எல்லோரும் புறப்பட்டு, குழந்தைகளும் உறங்கியதும் அவனைத் தனியறைக்குத் தள்ளிக்கொண்டு போனாள், ஆரணி.
“என்னடி?” சிரிப்புடன் அவள் முகம் பார்த்துக் கேட்டவனை இறுக்கி அணைத்துக்கொண்டு அவன் முகமெங்கும் முத்திரை பதித்தாள்.
அவளின் முத்தங்களின் ஈரம் அவனை நிலைகுலையச் செய்தது. “அடியேய் ஆரா! ஏன் இப்பிடி?” முகம்கொள்ளா சிரிப்புடன் தடுமாறினான்.
“அப்பா வீட்டில, அப்பாக்கு மகளா இருக்கலாம். மாமி வீட்டில மருமகளா இருக்கலாம். ஆனா, நிக்கின்ர நெஞ்சிலயும் வீட்டுலயும் தான் இந்த ஆரணி ஆராவா இருப்பாள். ‘எங்களுக்காக’ எண்டுறதை விட, என்ர நிக்கி, ‘எனக்காகத்தான்’ இந்த வீட்டை கட்டினவன் எண்டு எனக்குத் தெரியும். அதுதான்.. சந்தோசமா இருக்கடா! நாங்க தோத்து போகேல்ல நிக்கி. உனக்கு விளங்குதா? எத்தனையோ பிரச்சனைகள் வந்திருக்கு. நிறையக் காயப்பட்டிருக்கிறோம். கவலைப் பட்டிருக்கிறோம். கண்ணீர் விட்டிருக்கிறோம் தான். ஆனாலும், நாங்க நினைச்சதை சாதிச்சிட்டோம் நிக்கி. எல்லாருக்கும் முன்னால நல்லா வந்து காட்டியிருக்கிறோமடா! எனக்கு நினைக்க நினைக்கச் சந்தோசமா இருக்கு. அப்பாவே அவரின்ர வாயாலேயே எல்லாருக்கும் முன்னால உன்ன கெட்டிக்கார மருமகன் எண்டு சொல்லிட்டார், பாத்தியா?” அவளுக்கு எல்லாவற்றையும் விட அதுதான் நிறைவைக் கொடுத்தது. சந்தோச மிகுதியில் அவனைப் பற்றித் துள்ளிக்கொண்டு ஆர்ப்பரித்தாள்.
பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை அவனுக்கு. பட்டுச் சேலை. கழுத்தில் அவன் அணிவித்த மொத்தத் தாலிக்கொடி. நெற்றியிலும் வகிட்டிலும் குங்குமம். விழிகள் இரண்டும் விண்மீன்களாக மின்ன, முகம் சந்தோசத்திலும் பூரிப்பிலும் ஒளிர குட்டி நீர்வீழ்ச்சியாக அவன் முன்னே நின்றிருந்தாள் நிக்கியின் ஆரா.
“உனக்குச் சந்தோசம்தானே?” அவனுக்கு அதுதானே முக்கியம். அவளின் கன்னங்களைக் கைகளில் தாங்கிக் கேட்டான்.
“பின்ன இல்லையா? இதையெல்லாம் செய்தது என்ர நிக்கி. இந்த ஆரான்ர நிக்கி! அதுவும் அப்பா சொன்னார் பாத்தியா, ‘என்ர மருமகன் ஆருக்கும் சளைச்சவர் இல்லை எண்டு: அவர் தான்டா அண்டைக்கு உன்ன எனக்குப் பொருத்தம் இல்லை எண்டு சொன்னவர்.”
அவனுக்கும் சத்தியநாதன் எல்லோர் முன்னும் அப்படிச் சொன்னது பெருத்த நிறைவுதான். அவரிடமிருந்து இந்த அங்கீகாரத்தைப் பெற்றுவிட வேண்டும் என்பதும், அவனுடைய ஓட்டத்தின் பின்னிருந்த காரணங்களில் ஒன்றுதானே.
ஆனால், அவனுக்கு ஆரணியின் இந்தச் சந்தோசம் மட்டும் போதாது. அவளிடம் ஒரு கோப்பினை கொண்டுவந்து நீட்டினான்.
“என்ன நிக்கி இது?”
“ஒரு சாதாரண வேல கூட இல்லாம இருந்த என்னை நம்பி வந்த என்ர ஆராக்குச் சின்னப் பரிசு.” என்றான் அவன்.
இயல்பாக அந்தக் கோப்பினை வாங்கித் திறக்கப் போனவள் அதை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்துப் புருவங்களை உயர்த்தினாள். “சின்னப் பரிசை எல்லாம் இந்த ஆரா ஏற்க மாட்டாளே. அவளுக்குப் பெருஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸா வேணுமே!” என்றாள் குறும்பு கொப்பளிக்கும் குரலில்.
“சும்மா வாயாடிக்கொண்டு இருக்காம முதல் அத திறந்து பாரடியப்பா.” என்றான் அவன் முறுவலுடன்.
“பாக்கிறன் பாக்கிறன். இந்த ஆராக்காக அப்பிடி என்னதான் செய்திருக்கிறாய் எண்டு பாக்கிறன்.” என்று அப்போதும் வாய் காட்டியபடி பிரித்தாள்.
பிரித்ததுமே கண்ணில் பட்டது, அவளின் பெயரில் அவன் வாங்கியிருந்த வயல்காணியின் உறுதிப் பத்திரம். இது எதற்கு என்று கேள்வியுடன் அவனை ஏறிட்டாள்.
“எல்லாத்தையும் பார், தெரியும்.” என்றான் அவன்.
அது ஒரு கட்டட பிளான். சுற்றிவர வயல் பச்சைப் பசேல் என்று மின்ன, அதற்கு நடுவில் கட்டடம் ஒன்று நிமிர்ந்து நிற்பது போன்று 3D வடிவத்தில் வர்ணங்களால் தீட்டப்பட்டிருந்தது. முதலில் ஒன்றும் புரியவில்லை அவளுக்கு. பல பேப்பர்கள். அவற்றை உன்னிப்பாகக் கவனித்தபோதுதான், அது ஒரு செண்டருக்கான வரைபடம் என்று புரிந்தது. விழிகள் வியப்பால் விரிய அவனை நிமிர்ந்து பார்த்தாள். அந்தக் கண்களில் ஆர்வமும் ஆசையும் சரிசமமாய் மின்னின.
இதற்காகத்தானே, அந்த முகத்தில் இந்தப் பூரிப்பைப் பார்த்துவிடத்தானே அவன் பாடு பட்டதே. சிறு புன்னகையுடன் சந்தோசமாக அவளின் உணர்வுகளையே கவனித்துக்கொண்டிருந்தான்.
ஆரணியின் உள்ளம் பரபரப்புற்றது. அவளின் கனவொன்று நனவாகப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டு காகித வடிவில் கண்முன்னே தவழ்கிறதே. புதுவித ஆர்வம் தொற்றிக்கொள்ள அந்தக் கோப்பினை மிக வேகமாக ஆராய்ந்து கிரகித்துக்கொள்ள முயன்றாள்.
வயல் காணி, அதிலே தமிழ் எழுத்து ப வடிவில் குழந்தைகளுக்கான மூன்று மாடிகள் கொண்ட கட்டடம். அரைவாசிக்கு சுவரும் மேல் அரைவாசிக்கு இரட்டைக் கண்ணாடிகள் கொண்ட பாதுகாப்பான வெளிச்சம் நிறைந்த கட்டடம். ஒவ்வொரு தளமும் வகுப்பறைகள், உறங்கும் அறைகள், குழந்தைகளுக்கு என்று அவர்களுக்கு ஏற்ப பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட பாத்ரூம்கள். பிள்ளைகள் அழுக்குச் செய்துவிட்டால் குளிப்பதற்கு ஏற்ற வசதி, டயப்பர் மாற்றும் வசதி, கூடவே வாஷிங் மெஷின் வைத்து உடைகள் கழுவி காயவைப்பதற்கு ஏற்ற ஆறை, ஆசிரியர்களுக்கான பிரத்தியேக அறை, முக்கியமாக ஒவ்வொரு தளத்திலும் ஒரு சமையலறை என்று வடிவமைத்திருந்தான்.
அதோடு, மீட்டிங் ஹோல், குழந்தைகள் சாப்பிடுவதற்கு ஒரு அறை என்று பார்க்கப் பார்க்க பிரமித்துப் போனாள் ஆரணி. மழைக்காலங்களில் வெளியே போகாமல் குழந்தைகள் விளையாடக்கூடிய வகையிலான விளையாட்டு அறை. அந்தக் கட்டடம் இணையும் ஒவ்வொரு மூலைகளிலும் கூரை கண்ணாடியால் ஆனா பொதுவான ஒன்றுகூடல் கூடம். ‘ப’ வடிவக் கட்டடத்தின் வயிற்றுப் பகுதி விளையாட்டு மைதானம், அதைச் சுற்றி மரங்கள், அதன் கீழே இருக்கைகள். முன்னுக்கு வாகனத் தரிப்பிடம் என்று அனைத்து வசதியும் இருந்தது.
அதற்குமேலே பார்க்கவேண்டிய அவசியமே அற்றுப்போனது. அபிராமியின் செண்டரில் வேலை செய்த நாட்களில், இதெல்லாம் அவ்வப்போது பேச்சுவாக்கில் அவள் சொன்னவை. சொன்ன அவளே குழந்தை, குடும்பம், பிரச்சனைகள் என்று நாளாந்த வாழ்வின் ஓட்டத்தில் முற்றிலுமாக மறந்து போயிருந்தாள். அவனோ ஒன்றுவிடாமல் அதையெல்லாம் திரட்டி அவளின் கனவு செண்டரை அப்படியே வடிவமைத்திருந்தான்.
விழிகள் கலங்கிவிட அவனைப் பார்த்தாள் ஆரணி. நெஞ்சம் விம்மித் தணிந்தது. இந்த அன்பை இழந்துவிடக் கூடாது என்றுதானே அவனைத் துரத்தி துரத்தி காதலித்தாள். வீட்டை விட்டே வெளியே வந்து கரம் பிடித்தாள். கோப்பினைக் காட்டி, “எனக்காகவா நிக்கி?” என்றாள். அவளுக்குச் சத்தமே வரமாட்டேன் என்றது.
அவன் இல்லை என்று மறுத்துத் தலையை அசைத்துவிட்டு, “என்ர ஆராக்காக.” என்றான். கட்டிலில் அமர்ந்து அவளின் கரத்தைப் பற்றிக்கொண்டு மெல்ல பேச ஆரம்பித்தான்.
“இது இண்டைக்கு ஆரம்பிச்சு நாளைக்கு முடியிற விசயம் இல்ல ஆரா. ஆனா, இன்னும் ரெண்டு அல்லது மூண்டு வருசத்தில நடக்கும். காணி நான் காசு குடுத்து வாங்கிட்டன். பில்டிங் கட்டுறதுக்கு லோனும் ஓகே ஆகிட்டுது. மாமாதான் சைன் வச்சவர். ஆனா, செண்டர் கட்டிமுடிச்சு, திறந்தபிறகு செண்டர நல்லபடியா நடத்தி லோனை நீதான் கட்டவேணும். அதுக்கான அத்தனை காரியங்களையும் பாத்திட்டன். அதில வடிவா(நன்றாக) பாத்தியா தெரியாது. நீ சொன்ன அத்தனை பிளானோடயும் நானும் புதுசா ஒண்டு சேர்த்து இருக்கிறன். மூண்டாவது மாடில ஒரு ஏரியா இருக்கு. அது குட்டி கிட்சன், பாத்ரூம், பெட்ரூம் எல்லாம் அடங்கின ஒரு சூட். அது உனக்கே உனக்கானது.” என்றவன், அவளின் முகத்தைச் சற்றுநேரம் பார்த்தான்.
அவளும் விழியாகற்றாமல் அவனையேதான் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளிடமிருந்து வார்த்தைகள் அத்தனையும் விடைபெற்றுப் போயிருந்தன. மீண்டும் அவன் பேசினான்.
“ஒரு நாள் உன்ன வீட்டை விட்டு வெளில போ எண்டு சொன்னனான் ஆரா. அத மனதில இருந்து சொல்ல இல்லை தான். ஆனாலும் என்ர ஆராவ பாத்து நான் அத சொல்லீட்டன். அவளும் துடிச்சுப் போய்ட்டாள்.” என்றவனின் விழியோரங்களில் மெல்லிய நீர்ப்படலம். ஆரணியின் ஒற்றைக் கன்னத்திலும் கண்ணீர் துளி ஒன்று உருண்டு ஓடியது. நடுங்கிக்கொண்டிருந்த இருவரின் கைகளும் மற்றவரின் கரத்தைத் துணைக்கு இன்னும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டது.
“அண்டைக்கு, போறதுக்கு ஒரு இடமில்லாததாலேயே என்னோடயே இருக்கவேண்டிய கட்டாயம் உனக்கு வந்தது. இனி நானே வெளில போ எண்டு சொன்னாக்கூட உனக்கு அந்த நிலை வராது. இந்த வீடு, காணி எல்லாமே உன்ர பெயர்லதான் இருக்கு. அந்தச் செண்டருக்கு ஓனரும் நீதான். நிர்வாகியும் நீதான். மாமா மாமிய உன்னோட சேர்த்திட்டன். என்னால முடிஞ்ச வரைக்கும் நீ இழந்த எல்லாத்தையுமே உனக்குத் திருப்பித் தந்திட்டன் எண்டு நினைக்கிறன் ஆரா. இனியும் நீ போக்கிடம் இல்லாதவளும் இல்ல. அட்ரஸ் இல்லாதவளும் இல்ல.” கண்ணில் பூத்திருந்த மெல்லிய நீர் படலமும் உதட்டினில் அதை மறைக்கும் சிரிப்புமாகச் சொன்னான் அவன்.
அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தாள் ஆரணி. அவளுக்காகவே ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்யும் இவனை என்ன செய்தால் தகும்? ஆற்றாமையும் ஆத்திரமும் சேர்ந்து பொங்கியது அவளுக்கு.
“இதெல்லாம் எனக்கு. சரி! உனக்கு? உனக்கு என்ன வேணும் நிக்கி?” நிதானமாக, தெளிவாக அவன் முகம் பார்த்துக் கேட்டாள் அவள்.
அவ்வளவு நேரமாக மடைதிறந்த வெள்ளமாகப் பேசிக்கொண்டிருந்தவன் மௌனியானான். வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டவனின் உதட்டோரம் அழுத்தம் கூடித் துடிக்க, தொண்டைக்குழி ஏறி இறங்கியது.
அவன் தாடையைப் பற்றித் தன் புறமாகத் திருப்பினாள் ஆரணி. “என்னைப் பாரு நிக்கி. என்னைப் பாத்துச் சொல்லு. உனக்கு என்ன வேணும்? நான் மட்டும் தானே?”
அவளின் அந்தக் கேள்வியில் நிலைகுலைந்து போனான் அவன். “ஆரா!” என்றபடி அவளை இழுத்து அணைத்துக்கொண்டு அவளின் கழுத்து வளைவில் முகத்தைப் புதைத்தான். அவன் கைகளின் நடுக்கத்திலும் அணைப்பின் இறுக்கத்திலும் ஆரணியின் விழிகள் கசிந்தது. அவளின் கைகளும் அவனைத் தன்னோடு அரவணைத்துக் கொண்டது. மெல்ல முதுகை வருடிக்கொடுத்தாள். அவன் பிடறிக் கேசத்தைக் கோதிக்கொடுத்தாள். அவனுடைய தலையில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தாள்.
“சொல்லுடா, உனக்கு நான் மட்டும் தானே வேணும்?”
அவன் தலை ஆம் என்பதுபோல் ஆடியது.
“என்ர நிக்கிக்கு எப்பிடி நான் மட்டும் தான் வேணுமோ அதேமாதிரி நிக்கின்ர ஆராக்கும் நிக்கி மட்டும் தான் வேணும். அதுக்குப் பிறகுதான் மற்ற எல்லாமே.”
“எனக்கு இப்ப உன்னோட சேர்த்து நீ பெத்துத்தந்த ரெண்டு பிள்ளைகளும் வேணும்.” என்றான் அவன் அப்போதும் அவளின் கழுத்து வளைவில் இருந்தே. அவளுக்கு மட்டும்? அவன் முதுகிலேயே ஒன்று போட்டாள் ஆரணி.
அவன் உடல் சிரிப்பில் குலுங்கியது. அவனைத் தன்னிடம் இருந்து பிரித்து அவன் முகம் பார்த்தாள். நனைந்திருந்த விழிகளைத் துடைத்துவிட்டாள். “ஆனாலும், என்ர நிக்கி எனக்காக இதையெல்லாம் செய்திருக்கிறான் எண்டு நினைக்க எனக்குப் பெருமையாத்தான் இருக்கு!” என்றவள் அவன் உதட்டினில் அழுத்தி முத்தமிட்டாள்.
“எவ்வளவு பெரிய விசயம் செய்திருக்கிறன். அதுக்கு இது மட்டும் தானாடி?” என்றான் கிறங்கிய குரலில்.
“வேற என்ன வேணுமாம்?” கேட்டுவிட்டு மீண்டும் உதட்டினில் அழுத்தி முத்தமிட்டாள். பின் முகமெங்கும். அவனோடு அப்படியே கட்டிலில் சரிந்தாள் ஆரணி.
“நான் இன்னும் குளிக்க இல்ல.” அவளின் ஆளுகைக்குள் சுகமாக அடங்கியபடி சொன்னான் அவன்.
“அதுக்கு?”
“வேர்வை நாறுது..”
“அதுக்கு?”
அவன் உடல் சிரிப்பில் குலுங்கிற்று. ஆரணிக்கும் சிரிப்பு வந்தது. “சொல்லு மச்சி அதுக்கு என்ன?”
இப்போது அவளைத் தன் மீது கொண்டுவந்தான் அவன். “மூண்டாவது பிள்ளைக்கு அடி போடுறியாடி?” என்றான் முகம் முழுக்கப் பரவியிருந்த சிரிப்புடன்.
“போட்டா என்னவாம்? எங்கட பட்ஜெட் நாலுதானே?” என்றவள் அவனை ஆக்கிரமிக்க ஆரம்பிக்க, “அம்மாடி! ஆளவிடு! திரும்பவும் போய் என்ர மனுசி மூண்டாவது பிள்ளைக்கு அம்மா ஆகிட்டாள் எண்டு என்னால சொல்லேலாது!” என்றபடி அவளிடமிருந்து தப்பித்துப் பாத்ரூமுக்குள் புகுந்துகொண்டான் அவன்.
“எங்க ஓடினாலும் இங்கதான் மச்சி வரோணும்! உன்ன திரும்பவும் அப்பா ஆக்காம நான் விடமாட்டன்!” என்று சூளுரைத்தபடி கட்டிலில் விழுந்தாள், ஆரணி.
நிகேதனின் சிரிப்புச் சத்தம் அவள் வரைக்கும் கேட்டது!
முற்றும்!