அவள் ஆரணி 53 – 1

அன்றைய ஹயர்களை முடித்துவிட்டு அவர்களின் வீட்டுக்கே சென்று சொல்லவேண்டும் என்று நிகேதன் எண்ணியிருக்க, சத்தியநாதனே அவனுக்கு அழைத்தார். தன்னை வந்து சந்திக்க முடியுமா என்று வினவினார்.

சம்மதித்துவிட்டு மாலை புறப்பட்டான், நிகேதன். இந்தமுறை அவன் சென்றபோது, “வாங்கோ தம்பி வாங்கோ!” என்று முகம் மலர வாசலுக்கே வந்து வரவேற்றார், யசோதா.

“பூவியும் ஆராவும் சுகமா இருக்கினமா? நான் வீடு தேடி வந்தும் இந்தப் பக்கம் வர இல்ல பாத்தீங்களா? அவளுக்கு அவ்வளவு திமிர்!” என்று, மருமகனிடமே மகளைப் பற்றிக் குறை சொன்னபடி, அவனுக்கு அருந்துவதற்குக் குளிர்பானம் கொண்டுவந்து கொடுத்தார். “மாமா மேலதான் நிக்கிறார். இப்ப வருவார். நீங்க குடிங்கோ.” என்றார் இன்முகத்தோடு.

அன்றைய வரவேற்புக்கும் இன்றைய வரவேற்புக்குமான வித்தியாசத்தில் அவன் மனமும் சற்றே சமன்பட்டது. அவருக்கு அவன் எதுவும் பேசவோ சொல்லவோ வேண்டிய அவசியம் இருக்கவில்லை போலும்.

“பூவிய பாத்திட்டு வந்ததில இருந்து ஒரே அவவின்ர நினைவாத்தான் இருக்கு. எங்க.. உங்கட மனுசி கொண்டுவந்து காட்டுறாள் இல்லையே.” என்று உரிமையோடு கோபப்பட்டார்.

அந்தப் பெண்மணி தன் பேத்தியின் அருகாமைக்காக மிகவுமே ஏங்குவது அவனுக்குப் புரிந்தது. அதில், பேசவந்த விடயம் குறித்துச் சற்றே தைரியம் வரப்பெற்றவனாக, “அதைப்பற்றியும் கதைக்கத்தான் வந்தனான் மாமி.” என்றான்.

“சொல்லுங்கோ. என்ன கதைக்க வேணும்?” என்று ஊக்கினார் அவர்.

சற்றுத் தயங்கிவிட்டு, “கொஞ்ச நாளைக்கு ஆரா பூவியோட வந்து இங்க உங்களோட இருக்கலாமா மாமி?” என்று வினவினான்.

அவரின் முகமெல்லாம் நொடியில் வெளிச்சமானது. “இது என்ன கேள்வி. நீங்க என்ன நினைக்கிறீங்களோ தெரியாது எண்டுதான் நானா கேக்க இல்ல. வந்து பாத்ததில இருந்து பேத்திதான் கண்ணுக்க நிக்கிறா. ஆரா.. ஆராவும் அண்டைக்கு இங்க இருந்து போனதில இருந்து இந்த வீடே பாழடைஞ்சு போச்சுது தம்பி. கொண்டுவந்து விடுங்கோ இனியாவது இந்த வீடு நிறையட்டும்.” என்றார் நெகிழ்ந்த குரலில்.

மெல்லிய குற்றவுணர்ச்சி தாக்க, “சொறி மாமி!” என்றான் அவன் மனதார.

“சேச்சே! என்ன இது? அதெல்லாம் ஒண்டும் இல்ல. விடுங்கோ.” என்று அவசரமாக மறுத்துவிட்டு, “ஆனா, ஆரா வருவாளா?” என்றார் மகளை அறிந்தவராக.

“உங்களுக்கு ஓம் தானே. நான் கூட்டிக்கொண்டு வாறன்.” என்று நம்பிக்கையளித்தான் அவன்.

“சந்தோசம் தம்பி. ஆனா.. திடீரெண்டு ஏன்?” என்றார் மெல்லிய குழப்பத்தோடு. கணவன் மனைவிக்குள் ஏதும் பிடுங்குப்பாடோ என்று ஓடியது அவருக்கு.

“அது மாமி, இனி எலக்சன் ஹயர் வருது. ஒரு மாதத்துக்கு மேல நான் கொழும்பிலேயே நிக்கவேண்டி வரும். அதோட..” என்று இழுத்தவன், சங்கடச் சிரிப்பு ஒன்றுடன், “பூவம்மாக்கு இன்னுமொரு தம்பியோ தங்கச்சியோ வரப்போகுது.” என்றான் அவர் விழிகளைப் பார்க்கச் சிரமப்பட்டபடி.

அதிர்ச்சியோடு பார்த்த யசோதா அவனுடைய முகச்சிவப்பில் அடக்கமாட்டாமல் நகைத்தார். அதேநேரம், அவனுடைய சங்கடமான நிலையை உணர்ந்து அதை முறுவலாக மாற்றியும் இருந்தார்.

“எவ்வளவு சந்தோசமான விசயத்த சொல்லி இருக்கிறீங்க. முதல் பிள்ளைக்குத்தான் வச்சுப் பாக்க எனக்குக் குடுத்து வைக்காம போயிட்டுது. இந்தப் பிள்ளைக்காவது நான் எல்லாம் செய்ய வேணும். அப்பதான் என்ர மனமும் ஆறும். நீங்க இண்டைக்கே கூட்டிக்கொண்டு வாங்கோ. குடும்பம் சேருற எல்லா நாளும் நல்ல நாள்தான்.” என்று ஆர்ப்பாட்டமாக அவர் சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே மாடியிலிருந்து இறங்கிவந்தார், சத்தியநாதன்.

இவனைக் கண்டுவிட்டு, “வாங்கோ நிகேதன். பாக்ட்ரீ வரைக்கும் போயிட்டு வரவேணும். அதுதான் கூப்பிட்டனான்.” என்றவரிடமும் மகிழ்ச்சி குறையாத குரலில் விடயத்தைப் பகிர்ந்துகொண்டார், யசோதா.

சத்யநாதனின் முகமும் மலர்ந்தது. தன் மகிழ்ச்சியைப் பகிர்கிறவராக, “சந்தோசம் தம்பி.” என்று அவனை ஒருமுறை அணைத்து விடுவித்தார். “பிறகு என்ன? இனி உன்ன கையில பிடிக்கேலாதே?” என்றார் மனைவியிடம்.

“பின்ன? என்ர பேத்தி வரப்போறா. மகள் வரப்போறா. இன்னுமொரு பேரனோ பேத்தியோவும் வரப்போகுது. எனக்கு ஆயிரம் வேலை இருக்கு. நீங்க மறக்காம குமரனை வரச் சொல்லுங்கோ சத்யா. பூவிக்கு அறை ரெடி பண்ணவேணும். ஆராக்கும் அறைய கீழ மாத்தினா நல்லம். பிள்ளைக்கு ஒரு ஊஞ்சல், வீட்டுக்கயே ஓடுற மாதிரி சைக்கிள் வாங்க வேணும்..” என்று படபடத்தார் அவர்.

அவரிடம் தெரிந்த ஆரணியின் சாயலில் நிகேதனுக்கு உதட்டினில் முறுவல் அரும்பிற்று.

கணவர் அந்த நேரம் சிற்றுண்டி எடுத்துக்கொள்வார் என்பதில் அவருக்கும் நிகேதனுக்கும் சேர்த்தே பரிமாறினார் யசோதா.

“வேலை எப்பிடி போகுது? ஒரு வேன வித்திட்டீங்க போல. சமாளிக்கக்கூடிய மாதிரி இருக்கா?” உணவுக்கிடையில் விசாரித்தார் சத்யநாதன்.

‘ஆக, அவனைப்பற்றிய தகவல்கள் அனைத்தும் அவரின் காதுக்குப் போய்க்கொண்டுதான் இருக்கிறது.’ என்று உள்ளே ஓடினாலும், “ஓம் மாமா. ரெண்டு வாகனத்துக்கு வந்த ஹயரையும் ஒரு வாகனத்தை வச்சுச் சமாளிக்கிறது கொஞ்சம் சிரமம் தான். ஆனா, சுகிர்தனும் இருக்கிறதால ஓகேயா போகுது.” என்றான் அவன்.

“அவசர அவசரமா வேன வித்துட்டு வீடு கட்ட ஆரம்பிச்சதுக்கு நான் தான் காரணமோ?”

மிக லாவகமாகக் கேள்வியை வீசிய மனிதரை உண்பதை நிறுத்திவிட்டுப் பார்த்தான் நிகேதன். “உங்களுக்கே பதில் தெரியும் மாமா. பிறகு ஏன் என்னைக் கேக்கிறீங்க?” என்றான் உதட்டினில் அரும்பிய மென் சிரிப்புடன்.

“ம்ஹூம்! அவ்வளவு ரோசமா?” என்றார் என்ன என்று பிரித்தறிய முடியாத பாவத்தில்.

“ரோசம் எண்டுறதைவிட, இது ஒருவிதமான தன்மான போராட்டம் மாமா. உங்களுக்குத் தெரியாதது இல்ல. நீங்க வேண்டாம், பொருத்தமில்லாதவன் எண்டு சொன்ன மருமகன் நான். நீங்க சொன்னதை உண்மையாக்கிற மாதிரி நான் இருக்கக் கூடாது தானே. நீங்க ரெண்டுபேரும் எண்டா ஆராக்கு உயிர். அதுவும் உங்களை அவள் தன்ர ஹீரோவாத்தான் பாத்தவள். இப்ப வரைக்கும் அப்பிடித்தான் பாக்கிறாள். அப்பிடி இருந்தும், எனக்காக உங்களோட சண்டை பிடிச்சுக்கொண்டு என்னட்ட வந்தவளுக்கு நானும் பதில் செய்யத்தானே மாமா வேணும். எண்டைக்காவது ஒருநாள் நீங்க எங்களை மன்னிக்கலாம். சேர்க்கலாம். அப்பிடி நடக்கிற அண்டைக்கு அவள் நிமிந்து நிக்க வேண்டாமா? அதை நான் செய்யாட்டி அவள் என்னை நம்பி வந்ததில என்ன அர்த்தம் இருக்கு சொல்லுங்கோ?” என்று அவன் அவரிடமே கேட்டபோது, உண்பதை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்தார் சத்யநாதன்.

‘எதற்கும் உங்களிடம் வந்து நின்றுவிட மாட்டேன் அப்பா’ என்று அன்று அவள் சொல்லிவிட்டுப் போனதைத்தான் இன்று அவன், ‘எதற்காகவும் உங்கள் முன்னால் அவளை நிறுத்திவிட மாட்டேன் மாமா’ என்கிறான். அவரின் மகள் தோற்றுப்போய்த் தன்முன்னால் வந்து நின்றுவிடக் கூடாது என்பதுதான் அவரின் விருப்பமும்.

வென்றவர் நம் உயிர் என்றால் தோற்பதும் வெற்றிதானே!

“நான் ஏதாவது பிழையா கதைச்சிட்டேனா மாமா?” அவரிடம் இருந்து பதில் இல்லாமல் போகவும் கேட்டான் நிகேதன்.

இல்லை என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு அவன் தோளில் தட்டிக்கொடுத்தார் சத்தியநாதன். “என்ர பிள்ளையின்ர தேர்வு பிழைக்க இல்ல நிகேதன்!” என்றவரின் குரலில் அவன் மீதான பாசமும் மரியாதையும் அப்பட்டமாகத் தெரிந்தது.

உணவு முடிந்ததும், “இப்ப அவசர ஹயர் ஏதும் இருக்கா?” என்று கேட்டார்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock