அடுத்தநாளும் வழமை போன்றே அவர்களுக்கு ஆரம்பித்தது. அவன் ஹயருக்கு தயாராகினான். அவள் அவனுக்கான சமையலில் ஈடுபட்டிருந்தாள். கவனம் மட்டும் நேற்றைய நாளுக்குப் பிறகு அவனிடம் ஏதும் மாற்றம் தெரிகிறதா என்பதிலேயே இருந்தது.
அப்படி, எதையுமே அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. முகம் நிர்மலமாக இருந்தது. எப்போதும்போல அவள் கொடுத்த உணவை உண்டான். தேநீரை அருந்தினான். கொழுவியில் தொங்கிக்கொண்டிருந்த வேனின் திறப்பை எடுத்துக்கொண்டான். “வேலை ஒண்டும் செய்யாத ஆரா. கவனமா இரு. நான் வாறன்.” என்றபடி புறப்பட்டான்.
போகிறவனையே பார்த்துக்கொண்டு நின்றாள் ஆரணி. நேற்று கிட்டத்தட்ட மனமுடைந்த நிலையில் இருந்தான். கட்டுப்பாட்டை இழந்து குமுறினான். அவளுக்கு மறைத்துக் கண்ணீர் உகுத்தான். இன்றோ அதன் சாயல் மருந்துக்கும் இல்லை. எப்படி இது சாத்தியம்? ‘குழந்தை கொடுத்ததைத் தவிர வேறு என்ன கிழித்தாய்’ என்று அன்னை கேட்டபோதுகூட அதைக் கடந்து வந்ததாகச் சொன்னானே. இப்படித்தானா? ஆரணியின் நெஞ்சுக்குள் பிசைந்தது.
அவன் வாசலைத் தொடுவது புறக்கண்ணில் தெரிய, “நிக்கி!” என்று வேகமாக அழைத்தாள். அவன் நின்று திரும்பி, கேள்வியாகப் பார்த்தான்.
மென் முறுவலுடன் தன் கைகளை விரித்தாள் ஆரணி. ஒருகணம் புருவங்களைச் சுருக்கியவன், முகத்தில் பூத்த சிரிப்புடன் அவளிடம் விரைந்து வந்து அவளின் கைகளுக்குள் அடங்கினான்.
அவனை இறுக்கி அணைத்துக்கொண்டு மார்பில் முகம் புதைத்தாள் ஆரணி. காரணமே இல்லாமல் கண்ணைக் கரித்துக்கொண்டு வந்தது. அவன் முதுகை வருடிக்கொடுத்தாள். அவன் மனதின் காயங்களை எல்லாம் ஆற்றுகிறவள் போன்று அவன் நெஞ்சினில் அழுத்தி அழுத்தி முத்தமிட்டாள்.
“உன்னட்ட சொல்லாம விட்டதுக்குச் சொறி நிக்கி.” என்றாள் தழுதழுத்த குரலில்.
“விடு! அதுக்குக் காரணமும் நான்தானே.” என்று அவளின் தலையை வருடிக்கொடுத்தான் அவன்.
அப்படிச் சொன்னவனை இருந்த நிலை மாறாது அண்ணாந்து பார்த்தாள் ஆரணி. அவனும் அவளைத்தான் சிறு முறுவலுடன் பார்த்துக்கொண்டிருந்தான். இந்த முறுவலின் பின்னே அவளுக்குக் கூடக் காட்ட விரும்பாத மெல்லிய சோகம் ஒன்று இழையோடுகிறதோ? ஊமைக் காயங்கள் ஒளிந்து கிடக்கிறதோ?
“வேலை ஒண்டும் செய்யாத. கவனமா இரு. பூவிய கொஞ்ச நாளைக்குத் தூக்காத. நேரத்துக்கே வரப்பாக்கிறன்.” என்றான் அவன். அதற்குப் பதில் சொல்லாமல் எம்பி அவன் தாடையில் தன் உதடுகளை ஒற்றியெடுத்தாள் ஆரணி.
அப்போதும் சிறு முறுவலுடன், “நான் வரட்டா? நேரமாகுது. நீ போய்ப் படு.” என்றுவிட்டுப் போகிறவனையே வேதனையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் ஆரணி.
அவன் தன்னை முத்தமிடவில்லை என்பது கருத்தில் பதிந்தது. அவள் அருகில் இருந்தாலே தன் கட்டுப்பாட்டை இழக்கிறவன் தான் ஆராவின் நிக்கி. அப்படியானால் இந்த நிக்கி?
நடந்தவற்றை எல்லாம் முடிந்தவையாக ஒதுக்கி வைத்துவிட்டு கடந்துவரத்தான் இருவருமே முயன்றனர். ஆனாலும் ஒரு இடைவெளி. ஏதோ ஒரு தடை. அதைத்தாண்ட இருவராலும் முடியவில்லை. மற்றவரின் மீதான நேசமும் பாசமும் அவர்களைக் கட்டி இழுத்தாலும் அவர்களின் மனதில் இருந்த காயம் எட்டியே நிறுத்தியது. அன்றில்களாக வாழ்ந்தவர்கள். வாழ வேண்டும் என்பதற்காக வாழ முடியாமல் தடுமாறினர்.
அன்று, கார்மெண்ட்ஸ் ஹயர் முடித்துவிட்டு வந்த நிகேதன், “ஏதும் ஹயர் வந்தா கூப்பிடு மச்சான். வீட்டுப்பக்கம் ஒருக்கா போயிட்டு வாறன்!” என்றபடி புறப்பட்டான்.
“சரியடா! ஆனா ஏன்? பூவியும் ஆரணியும் சுகமா இருக்கினம் தானே?” கொழும்புக்குப் போய்விட்டு வந்ததால் ஏதும் உடல்நலக் குறைவோ என்று எண்ணி அக்கறையோடு விசாரித்தான், சுகிர்தன்.
“அது…” என்று ஆரம்பித்தவனின் முகம் சட்டென்று சிவந்து போனது. கூடவே மறைக்க முடியாத மென்னகை ஒன்றும் உதட்டினில் படர்ந்தது. சுகிர்தனிடமிருந்து பார்வையை விலக்கியவனுக்கு சொல்ல நினைப்பதை எப்படிச் சொல்வது என்று தெரியாத தடுமாற்றம்.
நடப்பதை நம்பமாட்டாமல் விழிவிரித்துப் பார்த்தான் சுகிர்தன். “டேய் மச்சி, வெக்கப் படுறியாடா?” அவன் தாடையைப் பற்றித் திருப்பி, தன்னைப் பார்க்க வைத்தபடி கேலிக் குரலில் கேட்டான், சுகிர்தன்.
“விடுடா!” என்று அவன் கையைத் தட்டிவிட்டு, தலையைக் கோதிக்கொண்டு சிரித்தான் நிகேதன். அவனால் சுகிர்தனின் பார்வையைச் சந்திக்கவே முடியவில்லை.
“டேய்! என்னட்ட ஏன்டா வெக்கப் படுறாய்? நான் என்ன உன்ர ஆராவா? முதல் அப்பிடி என்னடா நடந்தது?”
பூவினிக்கு இன்னும் ஒரு வயது நிரம்பவில்லை. அதற்குள் அவன் மீண்டும் அப்பா. இதை எப்படிச் சொல்லுவான்?
“அது மச்சி… ஆரா இப்ப மூண்டு மாதம்.” உதட்டு முறுவலை மறைக்க முடியாமல் எங்கோ பார்த்துக்கொண்டு சொன்னான் நிகேதன்.
நொடி நேரம் புருவம் சுருக்கிய சுகிர்தனுக்கு நம்ப மாட்டாத வியப்பும் சிரிப்பும். “என்னத்துக்கு மச்சி மூண்டு மாதம்?” ஒன்றுமே தெரியாதவன் போன்று கேட்டவனின் குரலில் அப்பட்டமான நகைப்பிருந்தது.
“டேய்…”
“சொல்லடா? வருசத்தில 12 மாதம் இருக்கு. இதுல எந்த மூண்டு மாதம் ஆரணி?”
அவன் தோளிலேயே ஒன்று போட்டான் நிகேதன். “விளங்காத மாதிரி நடிக்காத! நானே, எப்படா இது நடந்தது எண்டு யோசிச்சுக்கொண்டு இருக்கிறன். பாவமடா அவள்.”
“அது எப்படியடா உனக்கே தெரியாம…” மேலே பேசமுடியாமல் சுகிர்தனுக்குச் சிரிப்பு வெடித்தது.
நிகேதனின் நிலையும் அதேதான். “டெய்லி லேட்டா போறதால சண்டைக்கு வருவாள். அதுல…” என்றவனை முந்திக்கொண்டு, “நீ சமாதானம் செய்றன் எண்டு சம்பவம் செய்திட்டாய் போல.” என்று சொல்லிமுடித்தான் சுகிர்தன்.
அதுவா அல்லது ஆறாவது திருமண நாளா என்று அவனுக்குச் சரியாகத் தெளிவில்லை. ஆனால், அன்றுதான் அவன் அவன் வசமிழந்து நின்ற நாள். அன்றிலிருந்து கணக்குப் பார்த்தபோதுதான் மாதமும் பொருந்தி வந்தது.
“எப்ப எண்டு கண்டு பிடிச்சிட்டாய் போல…” அவன் முகத்தையே பார்த்திருந்த சுகிர்தன் அப்போதும் ஓட்டினான்.
“டேய் போதுமடா! ஆகத்தான் ஓட்டாத! பூவம்மாவே இருக்க நிக்க விடமாட்டா. இதுல இன்னொரு பிள்ளை. எப்பிடி சமாளிக்கப் போறாளோ தெரியாது.” என்றான் கவலையோடு.
“எலக்சன் ஹயரும் இருக்கு நிகேதன்.” விளையாட்டை விட்டுவிட்டு நினைவூட்டினான் சுகிர்தன்.
அதற்கு ஒரு மாதத்துக்கு மேல் கொழும்பிலேயே தங்கவேண்டி வரும். அவனுக்கு இருக்கிற தேவைகளுக்கு அந்த ஹயரை தவறவிடவும் முடியாது. என்ன செய்யப் போகிறான் என்கிற மெய்யான கவலை சுகிர்தனையும் பற்றிக்கொண்டது.
நிகேதனுக்கும் அதுதான் சிந்தனை. அதைத் தாண்டியும் நிறைய ஓடிக்கொண்டிருந்தது. சுகிர்தனிடம் வேறு பேசாமல், “சரிடா நீ நில்லு. அவளை ஒருக்கா பாத்துக்கொண்டு ஓடிவாறன்.” என்றுவிட்டுப் புறப்பட்டான்.
இந்த நேரத்தில் அவன் வருவான் என்று தெரியாததால் அம்மாவும் மகளும் கட்டிலில் சுருண்டிருந்தனர். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த இருவரையும் பார்க்கப் பாவமாக இருந்தது. அவர்கள் விழித்துக்கொள்ளாத வண்ணம் இருவரின் தலையையும் வருடிக் கொடுத்தான். பின், மெதுவாகக் கதவைச் சாற்றிக்கொண்டு அங்கிருந்து வெளியேறி, சமையல் கட்டை ஆராய்ந்தான். பாத்திரங்கள் எல்லாம் கழுவித் துடைத்து, பளிச் என்று துப்பரவாக இருந்த சமையல்கட்டு பகல் சமையலுக்குத் தயார் என்றது. ஷர்ட்டை கழற்றி வைத்துவிட்டு வேகமாக வேலையில் இறங்கினான்.
சோறு, ஒரு குழம்பு, பால்கறி இவ்வளவுதான். கிட்டத்தட்ட சமையல் முடிகிற வேளையில் அவனைப் பின்னிருந்து கட்டிக்கொண்டாள் ஆரணி.
“நானே சமைச்சு இருப்பனே.” இன்னுமே உறக்கம் கலையாத குரலில் சொன்னாள் அவள்.