கிணற்றையும் வாளியையும் பார்க்க மீண்டும் மலைப்பாயிருந்தது.
‘இதுல தண்ணிய அள்ளி.. குளிச்சு.. கடவுளே..’
‘நோ ஆரணி! இதெல்லாம் உனக்கான டாஸ்க்! புகுந்து விளையாடு! எதுலயும் நீ சோரக்கூடாது!’
மெல்ல மெல்லத் தண்ணீரை அள்ளி டாங்க்கில் நிரப்பத் தொடங்கினாள். சமையலைப்போல அறிந்துகொள்ளும் ஆர்வத்துடனோ சுவையாகச் சமைக்கவேண்டும் என்கிற விருப்புடனோ நீரை இறைக்க முடியவில்லை. தளிர் விரல்களும் கடினமான வேலை பார்த்தே பழகியிராத மென்மையான உள்ளங்கையும், ஏற்கனவே சமையலால் உண்டாகியிருந்த காயங்களும் எரிந்தது. முடியாமல் அப்படியே துவைக்கும் குந்தில் அமர்ந்துவிட்டாள்.
இன்று ஒரு நாளிலேயே சிவந்துவிட்ட விரல்களைப் பார்க்கப் பார்க்க துக்கம் பெருகியது. ஏனோ அவளை நோகவிடாமல் எதிலும் தரமும் தராதரமும் பார்த்துப் பார்த்து வளர்த்த அப்பா நினைவில் வந்தார்.
பிறப்பிலேயே செல்வந்தனாகப் பிறந்ததாலோ என்னவோ கௌரவம், தராதரம், அந்தஸ்து அனைத்தையுமே அதிகமாகப் பார்க்கும் மனிதர். பாசத்தைக்கூட அப்படித்தான் காட்டுவார். அப்படியானவருக்கு அவளின் செயல் மிகுந்த தலைகுனிவாகத்தான் இருக்கும்.
ஆனால், அவர் அவளுக்குச் செய்யப் பார்த்ததும் தவறுதானே. அவளின் விருப்பத்தைச் சொல்லியும் இன்னொருவனை நிச்சயித்ததில் என்ன நியாயம் இருக்கிறது? ஒரு பிடிவாதத்துடன் எழுந்து கை எரிய எரிய டாங்க்கினை நிரப்பினாள். நிகேதனின் சாரத்தைக் குளிப்பதற்கு ஏற்றவாறு கட்டிக்கொண்டு அணிந்திருந்த ஆடைகளைக் கழற்றி தோய்த்துக் காயப் போட்டுவிட்டு அள்ளி நன்றாக முழுகினாள். குளித்து முடிக்கும் தறுவாயிலேயே நித்திரை கண்ணைச் சுழற்றியது. நிகேதனின் உடைகளையே மீண்டும் அணிந்துகொண்டு கட்டிலில் விழுந்ததுதான் தெரியும்.
நிகேதன் எழுப்பியபோதுதான் கண்களைத் திறந்தாள். அவனைக் கண்டதுமே பாய்ந்து இறுக்கி அணைத்துக்கொண்டாள். அந்த அணைப்பே அன்று முழுக்க அவள் தன்னைத் தேடியதைச் சொல்ல, “தனிய இருக்க போரடிச்சதா?” என்று, அவள் முகத்தைக் கனிவுடன் நோக்கிக் கேட்டான், அவன்.
இல்லை என்று தலையை அசைத்துவிட்டு, “வேலை கிடைச்சதாடா?” என்றாள் ஆர்வத்தோடு.
முகம் வாட உதட்டைப் பிதுக்கினான் அவன்.
“விடு மச்சி எல்லாம் கிடைக்கும்!” கட்டிலில் இருந்து எழுந்து தன் முடியினை ஒரு பாண்டினுள் அடக்கியபடி சொன்னாள், அவள்.
அப்போதுதான் அவளின் ஆடைகளைக் கவனித்தான் நிகேதன். “நீயே அள்ளிக் குளிச்சியா?” என்றவன் வேகமாக அவளின் கைகளைப் பற்றி ஆராய்ந்தான். ஆங்காங்கே சிவந்திருந்ததைக் கவனித்துவிட்டு வேதனையுடன் நோக்கினான்.
“விடுடா! விடுடா! இதெல்லாம் வீரத் தழும்புகள்!” அவள் சொல்லும்போதே அவனுடைய உதடுகள் அவளின் உள்ளங்கையில் மென்மையாகப் பதிந்தன. மீண்டும் மீண்டும் பதிந்தன. “இப்போதைக்கு இதமட்டும் தான் என்னால சிக்கனமில்லாமத் தரமுடியும் ஆரா!” மென்மையாய் அவளை அணைத்துக்கொண்டு சொன்னான் அவன்.
“அடேய் விசரா! எனக்கும் இது மட்டும் தான்டா வேணும்!” கண்ணீர் பூக்கள் மின்னச் சிரித்தாள் அவன் காதலி!
அவளின் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு, அருகிலிருந்த பையினை எடுத்துக் கொடுத்தான். “நைட்டி மட்டும் தான். உள்ளுடுப்புக்கு நாளைக்கு நீயும் வா. போய் வாங்குவம்.”
“இப்ப என்னத்துக்கடா?” அவளுக்கு அத்தியாவசியம் என்றாலும், இருக்கிற காசையும் செலவு செய்துவிட்டு என்ன செய்யப் போகிறான் என்கிற யோசனை அவளுக்கு.
“விடு! சமாளிக்கலாம்.” அவளுக்கான மாற்றுடைகளைத் தாய் தங்கையிடம் கேட்க இப்போது அவனுக்குமே விருப்பமில்லை. கோபதாபம் வேறு சக பெண்ணின் மீதான மனிதாபிமானம் வேறல்லவா. வெறும் கையோடு வந்தவள் மாற்றுடைக்கு என்ன செய்வாள் என்று அவர்கள் யோசிக்கவே இல்லையே.
அவன் குளித்துவிட்டு வந்தபோது இதமான சூட்டில் உணவு தயாராயிருந்தது. “நீ சாப்பிட்டியா?” தரையில் அமர்ந்தபடியே கேட்டான் நிகேதன்.
“இன்னுமில்ல. நீ சாப்பிடு முதல்!” அவனுக்கு அருகிலேயே அமர்ந்து, சாப்பிட்டுப் பார்த்து அவன் சொல்லப்போகும் வார்த்தைகளுக்காக பெரும் ஆவலுடன் காத்திருந்தாள்.
அவன் ஒருவாய் அள்ளும்போதே, “இண்டைக்காவது வேலை கிடைச்சுதா? கிடைச்சிருக்காதே!” என்று, அபஸ்வரமாய் ஒலித்தது அமராவதியின் குரல்.
சடுதியில் சினம் பொங்கிற்று ஆரணிக்கு. “முதல் அவனை நிம்மதியா சாப்பிட விடுங்க! அப்பதான் வேலை கிடைச்சாலும் அதைச் செய்றதுக்கு உடம்பில தெம்பிருக்கும்.” என்றாள் வெடுக்கென்று.
“சாப்பிடுறது ஊரான் வீட்டு காசுல. இதுக்க ரோசம் வேற வருதாம்!” என்றுவிட்டுப் போனார் அவர்.
சோற்றைத் தாங்கிய கை தாங்கியபடியே நிற்க இறுகிப்போய் அமர்ந்திருந்தான் நிகேதன். நெஞ்சு துடிக்க, “நீ சாப்பிடு நிக்கி!” என்றாள் ஆரணி இதமான குரலில்.
அள்ளிய சோற்றைத் தட்டிலேயே போட்டுவிட்டு, பேசாமல் எழுந்து கையைக் கழுவிக்கொண்டு அறைக்கு நடந்தான் நிகேதன். பரிதவிப்புடன் தட்டைத் தூக்கிக்கொண்டு அவன் பின்னால் ஓடினாள் ஆரணி. “இப்பிடி எத்தனை நாளைக்குப் பட்டினி கிடப்ப நிக்ஸ்? வேலை கிடைக்கிற வரைக்குமா? ரோசப்பட்டு ஆகிறதுக்கு ஒண்டும் இல்லயடா. சாப்பிடு!” அவன் கையில் தட்டைப் பிடிவாதமாக வைத்தாள்.
“உனக்குக் கட்டாயம் வேலை கிடைக்கும்! நாங்க நல்லாருப்பம். இந்த நிலை மாறும். அதுவரைக்கும் பொறுத்துப்போவம் நிக்கி.” எப்படியாவது அவனைத் தேற்றிச் சாப்பிட வைத்துவிட வேண்டும் என்பதில் அவள் குறியாக இருப்பது புரிந்தது. அன்னையின் பேச்சு அவனுக்கே இந்தளவுக்கு வலிக்கிறது என்றால் அவளுக்கு? காட்டிக்கொள்ளாமல் அவனைத் தேற்றுகிறாள்.
ஒரு பெருமூச்சுடன், “நீயும் போட்டுக்கொண்டு வா.” என்றபடி ஒரு பிடியை அள்ளி வாயில் வைத்தவன் அடுத்தக் கணமே, “என்னடி சாப்பாடு இது? ஆரு சமைச்சது?” என்றான் முகத்தைச் சுளித்துக்கொண்டு.
“ஏன்டா? நல்லா இல்லையா? நான் தான் சமைச்சனான்.” அவளின் முகம் சுருங்கிப் போயிற்று.
“உன்னை ஆர் சமைக்கச் சொன்னது?” சட்டென்று மூண்ட கோபத்தோடு சிடுசிடுத்தான் அவன்.
“சமைச்சா என்ன? அதவிடு. நல்லாவே இல்லையா?” என்றாள் மீண்டும். அவளை இழுத்து அருகில் அமர்த்தினான் அவன்.“அம்மா சொன்னவாவா?” அவள் முகம் பார்த்து மென்மையாகக் கேட்டான்.
“ஏன்? நானா ஆசைப்பட்டுச் சமைக்கக்கூடாதா?” அவள் சொல்ல மறுத்தபோதும் என்ன நடந்திருக்கும் என்று அவனால் ஊகிக்க முடிந்தது. “என்ர மனுசி முதல் முதல் சமைச்சது. நல்லாருக்கோ இல்லையோ, எனக்கு அது தேவாமிர்தம் தான்!” மனம் கனியச் சொன்னவன் அவளுக்கும் ஊட்டிவிட்டான்.
வாங்கிச் சாப்பிட்டவளின் முகமும் படு கண்ராவியாக மாறிப்போயிற்று! “என்னடா இவ்வளவு கேவலமா சமைச்சு வச்சிருக்கிறன்?”
இளநகை அரும்பிற்று அவன் முகத்தில். “நீ சொல்லுற அளவுக்கெல்லாம் மோசமில்லை. முருங்கைக்காய் நல்லா அவிஞ்சிருக்கு. கரையேல்ல. பருப்பும் நல்லா வந்திருக்கு. உப்பு உறைப்ப மட்டும் அளவா போட்டா சரி.” என்றான் சிரிப்புடன்.
“டேஸ்ட் பாக்கேக்க நல்லா இருந்த மாதிரித்தான்டா இருந்தது.” என்று சிணுங்கினாள் அவள்.
“பழகப் பழக சரியா வரும், விடு! நாங்க இருக்கிற நிலைமைக்கு சுவையான சாப்பாடா முக்கியம்?” அவளுக்கும் கொடுத்துத் தானும் உண்டு முடித்தான் அவன்.
“தெரிஞ்ச இடமெல்லாம் கேட்டுட்டு வந்திருக்கிறன் ஆரா. சொல்லுறன் எண்டுதான் சொல்லி இருக்கீனம். நாளைக்கு எங்கேபோய்க் கேக்கிறது எண்டே தெரியேல்லடி.” இரவின் மடியில் தன் மார்பில் சரிந்திருந்தவளின் கன்னம் வருடியபடி சொன்னான் நிகேதன்.
“கிடைக்கும். கவலைப்படாத. என்ன எங்கட அவசரத்துக்கு உடனடியா கிடைக்குதில்ல. மனதை சோர விடாத. கொஞ்ச காலத்துக்குக் கஷ்டம் தான். அதைத் தாண்டிட்டா பிறகு எல்லாம் ஓகே ஆயிடும். சரியா!” தன் கவலையை மறைத்துக்கொண்டு அவனுக்கு ஆறுதல் சொன்னாள் அவள்.
“ஒரே நாள்ல வாழ்க்கையே தலைகீழா மாறிப்போன மாதிரி இருக்கா?” மெல்லக் கேட்டான்.
அவளால் உடனே ஒன்றும் சொல்ல முடியவில்லை. அந்த ஒருகண அமைதி அவனை வதைத்தது. “இவனை ஏன்டா கட்டினன் எண்டு நினைக்கிறியா?” கேட்டு முடிக்க முதலே, “விசரன் மாதிரி கதைக்காத. சமைக்க உண்மையாவே எனக்குப் பிடிச்சிருந்தது. இனியும் விருப்பமாத்தான் சமைப்பன். ஆனா..” என்றவள் தயங்கிப் பின் தொடர்ந்தாள். “தண்ணி அள்ளிக் குளிக்கேக்கதான் அழுகை வந்தது. அதுவும் போகப் போகப் பழகிடும்!” என்றாள் சிரித்துக்கொண்டு.
மீண்டும் அவள் கரங்களைப் பற்றி மென்மையாக வருடி, முத்தமிட்டான். “இனி நான் வெளில போகமுதல் டாங்க்கை நிரப்பி விட்டுட்டுப் போறன். நீ குளிக்கிற நேரம் குளி.” என்றவன் நாள் முழுக்க அலைந்த களைப்பில் அவளை அணைத்தபடியே உறங்கிப் போனான்.
மாலை நன்றாகவே உறங்கி எழுந்த ஆரணி விழித்தே கிடந்தாள்.