கணவர் சொன்னதைக் கேட்டு நம்பமுடியாமல் அமர்ந்திருந்தார் யசோதா. அவரின் கணவரோ பிரெட்டில் பீநட் பட்டரை மிகவும் லாவகமாகத் தடவிக்கொண்டு இருந்தார். கூடவே, அவர் வழமையாக அருந்தும் பெரிய கோப்பையில் கறுப்புக் கோப்பியை வார்த்தார். தான் கோபமாக இருப்பது தெரிந்தும் எதையும் காட்டிக்கொள்ளாத அவரின் அந்த நிதானம் இன்னுமே சினத்தைக் கிளப்பியது. கோப்பிக் கப், பிரெட் இருந்த தட்டு இரண்டையும் தன் புறமாக இழுத்துக்கொண்டார், யசோதா.
அவரை நிமிர்ந்து பார்த்தார், சத்தியநாதன்.
“யாஷ்! இப்ப நான் சாப்பிடுறதா இல்லையா?”
“சாப்பிடாதீங்க! ஒரு நேரம் பட்டினி கிடந்தா ஒண்டும் நடக்காது! இவ்வளவு நடந்திருக்கு. மூச்சுக் கூட விடாம இருந்துபோட்டு இப்ப வந்து சொல்லுறீங்க? அப்பாவுக்கும் மகளுக்கும் இருக்கிற திமிருக்கு அளவே இல்லை!” என்று கொதித்தார் அவர்.
மகள் வந்து மன்னிப்புக் கேட்டிருக்கிறாள். மருமகனைக் கூப்பிட்டுப் பேசியிருக்கிறார். ஆனபோதிலும் அவரிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லையே!
“இத நீ உன்ர மகளைத்தான் கேக்கவேணும்.”
“அவளையும் கேக்கத்தான் போறன். கேட்டுச் சண்டை பிடிக்கத்தான் போறன். ஆனா, நீங்க ஏன் உடனேயே எனக்குச் சொல்ல இல்ல? சொல்லி இருந்தா அப்பவே என்ர பேத்தியை நான் போய் பாத்திருப்பன் தானே?”
“அதாலதான் சொல்ல இல்ல யாஷ். ‘இரக்கப்பட்டு என்னைத் தேடி வரவேணாம்’ எண்டு சொல்லிப்போட்டு போனவா உன்ர மகள். அந்த ரோசத்தை, கோபத்தை நாங்க மதிக்கோணும்.” என்றவரை போதும் என்பதுபோல் கையெடுத்துக் கும்பிட்டார் யசோதா.
“அப்பாவும் மகளும் மாறி மாறி கோபப்படுவீங்க. ரோசப்படுவீங்க. நடுவுக்க கிடந்து நான் பட்ட துன்பம் எல்லாம் போதும். நீங்க சொன்னீங்க எண்டுதான் பேத்தி பிறந்தது தெரிஞ்சும் நான் எட்டியும் பாக்கேல்லை. இனி என்னால ஏலாது. நான் போகப்போறன்! பாக்கப்போறன்!” என்று அறிவித்தார் அவர்.
“நோ! நீ போகக்கூடாது யாஷ்!”
“வெரி சொறி! நீங்க எனக்கு நியாயமா நடக்க இல்ல சத்யா. அதால நீங்க சொல்லுறதை நான் கேக்கமாட்டன்!” என்றுவிட்டு, அவரின் சாப்பாட்டையும் கோப்பிக் கோப்பையையும் அவரின் முன்னால் டொம் என்று வைத்துவிட்டு எழுந்துபோனார் யசோதா.
சற்று நேரத்திலேயே தயாராகி, தன்னுடைய அறையில் இருந்து வெளியே வந்தார். கைப்பையையும் கார் திறப்பையும் எடுத்துக்கொண்டு புறப்படவும், கோப்பியை அருந்திக்கொண்டு இருந்த சத்தியநாதன், “கவனம்!” என்றார் வேறு பேசாமல்.
சகாதேவனின் வீடு குடிபூரல் நாளைக்கு என்பதால், பயணத்துக்குத் தேவையான பொருட்களை எல்லாம் வாங்கிக்கொண்டு வந்தான், நிகேதன்.
“இரவுக்கு இங்க இருந்து வெளிக்கிட வேணும் ஆரா. குடிபூரல முடிச்சுக்கொண்டு திரும்ப நாளைக்கு இரவே அங்க இருந்தும் வெளிக்கிடவேணும். பூவிக்கு எல்லாம் பாத்து எடுத்துவை.”
அது அவளுக்கும் தெரியும் தான். சகாதேவனும் மாலினியும் பிரத்தியேகமாக அவளிடமும் பேசி வரச்சொல்லி அழைத்தும் இருந்தார்கள் தான். ஆனாலும், ஆரணி தயங்கினாள்.
அதை உணர்ந்து, “என்ன ஆரா?” என்றான் ஒன்றும் விளங்காமல்.
“நான் வராம நிக்கவா?” மெல்லிய தயக்கத்துடன் கேட்டாள் அவள்.
அவன் புருவங்கள் சுருங்கிற்று. ஏன் இப்படிச் சொல்கிறாள்? அவன் மீது இருக்கிற கோபத்தினாலா? அவன் முகம் சுருங்கிப் போயிற்று. “அப்பிடி போகாம இருக்கிறது நல்லாருக்காது.” என்றான் ஒருமாதிரிக் குரலில்.
“ஆனா ஏன்?” என்றான் காரணத்தை அறிய விரும்பி.
அவளோ பதில் சொல்லத் தடுமாறினாள். அவன் முகம் பார்க்க மறுத்தாள்.
ஒன்றும் விளங்காமல், “என்ன ஆரா?” என்றான் மீண்டும். “என்ன எண்டாலும் வெளிப்படையா சொன்னா தானே தெரியும்.”
“இல்ல.. நான் வாறன்.” என்றுவிட்டு, காரணம் சொல்லாமல் போகிறவளை ஒரு பெருமூச்சுடன் பார்த்தான் நிகேதன்.
அவனுக்கும் நின்று கேட்க நேரமில்லை. ஒரு வேனை விற்றுவிட்டதில் அதன் மூலம் ஓடிய ஹயர்களையும் சேர்த்துக் கவனிக்கவேண்டி இருந்தது. கிடைத்த நல்ல வாடிக்கையாளர்களை விட்டுவிட மனமில்லை. நாளைய ஒரு நாளுக்கு அவனுக்குப் பதிலாக ஆட்களை ஒழுங்குபடுத்தவேண்டி இருந்தது. அடுத்த வாரம் அளவில் வீட்டு வேலைக்குப் பூசையைப் போட்டு அத்திவாரம் ஆரம்பிக்கலாம் என்று சொல்லியிருந்ததில், அதற்கான அலுவல்கள் என்று அவனுக்கு உண்மையிலேயே மூச்சு விடக்கூட நேரமில்லை.
அவளை அவள் பாட்டுக்கே விட்டுவிட்டு வாசலை நோக்கி நடந்தவன், வந்து நின்ற யசோதாவின் காரைக் கண்டுவிட்டு அப்படியே நின்றான். அவரைப் பார்த்ததும் முகத்தில் படிந்த கருமையை வேகமாக மறைத்துக்கொண்டு வரவேற்றான். ஆரணியும் அன்னையை அங்கே எதிர்பார்க்கவில்லை. முதலில் அதிர்ந்தாலும் பின் ஒன்றும் சொல்லாமல் இறுக்கத்தோடு நின்றாள்.
அதையெல்லாம் அவர் பொருட்படுத்தவே இல்லை. அவருக்காகவே பிரத்தியேகமாகப் போடப்பட்டு இருந்ததைப்போன்று ஹாலில் இருந்த இருக்கையில் வந்து வசதியாக அமர்ந்துகொண்டார்.
தன்பாட்டுக்கு விளையாடிக்கொண்டிருந்த பூவினி, புது முகத்தைக் கண்டதும் விறுவிறு என்று தவழ்ந்து வந்து தகப்பனின் கால்களைப் பற்றி எழுந்து நின்று தூக்கு என்று அவசரப்படுத்தினாள். நிகேதனும் மகளைத் தூக்கிக்கொண்டான்.
யாருக்கு என்ன பேசுவது என்று தெரியாத ஒரு சங்கடமான சூழ்நிலை. யசோதாவின் பார்வை தகப்பனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு தன்னையே குறுகுறு என்று பார்த்துக்கொண்டு இருந்த பேத்தியிலேயே இருந்தது. அவளில் தன் சாயலைத் தேடினார்.
அதைக் கவனித்த நிகேதன், “பூவம்மா, பிள்ளையின்ர அம்மம்மா வந்திருக்கிறா. போறீங்களா?” என்றபடி அவளை அவரிடம் கொண்டுபோய் நீட்டினான். அவளோ தகப்பனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு போகமாட்டேன் என்று உதடு பிதுக்கிச் சிணுங்கினாள்.
அந்த நொடியில், பேத்தியின் நிராகரிப்பில் பெரும் வலி ஒன்றை உணர்ந்தார் யசோதா. அவரின் கவனிப்பில், பராமரிப்பில், அவரின் கையில் வளர்ந்திருக்க வேண்டியவள். இன்றைக்கு அவரையே யார் என்று அறியாது தள்ளி நிறுத்துகிறாள். துக்கமும் கோபமும் பெருக மகளை முறைத்தார்.
அம்மாவும் மகளும் தடையின்றிப் பேசிக்கொள்ளட்டும் என்று எண்ணி, அங்கிருந்து மகளோடு அகன்றான் நிகேதன்.
நிமிடங்கள் கடந்ததே தவிர இருவருமே மௌனம் கலைப்பதாக இல்லை. நிகேதன் தேனீருக்குத் தண்ணீரைக் கொதிக்க வைத்துவிட்டு ஆரணியைத் திரும்பிப் பார்த்தான். அவளும் அந்த நேரம் அவனைப் பார்க்க, ‘கதை’ என்றான் சைகை மொழியில்.
அவளும் திரும்ப, “அப்பாவ வந்து பாத்து மன்னிப்புக் கேட்டவளுக்கு அம்மாவையும் பாக்கவேணும் எண்டு நினைப்பு வரேல்ல என்ன?” என்றார் அவர் சூடான குரலில்.
அவளுக்கும் சட்டென்று கோபம் வந்தது. “நான் ஏன் உங்கள வந்து பாக்கவேணும்? பிள்ளையைக் குடுத்தத தவிர வேற என்ன செய்தனி(செய்தாய் நீ) எண்டு இவரிட்ட கேட்ட உங்களோட எனக்கு என்ன கதை?” என்று திருப்பிக் கேட்டாள் அவள்.
இப்படிக் கேட்பாள் என்று நிகேதன் எதிர்பார்க்கவில்லை. யசோதாவாவுக்குமே முகம் கருத்துப் போயிற்று.
“கலியாணம் எண்டு ஒண்டு நடந்தா குழந்தை குட்டி பிறக்கிறது எல்லாம் வழமை தானே. இல்லாம ஷோகேஸுக்க வச்சு வடிவு(அழகு) பாக்கவா ஒரு பொம்பிளைய கட்டுறது? என்னம்மா அது கதை பேச்சு? அவர் ஒரு ஆம்பிளை எல்லா. எவ்வளவு அவமானமா உணர்ந்து இருப்பார். யோசிக்கவே மாட்டிங்களா?” அவளின் நெடுநாள் கோபம் எந்த நாசுக்கும் இன்றி அப்படியே வெளியே வந்தது.
தலையில் அடித்துக்கொள்ளலாம் போலிருந்தது நிகேதனுக்கு. அதற்கு மேலும் அவளைப் பேசவிடாமல், “ஆரா!” என்று அழைத்தான். வந்தவளிடம், “உனக்கு நாவடக்கம் எண்டுறது வரவே வராதா ஆரா?” என்று அவருக்குக் கேட்காத குரலில் கடிந்தான். “அவாதான் என்னவோ யோசிக்காம கதைச்சா எண்டா நீயும் இப்பிடித்தான் தேவையில்லாம கதைப்பியா? ஒரு விசயத்த அமைதியா கடந்து போகவே தெரியாதா உனக்கு?”
அவளுக்கு ஒரு மாதிரி ஆகிப்போயிற்று. “இதைத்தானே அண்டைக்கு நீங்க என்னட்ட கேட்டீங்க?” என்று அவனையும் குற்றம் சாட்டினாள்.
“நான் உன்ன கேக்க இல்ல. உனக்குச் சொல்லிக் காட்டினான். அப்பிடி கேட்டதுக்கே நான் அவவோடயோ உன்னோடயோ சண்டை பிடிக்கேல்ல. அதைக் கடந்துதான் வந்தனான் எண்டுறதை உனக்கு விளங்கப் படுத்தினான். பதிலுக்குப் பதில் எண்டு போனா இப்ப நீயும் நானும் ஆளுக்கொரு திசையில நிக்கிறோமே அப்பிடித்தான் எல்லா உறவும் பிரிஞ்சு நிக்கும். பிரச்சனைகளைக் கொஞ்சம் நிதானமா அணுகப் பழகு ஆரா. பொறுமையா கையாளப் பார். நாங்க ஒண்டும் குறைஞ்சு போக மாட்டோம். எல்லாத்திலையும் அவசரமும் கோபமும் ஒண்டுக்கும் உதவாது. நீ இன்னும் சின்னப்பிள்ளை இல்ல!” என்றான் பொறுமையாக.
அவளுக்கு விழிகள் கலங்கிற்று. என்னவோ அவனின் கோபத்தை அவளால் தாங்கிக்கொள்ளவே முடிவதில்லை. “ப்ச்! என்னடி!” என்றபடி அவளின் விழிகளைத் துடைத்துவிட்டான். “நிறைய நேரம் அவாவை அங்க தனியா விட்டா சரியில்ல. பூவம்மாவ கொண்டுபோய் மாமிக்குப் பழக்கு. நான் தேத்தண்ணி ஊத்துறன்.” என்று அவளை மகளோடு அனுப்பி வைத்தான்.
ஆரணி ஒன்றும் கதைக்காமல் தாயின் அருகில் வந்து மகளோடு அமர்ந்தாள். எப்போதும் என்னையே வாயை மூடு என்கிறானே என்று இத்தனை நாட்களும் மனம் நொந்தவள் இன்று நான் பிரச்சனைகளைக் கையாளும் விதத்திலும் தவறு உண்டோ என்று சிந்தித்தாள்.
யசோதாவுக்கும் பேச்சு வர மறுத்தது. உண்மையில் அவர் அப்படியானவர் அல்ல. சீராட்டி வளர்த்த மகளைத் திருமண வீட்டில் வெகு சாதாரணமாகப் பார்த்த வலிதான் யோசிக்காமல் வார்த்தைகளை விட வைத்தது. விருட்டென்று அவன் எழுந்து போனதும்தான் தன் தவறையே உணர்ந்தார். ஆனாலும் ஒரு வீம்பு. நான் என்ன இல்லாததையா சொன்னேன் என்கிற பிடிவாதம். இன்றோ அவர் கற்பித்துக்கொண்ட நியாயங்கள் எல்லாம் எங்கோ ஓடிவிட அங்கே இருக்க முடியவில்லை.
“பேத்தியை பாக்கத்தான் வந்தனான். பாத்திட்டன் வாறன்.” என்று எழுந்துகொள்ள, அதற்குமேல் முடியாமல் ஆரணியின் வாய்ப்பூட்டும் கழன்று போயிற்று.
“அம்மா! சொறி அம்மா. இருங்க போகாதீங்க. நான் யோசிக்காம கேட்டுட்டன். விடுங்க. உங்கட மகள் தானே.” என்று அவரின் கையைப் பற்றி இழுத்து மீண்டும் இருத்தினாள்.
“கதைக்காத நீ! பாசத்தில பேத்திய பாக்க ஓடி வந்தா சண்டைக்கு வாறாய் என்ன?” என்று கையை இழுத்துக்கொண்டார் அவர்.
“அதுதான் விடுங்க எண்டு சொல்லுறன் தானே. இந்தாங்க பிடிங்க உங்கட பேத்தியை!”
அப்படி இப்படி என்று முறுக்கிக்கொண்டாலும் அதன் பிறகு அன்னையும் மகளும் ஒற்றுமையாகிப் போயினர். அதுவரை இழுத்துப் பிடித்து வைத்திருந்த மூச்சை அப்போதுதான் வெளியேற்றினான் நிகேதன். மீண்டும் ஆரணியை அழைத்து, ஊற்றி வைத்திருந்த தேநீரையும், தட்டில் போட்டு வைத்திருந்த பிஸ்கட்டுகளையும் கொடுத்து அனுப்பினான்.
போன வேகத்திலேயே அவற்றோடு ஆரணி வந்ததில், அதையெல்லாம் செய்தது அவன்தான் என்று புரிந்துகொண்டார் யசோதா. மகளை அவன் நன்றாகத்தான் பார்த்துக்கொள்கிறான் என்பதை அந்த ஒற்றைச் செய்கையில் பிடித்தார்.
அவனும் விறாந்தைக்கு வந்து, “நீங்க இருந்து சாப்பிட்டு போங்கோ மாமி. எனக்கு வேலை இருக்கு. நான் வெளிக்கிடப்போறன்.” என்றவன் ஆரணியிடம் திரும்பி, “ஏதாவது சமைக்க வாங்கிக்கொண்டு வரவா?” என்று கேட்டான்.
“இல்ல நீங்க போங்கோ. பார்வதி அம்மா வாறன் எண்டவா. அவா ஸ்கூட்டில போய் வாங்கிக்கொண்டு வருவா.” என்று அவனை அனுப்பிவைத்தாள் அவள்.
இப்போதும், தன் பேச்சை நினைவில் வைத்து முகம் திருப்பாமல், மாமி என்று அழைத்து மரியாதையாகப் பேசியது அவருக்குக் குற்ற உணர்ச்சியை உண்டாக்கிய அதே நேரம் அவன் மீதான நல்லபிப்பிராயத்தையும் உண்டாக்கிற்று.
அதன் பிறகு, வீடு முழுவதையும் தன் லேசர் விழிகளால் ஆராய்ந்து திருப்திகொண்டார் யசோதா. மகளின் தாலிக்கொடியைக் கண்டு, ‘பாவாயில்லை. பொலிவாத்தான் செய்து கொடுத்திருக்கிறான்’ என்று தனக்குள் மெச்சிக்கொண்டார். அவரே காரில் சென்று வாங்கிக்கொண்டு வந்த கோழி இறைச்சியை ஆரணி சமைக்கும் பாங்கைக் கண்டு ரசித்தார். தாயாக மகளை அவள் கவனமாகப் பார்த்துக்கொள்வதைப் பார்த்தபோது மனதுக்கு நிறைவாக இருந்தது. வெகு சுவையாக அவள் சமைத்துத் தந்த உணவை வயிறு மட்டுமல்ல மனமும் நிறையச் சாப்பிட்டார். கூடவே சத்தியநாதனுக்கும் கட்டி எடுத்துக்கொண்டார். ஒரு வழியாக அவர் புறப்பட்டபோது பகல்பொழுது முடிந்து போயிருந்தது.