இதைப்பற்றி அவள் நிகேதனிடம் ஒன்றுமே வாய்விடவில்லை. நாட்கள் நகர நகர இருப்பதை வைத்துச் சமாளித்தாள். என்ன கொடுத்தாலும் கேள்வியே இல்லாமல் சாப்பிடுகிற அவனுடைய இயல்பு வேறு அவளை வதைத்தது.
கல்லூரிக்குச் செல்லும் கயலினிக்காக காலையில் மட்டும் நேரத்துக்கே எழுந்து இருக்கிற மாவில் ரொட்டியோ புட்டோ இடியப்பமோ செய்துவிடுவார் அமராவதி. அதை அவனும் உண்டுவிட்டுப் போவதுபோல் பார்த்துக்கொள்வாள் ஆரணி. அவளுக்கே அவளை எண்ணி ஆச்சரியம். எப்படியெல்லாம் மாறிப்போனாள்? காலம் எப்படியெல்லாம் மாற்றிவிடுகிறது. இந்தப் பத்து நாட்களில் அவனுக்கு வேலை கிடைத்த பாடேயில்லை.
அன்று சமைப்பதற்கு ஒன்றுமே இல்லை என்கிற நிலை. அதை எண்ணியே இரவிரவாக அவளுக்கு உறக்கமில்லை. காலையிலும் நிகேதனுக்கு முதல் விழிப்பு வந்திருந்தது. சத்தமில்லாமல் அவனுடைய பெர்சினை எடுத்துப் பார்த்தபோது கண்கள் குளமாகிற்று. ஒன்றிரண்டு பத்திருபது ரூபாய் தாள்கள் மட்டுமே கசங்கிப்போய் மடிந்து கிடந்தது. கைகாவலுக்கு என்று செலவே செய்யாமல் வைத்திருக்கிறான் போலும்.
அப்படியே அமர்ந்துவிட்டாள்.
வேலைக்குத் தானும் முயற்சித்துப் பார்க்கலாமா என்கிற யோசனை இப்போதெல்லாம் வரத்தொடங்கியிருந்தது. அதை அவனிடம் கேட்கத் தயங்கினாள். இப்போதெல்லாம் அவனிடம் வெகு கவனமாகத்தான் கதைக்கவேண்டி இருந்தது. அந்தளவில் தனக்குள் நலிவடைந்து போயிருந்தான் நிகேதன்.
அவனுடைய உற்சாகம், பேச்சு, சிரிப்பு எல்லாமே குறைந்து குறைந்து நின்றே போயிற்று! அவளிடம் எதையுமே காட்டிக்கொள்வதில்லை. ஆனால், தனக்குள் வைத்துக் குமைகிறான் என்று அவளுக்கு விளங்காதா? திசை திருப்ப எவ்வளவு முயன்றாலும் ஆரணி தோற்றுத்தான் போவாள்.
அன்றும், கயலினியின் தயவால் காலையில் நிகேதனுக்கு உணவைக் கொடுத்து நல்லபடியாக அனுப்பி வைத்தாள். சமையலறையை ஒதுக்கினாள். வீட்டைத் தூசு தட்டிக் கூட்டினாள். கழுவிப்போட வேண்டிய உடைகளை அலசிக் காயப்போட்டாள். இனி? கொஞ்சம் கொஞ்சமாக அவளே உருவாக்கிய டெரெஸ்சில் நிகேதனைக் கொண்டு மரக் குற்றிகளால் அமைத்த பெஞ்சில் வந்து அமர்ந்துகொண்டாள். செய்வதற்கு வேலைகள் என்று எதுவுமில்லை. இன்னொரு ஜீவன் அருகிலே இருந்தும் பேச்சுத் துணைக்குக் கூட ஆளில்லா தனிமை. சும்மா இருப்பதே ஒருவித அழுத்தத்தை உண்டாக்கிற்று.
அமராவதியிடம் நிச்சயம் பணம் இருக்கும். ஆனாலும் அவள் வந்த நாளில் இருந்து வீட்டுக்கு ஒரு குண்டுமணி கூட வாங்கிப் போடவில்லை. ஏன் இப்படி? அவனை வேலைக்குப் போக வைத்தே ஆகவேண்டும் என்கிற பிடிவாதமா? அதில் தவறில்லை. ஆனால்..
கயலினி சைக்கிளை நிறுத்திவிட்டு வேகவேகமாக வீட்டுக்குள் நுழைவது தெரிந்தது. பசியோடு போகிறாளோ? எப்போதுமே வந்ததும் வராததுமாக உடைமாற்றிவிட்டுச் சாப்பிடுவதுதான் அவள் வழக்கம். இன்று? இருக்கிற மாவில் ரொட்டியாவது சுட்டுக் கொடுப்போம் என்று எழுந்து வந்தவளின் நடை அவர்களின் அறையின் முன்னே நின்றது!
ஏதோ வாசனை.. சாப்பாட்டு வாசனைதான்! இதுதானா இன்று கயலினி வேகவேகமாக வீட்டுக்குள் நுழைந்ததன் ரகசியம். கசந்த புன்னகை ஒன்று இதழோரம் வழிந்தது.
மீண்டும் பழைய இடத்திலேயே அமர்ந்துகொண்டாள். அவர்கள் வயிற்றை நிரப்பிக் கொண்டார்கள். அவன் வருவானே? அவனுக்கு என்ன கொடுப்பது? மகளுக்குக் கடையில் வாங்கிக் கொடுத்த மாமியார் மகனுக்கு என்ன செய்கிறார் என்று பார்ப்போமே? இன்று இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்கிற வீம்புடன் அமர்ந்துகொண்டாள்.
நிகேதனும் வந்தான். அவளின் வீம்பை முந்திக்கொண்டு அவனது பசிக்கும் வயிறு அவளைப் பந்தாடியது. குளித்துவிட்டு வந்து, “சாப்பிட என்ன இருக்கு ஆரா?” என்று கேட்டுக்கொண்டு சமையலறை நோக்கி நடந்தான் அவன்.
அப்படியே நின்றுவிட்டாள் ஆரணி. இன்று என்று பார்த்து வாய்விட்டுக் கேட்கிறானே. என்ன கொடுக்கப் போகிறாள்?
வெறும் பாத்திரங்களைப் பார்த்துவிட்டு ஏமாற்றத்தோடு திரும்பப் போகிறவனின் பசி நிறைந்த விழிகளைச் சந்திக்கும் தெம்பற்று கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள் ஆரணி.
வெறும் பாத்திரங்களைக் கண்டவன் அதிர்வோடு அவளைத் திரும்பிப் பார்த்தான். வீட்டின் நிலை மிகப் பயங்கரமாகத் தாக்கியது. அதைவிட அவள் நிற்கும் கோலம்..
வேகமாக அவளை நெருங்கி, “லூசு! விடு, நான் சாப்பிட்டன். சும்மாதான் கேட்டனான். நீ ஏதாவது சாப்பிட்டியா?” என்றான்.
வெறும் வயிறு பசியில் காந்த மறைத்துக்கொண்டு சமாளிக்கிறான். அவளால் அழுகையை அடக்கவே முடியவில்லை. வாயைக் கையால் பொத்திக்கொண்டு ஓடிப்போய்க் கட்டிலில் விழுந்தவளின் உடல் அழுகையில் குலுங்கியது!
தான் சிறப்பாக நடிக்கவில்லை என்று அவனுக்கும் புரிந்தது. இயலாமை கோவமாக உருவெடுக்க, “இதுக்குத்தானடி என்னைக் கட்டாத கட்டாத எண்டு சொன்னன். கேட்டியா? இதையெல்லாம் அனுபவிக்க வேணும் எண்டு உனக்கு என்ன தலையெழுத்தா?” என்று சீறினான்.
வேகமாக எழுந்து அவன் வாயை மூடினாள் ஆரணி.
“இப்படியெல்லாம் கதைக்காத நிக்கி. நாங்க பிரிஞ்சு போயிருந்தா எனக்கு நீயும் உனக்கு நானும் கிடைச்சிருக்க மாட்டோமேடா. அத நினை. எனக்கு நீ பக்கத்தில இருக்கிற வரைக்கும் இதெல்லாம் ஒரு விசயமே இல்ல. என்னை விட்டுட்டு மட்டும் போயிடாத நிக்கி. செத்துடுவன்.” என்றாள், அழுகையில் துடிக்கும் இதழ்களோடு!
அவளை இழுத்துத் தன் மார்போடு அணைத்துக்கொண்டான் நிகேதன். “நீ இல்லாம எனக்கு மட்டும் என்னடி வாழ்க்கை இருக்கு? உன்ன விட்டுட்டு நான் எங்க போக?” என்றவன் சற்று நேரத்து அமைதியின் பின், “கிடைக்கிற வேலைக்கே போகட்டா ஆரா?” என்றான் முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்டு.
மனம் கலங்கத் தன்னவனைப் பார்த்தாள் ஆரணி. படிப்பும் பட்டமும் பரமபதத்தின் நீண்ட ஏணியைப் போன்று தன்னைக் கொண்டுபோய் உச்சியில் நிறுத்திவிடும் என்று நம்பியவன். அது நடவாமல் தொடர் தோல்விகளும் ஏமாற்றமும் அவமானமும் மட்டுமே கிட்டுவதில் அவன் மெல்ல மெல்ல நொறுக்கிக்கொண்டிருப்பதைக் கண்ணீருடன் கண்டாள். இப்போதே அவனளவில் ஒன்றுமே இல்லாத வேலைகளுக்குத்தான் கேட்டுக்கொண்டு இருக்கிறான். இதைவிடவும் இறங்குவது என்றால்..
“நம்பிக்கையைத் தளர விடாத நிக்கி! படிச்ச படிப்புக்குக் கட்டாயம் வேலை கிடைக்குமடா. இப்ப என்ன சாப்பாட்டுக்கு காசில்லை, அவ்வளவுதானே. இந்தா இதைக் கொண்டுபோய் அடகுவை. இல்ல வித்திட்டு வா. நான் சமாளிப்பன்!” என்று, தாலிக்கொடியைக் கழற்றிக் கொடுத்தாள்.
அப்படியே அமர்ந்துவிட்டான் நிகேதன். அவளின் தந்தை போட்டுவிட்ட நகைகளை தாலிக்கொடியாக மாற்றியதையே இன்னும் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சொந்தக் காசில் தாலிகூட கட்டமுடியாமல் போயிற்றே என்று குமைந்துகொண்டு இருக்கிறான். அப்படி இருக்கையில் அதையும் விற்றுச் சாப்பிடுவது என்றால்? அதையே வெறித்தான். தன்னை நம்பி வந்தவளுக்குக் குறைந்த பட்சமாக மூன்றுவேளை உணவு கூடக் கொடுக்க முடியவில்லை. அவளின் அப்பா இப்போது அவனைப் பார்த்தால், எவ்வளவு துச்சமாக நோக்குவார்?
“நீயும் என்னை வக்கில்லாதவன் எண்டு நினைச்சிட்டியாடி?” என்றான் விரக்தியோடு.
துடித்துப்போனாள் அவள். “நான் அப்பிடி நினைப்பனா நிக்கி? உனக்கு என்னைத் தெரியாதா?”
அதற்கு அவன் பதிலிறுக்கவில்லை. தன்னளவிலேயே சுயமதிப்பிழந்து தனக்குள் வெந்துகொண்டிருந்தான்.
“நாளைக்கு வா, அப்பாடா பிரென்ட் ஒருத்தரத் தெரியும். அவரின்ர கம்பனில வேலை கேப்பம். கட்டாயம் கிடைக்கும்.” என்றாள் அவள்.
“ப்ச்!” எல்லாமே கசந்து போயிற்று அவனுக்கு. சிபாரிசும் பணமும் தான் வேலைகளை வாங்கித்தரும் என்றால் எதற்குப் படிப்பு? அதைவிட, தன் அப்பாவை எதிர்த்துக்கொண்டு வந்தவள் அவரின் நண்பரிடம் போய் நிற்பதா? எந்தப் பக்கத்தாலும் அவனுடைய தன்மானமும் சுயகௌவரவமும் தான் அடிவாங்கியது!
அவனுடைய மறுப்பில் அவளுக்குச் சின்னதாகக் கோபம் வந்தது. “டேய் லூசா! இது சிபாரிசு இல்ல. அவரிட்ட நாங்க உதவிக்கும் போகேல்ல. உனக்கு இருக்கிற தகுதியை அவருக்குச் சொல்லப்போறம். அவரை நேரடியா சந்திக்க மட்டும் தான் நான். மற்றும்படி உன்ர தகுதிக்குத்தான் உனக்கு வேலை கிடைக்கும்.” என்று அவள் பெரிதாக விளக்கியபோதும், “பாப்பம்!” என்றுவிட்டு அவளின் தாலிக்கொடியோடு கடைக்கு நடந்தான் நிகேதன்.