அவள் ஆரணி 9 – 1

அன்றும் அவனுக்கு முதலே கண்விழித்துவிட்டாள் ஆரணி. முகம் கழுவிக்கொண்டு வந்து சுவாமிப் படத்தின் முன்னே நின்றாள். உள்ளத்தின் ஆழத்திலிருந்து, “அவனுக்கு வேலை கிடைச்சிடவேணும்.” என்று உருக்கமாக வேண்டிக்கொண்டாள். சமையலறைக்குள் எட்டிப் பார்க்க, அமராவதி அம்மா ரொட்டி சுட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது. கயலினி கல்லூரிக்குத் தயாராகிக் கொண்டிருந்தாள்.

தேனீருக்குத் தண்ணீரைக் கொதிக்க வைத்தபடி, “உங்களுக்கும் தேத்தண்ணி ஊத்தவா மாமி?” என்றாள், இயல்பாக. முகம் கடுக்கக் காதிலேயே விழாதது போன்று தன் வேலையைப் பார்த்தார் அவர்.

“உனக்கும் வேணுமா கயல்?” அங்குவந்த கயலையும் கேட்டாள்.

ஒன்றும் சொல்லாமல் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு விரைந்து மறைந்தவளை அப்படியே ஒதுக்கினாள். மாமியாருக்கு ஒரு கப்பை வைத்துவிட்டு, தட்டு ஒன்றில் தனக்கும் அவனுக்கும் எடுத்து வைத்தாள். இன்னொரு தட்டில் அவனுக்கு ரொட்டிகளோடு தேங்காய்ச் சம்பலையும் எடுத்துக்கொண்டு அறைக்கு நடந்தாள்.

நேற்றுப்போல் மாமி எதையாவது சொல்லி, அவன் சாப்பிடாமல் குடிக்காமல் போவதைக் காட்டிலும் அறையில் வைத்தே அவனுக்குக் கொடுத்துவிட்டால் பசியில்லாமல் வேலை தேடுவான். அவளும் நிம்மதியாக இருப்பாள். அதோடு, அறைக்குள் அவனும் அவளுமாய் உண்ட இரவுப்பொழுது மனதுக்கு வெகு நெருக்கத்தையும் மகிழ்ச்சியையும் உருவாக்கி இருந்தது.

அவனும் கண் முழித்திருந்தான்.

“குட்மோர்னிங் மச்சி!”

ஒற்றைப் பார்வையில் அவளின் தோற்றத்தை உள்வாங்கிய நிகேதன், “நான் சொல்லமாட்டன் போ!” என்றபடி புரண்டு படுத்துத் தலையணையில் முகத்தைப் புதைத்துக்கொண்டான்.

“ஏனடா?” காலையிலேயே கணவனின் ஊடல் காதலைக் கூட்டிற்று. அவனருகிலேயே அமர்ந்து அவன் கேசத்தோடு விளையாடினாள் ஆரணி.

“இந்த நைட்டி நல்லாவே இல்லையடி! இரவில மட்டும் என்ர உடுப்பையே போடு!” என்றான் அவன், ஆவலோடு.

திருடனுக்குத் திருட்டுக்குணம்!

“வெக்கம் கெட்டவனே! எழும்படா!” திட்டிவிட்டு எழுந்தவளை இழுத்து விழுத்தி, தன்னோடு அழுத்திக் கண்ணால் சிரித்தான் அவன். “போடடி! பாக்கவே கிக்கா இருக்கும்.” என்றான் ஆசையாக.

அவன் கையில் கரைந்த மேனியை கட்டுப்படுத்த முயன்றபடி, “கையை எடு, நிக்கி!” என்றாள்.

“நீ போடுறன் எண்டு சொல்லு, நான் எடுக்கிறன்!”

“கள்ள ராஸ்கல்! கதைக்கிறது ஒண்டு. செய்றது ஒண்டு! எடுடா கைய!” அவன் கையிலேயே ஒரு அடியைப் போட்டுத் தள்ளி விட்டாள், அவள்.

“ஆசையா வந்தா.. ஆகத்தான்! போடி! கிட்ட வராத!” என்று முகம் திருப்பியவனின் கைகளை எடுத்துத் தன்னைச் சுற்றிப் போட்டுக்கொண்டாள். அப்போதும் அவன் முறுக்கிக்கொள்ள, “என்னடா ஆகத்தான் துள்ளுறாய்? பிறகு வீட்டை விட்டே போய்டுவன். மாமியும் சந்தோசப்படுவா! நீயும் நிம்மதியா இரு!” என்றாள் அவள்.

நொடியில் அவன் விழிகள் கோபத்தில் சிவந்தது. “அந்தளவுக்குத் தைரியம் இருக்கா உனக்கு? முடிஞ்சா போய்க் காட்டு! அடிச்சு முறிச்சு மூலைல போட்டுடுவன்.” என்றவனின் படபடப்பு அவளுக்குள் இனித்துக்கொண்டு இறங்க ஒரு வேகத்துடன் அவன் முகமெங்கும் முத்தமிட்டாள்.

அவளை விசித்திரமாகப் பார்த்தான் நிகேதன். திட்டியதற்கு இத்தனை முத்தமா?

அவனது பார்வையின் பொருள் அவளுக்குப் புரியாமல் போகுமா என்ன? போ போ என்ற அமராவதி அம்மாவின் பேச்சினால் உண்டான காயம், அவனது கோபத்தில் ஆறிப்போன கதை அவனுக்குத் தெரியாதே!

“இப்ப என்ன இரவில சாரமும் சட்டையும் போடவேணும். அவ்வளவுதானே? போடுறன்! இனியாவது முறைச்சுக்கொண்டு இருக்காம எழும்பு!” என்றவள் அழுத்தமாய் அவன் கன்னத்தில் உதடுகளைப் பதித்துவிட்டு எழுந்தாள்.

குளித்துவிட்டுத் தயாராகி வந்தவனைக் கண்டு ஆரணியின் மனம் மயங்கியது. சாதாரண ஜீன்ஸ் ஷர்ட் தான். ஆனால் வெகு நேர்த்தியாக அணிந்திருந்தான். கண்ணாடியின் முன்னே நின்று தலைவாரியவன் அவள் பார்வையை உணர்ந்து, “என்ன?” என்று புருவமுயர்த்திக் கேள்வி கேட்டான்.

“வீட்டை விட்டு வெளில வந்து உன்னைக் கட்டினத்துக்கு நீ பெறுமதியான ஆள்தான் மச்சி!” என்றாள், கண்ணைச் சிமிட்டி!

சிரித்தான் நிகேதன். “உன்னையெல்லாம் எப்பிடியடி என்ர மாமனார் சமாளிச்சவர்?”

“அச்சுப் பிசகாம அவரை மாதிரியே பிறந்து வந்த என்னை அவருக்குச் சமாளிக்கத் தெரியாதா, என்ன?”

இருவருமாகச் சேர்ந்து உணவை முடித்துக்கொண்டு வெளியே வந்தனர்.

“இண்டைக்காவது எங்கயாவது வேலைய வாங்கப்பார். என்னவோ அரசாங்க உத்தியோகத்துக்கு போறவன் மாதிரி விடிய வெளிக்கிட்டுப் போறது. பின்னேரம் வாறது.” காலையில் எழுந்ததில் இருந்தே வெளியே வராத மகன், அவனுக்கு அறையில் வைத்தே உணவைக் கொடுத்து, சந்தோசமாய்ச் சிரித்த முகமாய் அவனோடு வெளியே வந்த அவள் என்று இருவரையும் பார்க்க எரிச்சல் உண்டாயிற்று அமராவதி அம்மாவுக்கு.

அதுவரை இருந்த இதமான மனநிலை மாறிவிட, வெளியே போகிறவனை நிம்மதியாகப் போக விடவே மாட்டாரா என்கிற எரிச்சலில், “போகிறவன நிம்மதியா அனுப்பி வச்சாத்தான் அவனும் உற்சாகமா வேலை தேடுவான்.” என்றாள் ஆரணி பட்டென்று.

“விடு! அவா ஏன் அதைப்பற்றியெல்லாம் யோசிக்கப் போறா.” உணர்ச்சியற்ற குரலில் உரைத்தான் நிகேதன்.

“ஓமடா! நல்லா அவளுக்கு வால் பிடி. சும்மாவே உனக்கு மரியாதை மருந்துக்கும் இல்ல. இதுல நீயும் தூக்கி வச்சு ஆடு. கேக்கிற சனம் சிரிப்பாச் சிரிக்கப்போகுது. கண்டறியாத பொம்பிளையைப் பிடிச்சுக்கொண்டு வந்திருக்கிறாய்!” என்றார் அவர்.

நிகேதன் வாய் திறப்பதற்குள் முந்திக்கொண்டிருந்தாள் ஆரணி. “நீங்களும் உங்கட மகனை ஒழுங்கா வளக்கேல்ல மாமி. கட்டின மனுசியை டி போட்டுக் கதைக்கிறான். நான் அவனுக்கு மரியாதை குடுக்கோணும் எண்டால் அவனையும் எனக்கு மரியாதை தரச் சொல்லுங்க! நீங்க சொல்லுறதைக் கேட்டு அவன் எண்டைக்கு எனக்கு மரியாதை தாறானோ அண்டைக்கு அவனுக்கு நானும் குடுக்கிறன்.”

“திருப்பித் திருப்பிக் கதைக்காம வாயை மூடு!” பொறுக்க முடியாமல் எரிந்துவிழுந்தார் அமராவதி. “எங்க இருந்தடா பிடிச்சனி இந்த அடங்காப்பிடாரிய? ஒரு வார்த்தைக்கு ஆயிரம் வார்த்த பதில் செல்லுவாள். ச்சேய்!” வெறுப்புடன் மொழிந்துவிட்டு போனவரின் வார்த்தைகளில் காயப்பட்டுப் போனாள் ஆரணி. விழிகள் கலங்கிவிடும் போலாயிற்று. நிகேதனின் பார்வையைக் கூட எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினாள்.

ஆத்திரமும் இயலாமையும் பொங்க, “இதுக்குத் தானேடி வேண்டாம் வேண்டாம் எண்டு சொன்னனான். கேட்டியா? இப்ப நல்லா அனுபவி!” என்று சீறிவிட்டுப் போனான் அவன்.

தன்னைச் சமாளித்துக்கொள்ள முடியாமல் தோட்டத்துக்கு நடந்தாள் ஆரணி. எத்தனை மோசமான வார்த்தைகள்? இதெல்லாம் அவளுக்குப் பழக்கமில்லாதவை. ஜீரணித்துக்கொள்ள மிகவுமே போராடினாள். தோட்டம் முழுவதும் நடந்தாள். நடக்க நடக்க மனம் கொஞ்சம் சமநிலைக்கு வந்தது.

முதல்நாள் தோய்த்துப் போட்டிருந்த அவனுடைய ஆடைகளை எடுத்து அயர்ன் பண்ணி அழகாக அடுக்கி வைத்தாள். என்னவெல்லாம் வைத்திருக்கிறான் என்று அறையைப் புரட்டினாள். வேறு வேலை இல்லை என்றதும்,
அவர்களின் அறைக் கதவைத் திறந்ததும் வருகிற இடத்தில் பூவரசம் தடிகள் கொண்டு எல்லை அமைத்து டெரெஸ் உருவாக்கும் பணியை ஆரம்பித்தாள்.

பகல் சமையலுக்கு நேரமானது. சமைப்பதற்கு ஏதுவாக அங்கே பெரிதாக ஒன்றுமில்லை. தயக்கத்தை உதறி அமராவதியிடம் வந்து, “ஏதாவது வாங்கப் போகவேணும் எண்டால் சொல்லுங்கோ மாமி நான் வாங்கிக்கொண்டு வாறன்.” என்று மறைமுகமாகக் கேட்டுப் பார்த்தாள்.

“காசிருக்கா? இருந்தா கோழியிறைச்சி ஒரு கிலோவும், வேற மரக்கறியும் பாத்து வாங்கிக்கொண்டு வா!” என்றார் அவர் அவளுக்கு மேலாக.

காசைப்பற்றி கவலையே இல்லாமல் வாழ்ந்து பழகியவளை தாக்குவதற்கு அந்த ஒற்றைக் கேள்வியே போதுமாயிருந்தது. பேசாமல் சமையலறைக்கு நடந்தாள். பெரிதாக ஒன்றுமே இல்லை. அரிசி, தக்காளிப்பழம், இரண்டு மூன்று வெங்காயம், கொஞ்சம் பச்சை மிளகாய் இப்படித்தான் இருந்தது. மிஞ்சிப்போனால் இன்றும் இன்னும் இரண்டு நாட்களுக்கும் இழுத்துப் பிடிக்கலாம். பிறகு?

பின்னுக்கு இருக்கிற முருங்கை மரமும், கத்தரிக்காய் செடியும் தான் உதவிக்கு வரவேண்டும்.

இருந்த தக்காளியில் கொஞ்சத்தை நாளைக்கு என்று எடுத்து வைத்துவிட்டு உருளைக்கிழங்குக் குழம்பு வைத்தாள். கரட்டினை அரிந்து வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளிப்பழம் சின்னச் சின்னதாக வெட்டி சம்பல் போட்டுவைத்தாள். அவ்வளவுதான். செய்யும்போதே இதை எப்படி அவன் சாப்பிடுவான் என்றுதான் யோசனை ஓடிற்று. நேற்றும் மரக்கறி(காய்கறி). இன்றும் அதேதான். நாளை சமையல் திட்டமும் தக்காளிப்பழக் குழம்புதான். மச்சம்(கறி) இல்லாது அவளுக்கே உள்ளுக்குப் போகாது. ஆண்பிள்ளை அவனுக்கு இறங்குமா?

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock