“இன்னும் ஒரு மணித்தியாலத்தில இருக்கு மாமா.” இதுவரையிலும் தன்னை ஏன் அவர் வரச்சொன்னார் என்று சொல்லவில்லையே என்கிற கேள்வியுடன் பதில் சொன்னான் அவன்.
“அப்ப வாங்கோ!” யசோதாவிடம் சொல்லிக்கொண்டு அவனையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டார், சத்தியநாதன்.
அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்த பொழுதில் யசோதா இடையிடவில்லை. ஆனால், கவனித்துக்கொண்டிருந்தார். கணவருக்கு மருமகன் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டாகிவிட்டது என்பதை அவரின் செய்கையிலும் பேச்சிலும் புரிந்துகொண்டார். மனதுக்கு நிறைவாக இருந்தது. அவர்கள் இருவரும் சோடியாகப் புறப்பட்டுச் சென்ற காட்சி கண்ணையும் மனதையும் நிறைக்க, நெகிழ்ந்த நிலையில் பார்த்துக்கொண்டு நின்றவரின் விழிகள், கணவர் மருமகனின் வேனிலேயே ஏறவும் அப்படியே விரிந்து போயிற்று.
யசோதாவின் காரிலேயே கூட இலகுவில் ஏறமாட்டார். அப்படி ஏறினாலும் ட்ரைவர் சீட்டைப் பிடித்துக்கொள்வார். இன்றோ மருமகனின் வாகனத்தில், அவனருகில் அமர்ந்துகொண்டாரே. காலம் என்பது, போகிற போக்கில் யார் எவர் என்கிற வேறுபாடு இல்லாமல்தானே அனுபவங்களைக் கற்றுக் கொடுத்துவிட்டுப் போகிறது! கண்ணில் நீரும் உதட்டில் முறுவலுமாக அவர்கள் போவதையே பார்த்திருந்தார்.
அவருக்கே இந்த நிலை என்றால் நிகேதனை சொல்லவே தேவையில்லை. அவனும் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவரின் உயரம் அறிந்தவன். என்றோ ஒருநாள், தன் தகுதிக்கு கொஞ்சமும் பொருத்தமே இல்லாதவன் என்று அவனை உதறித் தள்ளியவர். இன்று அவனருகில் அமர்ந்து வருகிறார். வேகமாக ஜன்னல்களை உயர்த்திவிட்டு ஏஸியைப் போட்டுவிட்டான். மிதமான வேகத்தில் அலுங்காமல் குலுங்காமல் அவரை அழைத்துச் சென்றான்.
அதை கவனிக்காததுபோல் கவனித்துக்கொண்ட சத்தியநாதன் மீசை மறைவினில் ஒரு முறுவலை நெளியவிட்டார்.
அவர்கள் மீண்டும் சென்றது ஆரணி இண்டஸ்ட்ரீஸ்க்கு. அங்கே அவருடைய தொழிற்சாலையை முழுவதுமாகச் சுற்றிக்காட்டினார். போட், வள்ளம், ஓடங்கள், மீன் வலைகள் செய்வதுதான் அவர்களின் பிரதான தொழில். அதனோடு கூடவே இவற்றிற்கான உதிரிப்பாகங்கள் வாங்கி விற்பது. பழுதடைந்தவற்றைத் திருத்திக் கொடுப்பது என்று மன்னாருக்கு மாத்திரமல்ல இலங்கை முழுமைக்கும் செய்துகொண்டிருந்தார்.
அப்படியே, இந்தப்பக்கம் வந்தால் கருவாடு, மீன் டின்கள் தயாரிப்பு என்று சங்கிலித் தொடராய் இருந்தது அவரின் வியாபாரம். பார்க்கையிலே இந்த மனிதர் ஒற்றை ஆளாக இதையெல்லாம் எப்படிச் சமாளிக்கிறார் என்று வியந்துபோனான், நிகேதன்.
ஒவ்வொன்றையும் காட்டி, தேவையான விளக்கங்களைக் கொடுத்து என்று அவரிடம் தெரிந்த அந்த உற்சாகம் அவரை முற்றிலும் புதிதாகக் காட்டியது. எந்தளவுக்குத் தன் தொழிலை நேசிக்கிறார் என்றும் விளங்கிற்று. சொத்து சுகத்துக்குக் குறைவில்லை. மதிப்பு மரியாதைக்கும் குறைவில்லை. ஆனாலும், இந்த வயதிலும் இத்தனை சுறுசுறுப்பாக இயங்குகிற அவரைப் பார்த்தபோது, நானும் இன்னும் இருமடங்கு என் உழைப்பை போடவேண்டும் என்கிற உத்வேகம் பிறந்தது அவனுக்கு.
எல்லாவற்றையும் காட்டிவிட்டு, தன் அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கே, முதலில் அவன் கண்ணில் பட்டது அவனுடைய ஆரா. பள்ளிச் சீருடையில் தலை கலைந்திருக்க, கையில் கப்பை ஏந்தியபடி சிரித்துக்கொண்டு நின்றாள் அவள். தன்னை மறந்து ரசித்தான் நிகேதன்.
மருமகனின் பார்வை போன இடத்தைக் கண்டு தனக்குள் சிரித்துக்கொண்டார் சத்தியநாதன். “எல்லாம் பாத்தனீங்க தானே தம்பி. எனக்கும் வயது போகுது. இது எல்லாத்தையும் நீங்க பொறுப்பெடுத்தா எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்.” என்றார் அவர்.
வெகு சாதுர்யமாக அவர் அவனுக்கு வலைவிரிக்கும் பாங்கில் அவனுக்குச் சிரிப்பு வந்தது.
அவன் என்ன நினைக்கிறான் என்பதை சத்யநாதனும் புரிந்துகொண்டார்.
“நாப்பத்தஞ்சு(45) வருச அனுபவம் தம்பி!” என்றார் சிரித்தபடி.
“எனக்கு விளங்குது மாமா. உங்கட எதிர்பார்ப்பிலயும் நியாயம் இருக்கு. ஆனா, இப்ப நீங்க எனக்குக் காட்டின மாதிரி, நானும் நாளைக்கு என்ர மருமகனுக்கோ மருமகளுக்கோ காட்டுறதுக்கு எனக்கு எண்டும் ஏதாவது வேணும் தானே? இதெல்லாம் என்ர மாமா சேர்த்து வச்சிருந்தவர். அதையெல்லாம் பக்குவமா பாதுகாத்து உங்களிட்ட தாறன் எண்டு சொன்னா நல்லாவா இருக்கும்?” என்று கேட்டான் அவன்.
அவரோ வாய்விட்டுச் சிரித்தார். மாமனுக்கும் மருமகனுக்கும் இடையில் நடந்துகொண்டிருக்கும் இந்த கண்ணுக்குத் தெரியாத போட்டி அவரை மிகவுமே ரசிக்க வைத்தது.
“அப்ப நான் இதையெல்லாம் வச்சு என்ன தம்பி செய்றது சொல்லுங்கோ? எனக்கும் என்ர பேரன் பேத்தியோட காலம் கழிக்கவேணும் எண்டு ஆசை இருக்காதா?” இலகு குரலிலேயே கேட்டார் அவர்.
நியாயமான எதிர்பார்ப்பு. அதனால் மனதிலிருந்து பேசினான் நிகேதன்.
“மாமா, உண்மையா உங்களிட்ட வந்திட கூடாது எண்டு எனக்கு எந்தக் கொள்கையும் இல்ல. வறட்டுப் பிடிவாதமும் இல்ல. ஆனா, நானே எனக்கான அடையாளத்தைத் தேடி, உங்களுக்கு முன்னால சுயமா நிமிந்து நிக்கவேணும் எண்டு ஆசைப்படுறது உண்மைதான். எனக்கு இனி என்ர டிராவல்ஸ் தான் மாமா உலகம். அதுல மேல மேல வரத்தான் விருப்பம். மினி கார்கள் வாங்கி டாக்சியா ஓடவிடவேணும். ஸ்கூல்ஸ்க்கு தனியா பஸ், கார்மெண்ட்ஸ்க்கு தனியா வேன்கள் வாங்கி விடவேணும். ஒன்லைனலையே புக் பண்ணுறமாதிரி கொண்டுவரவேணும். ஒன்லைனலையே பே பண்ணுற சிஸ்டம். அதுக்கு எண்டு ஒரு ஒபீஸ். இப்படி நிறைய ஐடியாஸ் இருக்கு. எல்லாம் ஆரா போட்ட பிளான் தான். அதை செயலாக்க வேணும். மன்னாருக்கு மட்டும் இல்ல முழு இலங்கைக்கும் தெரிஞ்ச ஒரு டிராவல்ஸ்ஸா வளக்க விருப்பம் மாமா.”
ஆக, அவன் தன் வளர்ச்சியை மட்டுப்படுத்தவில்லை. மேலும் மேலும் உயர நினைக்கிறான். அதுவும் பிடித்திருந்தது அவருக்கு.
“ஆனா, ஆரா சும்மாதான் இருக்கிறாள். அவளுக்கு நிர்வாக வேலை எல்லாம் தெரியும். அவளைக் கொண்டுவந்து போடுங்கோ. யோசிச்சுப் பாத்தா இது அவளுக்குத்தான் சேரவும் வேணும்.” என்று சொல்லும்போதே அவளின் ஆர்வம் இதில் இல்லை என்பது அவனுக்கு நினைவில் வந்தது.
“இப்ப பிள்ளை இருக்கிற நிலையில அது நல்லதா?”
உண்மைதான். அதன் பிறகும் இரண்டு குழந்தைகள். அவளின் நேரம் அவர்களுக்கு வேண்டும்.
“இப்பவே நீங்க முழுசா ஒதுங்கப்போறது இல்லை தானே மாமா. உங்களுக்கு என்ன வயசா போயிட்டுது. இப்போதைக்கு ஆரா வந்து உதவியா இருக்கட்டும். நீங்களும் இருங்கோ. கொஞ்சக் காலம் போகட்டும். பிறகு நான் வந்து பொறுப்பு எடுக்கிறன்.” என்றான் அவரின் முகம் பார்த்து.
சத்யநாதனுக்கு அதுவே போதுமாயிருந்தது. அவருக்கும் இன்றைக்கே அவன் வந்து பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று இல்லை. அவருக்குப் பிறகு அவன் இருக்கிறான் என்கிற நம்பிக்கைதான் தேவையாக இருந்தது. அதை அவன் தந்திருந்தான்.