அவள் ஆரணி 44

மன்னார் விம்பம் பகுதியில் அமைந்திருந்தது அந்தச் சிறுவர் பூங்கா. சமீபத்தில் தான் அழகுற புனரமைத்திருந்தார்கள். வீட்டில் நடந்த பிரச்சனையில் மிரண்டுபோயிருந்த மகன்களைக் கூட்டிக்கொண்டு வந்து அங்கு விளையாட விட்டிருந்தார் சகாதேவன்.

அங்கிருந்த ஊஞ்சல்களில் தொற்றியிருந்த ஆரியனும் ஆதவனும் யார் அதி உயரத்துக்குப் போய்வருவது என்கிற போட்டியில் தம்முடைய முழுப் பலத்தையும் கொடுத்து உந்தி உந்தி ஆடிக்கொண்டிருந்தனர்.

கைகளைக் கட்டிக்கொண்டு அவர்களையே பார்த்திருந்தான் நிகேதன். தனியாகப் பேச எண்ணி சகாதேவன்தான் அவனை வரவழைத்திருந்தார். இன்னுமே அவன் முகத்தில் இருந்த கோபச்சிவப்பு அடங்கியிருக்கவில்லை. நின்ற நிலையிலும் மிகுந்த இறுக்கம். அவருக்கு இது ஒன்றுமே சரியாகப் படவில்லை.

“ஏன் நிகேதன் இப்பிடி இருக்கிறாய்?” என்று கேட்டார்.

அப்போதும் வாயைத் திறக்காமல் அப்படியே நின்றிருந்தான் அவன். ஒருவித சலிப்புடன் வீட்டில் நடந்தவற்றை எல்லாம் சொன்னார். அதைக் கேட்டு அவனுக்கு இன்னுமே தலை வலித்தது.

“ராகவனை ஒரு மாதிரி சமாளிச்சாச்சு. ஆனா, இப்பிடி எதையும் மனுசிக்கு மறைக்காத நிகேதன். அது தேவையில்லாத பிரச்சினைகளைத்தான் கொண்டுவரும். குடும்ப நிம்மதியே போயிடும். மாலினியை பற்றி உனக்குத் தெரியும் தானே? ஒரு சின்ன விசயத்துக்கும் எவ்வளவு கதைப்பாள். அப்பிடி இருந்துமே அவளுக்குச் சொல்லாம ஒரு உப்புக்கட்டிய கூட நான் உங்களுக்குத் தரேல்ல. அதனாலதான் அவளும் சீறினாலும் சினந்தாலும் என்னைத் தடுத்ததும் இல்ல. நீ மட்டும் ஏன் நிகேதன் இப்பிடி செய்தனி? மனுசன் மனுசி வாழ்க்கையில புரிதலும், ஒளிவு மறைவு இல்லாத வெளிப்படையும் சரியான முக்கியம்.” என்று எடுத்துச் சொன்னார் அவர்.

“எங்களை நம்பி எங்களோட வாழ வந்தவைய(வந்தவர்களை) நாங்களே மதிக்காட்டி எப்பிடி சொல்லு? அதுவும் ஆரணி உன்ன மட்டுமே நம்பி வந்த பிள்ளை. அம்மா, அப்பா, சகோதரம் எண்டு யார் துணையும் இல்லாத பிள்ளைய எல்லாமா இருந்து நீதான் பாக்கவேணும். உன்ன நம்பி வந்தது பிழையோ எண்டு நினைக்க வச்சிடாத.”

அதைக்கேட்டு உதட்டைக் கடித்தான் நிகேதன். இன்றைக்கு அப்படி நினைத்திருப்பாளா? அவன் மனம் துடித்தது.

அதன்பிறகு அவன் எண்ணங்கள் இங்கே அவர் சொல்லிக்கொண்டிருந்த எதிலும் இல்லை. அவனைப்போட்டு ஆட்டிய கோபம் என்கிற அரக்கன் நழுவ நழுவ, அந்த இடத்தை நிதானம் பிடித்துக்கொள்ளத் தொடங்கியபோதுதான், விழிகளில் பெரும் அச்சத்துடன் அவனைப் பார்த்து உடல் நடுங்கிய ஆரணி கண்முன்னால் வந்து நின்றாள். சுருக்கென்று நெஞ்சில் எதுவோ ஆழப் பாய்ந்தது.

அங்கேயே இருந்தால் இன்னும் எதையாவது பேசி அவளை இன்னுமே நோகடித்துவிடுவோமோ என்று பயந்துதான் சகாதேவன் அழைத்ததும் புறப்பட்டு வந்தான். இப்போதோ அப்படி வந்தது தவறோ என்று ஓடியது. ரோசப்பட்டுக் கோவித்துக்கொண்டு போய்விடுவாளா? அதற்கு மேல் யோசிக்கக்கூடப் பயந்து பட்டென்று திரும்பி நடந்தான்.

“என்ன?”

“இல்லை அண்ணா. அவசரமா நான் போகோணும். பிறகு கதைப்பம்.” அவரின் பதிலுக்காகக் காத்திராமல் வேகமாக அங்கிருந்து ஓடினான்.

“குடிபூரலுக்கு நாள் குறிச்சுப்போட்டு சொல்லுவன். கோபதாபங்களைப் பெருசா எடுக்காம எல்லாரையும் கூட்டிக்கொண்டு வா!” என்றார் சத்தமாக.

“சரிசரி!” என்றவன் நிற்கவே இல்லை. பைக்கை வீடு நோக்கி விரட்டினான்.

பயமும் பதட்டமுமாக வீட்டுக்கு வந்தவனின் விழிகள் மனைவி மகள் இருவரையும் தேடி அலைந்தது. வாசலில் ஸ்கூட்டி நின்றாலும் நடந்து போயிருப்பாளோ என்கிற கேள்வி அவனை நிம்மதி கொள்ள விடவில்லை. அவள்தான் ரோசக்காரியாயிற்றே. ஓடிப்போய் அறையைப் பார்த்தான்.

சீராகத் தட்டிப் போட்டிருந்த கட்டிலும் பளிச்சென்று இருந்த அறையும் அங்கே யாரும் இருப்பதற்கான அறிகுறியைக் காட்டவே இல்லை.

அவனுக்கு நெஞ்செல்லாம் நடுங்கியது. வீட்டில் இருந்தால் பூவினியின் சத்தம் கேட்குமே. அதுவும் அவன் பெண் தாயைப் போலவே மூச்சுவிடாமல் என்னென்னவோ கதைப்பாளே.

“ஆரா?” கூப்பிட்டுக்கொண்டே குசினிக்கு ஓடினான். அப்படியே வீட்டின் பின்னாலும் சென்று பார்த்தான்.

இனி எங்கே தேடுவது? போயே விட்டாளா? தொண்டை எல்லாம் உலர்ந்து போயிற்று. “ஆரா…” சத்தமாக அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் வந்தவனின் கண்கள் மீண்டும் மீண்டும் சுழன்று வீடு முழுவதையும் அலசியது. காணாமல் போனது என்ன சிறிய பொருட்களா கண்ணுக்கு அகப்படாமல் எங்காவது விழுந்து கிடக்க?

கை நடுங்க போனை எடுத்து அவளுக்கு அழைக்க முற்படுகையில் பூவினியின் ‘ங்கா…’ என்ற சத்தம் தேனாகக் காதில் பாய்ந்தது.

“பூவம்மா?” இரண்டு எட்டில் அறையை அடைந்தான். கட்டில் அப்போதும் வெறுமையாகத்தான் கிடந்தது. வேகமாகக் கட்டிலைத் தாண்டிப்போய்ப் பார்த்தான்.

கட்டிலுக்கும் அலமாரிக்கும் இடையிலான இடைவெளியில் பூவினிக்கு விரித்திருந்த விரிப்பில் தாயும் மகளும் சுருண்டிருந்தனர். தாயின் மார்போடு அணைந்து நல்ல உறக்கத்தில் இருந்த பூவினி கனவில் சத்தமிட்டு அவனை அழைத்தாளா இல்லை நாங்கள் போகவில்லை இங்கேதான் இருக்கிறோம் அப்பா என்று அவனுக்குத் தெரியப்படுத்தினாளா தெரியவில்லை. அவர்களைக் கண்டபிறகுதான் உயிரே வந்தது.

ஆரணியின் விழிகள் மூடித்தான் இருந்தது. ஆனால் மூக்கை ஊடறுத்து ஓடிய கண்ணீர் அவள் விழித்திருப்பத்தைச் சொல்ல, அப்படியே அவளின் காலடியில் அமர்ந்தான்.

“போயிட்டியோ எண்டு பயந்திட்டன்.” என்றான் அவளின் பாதத்தின் மீது கையை வைத்து.

மெல்ல கால்களை இழுத்துக்கொண்டாள் ஆரணி. எழுந்து, விலகி அமர்ந்து முகத்தைத் துடைத்தாள். சிறு வலியொன்று தாக்க அவளையே பார்த்தான் நிகேதன். அன்னையின் கதகதப்பு விலகியதால் பூவினி சிணுங்கினாள். “இல்லம்மா இல்லம்மா…” என்று தட்டிக்கொடுத்தாள். குரல் உடைந்து கரகரத்தது.

பூவினி மீண்டும் உறங்கிப்போனாள். இருவரிடமும் பெரும் அமைதி. மனதை அழுத்திய பாரத்தோடு அவளையே பார்த்திருந்தான் நிகேதன்.

“இனி ஒரு நிமிசமும் இங்க இருக்கக் கூடாது எண்டுதான் நினைச்சன். ஆனா… எங்க போக?”

நெஞ்சடைக்க அவளையே பார்த்தான் அவன்.

“இப்பிடி ஒரு நிலை வரும் எண்டு யோசிக்கவே இல்ல. நான் காதலிச்சவன் என்னைக் கடைசிவரைக்கும் கைவிடமாட்டான் எண்டு கண்மூடித்தனமான நம்பிட்டன்.” என்றவளின் உதட்டோரம் வறண்ட புன்னகை ஓன்று நெளிந்தது.

கூர் ஈட்டி ஒன்று சரக்கென்று பாய்ந்ததுபோல் வலித்தது நிகேதனுக்கு. அவளையே பார்த்தான்.

“ஆனா ஒண்டு, அம்மா அப்பாவை உதறிப்போட்டு வந்தது எவ்வளவு பெரிய பிழை எண்டு உச்சில அடிச்ச மாதிரி இப்ப விளங்கிட்டுது. போகாத போகாத எண்டு சொன்ன அம்மான்ர கதையைக் கேக்காம வந்த பாவத்துக்குத்தான் வெளில போ எண்டு சொன்னபிறகும் போக்கிடம் இல்லாம இங்கயே இருக்கிற நிலை வந்திருக்கு.”

அதற்குமேல் தாங்கமாட்டாமல் விழிகளை இறுக்கி மூடிக்கொண்டான் நிகேதன். அவனை நம்பி வந்தவள் அப்படி வந்தது தவறு என்று இன்று உணர்ந்தாளாம். இனி, அவன் எதைச் சாதித்தும் பிரயோசனமில்லை. கசந்து வழிந்த உண்மையில் அவன் இதயமே கசங்கிப் போயிற்று.

“அதைவிட இது நான் மட்டும் சம்மந்தப்பட்ட விசயம் இல்ல. எனக்கும் உங்களுக்கும் பிறந்த பிள்ளை என்ன பாவம் செய்தவள். அவளிட்ட இருந்து அவளின்ர அப்பாவைப் பிரிக்கிற உரிமை எனக்கு இல்லை தானே. அவளுக்காகவாவது…” அதற்குமேல் அவள் பேசுவதைக் கேட்க அவன் அங்கே இருக்கவில்லை. எழுந்து வெளியே வந்திருந்தான்.

வார்த்தைக்கு வார்த்தை, பதிலுக்குப் பதில் என்று அவளை ஆழமாகக் காயப்படுத்திவிட்டான் தான். அதனால் தான் என்னை மன்னித்துவிடு என்று கூட அவனால் கேட்க முடியவில்லை. அதற்கென்று, அவன் வாழ்வின் அனைத்திலும் அகரமாக இருந்தவள் இன்றைக்குப் பிள்ளைக்காக அவனோடு இருக்கிறேன் என்று விட்டாளே.

அம்மா கேட்டது ஒருவிதக் கோபத்தை கொடுக்க இந்தா பிடி என்பதுபோல் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டான். அதை அவன் அவளுக்கு மறைக்க நினைக்கவில்லை. சொல்ல வாயும் வரவில்லை.

அதுவும், அதைக்குறித்தே பெரும் சண்டை ஒன்று நடந்து முடிந்திருக்க, மீண்டும் அதைப் பற்றிப் பேசி, நாளாந்த வாழ்வின் நிம்மதியைக் கெடுக்கத் தைரியம் இல்லாமல் போயிற்று என்பதுதான் உண்மை.

அது, இன்று இத்தனை திசைகளில் இவ்வளவு பெரிய புயலாக மாறி அடிக்கும் என்று அவன் யோசித்தும் பார்க்கவில்லை.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock