அவள் ஆரணி 51 – 1

மூன்று மாடிகள் கொண்ட தனிவீடு வாங்கி இருந்தார் சகாதேவன். சமையலறை, விறாந்தை, விருந்தினர் அறை, பாத்ரூம் என்று கீழே இருந்தது. மேலே மூன்று அறைகளும் அதற்கு மேலே இரண்டு அறைகளும் மொட்டை மாடியுமாக வீடு மிக நேர்த்தியாகவே இருந்தது.

அமராவதி அம்மாவுக்கு மனமெல்லாம் மிகுந்த பூரிப்பு. காலம் முழுக்க அவர்களுக்காக உழைத்த மகன், இன்றைக்குத் தானும் தனக்கென்று ஒன்றைத் தேடிக்கொண்டதில் வெகு சந்தோசம். அன்று, நிகேதன் சொன்னதுபோல அவரின் மக்கள் மூவரும் நன்றாக இருப்பதைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தார்.

குடிபூரலுக்கு என்று நிறைய நாட்களுக்குப் பிறகு சேலை அணிந்திருந்தாள், ஆரணி. அளவான நகைகளோடு, கழுத்தில் தாலிக்கொடியும் மின்ன, பூவினியையும் வைத்துக்கொண்டு நின்ற அவளின் தோற்றம் நிகேதனின் நெஞ்சைக் களவாடியது.

அதே நேரம், நன்றாக மெலிந்துபோயிருக்கிறாள் என்பதும் சேலையில்தான் வெளிப்படையாகத் தெரிந்தது. அவர்களுக்குள் நடந்த பிரச்சனையிலும், அதிகப்படியான வேலையிலும் அவளைக் கவனிக்காமல் விட்டுவிட்டோமோ என்று எண்ணிக் கவலை கொண்டான். அவனுடைய மகள் வேறு இப்போதெல்லாம் அவளை இருக்க நிற்க விடுவதில்லையே. “பூவம்மாவ என்னட்ட தா! நான் வச்சிருக்கிறன்.” என்று தான் வாங்கிக்கொண்டான்.

ஆரணியும் கொடுத்துவிட்டு மாலினிக்கு உதவியாக நின்றுகொண்டாள்.

ஒருவழியாகக் கோயிலில் இருந்து சுவாமிப்படம் கொண்டுவரப்பட்டு, பூசையும் நல்லபடியாக முடிந்து, பால் காய்ச்சி என்று குடிபூரலும் எந்தக் குறையும் இல்லாமல் மிகச் சிறப்பாகவே நடந்து முடிந்தது.

ஹோட்டலில் இருந்து தருவித்த மரக்கறி(காய்கறி) சாப்பாடும் முடிந்ததும் எல்லோருக்குமே கண்ணைச் சுழற்றியது. களைப்பும் அயர்ச்சியுமாய் அவரவர் இருந்த இடத்திலேயே முடங்கினர். மாலினிக்கு வீட்டை ஒதுக்க உதவினாள் ஆரணி.

என்ன தோன்றியதோ செய்துகொண்டிருந்த கைவேலையை நிறுத்திவிட்டு, “என்ன ஆரணி, ஏதாவது விசேசமா?” என்று திடீரென்று கேட்டார், மாலினி.

பாத்திரங்களை ஒதுக்கிக்கொண்டு இருந்த ஆரணி அப்படியே நின்றாள். எல்லோரின் பார்வையும் அவளில் குவிந்தது. பதில் சொல்ல முடியாமல் அவள் தடுமாற, நிகேதனின் பார்வை கூர்மையாயிற்று.

“இவ்வளவு நேரமும் வேலையில கவனிக்க இல்ல. நல்லா மெலிஞ்சு இருக்கிறீர். ஆனாலும் முகத்தில ஒரு பளபளப்பு. கழுத்து கருத்து இருக்கு. எனக்கு என்னவோ ஏதோ விசேசம் போலத்தான் தெரியுது. உண்மையா?” என்றார் அவர் சிரித்துக்கொண்டு.

“அது.. அக்கா இப்பதான் மூண்டு மாதம்.”

மாலினி விளையாட்டுக்குக் கேட்கிறார் என்றுதான் எல்லோரும் நினைத்தனர். அதற்கு மாறாக ஆரணியும் மூன்று மாதம் எனவும் அமராவதி உட்பட எல்லோருமே அதிர்ந்து போயினர்.

“இந்த நிலமையிலயா கொழும்புக்கு வெளிக்கிட்டு வாறது? கொஞ்சமாவது யோசிக்கிறது இல்லையே. நடக்கக் கூடாது ஏதும் நடந்தா என்ன செய்வீங்கள்?” அமராவதிக்கு உண்மையிலேயே பதறியது. பெரும் கோபம் வந்தது. சமீப காலத்தில் கற்றுக்கொண்ட பாடமும், மாலினியின் பெற்றோரும் இருந்ததிலும் அதற்குமேல் பேசாமல் வாயை இறுக்கி மூடிக்கொண்டு அமர்ந்திருந்தார்.

நிகேதனால் அசையக்கூட முடியவில்லை. நம்ப முடியாத அதிர்வில் சிலையாகிப்போனான். ஒரு வார்த்தை… ஒரு வார்த்தை கூடச் சொல்லவே இல்லையே? அவ்வளவு கோபமா? அந்தளவில் வெறுப்பா? நேற்றைய நாள் இனி எல்லாம் சரியாகிவிடும் என்கிற நம்பிக்கையைத் தந்ததே. வீட்டுக்குப்போய் மனம்விட்டுப் பேச வேண்டும், மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வேறு எண்ணியிருந்தானே. எல்லாமே பொய்யா?

“என்னடா? இதையெல்லாமா சொல்லாம இருப்பாய்? முதல், இப்பிடி எண்டு தெரிஞ்ச பிறகு என்னத்துக்கு அவளையும் கூட்டிக்கொண்டு வந்தனீ?” என்றார் சகாதேவன்.

நிகேதனுக்குப் பேச்சே வரவில்லை. மூன்று மாதங்கள். முழு மூன்று மாதங்கள் பிள்ளை உருவானதைக்கூடச் சொல்ல முடியாத அளவுக்கா அவன் தாழ்ந்து போனான். நெஞ்சின் கசப்பை நெஞ்சுக்குள்ளேயே போட்டு அடைத்தான். அவமானங்களும் காயங்களும் அவனுக்கென்ன புதிதா? அல்லது எல்லாவற்றையும் மென்று முழுங்குவதுதான் புதிதா?

“இதெல்லாம் மறைக்கிற விசயமா, அண்ணா? எல்லாருக்கும் முன்னால வச்சுச் சொல்லுவம் எண்டுதான் முதலே சொல்ல இல்ல. நாங்க சொல்ல முதல் அண்ணி கண்டு பிடிச்சிட்டா.”

தன்னைக் காட்டிக்கொடுக்காத அவனுடைய பொய் ஆரணியின் மனதை அறுத்தது. தவிப்புடன் அவனைப் பார்த்தாள். அவன் அவளைப் பார்க்க மறுத்தான்.

“அவள் வரேல்ல எண்டுதான் சொன்னவள். நான்தான்… அண்ணா வீட்டு விசேசத்துக்கு நிக்கோணும் எண்டு கூட்டிக்கொண்டு வந்தனான்.” வரவில்லை என்று அவள் சொன்னது உண்மைதானே. அப்போதுகூடச் சொல்லவே இல்லையே. பூவினிக்கு எப்படிச் சொன்னாள். இருவருமாக அந்த நாளைக் கொண்டாடிய இனிமை இன்னுமே மறைந்துவிடவில்லையே. பயணம் செய்து குழந்தைக்கு ஏதும் நடந்தாலும் பரவாயில்லை அவனிடம் மட்டும் சொல்லிவிடக் கூடாது என்று நினைத்தாளா? நிகேதன் என்கிற மனிதன் அடிக்குமேல் அடிவாங்கி மரத்துப்போயிருந்தான்.

“சரி விடுங்கோ! எல்லாம் சந்தோசமான விசயம் தானே.” என்று சமாளித்தார் மாலினியின் அன்னை.

அவளை இன்றுதான் முதன் முதலாகப் பார்க்கிறார். ஆனால், அவளைப் பற்றிய எல்லாமும் மாலினியின் வாயிலாகச் சுடச்சுட தெரியும். அதில், இன்னதுதான் என்று சொல்லத் தெரியாத பிடித்தம் அவருக்கு அவள்மேல் உண்டாகியிருந்தது. இங்கு வந்தும் கயலினியைப் போல் பிள்ளையை மட்டுமே தூக்கிக்கொண்டு இருக்காமல், கூட நின்று உதவி செய்தவளை இன்னுமே பிடித்துப் போயிருந்தது. அதில், சூழ்நிலையை இலாவகமாகச் சமாளித்தார்.

அதுதானே என்று எல்லோருக்குமே தோன்ற, சகாதேவன், ராகவன், மாலினியின் தந்தை என்று எல்லோருமே கைகொடுத்து அவனுக்கு வாழ்த்தினர். ஆரணியையும் வாழ்த்தினார்கள். “இந்த முறை நாங்க லேட் போல இருக்கே.” என்றான் ராகவன் சிரிப்புடன்.

“பாத்தீங்களா, யாருமே கண்டு பிடிக்க இல்ல. ஆனா நான் கண்டு பிடிச்சிட்டேன்.” என்ற மாலினியும் வாழ்த்தினார்.

பயணம் செய்ததில் அவளுக்கு உடம்புக்கு ஏதும் செய்கிறதா என்று விசாரித்தார் மாலினியின் அன்னை. விழிகள் தவிப்புடன் நிகேதனிடம் சென்று மீள, இல்லை என்று தலையைச் சிரமப்பட்டு அசைத்தாள், ஆரணி.

“எண்டாலும் கொஞ்ச நேரம் போய்ப் படுத்து எழும்புங்கோமா. திரும்பவும் பயணம் செய்யவேணும் எல்லோ.” என்று அவளை ஓய்வெடுக்க அனுப்பிவைத்தார்.

உறக்கம் தேவையோ இல்லையோ அவளுக்குத் தனிமை தேவைப்பட்டது. மூன்று மாதம் என்று அவள் சொன்னதும், நம்ப முடியாத அதிர்வுடன் தன்னை வெறித்தவனின் முகம்தான் கண்ணுக்குள்ளேயே நின்று வதைத்தது. எதையும் விளக்கவோ பேசவோ முடியாத நிலையில் நிற்கிறாள்.

இரவு மீண்டும் அவர்கள் புறப்பட்டபோது அவளின் இருக்கையின் அருகில் கிண்டர் சீட் ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. பார்த்தவளுக்கு விழிகள் பனித்துப் போயிற்று. அவள் மீண்டும் தாய்மை அடைந்திருக்கிறாள் என்று அறிந்த நொடியிலிருந்து பூவினையைத் தூக்க கூட அவன் விடவில்லை. அவனேதான் கொண்டு திரிந்தான். ஆனால், அவளின் முகம் பார்த்துக் கதைக்கவேயில்லை.

இந்தக் கரிசனையையும் காதலையும் என்ன செய்து மீட்கப் போகிறாள்? செய்வதறியாது பரிதவிப்புடன் மகளருகில் வந்து அமர்ந்தாள், ஆரணி.

“கொஞ்ச நேரம் நான் ஓடவா? பின்னுக்குப்போய் நீங்க கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்கோவன்.” என்று, இந்தமுறை ராகவன் நிகேதனிடம் கேட்டான். ஆனால், நிகேதன் கொடுக்கவில்லை. முழுக்க முழுக்க அவனேதான் ஓடினான். தன்னை வருத்தித் தன் மனதின் அழுத்தத்தினைக் குறைக்க முயன்றான்.

வீட்டுக்கு வந்தபிறகாவது அவன் ஏதும் கேட்பான், கோபப்படுவான் என்று கலக்கத்துடன் காத்திருந்தாள், ஆரணி. அவனோ குளித்துவிட்டு வந்து பேசாமல் கட்டிலில் போய் மகளருகில் படுத்துக்கொண்டான். ஆரணிக்கு அவனுடைய இந்த அமைதியைக் கண்டு மிகுந்த அதிர்ச்சி. இப்படித்தானா அவன்? எல்லாவற்றையும் தனக்குள்ளேயே போட்டுப் புதைத்துக்கொள்வானா? அவளின் நிக்கியைப் பற்றி அவளுக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்திருந்தாளே. அப்படி இல்லையோ?

இல்லை. அப்படி இல்லை. மற்றவர்களிடம் எப்படியோ அவளிடம் அவன் திறந்த புத்தகமாகத்தான் இருந்திருக்கிறான். பல்கலையில் படித்த நாட்களில் கூட, மாலினியைப் பற்றி அவளிடம் மனம் திறந்து பகிர்ந்திருக்கிறான். சில நேரங்களில் மிகுந்த அவமானமாக உணர்ந்ததைக்கூட சொல்லியிருக்கிறான். படித்து முடிக்கிறவரைக்கும் எல்லாவற்றையும் பொறுத்துத்தான் போக வேண்டும் என்று மிகுந்த மனக்கவலையோடு சொல்லியிருக்கிறான்.

திருமணமான பிறகும், அம்மாவைப் பற்றித் தங்கையைப் பற்றித் தன் எதிர்காலத் திட்டங்கள் குறித்து என்று அனைத்தையும் அவளிடம் பகிர்ந்துதான் இருக்கிறான். அப்படி இருந்தவன் எப்போதிலிருந்து இப்படி மாறிப்போனான்?

சரியோ பிழையோ மனதில் இருப்பதைக் கொட்டுவதற்கு ஒருவர் இல்லாத நிலை எவ்வளவு பெரிய கொடுமை? அதை நெஞ்சுக்குள்ளேயே போட்டு அடைப்பது எவ்வளவு பெரிய துன்பம்.

உறங்கிவிட்டவனை எழுப்பிப் பேசவும் முடியவில்லை. ஒரு பக்கம் தயக்கமென்றால், பகல் ஹயருக்கு அவன் போக வேண்டும் என்று தெரியும். அதில், அவன் உறக்கத்தைக் கெடுக்கவும் மனமில்லை.

சோபாவிலேயே சுருண்டு இருந்தவள் எப்போது எப்படி உறங்கினாள் என்று தெரியவில்லை. ஏதோ சத்தத்தில் விழிகளைத் திறந்தபோது, அவன் வெளியே செல்லத் தயாராகியிருந்தான். அவள் விழித்துவிட்டாள் என்றதும், “அறைக்க போய்ப்படு. பூவம்மா இன்னும் நித்திரை.” என்று முகம் பாராமல் சொல்லிவிட்டுப் போனான் அவன்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock