காலையிலேயே விழித்துவிட்டாள் ஆரணி. நிகேதனின் பாதங்கள் தான் முதலில் கண்களில் பட்டது. ‘இவன் எதுக்குத் தலைகீழா படுத்திருக்கிறான்?’ என்று யோசித்தவளுக்கு, தான்தான் தலைகீழாகக் கிடக்கிறோம் என்று பிறகுதான் விளங்கிற்று. சிரிப்பில் உதடுகள் விரிய அப்படியே கிடந்தாள்.
இரவு அவன் கைகளுக்குள் உறங்கிப்போனாலும் சற்று நேரத்திலேயே வியர்க்கத் தொடங்கியதில் விலகிப் படுத்திருந்தாள். அவளின் தேகச் சூட்டினை வாங்கிய மெத்தை அதை அவளுக்கே திருப்பிக்கொடுக்க, புரண்டு புரண்டு படுத்தும் முடியாமல் எழுந்து தலையணையைத் தூக்கிக் கால் மாட்டில் போட்டுக்கொண்டு உறங்கிவிட்டாள்.
நிகேதனோ இப்படி எந்தத் தொந்தரவும் இல்லாமல் நன்றாக உறங்கிக்கொண்டு ருந்தான். சிரிப்புடன் அவனுடைய நடுப் பாதத்தில் மெல்லிய கோடு இழுத்தாள் ஆரணி. சரக்கென்று இழுத்துக்கொண்டான் அவன்.
‘பாவம்.. நல்ல நித்திரைல இருக்கிறான்.’ உள்ளம் அவனுக்காக இரங்கினாலும் குறும்புக்குணம் சீண்டிப்பார்க்கத் தூண்டியது. மீண்டும் கீறினாள். அவன் திரும்பவும் இழுத்துக்கொள்ளச் சிரிப்புடன் சற்றே தலையைச் சரித்து அவனைப் பார்த்தாள். புரண்டு படுத்தவன் கையால் அவளைத் தேடுவது தெரிந்தது.
அவனுக்கும் அவளின் கால்கள் தான் அகப்பட்டது. சட்டென்று தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு ஒரு சிரிப்புடன் தன் காலடியில் பார்த்தான்.
வேகமாகக் கண்களை மூடிக்கொண்டு, என்ன செய்கிறான் என்று தன் புலன்களைத் தீட்டிக்கொண்டு காத்திருந்தாள் ஆரணி. எழுந்துபோய்த் தோட்டத்துக்குப் போகும் கதவினைத் திறந்து வைத்துவிட்டு வந்து, தன் தலையணையையும் அவளருகே போட்டு, அவளை நெருங்கிப் படுத்துக்கொண்டு அவன் உறக்கத்தைத் தொடர, வைரத்துளிகள் இரண்டு மின்னின அவள் கண்களுக்குள்.
ஆழ்ந்து உறங்கிவிட்டான் என்று சீராக ஏறி இறங்கிய மார்பு உணர்த்த, “லவ் யூடா செல்லக்கண்ணா!” என்று உதட்டுக்குள் உரைத்துவிட்டு அவன் உறக்கம் கலையாது எழுந்துகொண்டாள். அணிந்திருந்த அவனுடைய ஆடைகளோடு வெளியே செல்லக் கூச்சமாக இருந்தது. யாராவது தெரிகிறார்களா என்று எட்டிப் பார்த்துவிட்டு ஓடிப்போய்க் கொடியில் கிடந்த தன் ஆடைகளை எடுத்துவந்து மாற்றிக்கொண்டாள். முகம் கழுவி, தலையிழுத்த பிறகும் அவன் எழுந்துகொள்ளவில்லை.
பொட்டில்லாத நெற்றி குங்குமத்தை நினைவூட்டியது. அந்தக் குங்குமம் அதைத் தந்தவனை நினைவூட்டியது. திரும்பிப் பார்த்தாள். அவனோ கடந்துபோன இரவினை நினைவூட்டினான். எவ்வளவு ஆசையாக அவளை நாடினான். அவள் மேனியின் அவளறியா ரகசியங்களைக் கூட அவளுக்கே அறிமுகப் படுத்தினான். கள்ளன்! அதுநாள் வரை பார்வையால் கூட எல்லை மீறாதவன் ஒற்றைத் தாலியைக் கட்டிவிட்டு என்னவெல்லாம் கேட்கிறான். எடுத்துச் சொன்னதும் நல்ல பிள்ளையாக அடங்கிப் போனானே!
சிரிப்புடன் அறைக்கதவைத் திறந்து வெளியே வந்தாள். சமையலறையில் இருந்து கேட்ட அமராவதி அம்மாவினதும் கயலினியினதும் பேச்சுக்குரல்கள் கால்களைத் தயங்கச் செய்தாலும், இந்த மௌனப்போராட்டத்தை உடைக்காமல் பிளவுபட்டு நிற்கும் குடும்பத்தை இணைக்கமுடியாது என்று எண்ணிக்கொண்டு அங்கே நடந்தாள்.
அமராவதி அம்மா டீ தயாரித்துக்கொண்டிருந்தார். கயலினி தட்டைக் கையிலேயே ஏந்திப் புட்டும் சம்பலும் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். அவள் அணிந்திருந்த சேலையே, டீச்சர் ட்ரைனிங் கொலிஜில் ட்ரைனிங் எடுக்கிறாள் என்று உணர்த்திற்று!
“குட்மோர்னிங் கயல்! மோர்னிங் மாமி! எனக்கும் ஒரு டீ தாறீங்களா?”
இயல்பாக வெளிப்பட்ட அவளின் பேச்சில் இயங்கிக்கொண்டிருந்த இருவரின் கைகளும் ஒருகணம் நின்றன. எப்படிப் பிரதிபலிப்பது என்று தெரியாது கயலினி முழிக்க, சட்டெனக் கடுத்துவிட்ட முகத்தோடு விருட்டென்று அங்கிருந்து வெளியேறினார் அமராவதி. தயாரித்த டீயினைக்கூட எடுத்துக்கொள்ளவில்லை. அவரின் பின்னே கயலினியும் வெளியேறினாள்.
அசரவில்லை ஆரணி.
‘உங்கட மகனும் இப்படித்தான் சிலுப்பிக்கொண்டு போனவன் மாமி. அவனையே வளச்ச நான் உங்களை வளைக்க மாட்டனா!’ சளைக்காமல் நால்வருக்கும் டீயினைத் தயாரித்துக்கொண்டு விறாந்தைக்கு நடந்தாள்.
“மாமி இந்தாங்கோ. கயல் உனக்கு இது.” என்று அவர்களின் முன்னே இருந்த டீப்போவின் மேல் கப்புகளை வைத்துவிட்டு மீதி இரண்டையும் எடுத்துக்கொண்டு திரும்ப, அடுத்தகணம் அவள் வைத்த கப்புகளில் ஒன்று பறந்துபோய் முற்றத்தில் விழுந்து சிதறியது.
“உன்ர கையால வாங்கிக் குடிக்கிறதுக்குப் பதிலா ஒரு போத்தில் விசத்தை வாங்கிக் குடிச்சிடுவன்!” அமராவதி அம்மாவின் பேச்சில் நின்ற இடத்திலேயே உறைந்தாள் ஆரணி. உயிரைப் பறிக்கும் விசத்துக்குச் சமனா அவள் கையால் கொடுக்கும் தேநீர்?
“அம்மா! என்ன கதைக்கிறீங்க?” என்றபடி வந்தான் நிகேதன்.
“வேற என்ன கதைக்கவேணும் எண்டு ஆசைப்படுறாய்? என்னவோ முறையா வந்தவள் மாதிரி நடிக்கிறாள். நான் இப்ப கேட்டனானே தேத்தண்ணி கொண்டுவா எண்டு. மாமியாம் மாமி! இவளுக்கு நான் மாமியும் இல்ல. இவள் நான் பாத்துக் கூட்டிவந்த மருமகளும் இல்ல. என்ர கண்ணுக்கு முன்னாலேயே வரக்கூடாது இவள். சொல்லிவை!” ஆத்திரத்தோடு உத்தரவிட்டார் அவர்.
“என்ன முறை கெட்டுப்போச்சு எண்டு சொல்லுறீங்க? கோயில்ல வச்சு தாலி கட்டி முறையாத்தான் அவள இந்த வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறன். என்ர மனுசி உங்களுக்கு மருமகள். உங்கட மருமகளுக்கு நீங்க மாமிதானே. மாமிய மாமி எண்டு கூப்பிடாம வேற எப்பிடி கூப்பிடுறது? அதென்ன நீங்க கூட்டி வராதவள் எண்டு சொல்லுறீங்க? அண்ணியையும் அண்ணாதான் கூட்டிக்கொண்டு வந்தவர். அவவை மருமகளா ஏற்க முடிஞ்ச உங்களுக்கு இவளை ஏற்க முடியேல்லயா? ஏன் அம்மா? நான் உழைப்பில்லாம இருக்கிறன் எண்டுறதுதாலயா? நானும் உழைச்சு இந்தக் குடும்பத்தைப் பாக்கிறவனா இருந்திருந்தா ஒண்டுமே சொல்லாம இருந்திருப்பீங்க, என்ன? ஆக, எல்லாத்தையும் காசுதான் தீர்மானிக்குது என்னம்மா?” கேட்டவனின் குரலில் ஆதங்கம் நிறைந்துகிடந்தது.
அதை உணரத் தயாராயில்லை அவர்.
“காசு எல்லாத்தையும் தீர்மானிக்குதோ இல்லையோ அந்தக் காசு இல்லாம எதுவுமே நடக்காது. அத விளங்கிக்கொள்ளு நீ முதல். சும்மா எனக்குப் பாடம் எடுக்காத. அவன் கட்டினாலும் குடும்பத்தையும் பாப்பான் எண்டுற நம்பிக்கை இருந்தது. இண்டுவரைக்கும் அந்த நம்பிக்கையை அவன் கெடுக்கேல்ல. அவனோட உன்ன எந்தக் காலத்திலையும் ஒப்பிடாத! அவன்ர கால் தூசுக்கும் வரமாட்டாய் நீ. படிக்கிறன், வேலை தேடுறன் எண்டு ஊரையும் சுத்தி இவளையும் பிடிச்சதைத் தவிர உருப்படியா என்ன செய்தனி எண்டு சொல்லு பாப்பம்! ஒரு தங்கச்சி வீட்டுல இருக்கிறாள் எண்டுற நினைப்பே இல்லாம ஒருத்திய கூட்டிக்கொண்டு வந்து கூத்தடிக்கிறியே, கூசேல்லையா உனக்கு?” கயலினியையும் வைத்துக்கொண்டு அவர் பேசிய பேச்சில் நிகேதனின் முகம் அப்படியே கருத்துப் போயிற்று.
ஆரணிக்கும் அசிங்கமாகிப் போயிற்று. நிகேதனைத் தேற்றும் வழி தெரியாமல் துடித்துக்கொண்டு நின்றாள். விறுவிறு என்று அறைக்குள் போய் உடைமாற்றிக்கொண்டு வந்தான் நிகேதன். எங்கே போகிறான் என்று கேட்கக்கூட வாய் எழாமல் அவனைப் பார்த்தாள் ஆரணி. ஒரு வாய்த் தேநீர் கூடப் பருகாமல் வெறும் வயிற்றோடு அங்கிருந்து வெளியேறினான் அவன்.
அறைக்குள் அடைந்திருந்தாள் ஆரணி. மாமியாரின் கோபத்தில் நியாயம் இருந்தாலும் யார் முன் என்ன பேசுவது என்று இல்லையா? காதலித்த நாட்களில் அவளாக இழைந்தாலும் முறைத்துக்கொண்டு விலகிப்போகிறவனைப் போய் என்னவெல்லாம் சொல்லிவிட்டார்.
அவன் வெறும் வயிற்றுடன் போனதில் இதுவரை அவளும் எதையும் எடுத்துக்கொள்ளவில்லை. பச்சைத் தண்ணீர் கூடப் படாத வயிறு இப்போதே புகையத் தொடங்கிவிட்டது. அவனுக்கும் இப்படித்தானே இருக்கும். கடைகளில் உண்பான் என்கிற நம்பிக்கை சற்றுமில்லை. அதற்குக்கூட அவனிடம் பணமிருக்கிறதா என்றும் தெரியாது.
வயிறு இன்னும் அதிகமாகக் கத்தியது. கதைகளிலும் படங்களிலும் காட்டுவதுபோல, உண்ணாமல் குடிக்காமல் போன கணவன் வரும்வரைக்கும் வெறும் வயிற்றோடு காத்திருக்கும் தெம்பு அவளுக்குச் சத்தியமாக இல்லை. கரையும் ஒவ்வொரு நிமிடத்திலும் சிந்திக்க விடாமல் வயிறு தன் உரிமைக்காகப் போராடத் தொடங்கியிருந்தது.
எழுந்து சமையலறைக்கு நடந்தாள். கயலினி எப்போதோ புறப்பட்டிருந்தாள். பார்வை வட்டத்துக்குள் அமராவதி அம்மா பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருப்பது விழ, ஆறிப்போயிருந்த தேநீரை வீணாக்கப் பிடிக்காமல் மீண்டும் சூடாக்கினாள். நொடியில் ஆங்காரம் கொண்டு, “இது என்ர வீடு! திறந்த வீட்டுக்க என்னவோ புகுந்த கணக்கு கண்ணுக்கு முன்னால வந்து நிக்காத!” என்று சீறினார் அவர்.
ஆரணிக்கு முகம் கறுத்தது. இருந்தாலும் காட்டிக்கொள்ளாமல், “இனி எனக்கும் இதுதான் வீடு மாமி.” என்றாள்.
“ச்சேய்! இனி இந்த வீட்டில நிம்மதியா வாழ்ந்த மாதிரித்தான்!” கழுவிக்கொண்டிருந்த பாத்திரத்தை டொங் என்று சிங்குக்குள் போட்டுவிட்டு வந்து அமர்ந்துகொண்டார் அவர்.
ஆரணியின் முகம் சிறுத்துப்போயிற்று. எதிர்ப்பார், கோபப்படுவார், சினப்பார் என்று அவளுக்கும் தெரியும் தான். ஆனால், பழக்கமில்லாத இந்த அவமரியாதைகளை நேரிடையாக எதிர்கொள்கையில் மனம் சோர்ந்து சுருண்டது.
ஆனால், அவரைச் சரியாக்கினால் மட்டுமே நிகேதனின் மனவேதனையைப் போக்கலாம் எனும்போது வாயை மூடிக்கொண்டு போக முடியவில்லை. அவருக்கு எப்படியாவது தங்களின் சூழ்நிலையை உணர்த்த முயன்றாள்.
“நாங்க செய்தது பெரிய பிழைதான் மாமி. இந்தத் திருமணத்தால உங்கட மனம் என்ன பாடுபடும் எண்டு விளங்குது. இப்பிடி நடந்திட்டுதே எண்டு நிக்ஸ்க்கும் சரியான கவலை. ஆனா, திட்டம் போட்டோ வேணுமென்டோ செய்யேல்ல. எங்களுக்கு நேற்று கல்யாணம் நடக்கும் எண்டு எங்களுக்கே தெரியாது. உள்ளதைச் சொல்லப்போனா உங்கட மகனுக்கு இதுல அறவே விருப்பம் இல்ல. மாட்டன் எண்டுதான் சொன்னவன். கடலுக்க விழுந்து சாகப்போறன் எண்டு நான் மிரட்டினதாலதான் சம்மதிச்சவன்.” என்று, அவள் அனைத்தையும் தன்மீது போட்டுக்கொண்டபோது அவர் வேறு விதமாக வெடித்தார்.
“நினைச்சனான்! இப்பிடி ஏதுமாத்தான் இருக்கும் எண்டு நினைச்சனான்! மிரட்டி, நாடகமாடி என்ர பிள்ளையின்ர வாழ்க்கையை நாசமாக்கினதும் இல்லாம என்ர குடும்பத்தையே உடைச்சிட்டியேடி! நீ நல்லா இருப்பியா? நாசமாத்தான் போவாய். உன்னைப் பாக்கப் பாக்க ஆத்திரம் தான் வருது! இது என்ர வீடு. இங்க என்ர கண்ணுக்கு முன்னால நிக்காத! எங்கயாவது போய்த்தொலை!”
வெறிகொண்டவர் போன்று கத்தியவரைக் கண்டு அதிர்ந்தாள் ஆரணி. கூடவே கோபமும் வந்தது. “போ போ எண்டால் எங்க போறது? தனியா போறதா இருந்தா உங்கட மகனையும் கூட்டிக்கொண்டுதான் போவன். போகட்டா?”
அமராவதிக்கு அடக்கமுடியாத அளவுக்கு ஆவேசம் பொங்கிற்று. “உன்ர கழுத்தில ஒரு தாலிய கட்டினதும் உன்ர சொல்லுக்கு ஆடுவான் எண்டு நினைச்சியோ? அவன் என்ர மகன். கடைசிவந்தாலும் எங்களைத் தனியா விட்டுட்டு வரமாட்டான்! முடிஞ்சா கூட்டிக்கொண்டு போய்க்காட்டு!” என்று சவால் விட்டார் அவர்.
“உண்மைதான். வரமாட்டான் தான். அவன் வராம இந்த வீட்டை விட்டு நானும் போகமாட்டன்! என்னைமட்டும் தனியா அவனும் அனுப்பமாட்டான். அதால இனி, போ போ எண்டு சொல்லுறதை நீங்கதான் நிப்பாட்டவேணும்!” அமைதியான குரலில் சொன்னாள் ஆரணி.
அவரின் வார்த்தைகளை வைத்தே மடக்கிவிட்டாளே! அவளைக் குதறும் கோபம் வந்தது அமராவதிக்கு. தன் இயலாமையும் சேர்ந்துகொண்டதில், “உன்ர வாய்க்கு அவனே உன்னைத் துரத்துவான்! ஒருநாள் நடக்குதா இல்லையா பார்! அண்டைக்குக் கதைக்கிறன் உன்னோட!” சாபமிடுவது போலச் சொல்லிவிட்டு சமையலறைக்குள் புகுந்துகொண்டார்.
ஒரு பெருமூச்சுடன் அவளும் சமையலறைக்கு நடந்தாள். தேநீரை ஒரு கப்பில் வார்த்தாள். “உங்களுக்கும் தரவா மாமி?” இதமாகக் கேட்டாள்.
அவர் பதிலிறுக்கவில்லை. பேசாமல் இன்னொரு கப்பில் வார்த்து அவர் அருகே வைத்துவிட்டு, “வீணாக்காம குடிங்கோ.” என்றவளுக்கு அப்படியே போக மனமில்லை.
வெறும் வயிற்றோடு முகம் பாராமல் சென்றவனே நெஞ்சுக்குள் நின்றான். “உங்கட மகன் என்னை கட்டினது மட்டும் தான் மாமி!” என்றாள் நிதானமாக.
“இன்னும் தெளிவா எப்பிடிச் சொல்லுறது எண்டு எனக்குத் தெரியேல்ல. உங்கட மகன் என்ர கழுத்துல தாலி மட்டும் தான் கட்டியிருக்கிறான். மற்றும்படி வேற ஒண்டும் நடக்க இல்ல. தயவுசெய்து இனியும் கயலுக்கு முன்னால அவனைக் கேவலப்படுத்திற மாதிரிக் கதைக்காதீங்க. அவன் அவளுக்கு அண்ணா. காலத்துக்கும் மதிப்பும் மரியாதையும் இருக்கவேணும்.” என்றவள், அதற்குமேல் என்ன சொல்லுவது என்று தெரியாமல் தேநீர் கோப்பையுடன் வீட்டின் பின்பக்கம் நடந்தாள்