அவள் ஆரணி 5

 

நிகேதனின் அறையை ஆரணிக்கு மிக மிகப் பிடித்தது. ஒரு கட்டில். அருகே மேசை நாற்காலி. மேசைக்கு மேலே ஒரு செல்ஃப் அமைத்துப் புத்தகங்களை அடுக்கி இருந்தான். பக்கத்திலேயே ஒரு கப்போர்ட். எல்லாமே பழைய பொருட்கள். அவற்றையெல்லாம் வெகு சுத்தமாக வைத்திருந்தான்.

“இந்தளவு துப்பரவா சத்தியமா நான் வச்சிருக்க மாட்டன்!” அவனுடைய அறையிலிருந்து தோட்டத்துக்குச் செல்லக்கூடிய வகையில் அமைந்திருந்த கதவு பார்த்ததும் ஈர்த்தது. “பழைய வீடா இருக்கு. பிறகு எப்பிடியடா டெரஸ்க்கு போறமாதிரி கதவு வச்சிருக்கு” என்று கேட்டுக்கொண்டே கதவைத் திறந்துகொண்டு வெளியே சென்றாள்.

“ஆரம்பகாலம் அம்மாவே இந்த அறையை மட்டும்தான் கட்டி வாழ்ந்து இருக்கீனம். பிறகு, பின் பக்கத்தால வீட்டப் பெருசாக்கினதுல இந்தக் கதவ அப்படியே விட்டாச்சு.” பதில் வந்ததே ஒழிய அவன் வரவில்லை.

திரும்பிப் பார்த்தாள். கட்டிலில் அமர்ந்து தலையைக் கைகளால் தாங்கியிருந்தான். அப்போதுதான் இவ்வளவு நேரமாக அவள் மட்டுமே பேசிக்கொண்டு இருந்திருக்கிறாள் என்பது புரிந்தது. திரும்பி வந்து அவனருகில் அமர்ந்தாள்.

“என்னடா?”

“அம்மா ஆரா! என்னோட கதைக்கவே இல்ல.”

“பின்ன, நீ செய்த வேலைக்கு உனக்கு ஆராத்தி எடுத்து வரவேற்பாவோ? வேலைக்குப்போய் மகன் குடும்பத்தைக் காப்பாத்துவான் எண்டு நம்பிக்கொண்டு இருக்க, நீ பொறுப்பில்லாம ஒருத்திய கூட்டிக்கொண்டு வந்து நிக்கிறாய். அவவுக்கு எப்பிடி இருக்கும் சொல்லு?”

என்னவோ அவன் வற்புறுத்தி அவளைக் கூட்டிக்கொண்டு வந்ததுபோல் சொல்லவும் அவளை முறைத்தான் அவன். குறும்பில் பளபளத்த கண்ணைச் சிமிட்டினாள் அவள். “கொஞ்சமாவது பொறுப்பா நடக்கப் பழகு நிக்ஸ்!”

அவனுடைய முறைப்பு அப்போதும் மாறவில்லை.

“ஓகே ஓகே! பகிடி இல்ல. நாங்க செய்தது பெரிய பிழைதானே. யோசிச்சுப்பார். எதிர்பாத்தே இருக்க மாட்டா. இன்னும் அதிர்ச்சியே போயிருக்காது. நீ ஒருக்கா போய்ச் சமாதானமா கதைச்சிப்போட்டு வா. நானும் வந்தா கோபம் கூடுமே தவிரக் குறையாது! போ!” என்று அவனை அனுப்பிவைத்தாள் ஆரணி.

மனம் விட்டே போயிற்று அமராவதி அம்மாவுக்கு. சற்றும் எதிர்பாராத நேரத்தில் பிடரியில் படார் என்று ஓங்கி அடித்தால் எப்படி இருக்கும்? மகனை மணக்கோலத்தில் கண்டபோது அப்படித்தான் இருந்தது. நல்லதொரு வேலைக்குப் போவான், கைநிறைய உழைப்பான், நிம்மதியாக வாழலாம், கயலினிக்கும் ஒரு நல்லவனாகப் பார்த்துக் கட்டிக் கொடுக்கலாம் என்று அவர் கட்டிவைத்த கோட்டைகள் அத்தனையும் கண்முன்னே இடிந்துவிழக் கண்டார். நடந்துவிட்ட நிஜத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் நெஞ்சு பெரும் குரலெடுத்துக் கதறிக்கொண்டிருந்தது. சொல்லி அழவும் முடியாமல் தனக்குள்ளேயே அரற்றிக்கொண்டு இருந்தவரின் ஓய்ந்த தோற்றம் நிகேதனை வருத்தியது.

அவர்களின் அறை வாசலில் ஒருகணம் தேங்கி நின்றான். மனதில் குற்ற உணர்ச்சி ஓங்கியது. சகாதேவன் தலையெடுக்கும் வரை ஆணுக்குச் சமனாய் நின்று குடும்பத்தை தாங்கிய அன்னையின் கண்ணீர் அவனைச் சுட்டது. கூடவே அழுதழுது சிவந்த முகத்துடன் அன்னையின் அருகில் சுருண்டிருந்தாள் கயலினி. என்ன இருந்தாலும், அவளும் வயதுக்கு வந்த இளம் பெண். அவள் இருக்கையில் மனைவியோடு வந்து நிற்கிறான்.

ஆனால் அவனுக்கும் வேறு ஏது வழி?

சூழ்நிலைகளும் சந்தர்ப்பங்களும் எதிர்பாராமல் மனிதரைக் கைது செய்துவிடுகிறது. வீட்டை விட்டு வெளியேறி அவனை நம்பி வந்த ஆரணியைப் புறக்கணித்திருந்தால் அவளுக்கு அவன் சுயநலவாதியாகவும் ஏமாற்றுக்காரனாகவும் மாறியிருப்பான். அவளை ஏற்றுத் திருமணம் செய்த காரணத்தினால் பெற்றவருக்குப் பொறுப்பில்லாதவனாகவும் நம்பிக்கைத் துரோகியாகவும் மாறி நிற்கிறான். அன்று எப்படியும் குற்றவாளிக் கூண்டில் நின்றே ஆகவேண்டும் என்று அவனுக்கு எழுதியிருந்திருக்கிறது போலும்!

தன் பக்க நியாயத்தைச் சொல்ல எண்ணி, “அம்மா!” என்று மெல்ல அழைத்தான்.

அவனைப் பார்த்துவிட்டு வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக்கொண்டார் அமராவதி.

“அம்மா, நான் சொல்லுறதைக் கொஞ்சம் கேளுங்களன்.” பரிதவிப்புடன் அவரை நோக்கிக் காலடி எடுத்து வைத்தான்.

அழுகையும் ஆத்திரமும் பொங்கச் சட்டென்று கையை நீட்டித் தடுத்தார் அமராவதி.

“நீ சொல்லப்போற எந்தச் சமாதானமாவது உனக்குக் கல்யாணம் நடந்திட்டுது எண்டுறதை மாத்துமா?”

குற்ற உணர்ச்சியுடன் அவனது தலை இல்லை என்று ஆடியது.

“அப்ப எதுவும் சொல்லாத! எனக்கு எதுவும் தெரிய வேண்டாம். அம்மாவில பாசம் இருந்திருந்தா மதிப்பு இருந்திருந்தா இப்பிடி ஒரு காரியத்தைச் செய்திருப்பியா? நாதியில்லாத பொம்பிளை. நான் என்ன செய்தாலும் வாய மூடிக்கொண்டு இருக்கத்தானே வேணும் எண்டுற எண்ணம் தானே எல்லாத்தையும் செய்ய வச்சது. அது உண்மை தானே. கட்டின புருசன் இடைல விட்டுட்டுப் போய்ட்டார். எனக்கும் வேற போக்கிடம் இல்லை. ஒரு பெட்டச்சியையும் பெத்து வச்சிருக்கிறன். அவளைக் கரையேத்தாம நான் கரை ஒதுங்க ஏலாதே. அதால நீ என்ன செய்தாலும் பொறுத்துத்தான் போகவேண்டி இருக்கு. ஆனா ஒண்டு! இனி என்ன செய்வியோ தெரியாது. குடும்பச் செலவு முழுக்கப் பாக்க வேண்டியது நீதான். மனுசி வந்திட்டாள் எண்டு உன்ர வாழ்க்கையை நீ பாக்கிறதா இருந்தா இப்பவே சொல்லு, நானும் இவளும் எதையாவது குடிச்சு செத்து துளையிறோம்!” ஆத்திரம் கொண்டு பொறிந்தவரின் பேச்சில் ஆடிப்போனான் நிகேதன்.

“சும்மா விசர் கதை கதைக்காதீங்க அம்மா! கல்யாணம் கட்டிப்போட்டன் தான். அதுக்காக உங்களைப் பாக்கமாட்டன் எண்டு அர்த்தமா? கயலுக்கு நல்ல இடத்தில செய்துவச்சு உங்களையும் பாக்கிறது என்ர பொறுப்பு. என்ன நம்புங்க அம்மா!”

அவர் உதட்டினில் விரக்திப் புன்னகை படர்ந்தது. “இனியும் உன்ன நம்புறதா? நம்பி ஏமாந்த வரைக்கும் போதும். ஆளை விடு!” என்றார் அவன் முகம் பாராமல்.

நிகேதனுக்கு வலித்தது. ஒரு திருமணம் அவனைப்பற்றிய அத்தனை கணிப்பீடுகளையும் மாற்றிப்போடுமா என்ன? அறைக்கு வந்தவனின் முகம் இறுக்கிப் போயிருந்தது. ஆரணிக்கும் நடந்தவை கேட்காமல் இல்லை. பக்கத்து அறைதானே. கவலையோடு நிகேதனைப் பார்த்தாள். அதுவரை நேரமும் தன் பக்கம் நியாயமிருப்பதாக ஆழமாக நம்பிக்கொண்டிருந்தாள். இப்போதும் அதில் மாற்றமில்லை என்றாலும் தன்னால் தாயின் முன்னே அவன் வார்த்தைகளற்று நின்றுவிட்டதைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை

“எல்லாம் என்னாலதான் என்னடா?”

“உனக்கு விசர்!” என்றான் உடனேயே. “ரெண்டுபேருமே சேர்ந்துதான் எல்லா முடிவும் எடுத்தம். இப்ப என்ன உன்னால எண்டு சொல்லுறாய்? எதையும் பிரிச்சுப் பாக்காத.”

“ம்ம். ஆனா, நீயும் மாமிய கோவிக்காத. அவாவில பிழை இல்ல. இத சரியாக்கிற ஒரே விசயம் நாங்க முன்னேறிக்காட்டுறது நிக்ஸ். முன்னேற வேணும். நல்லா வரவேணும். உன்ர தேர்வும் என்ர தேர்வும் பிழை இல்லை எண்டு ரெண்டு வீட்டுக்கும் காட்டவேணும். அதுவரைக்கும் இதையெல்லாம் பொறுத்துத்தான் போகவேணும்.”

அவன் மனதிலும் அந்த உறுதி இருக்கிறதுதான். ஆனால் நிஜம் மிரட்டியது. என்ன செய்யப் போகிறான்? இதுவரை காலமும் அவன் தனிப்பெடியன். அம்மாவிடம் காசு வாங்கலாம், உழைப்பு என்று ஒன்றில்லாமல் வேலை தேடலாம். வீட்டுக்கு வந்தால் ஏதோ ஒன்றைச் சாப்பிட அம்மா தருவார். இனி அப்படி அல்ல. ஒருத்திக்குக் கணவன். இனியும் காசு கேட்டு அம்மாவிடம் நிற்கமுடியாது. அது அவளுக்கும் கேவலம். நாளாந்த சாப்பாட்டுச் செலவையும் அவன்தான் பார்க்க வேண்டும்.

“நிக்ஸ்..”

“ம்ம்..” சிந்தனை கலைந்து அவளைப் பார்க்க, அவன் மார்புக்குள் முகத்தைப் புதைத்தபடி “பசிக்குதடா?” என்றாள் வயிற்றைப் பிடித்தபடி.

“முதலே சொல்லுறதுக்கு என்னடி?” என்று கடிந்துவிட்டு, “ஒரு நிமிசம் பொறு. இந்த வேட்டிய கழட்டிப்போட்டு வாறன்!” என்றவனுக்கு, வீட்டுடைக்கு அவள் எங்கே போவாள் என்கிற யோசனை அப்போதுதான் வந்தது. “பொறு. கயலிட்ட வாங்கிக்கொண்டு வாறன்.” என்று நடந்தான்.

“இல்ல வேண்டாம் விடு. நான் இதையே போடுறன்.” என்று, காலையில் போட்டிருந்த முக்கால் ஜீன்ஸ் சட்டைக்கு மாறிக்கொண்டாள்.

அதுவரை அவள்தான் தன்னுடையவைகளைப் பலருக்குக் கொடுத்திருக்கிறாள். இன்னொருவரின் உடைகளை அணிந்ததில்லை. இனிவரும் காலங்களில் அதெல்லாம் சாத்தியமாகாதுதான் என்றாலும் மனம் சம்மதிக்க மறுத்தது. கயலினி சற்றேனும் முகம் கொடுத்திருந்தாலாவது சம்மதித்திருப்பாளோ தெரியாது. அவளும் அமராவதிக்குச் சமனாக முகத்தைத் திருப்பிக்கொண்டாளே. அதில் முடிந்தவரை சமாளிக்க நினைத்தாள்.

பாத்திரங்களில் இருந்த உணவுகள் அந்த வீட்டின் நிலையை இன்னுமே சொல்லிற்று. அதைவிட அவன் தனக்கு என்று போட்டுக்கொண்டதைப் பார்த்தபோது ஆரணியின் நெஞ்சு பிசைந்தது. அதைவிட அவள் அதிகமாகச் சாப்பிடுவாள். அளவாகச் சாப்பிடவேண்டும் என்கிற எண்ணம் முதன்முறையாக அவளுக்குள் உதித்தது.

உணவை முடித்துக்கொண்ட பிறகு இருவருமே கட்டிலில் அமர்ந்துகொண்டனர். தன் தோளில் சாய்ந்து இருந்தவளின் விரல்களை வருடியபடி இருந்தாலும் நிகேதன் சிந்தனையின் வசமிருக்க, “வேலையைப் பற்றி யோசிக்கிறியா?” என்று கேட்டாள் ஆரணி.

“ம்! நாளைக்கே ஒரு வேலை வேணும் ஆரா. இல்லாம எதுவுமே சரியா வராது.”

அவளுக்கும் புரிந்தது. ஆனால், எப்படிக் கிடைக்கும்? என்ன செய்யப்போகிறான்? இதயத்தை மெல்லிய பயம் கவ்விப் பிடித்தது. அவளைப்பற்றிய சிந்தனை அவளுக்குத் துளியும் இல்லை. அவனைத்தான் நடுக்கடலில் பிடித்துத் தள்ளி விட்டுவிட்டாள். நீந்தத் தெரிவது மட்டுமல்ல கரையைத் தொடவும் வேண்டும்.

காதல் கல்யாணத்தில் முடிவதல்ல. அங்கேதான் தொடங்குகிறது என்பதை காலம் மெதுவாகச் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தது.

“ஒரு வேலை கிடைச்சு எல்லாம் நிதானத்துக்கு வாற வரைக்கும் வேற ஒண்டும் வேண்டாம் ஆரா.” என்றான் அவன் அவள் விழிகளைப் பார்த்து.

முதலில் விளங்காமல் குழப்பத்தோடு நிமிர்ந்தவளின் முகத்தில் அவனது விழிகள் சொன்ன செய்தியில் சிரிப்புக் குமிழியிட்டது. “எனக்கும் ஒண்டும் அவசரம் இல்ல!”

“அவசரம் தானே இல்ல. ஆசை இருக்குதானே?” என்றான் கண்ணடித்து.

சிரிப்பை மறைக்க முடியவில்லை அவளால். “போடா புருசா!” அவன் கையில் ஒன்று போட்டுவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

“போடி புருசி!” அவன் கைகள் அவளை வளைத்தது.

“எங்கயடா போறது? போறதுக்கா தலைகீழா நிண்டு உன்ன தாலி கட்ட வச்சனான்? சாகிற வரைக்கும் வாழ. விளங்கினதா?” இருவரின் உணர்வுகளும் வேறு பாதையை நோக்கி நகர்வதை உணர்ந்து வம்புக்கு அவனோடு மல்லுக்கட்டினாள்.

“அப்பிடியே வாயில ஒண்டு போட்டன் எண்டா தெரியும். என்னடி கத பேச்சு இதெல்லாம்? கலியாணமே இண்டைக்குத்தான் நடந்து இருக்கு.”

“பகிடிக்குத்தான் சொன்னனான் நிக்ஸ். ஆனா சாவு மட்டும்தான் என்னையும் உன்னையும் பிரிக்கும். வேற எதுக்கும் அந்தச் சக்தி இல்ல.” சாதாரணமாகச் சொல்ல ஆரம்பித்தவள் தீவிரமாக முடித்தாள்.

நிகேதன் அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான். “அந்தச் சாவுக்கும் நம்மைத் தனித்தனியா கொண்டுபோற தைரியம் வராது பார்!” என்றான் அவனும்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock