அவள் ஆரணி31 – 1

புதுக் கணவன். முதல் சண்டை. கலங்கிப்போய் அமர்ந்திருந்தாள் கயலினி. ராகவன் மலை இறங்குவேனா என்று நின்றான்.

“அங்க கேக்க முதல் என்னட்ட ஒரு வார்த்த கேக்கவேணும் எண்டு யோசிக்க மாட்டியா நீ? உன்ர அண்ணாவும் அண்ணியும் என்ன நினைப்பினம் என்னைப்பற்றி? ச்செய்!” என்றான் சினத்துடன்.

கயலினியின் விழிகள் மளுக்கென்று நிறைந்துபோனது. “நானும் இப்பிடி பிரச்சினை பெருசாகும் எண்டு நினைக்கேல்ல. உங்களுக்கு விருப்பம் எண்டுறதாலதான் கேட்டனான். சொறி.” என்றாள் தழுதழுத்த குரலில்.

அப்போதும் அவன் கோபம் ஆற மறுத்தது. ‘பரவாயில்ல விடுங்கோ’ என்று அவன் முகம் பாராமல் ஆரணி சொன்ன விதமே அவன் முகத்தைக் கருக்க வைக்கப் போதுமாக இருந்தது. எழுந்து கதவைத் திறந்துகொண்டு டெரெசுக்கு வந்தான். அதுகூட ஆரணியைத்தான் நினைவூட்டியது. அந்தப் பெண் பார்த்துப் பார்த்து வடிவமைத்த ஒரு இடத்தை அவன் என்னவோ வலுக்கட்டாயமாக அபகரித்துக்கொண்ட உணர்வு.

அப்படியே அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்துகொண்டான். இதே பெஞ்சில் ஃபோன் பார்த்தபடியோ தேநீர் குடித்தபடியோ இல்லை சும்மா அமர்ந்தபடியோ ஆரணியை அடிக்கடி காணலாம். சில நேரங்களில் கணவனும் மனைவியும் அமர்ந்திருப்பதை பார்க்கையில் மிகுந்த அழகாயிருக்கும். “என்னடியப்பா, புதுசா கலியாணம் நடந்தது எங்களுக்கா அவேக்கா(அவர்களுக்கான)?” என்று அவனே பலமுறை பகிடியாகக் கேட்டிருக்கிறான். அப்படி அவர்கள் விரும்பி வாழ்ந்த இடத்தைப்போய்.. ப்ச்! நினைக்க நினைக்கத் தரமற்ற காரியமொன்றை ஆற்றிவிட்டதுபோல் மனம் கூசிற்று.

அவனருகில் வந்து அமர்ந்தாள் கயலினி. மெல்ல அவன் தோளைத் தொட்டாள். “இன்னும் கோபமா?” என்றாள் தயக்கத்துடன். திரும்பிப் பார்த்தான். அழுததில் முகமெல்லாம் சிவந்து கண்கள் இன்னும் கலங்கியபடி இருந்தது.

புது மனைவியிடம் ஒரு அளவு தாண்டி கோபத்தை இழுத்துப்பிடிக்கவும் முடியவில்லை. “தயவு செய்து இனியாவது கவனமா இரு. என்னை இப்பிடி சங்கடப்பட வைக்காத.” என்றான் தன்மையாக.

அவன் கோபத்தை விடுத்துப் பேசியதே போதுமாக இருக்க, “இனி இல்ல.” என்றாள் அவசரமாக. சிறு முறுவலுடன் அவன் கை மனைவியின் இடையை வளைத்தது. சந்தோசமாகக் கணவனின் தோளில் சாய்ந்துகொண்டாள் கயலினி.

அறை மாறியதில் நிகேதனுக்கு உடலைக் காட்டிலும் மனதுதான் சுமக்க முடியாத பாரத்தைச் சுமந்து நன்றாகவே களைத்துப் போயிருந்தது. களைப்புத் தீர கிணற்றடியில் நன்றாக அள்ளிக் குளித்துவிட்டு வந்து பார்க்க, ஆரணி கட்டிலில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டு இருந்தாள்.

அவளுக்கும் அவன்தான் தண்ணீர் அள்ளிக் கொடுத்திருந்தான். தலைக்குக் குளித்தவள் தலையைக்கூடத் துடைக்கவில்லை என்று தெரிந்தது. வாங்கி வந்த உணவுப் பார்சல் பிரிக்கப்படாமல் அப்படியே மேசையில் கிடந்தது.

அவளருகில் சென்று நின்றான். ஆழ்ந்த உறக்கத்தின் பலனாக அவளின் மார்பு மேலும் கீழும் ஒரு லயத்துடன் ஏறி இறங்கிக்கொண்டு இருந்தது. கோபம் கொடுத்த பிடிவாதத்துடன் முழு வேலையையும் முடித்துவிட்டுத்தான் ஓய்ந்தாள். அதில் நிச்சயம் நன்றாகக் களைத்துப் போயிருப்பாள். அதனால்தான் இப்படி உறங்குகிறாள்.

மனதில் பாரமேற அவளருகில் அமர்ந்தான். அவள் எழுந்துவிடாதபடிக்கு மென்மையாகத் தலையை வருடினான். முடியை முடிந்தவரைக்கும் விரித்துவிட்டான். அவள் அவனோடு சண்டையிட்டிருந்தால் கூட சமாளித்துக்கொள்வாள் என்று நம்பி வேலையைப் பார்க்கப் போயிருப்பான். மாறாக, கொந்தளித்த கொந்தளிப்புக்கு தண்ணீர் தெளித்த பாலைப்போல் அடங்கிய விதம் அவனுக்குள் கிலியைத்தான் உண்டாக்கிற்று. அவனுடைய கோபம், அவனுடைய அதட்டல் அவளுக்குள் இவ்வளவு பெரிய மாறுதலைக் கொடுக்கிறதா என்ன? தன் ஹயரையெல்லாம் பார்த்துக்கொள்ளும்படி சுகிர்தனிடம் சொல்லிவிட்டு வீட்டிலேயே இருந்துகொண்டான்.

அவனாலேயே அந்த அறைக்குள் இயல்பாக நுழைய முடியவில்லை. அவனைச் சுற்றி இருந்த நான்கு சுவரும் அந்நியமாய்த் தோன்றிற்று. ஆழ்மனம் பக்கத்து அறைக்கு ஓடிவிட ஏங்கியது. அவனுக்கே இப்படி என்றால் அவளுக்கு?

உறவுகளின் நெருக்கடி. சுற்றிவரக் கடன். அவளுடைய சம்பளத்தில் தான் மொத்தக் குடும்பத்தின் மாதச் செலவும் இன்னுமே போய்க்கொண்டிருக்கிறது. சொல்லிக்கொள்ளும் படியான வாழ்க்கையும் இல்லை. ஆனாலும் அவன் முகம் பார்த்து மலர்கின்ற தாமரை அவள். அவள் மீதான நேசம் பெருக குனிந்து அவளின் நெற்றியில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தான்.

‘உன்ன சந்தோசமா வச்சிருக்கத்தான் எனக்கும் ஆசையா இருக்கு ஆரா. ஆனா ஒவ்வொரு முறையும் என்னாலேயே காயப்பட்டு நிக்கிறாய் நீ. என்ன செய்யப்போறன் எண்டு எனக்கே தெரியேல்லடி.’ அவளின் நாயகனாக மட்டுமே இருக்கத்தான் அவனும் பிரியப்படுகிறான். ஆனால், அவன் ஒரு பெண்ணுக்கு அண்ணா, அன்னைக்கு மகன் என்பதும் நிதர்சனமாயிற்றே.

பரிதவிக்கிற மனதுக்கு அவளின் அருகாமை வேண்டுமாயிருக்க அவளருகில் சரிந்தான். வயிற்றில் பசி தெரிந்தாலும் அவள் தொடாத உணவு அவனுக்கும் பிடிக்கவில்லை.

மூடிய விழிகளுக்குள் காட்சிகள் அனைத்தும் வந்து வந்து போயின. அவளாவது கோபப்படுகிறாள். அவனிடம் கொட்டி விடுகிறாள். அவன்? அவளையும் சமாளித்து, அவளின் கோபதாபங்களையும் தாங்கிக்கொண்டு, தன் மனதில் பொங்குகிற உணர்வுகளையும் அடக்கிக்கொண்டு, முதுகில் கடன் மூட்டையைச் சுமந்துகொண்டு, வாகனத்தோடு வாகனமாக ஓடிக்கொண்டே இருக்கிறான்.

அறையை விட்டு போ என்ற கயல் வீட்டை விட்டு போ என்று சொல்ல எத்தனை நாட்களாகும்? குழந்தைக்காக ஏங்கும் ஆரா. இந்தக் கடனெல்லாம் எப்போது முடியும்? அண்ணி என்று அழைக்காமல் நீ யாரோ என்று பிரிவினை காட்டும் கயல். ஆரணியை விலக்கியே வைத்திருக்கும் அம்மா. இப்படிப் பலதும் மனடைக்குள் ஓடிக்கொண்டு இருந்தது. எவ்வளவு நேரம் கடந்ததோ? ஏதோ ஒரு உந்துதலில் திரும்பி அவளைப் பார்த்தான். விழித்திருந்து அவளும் அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.

இருவரின் பார்வையும் இரண்டறக் கலந்தன. நிகேதனுக்கு எதைப் பேசவும் பயமாய் இருந்தது. அவளே ஆரம்பிக்கட்டும் என்று காத்திருந்தான்.

“அந்தளவுக்கு உன்ர ஆரா பொல்லாதவளா நிக்கி?”

பதில் சொல்லாமல் அவளின் விழிகளுக்குள் ஆராய்ந்தான். கேலி போன்று சிறு சிரிப்புடன் கேட்டாலும் அலைப்புறுகிறாள் என்று அவள் முகமே காட்டிக்கொடுத்தது. அவளை நெருங்கிப் படுத்தான். அவளையும் தன்னிடம் இழுத்தான். உதட்டினில் ஆழ்ந்த முத்தம் ஒன்றைக் கொடுத்தான். அவள் விழிகள் மெல்லக் கலங்கிற்று. ‘கூடாது!’ பார்வையால் அதட்டியபடி அவளின் முகத்தைத் தன் மார்போடு சேர்த்தணைத்தான். “என்ர ஆராவைப் பற்றி உனக்கு என்னடி தெரியும்? அவளைக் குறை சொல்லாத. சொன்னியோ என்னட்ட நல்லா வாங்கிக் கட்டுவாய்!” என்றான் கோபக்குரலில்.

அவள் முகத்தில் சிறு முறுவல் அரும்பிற்று.

“அவள் அவ்வளவுக்கு நல்லவளா?” அவன் மார்பிலிருந்து முகத்தை மட்டும் விலக்கி அவனைப் பார்த்துக் கேட்டாள்.

“ம்ம். நான் எண்டா அவளுக்கு உயிர்.”

அவளின் முறுவல் விரிந்தது. “அவள் உன்ன கொடுமை செய்ய இல்லையா?”

“ம்ஹூம்! நான் தான் கோபப்பட்டு அவளை நோகடிக்கிறன்.” எனும்போது எவ்வளவு முயன்றும் முடியாமல் அவன் குரல் கமறிற்று. தன் அணைப்பை இறுக்கினான். ஆரணிக்கும் தொண்டைக்குள் என்னவோ அடைத்துக்கொண்டது.

“உனக்கு அவளைப் பிடிக்குமோ?”

மெல்லிய குறுநகை இலங்க, “இல்லயே.” என்றான் அவன்.

அவள் முறைத்தாள். “நீ அவளை லவ்வுறியா?” முகம் முழுக்க ஆவலை நிரப்பிக் கேட்டவளை மூச்சு முட்டுகிற அளவுக்குக் கட்டிக்கொண்டு, “நானா? அவளையா? சேச்சே!” என்று அவன் சொல்லி முடிக்க முதலே, “ராஸ்கல்! என்ன தைரியம்டா உனக்கு. என்னை லவ்வாம வேற எவளை லவ்வ போறியாம்?” என்று கேட்டுக் கேட்டு அடிக்கத் தொடங்கியிருந்தாள் அவள். முகமெல்லாம் சிரிப்பில் மின்ன அவளைத் தன் வசமாக்கினான் அவன்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock