அவன் விழிகளும் அதைத்தான் அவளிடம் சொல்லிக்கொண்டிருந்தன. ஆரணியின் விழிகள் தன்னாலே தளும்பிற்று. அவன் விழிகளின் ஓரமும் மெல்லிய நீர் படலம். விடிந்ததில் இருந்து இதையேதான் ரிப்பீட் மோடில் கேட்டுக்கொண்டே இருக்கிறான்.
“இண்டைக்கு எங்களுக்கு காலியாண நாள். உன்ன நான் எப்பிடி வாழ்த்த ஆரா? ‘ஹாப்பி மேரீட் லைஃப்’ எண்டா? உன்னட்ட இருந்த ஹாப்பிய நானே பறிச்சிட்டு எப்பிடி வாழ்த்த?” கரகரத்த குரலில் மெல்ல உரைத்தவன் அவளின் நெற்றியில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தான். “உனக்கு எப்பிடியோ தெரியாது ஆரா? ஆனா எனக்கு.. ஹாப்பி மேரீட் லைஃப் தான்டி. நீ அப்பிடித்தான் என்ன வச்சிருக்கிறாய். நான்தான்..” என்றவனுக்கு மேலே பேசமுடியாமல் போயிற்று.
அவள் விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. அதை துடைத்துவிட்டான் அவன். அந்தக் கன்னங்களிலும் தன் உதடுகளை ஒற்றி எடுத்தான். “காலத்துக்கும் நீ நல்லாருக்கோணும். சந்தோசமா இருக்கோணும்.” என்றான் அவளை அணைத்துக்கொண்டு.
அன்று காதல் பண்ணியது
உந்தன் கன்னம் கிள்ளியது
அடி இப்போதும் நிறம் மாறாமல்
இந்த நெஞ்சில் நிற்கிறது
என்று போய்க்கொண்டிருந்தது பாடல். அதற்குமேல் அந்தப்பாடலைக் கேட்கமுடியாமல் அவனிடமிருந்து விலக முயன்றாள் ஆரணி. அவன் விடவில்லை. தடுத்து அணைத்தான். அவள் உதட்டினில் தன் உதடுகளைப் பொருத்தினான். ஆழ்ந்த முத்தம். அவனுடைய மனத்துயரையெல்லாம் அவளிடம் பகிர்ந்துகொள்ளும் மிக ஆழ்ந்த முத்தம். ஆரணியின் காயங்களுக்கும் அந்த மருந்து தேவையாய்த்தான் இருந்தது. இசைந்து கொடுத்தாள். முத்தமிட்டபின் அவளின் கன்னங்களைத் தாங்கி முகம் பார்த்தவனின் விழிகளில் கெஞ்சல் இருந்தது. வேண்டுதல் இருந்தது. அவளை விட்டு விலகமுடியாத ஏக்கம் இருந்தது. சின்ன விம்மலுடன் அவன் மார்பில் சாய்ந்தாள், ஆரணி. அவளை அப்படியே அள்ளிக்கொண்டு மற்றொரு அறை நோக்கி நடந்தான் நிகேதன்.
——————–
அன்று, அதிசயமாக மாலைப்பொழுதில் வீட்டுக்கு வந்திருந்தான் நிகேதன். வந்ததில் இருந்து ஹாலிலேயே அமர்ந்து இருந்தான். ஒரு கையின் விரல்களினால் தன் இரு புருவங்களை நீவி விட்டுக்கொண்டே இருந்தான். அப்படி எதைப்பற்றிச் சிந்திக்கிறான்? எதுவாக இருந்தாலும் அவன் அப்படி இருப்பது பிடிக்காமல் மகளை அவன் புறமாக நகர்த்திவிட்டாள், ஆரணி. இப்போதெல்லாம் கொஞ்சமேனும் அவன் சிரிப்பது பூவினி அவன் கைகளில் இருக்கிற பொழுதுகளில் மாத்திரம் தான்.
மகள் வந்து கால்களைப்பற்றிக்கொண்டு குதிக்கவும், “அப்பான்ர பூக்குட்டி!” என்றபடி அவளைத் தூக்கிக்கொண்டான் அவன். அவள் எதிர்பார்த்ததுபோலவே மகளைக் கண்டு அவன் கண்ணும் முகமும் மலர்ந்து ஒளிவீசியது. அதை இதமாய் உள்வாங்கியபடி தன் வேலைகளைப் பார்த்தாள் ஆரணி.
சற்று நேரத்தில் கயல்விழி, அமராவதி, மகன் என்று எல்லோருடனும் வந்தான் ராகவன். என்னவோ என்று உள்ளே ஓடினாலும், அவர்களை வரவேற்று உபசரித்தாள் ஆரணி.
சற்றுநேரம் பொதுவாகப் பேசிக்கொண்டு இருந்துவிட்டு ஆரம்பித்தான், ராகவன்.
“அண்டைக்கு நீங்க தந்த காச திருப்பித் தர வந்தனான் நிகேதன். வீடு கட்டுற நேரம் இந்தக் காசு உங்களுக்கும் உதவியா இருக்கும் தானே.” என்று பணத்தை நீட்டினான்.
நிகேதனின் முகத்தில் இறுக்கம் படர்ந்தது. ‘உங்களைச் சந்திக்க வருகிறேன்’ என்று ராகவன் அழைத்துச் சொன்னபோது, இப்படி ஏதுமாகத்தான் இருக்கும் என்று ஊகித்தான் தான். என்றாலும் ஒருவித எரிச்சல் உண்டாவதைத் தடுக்க முடியவில்லை. ஆளாளுக்கு தவணை முறையில் அவனுடைய நிம்மதியைப் பறித்தால் அவனும் என்னதான் செய்வான்?
அதை வாங்காமல் ஆரணியைத் திரும்பிப் பார்க்க அவளைக் காணவில்லை. இவ்வளவு நேரமாக இங்கேதானே இருந்தாள் என்று எட்டிப்பார்த்தான். அவர்கள் அருந்திய தேநீர் கோப்பைகளோடு அவள் கிட்சனுக்கு நழுவுவது தெரிந்தது. சுருக்கென்று அவனுக்குள் ஒரு கோபம் ஏறியது.
எழுந்து வந்து, “இங்க என்ன செய்றாய்? அங்க வா!” என்றான் அதட்டலாக.
அவள் திரும்பி அவனை நேராகப் பார்த்தாள். “உங்கட அம்மா, உங்கட தங்கச்சி, நீங்க உழைச்ச காசு. இதுக்க நான் வந்து என்ன குறுக்கு விசாரணை செய்ய இருக்கு நிகேதன். முதல் எனக்கு அங்க நிக்க அனுமதி இருக்கா என்ன?” என்று நிதானமாகக் கேட்டாள்.
சந்தர்ப்பம் கிடைத்ததும் போட்டுத் தாக்கியவளை முறைப்புடன் பார்த்தான் நிகேதன். சின்ன வீடு. இப்போதே அவர்களுக்குள் என்னவோ சரியில்லை என்று ஊகித்திருப்பார்கள். அதற்கு இன்னுமே தூபம் போட விரும்பாமல் தன்னை அடக்கினான். “இப்ப நான் போறன். பின்னால நீ வாறாய். வந்து கடைசிவரைக்கும் அங்கேயே நிக்கிறாய்!” என்றுவிட்டுப் போனான் அவன். அதற்குமேல் பிடிவாதம் பிடிக்காமல் அவன் சொன்னதைச் செய்தாள் ஆரணி. ராகுலும் பூவினியும் ஒருவரோடு ஒருவர் விளையாடிக்கொண்டிருந்தனர்.
“இந்தக் காச நான் திருப்பிக் கேக்க இல்லையே ராகவன்?” என்றான் நிகேதன் நிதானமாக.
“நீங்க கேக்க இல்லை தான். எண்டாலும் எனக்கு இது வேண்டாம்.” என்றான் ராகவன். “இந்தக் காசால் வந்த பிரச்சனை எல்லாம் போதும்!”
அன்று, பிரச்சனை உருவான நாளில் இருந்து இன்றுவரை இருவரும் சந்திக்கவும் இல்லை; பேசிக்கொள்ளவுமில்லை. ஆனாலும், ஆரணிக்குத் தெரியாமல், கூடவே உண்மையை மறைத்து எதற்குப் பணம் தந்தான் என்று ராகவனுக்கு நிகேதன் மேலும், என்ன நடந்திருந்தாலும் வயதான அன்னையை என்றாலும் கூட்டிக்கொண்டு போங்கள் என்று சொல்வானா என்கிற கோபம் நிகேதனுக்கு ராகவனின் மேலும் உருவாகி இருந்தது. இன்று சந்தித்துக்கொள்ளவும், அந்தக் கோபத்தைக் காட்டிக்கொள்ளாமல் முட்டிக்கொண்டனர்.
“அது நான் என்ர மருமகனுக்காகச் செய்தது. அதை திருப்பி வாங்கினா எனக்கு அழகில்லை.” என்ற நிகேதன் அதற்கு மறுத்து ராகவன் என்னவோ சொல்ல வரவும், தடுத்துப் பேசினான்.
“அம்மா என்னட்ட காசு கேட்டது, நான் ஆராக்கு தெரியாம தந்தது எல்லாம் என்ர பிரச்சனை ராகவன். அது முடிஞ்சு போச்சு. இப்ப அம்மாவும் இங்கதான் இருக்கிறா. ஆராவும் இங்கதான் இருக்கிறாள். இப்ப சொல்லுறன், அந்தக் காச நான் திருப்பி வாங்க மாட்டன்!”
ராகவனின் முகத்தில் மெல்லிய எரிச்சல் கோடுகள். கயலினிக்கோ மீண்டும் ஏதும் பிரச்சனையாகிவிடுமோ என்று பயமாயிற்று. அமராவதிக்கும் கலக்கம் தான். மருமகனிடம் அன்று கேட்ட பேச்சுக்களே போதும் என்பதில் வாயை மூடிக்கொண்டு அமர்ந்து இருந்தார். ஆரணிக்கு நடந்த எதுவுமே தெரியாது என்பதில் நடப்பதை மாத்திரம் கவனித்தாள்.
“இல்ல நிகேதன், அது சரிவராது. நீங்க திருப்பி வாங்குங்கோ.” என்றான் ராகவன்.
நிகேதன் மறுத்துத் தலை அசைத்தான். “உங்களுக்கு காசு தந்ததால எந்தப் பிரச்சனையும் வர இல்ல ராகவன். அவளுக்குச் சொல்ல இல்லை எண்டுறதுதான் ஆராக்குக் கோபம். அது நான் செய்த பிழை.” என்றவன், அவளைத் திரும்பிப் பார்த்தான்.
“அப்பிடி நான் உனக்குச் சொல்லாம விட்டிருக்கக் கூடாது ஆரா. என்னை மன்னிச்சுக்கொள்ளு. இனி எந்தக் காலத்திலையும் இப்பிடிச் செய்யமாட்டன்.” என்றான் நேரடியாக.
இதைச் சற்றும் எதிர்பாராத ஆரணி திகைப்புடன் அவனைப் பார்த்தாள். அவர்கள் எல்லோருக்கும் முன்னால், அதுவும் குறிப்பாக ராகவனுக்கு முன்னால் தன்னிடம் மன்னிப்புக் கேட்பான் என்று எதிர்பார்க்கவே இல்லை. இப்படி ஏன் எல்லோருக்கும் முன்பு கேட்டான் என்கிற கோபம் எழுந்தபோதும் மனதின் வலி சற்றே குறைந்து போனதும் உண்மைதான்.
“அதே மாதிரி, இப்ப சொல்லுறன் அம்மா. நல்லா நினைவில வச்சிருங்கோ. உங்கட மூண்டு பிள்ளைகளும் குடும்பம், குட்டி, நல்ல நிலமை எண்டு இப்ப நல்லாத்தான் இருக்கிறோம். இனி ஒரு பிள்ளைக்காக இன்னொரு பிள்ளையிட்ட எதுவும் கேக்காதீங்க. உங்கட வாழ்க்கையை நிம்மதியாவும் சந்தோசமாவும் வாழப் பாருங்கோ. இனி உங்களுக்கு அது மட்டும் தான் வேணும்.” என்றவன் ஆரணியை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு, “விரைவில உங்கட பெயர்ல கொஞ்சக் காசு டிப்போசிட் செய்து விடுறன். மாதம் மாதம் வட்டி வரும். அத உங்கட கைச்செலவுக்கு வச்சிருங்கோ. இனி எதுக்கும் நீங்க யாரின்ர தயவையும் எதிர்பாக்கத் தேவை இல்ல. அந்த வீடு உங்கட மகளின்ர வீடு. அங்க இருக்க உங்களுக்கு முழு உரிமையும் இருக்கு. விளங்கிச்சா?” என்றான் நேரடியாக.
தான் அன்று பேசியதைக் குறித்துத்தான் சொல்லுகிறான் என்று உணர்ந்த ராகவனுக்கு சற்றே முகம் கன்றிப் போயிற்று. “வேணும் எண்டோ திமிர்லயோ அதை சொல்ல இல்ல நிகேதன். எனக்கு வீண் பிரச்சனைகள் விருப்பம் இல்ல.” என்றான் அவன்.
“எதுக்காகவும் நீங்க அப்பிடி சொல்லியிருக்கக் கூடாது ராகவன். அவா கேட்டாலும் தந்தது நான். என்ன எண்டாலும் என்னோட கதைச்சிருக்க வேணும். பரவாயில்ல விடுங்கோ, அதெல்லாம் முடிஞ்ச கதை. தயவு செய்து காசை திரும்பவும் நீட்டி என்னை சங்கடப்படுத்தாதீங்க.” என்று நேராகவே பேசி அந்தப் பிரச்னைக்கு ஒரு நிரந்தரமான முற்றுப்புள்ளியை வைத்தான் நிகேதன்.
ராகவனுக்கு வேறு வழி இருக்கவில்லை. நிகேதன் சொன்னதைக் கேட்டுக்கொண்டான். நிகேதனுக்கும் அதில் பெருத்த நிம்மதி.