்ணீரும் போதுமா செய்வதை எல்லாம் செய்துவிட்டு அப்படியே கடந்து போக?

“இப்பிடி எல்லாக் குடும்பத்துக்கையும் சண்டையைப் போட்டு அப்பிடி என்ன சுகத்த காணப்போறீங்க? நரகமா மாறுறது உங்கட மருமக்களின்ர வாழ்க்கை மட்டும் இல்ல. நீங்க பெத்த மக்களின்ர வாழ்க்கையும் தான்!”

அதற்குமேல் தாங்க மாட்டாமல் முற்றிலுமாக உடைந்து சத்தமாக அழுதார் அமராவதி. சகாதேவனும் கயலினியும் துடித்துப் போயினர். பத்து மாதம் சுமந்து, பார்த்துப் பார்த்து வளர்த்து, அப்பா இல்லாமல் போயும் அவர்களை ஆளாக்கிய அன்னையை எதற்காகவும் கண்ணீர் வடிக்க விட முடியாதே.

“அம்மா அழாதீங்க. அதெல்லாம் ஒண்டும் இல்ல. கொஞ்ச நாளைக்கு எங்களோட வந்து இருந்திட்டு வாங்க!” என்று சகாதேவன் சொல்லி முடிக்க முதலே, “ஏன், நான் சந்தோசமா இருக்கிறது பிடிக்கேல்லையா உங்களுக்கு?” என்றார் மாலினி பட்டென்று.

“மாலினி! கதைக்கிறதை யோசிச்சு கதை.” கோபத்துடன் அதட்டினார் சகாதேவன். செய்தது பிழைதான். அதற்கென்று எல்லையே இல்லாமல் அவரை நோகடிப்பதா?

மாலினியும் விடுவதாக இல்லை. “இனியும் என்னத்த யோசிச்சு கதைக்கக் கிடக்கு? உங்கட குடும்பத்துக்காக என்னால ஏலுமானதை(இயலுமானதை) எல்லாம் நான் செய்திட்டன். இப்ப கொஞ்சக் காலமாத்தான் நிம்மதியா வாழுறன். அத கெடுக்கப் போறீங்களா? உங்கட அம்மா வந்தா எங்களுக்கையும் சண்டையத்தான் போடுவா!” என்றார் எந்தக் காருண்யத்தையும் காட்ட மறுத்து.

“அண்ணி பிளீஸ் இப்பிடியெல்லாம் கதைக்காதீங்க..” அதற்குமேல் தாங்கமாட்டாமல் உடைந்து அழுதாள் கயலினி. “யார் என்ன சொன்னாலும் கடைசி வரைக்கும் நீங்க என்னோடதான் அம்மா இருப்பீங்க. உங்களை எங்க போகவும் நான் விடமாட்டன்.” என்றவள் கணவனிடம் ஓடி வந்தாள்.

அவன் கையைப் பற்றிக்கொண்டு அவனது காலடியில் அமர்ந்தாள். “பிளீஸ் ரகு. என்ர அம்மாவ இப்பிடி எல்லாரும் பந்தாடுறத என்னால பாக்கேலாம இருக்கு. அவா என்னோடயே இருக்கட்டும். பிளீஸ்.. நான் உங்களிட்ட வேற ஒண்டும் கேக்கேல்லை.” என்று அழுதாள்.

ராகவன் ஒன்றும் சொல்லாமல் அவளையே பார்த்தான். “பிளீஸ் ரகு! எனக்காக ஓம் எண்டு சொல்ல மாட்டீங்களா?” அவன் கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினாள்.

ராகவனுக்கும் அவர் அழுவதைப் பார்க்க முடியவில்லை. கோபம் மலையளவு இருந்ததுதான். அவர் உடைந்து அழவும் ஒரு மாதிரி ஆகிப்போயிற்று. இவ்வளவுக்குக் கதைத்திருக்க வேண்டாமோ என்றும் நினைத்தான்.

கயலினியைப் பார்த்தான். கண்ணீர் கொட்டும் விழிகளால் இறைஞ்சிக்கொண்டிருந்தாள் அவள். மெல்ல அவளின் கையைப் பற்றி அழுத்திக்கொடுத்தான். சட்டென்று கண்ணீர் நிற்க அவள் முகம் மலர்ந்தது. “தேங்க்ஸ் ரகு!” என்றாள்.

“சரி விடு!” என்று அவளிடம் சொல்லிவிட்டு பெரிய மூச்சு ஒன்றை எடுத்துவிட்டுவிட்டுச் சகாதேவனிடம் பேசினான்.

“சொறி அண்ணா. நானும் கொஞ்சம் கோபமா கதைச்சிட்டன். மாமி எனக்கும் அம்மா மாதிரித்தான். அவா எங்களோட இருக்கிறதுல உண்மையா எனக்குச் சந்தோசம். அவாவை நாங்க வச்சுப் பாக்கிறோம் எண்டுறதை விட ராகுலை பாத்து, கவனிச்சு, வளத்துத் தாறது அவாதான். அவவிட்ட மகன் இருக்கிறான் எண்டுற நிம்மதியில தான் நானும் கயலும் பயப்பிடாம வேலைக்குப் போறது. மாமி எங்களோடையே இருக்கட்டும். ஆனா இப்பிடியான எந்தப் பிரச்சினையும் இனி வரக் கூடாது. எனக்கு என்ர மரியாதை சரியான முக்கியம். இத நான் முதலும் சொல்லி இருக்கிறன். இப்பவும் சொல்லி இருக்கிறன். ஆனா, இனியும் சொல்லிக்கொண்டு இருக்கமாட்டன். அதைவிடக் காலத்துக்கும் உங்க எல்லோரோடையும் உறவு கொண்டாட, பழக, போய்வர எனக்கு விருப்பம். அதைக் கெடுக்காம இருந்தாச் சரி.” என்று முடித்துக்கொண்டான் அவன்.

சகாதேவனும் கயலும் அப்போதுதான் மூச்சை இழுத்துவிட்டனர். ஆனால், அமராவதி இடிந்துபோய் அமர்ந்திருந்தார். தன் பிள்ளைகளுக்குத் தான் பாரமாக இருக்கிறோம் என்று உணர்கிற அந்த நொடி, ஒவ்வொரு பெற்றோருக்கும் மிகுந்த நரகமானது. அதன் பிறகான வாழ்க்கை என்பது சபிக்கப்பட்டது. அப்படி உணரக்கூடாது. அமராவதி அதை உணர்ந்துகொண்டிருந்தார்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock