உறவில் ஒருவரின் மகள் பூப்பெய்துவிட்டாள் என்று பார்த்துவரச் சென்றிருந்தார் அமராவதி. மாலை வீடு திரும்பியபோது தலைகீழாக மாறிப்போயிருந்த வீட்டு நிலையைக் கண்டு அதிர்ந்துபோனார். நடந்ததை கயலினி மூலம் அறிந்துகொண்டபோது கயலினி நடந்துகொண்டதில் அவருக்கும் உடன்பாடு இல்லைதான். என்றாலும் அவளைக் கடிகிற அளவுக்குப் பெரிதாகத் தோன்றாதபடியால் அப்படியே விட்டுவிட்டார். இரவு வெளியே வந்த ஆரணி, நிகேதனின் முகங்கள் வேறு சாதாரணமாக இருக்க அது அப்படியே முடிந்து போயிற்று.
இருவருமே தம்மைத் தாமே தேற்றிக்கொண்டனர். ஆனாலும் பழைய சந்தோசம், நிம்மதி, தெளிந்த நீரோடையான வாழ்க்கை தொலைந்து போயிற்று. ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத அழுத்தம். அந்த வீடு பிடிக்கவில்லை. அந்த அறை பிடிக்கவில்லை. அந்த வாழ்க்கை பிடிக்கவில்லை. தம் கடன் நெருக்கடி தீருகிறவரை வேறு வழியில்லை என்கிற அந்த நிலை இன்னுமே பிடிக்கவில்லை.
அன்று, வேலை முடிந்து ஆரணி வீடு வந்தபோது ராகவனோடு ராகவனின் குடும்பத்தினரும் அங்கே அமர்ந்திருந்தனர். என்னவோ என்று உள்ளே ஓடினாலும் முகம் மலர அவர்களை வரவேற்றுவிட்டு போய் முகம் கழுவி, உடைமாற்றிக்கொண்டு வந்தாள்.
“விசயம் தெரியுமோ, ஆரணி?” என்று கேட்டார் ராகவனின் அம்மா.
“என்னது? இல்லையே. நான் இப்பதானே வேல முடிஞ்சு வாறன்.” என்றாள், கயல், அமராவதி இருவரையும் கேள்வியாகப் பார்த்துக்கொண்டே.
“எங்கட கயலும் ராகவனும் கெதியில(விரைவில) அம்மா அப்பா ஆகப்போகினம். நாங்க புரமோஷன் வாங்கப்போறம். நீயும் நிகேதனும் மாமா மாமி ஆகப்போறீங்க.” என்றார் அவர் முகமெல்லாம் சிரிப்பாக.
நொடியில் பூவாக முகம் மலர, “வாவ்! சூப்பர் கயல். சந்தோசமா இருக்கு.” என்று அவளை அணைத்துக்கொண்டாள். “வாழ்த்துகள் ராகவன். எத்தனை மாதமாம்? டொக்டரிட்ட போனதா? என்ன சொன்னவர்?” என்று ஆர்வத்தில் தன்னை மறந்து கேள்விகளாகக் கேட்டாள்.
அதற்கான பதில்களைக் கொடுத்துவிட்டு, “நீங்க ரெண்டுபேரும் என்ன மாதிரியம்மா? ஏதும் பிளானில இருக்கிறீங்களா? கட்டி அஞ்சு வருசத்துக்குக்கிட்ட ஆகுதே. காலம் இருக்குதானே எண்டு தள்ளிப் போடாதீங்கோ. காலா காலத்துக்கு அதது நடக்கவேணும்.” என்று இதமாக எடுத்துச் சொன்னார் அவர்.
வாயைத் திறந்துகேட்கவில்லையே தவிர, அவளைப் பார்த்த அமராவதியின் முகத்திலும் அதே கேள்விதான். இதற்கு என்ன பதில் சொல்வது? ஒன்றும் சொல்லாமல் அடைத்த தொண்டையை விழுங்கிக்கொண்டு ஒரு சிரிப்பை முகத்தில் ஓட்ட வைத்துக்கொண்டு பேசாமல் நின்றாள்.
அதற்குமேல் அதைப்பற்றிப் பேசி அவர் அவளைச் சங்கடப்படுத்தவில்லை. ஆனால், இயல்பான ஒற்றைக் கேள்வி அவளைச் சுருட்டிப்போட்டது.
விடயமறிந்த நிகேதன் ஒன்றும் சொல்லாமல் தன்னுடையவளை அணைத்துக்கொண்டான். வார்த்தைகளற்ற அந்த அன்பு அவளை ஆற்றுப்படுத்தியது. இருந்தும், “டொக்டரிட்ட போவமா?” என்று கலக்கத்துடன் கேட்டாள்.
அந்தக் கேள்வியே அவனை நொறுக்கியது. “இப்ப வேண்டாம்.” என்றான் தொண்டை அடைக்க. அதற்கு மேல் பேச இருவருமே பயந்தனர்.
ராகவன் கயலினி தம்பதியர் மிகுந்த மகிழ்ச்சியில் மிதந்தனர். தம் இல்லறத்துக்குக் கிடைத்த பரிசை கொண்டாடி மகிழ்ந்தனர். அன்று காலை உணவின்போது, “கயலுக்கே ஒரு பிள்ளை வரப்போகுது. நீ இன்னும் இப்பிடியே இருந்து என்ன செய்யப்போற தம்பி? பிள்ளை தங்க இல்லை எண்டால் கொண்டுபோய்க் காட்டு. உனக்கும் வயசு போய்க்கொண்டு இருக்கு.” என்றார் அமராவதி.
நிகேதன் வேகமாக நிமிர்ந்து ஆரணியைத்தான் பார்த்தான். பெரும் பாடுபட்டு அவன் அவளைத் தேற்றி வைத்திருக்க மீண்டும் ஆரம்பிக்கிறாரே இந்த அம்மா என்று அவர் மீதுதான் கோபம் எழுந்தது. ஒன்றும் சொல்லாது உணவில் கவனம் செலுத்தினான்.
அமராவதியின் முகம் சுருங்கிப் போனது. “அதுசரி! நான் சொன்ன எத கேட்டிருக்கிறாய் இத கேக்க. எல்லாரும் பிள்ளை குட்டியோட நிக்கேக்க நீ வெறும் கையோட நிப்பாய். அப்ப தெரியும்.” என்றுவிட்டு எழுந்துபோனார் அவர்.
அப்போதுதான் எழுந்துவந்த கயல், தமையன் இன்னுமே புறப்படவில்லை என்றதும் அவனிடம் பேச வந்தாள்.
“அண்ணா, பிள்ளையும் பிறந்தா இந்த வீடு இன்னுமே காணாது தானே. அதால அட்டாச் பாத்ரூமோட ஒரு அறை இந்த வீட்டோட சேர்த்து கட்டுவமா? அப்பிடி கட்டினா நாங்க அங்க போயிடுவம். நீங்க திரும்பி இந்த அறைக்கே வந்திடலாம். அம்மாக்கும் அறை வரும். என்ன நினைக்கிறீங்க இதப்பற்றி?”
அவன் பதில் சொல்லமுதல் ஆரணி முந்திக்கொண்டாள். “இத நீ ராகவனோடதான் கதைக்க வேணும் கயல். நிக்கிட்ட கதைச்சுப் பிரயோசனம் இல்ல. எவ்வளவு செலவாகும் எண்டு ரெண்டுபேருமே ஒரு கணக்கு போடுங்கோ. அந்தக் காசு தயார் எண்டா வேலைய ஆரம்பிங்கோ. இது உனக்குச் சீதனமா தந்த வீடு. இதுல என்ன செய்றதா இருந்தாலும் நீயும் ராகவனும் சேர்ந்ததுதான் செய்ய வேணும். நிக்கிக்கு இன்னும் கடன் இருக்கு. இன்னும் வட்டி கட்டுறான். இதுல இன்னொரு செலவு செய்யவே ஏலாது.” என்றாள் நேராக.
கயலுக்கு ஒருமாதிரி ஆகிப் போயிற்று. “நான் காசு கேக்க இல்ல அ..ண்ணி. உங்களுக்கும் அறை மாறினதுல கோபம் தானே. அதுதான் அப்பிடிச் செய்தா என்ன எண்டுதான் கேட்டனான்.” எனும்போதே, என்னவோ தமையனிடம் அவள் வறுகப்(பிடுங்க) பார்ப்பதுபோல் சொல்கிறாரே என்று அவள் விழிகள் கலங்கிப் போயிற்று.
தாய்மை அடைந்திருந்த மகள் கண்கள் கலங்கியதும் தாங்க முடியவில்லை அமராவதிக்கு. “அப்பிடியே கேட்டாத்தான் என்ன. அவன் உனக்கு அண்ணா. உனக்கு இல்லாத உரிமையா?” என்றார் தன்கருத்தாக.
ஆரணியும் விடவில்லை. “அவளுக்கு உரிமை இருக்குத்தான் மாமி. அதுக்காக அவளுக்கு மட்டுமே செய்துகொண்டு இருக்கவும் ஏலாது!” என்றுவிட்டு கயலிடம் திரும்பினாள். “இங்க பார் கயல். நீ கேக்க இல்லைதான். ஆனா எங்களை எதிர்பாக்காத எண்டுறதுக்காகத்தான் நானும் எங்கட நிலையச் சொன்னனான். நிக்கியும் பாவம். நீயே பாக்கிறாய் தானே. ஓய்வே இல்லாம ஓடிக்கொண்டு இருக்கிறான்.” என்று தங்கள் நிலையை எடுத்துச் சொன்னாள், அவள்.
“இப்ப என்ன சொல்ல வாறீங்க? என்னாலதான் அண்ணா ஓடுறார் எண்டு குத்திக் காட்டுறீங்களா? இதுக்கு நீங்க சும்மாவே இருந்திருக்கலாம் அண்ணா. இனி எனக்கு ஒவ்வொரு நாளும் மனம் குத்தப்போகுது.” என்று கண்ணைக் கசக்கியவளைக் காண நிகேதனுக்குத் தலையை வலித்தது.
“இப்ப நீ என்னத்துக்கு அழுகிறாய்? பேசாம வந்து இரு. அதெல்லாம் அண்ணா பாப்பான்!” என்ற அன்னையின் பேச்சு வேறு எரிச்சலூட்டியது. என்ன வாழ்க்கை இது? தினம் தினம் சண்டையும் சச்சரவும். நிம்மதியே கிட்டாதா?
“அவன் பாக்கமாட்டான் மாமி. பாக்கேலாது..” என்றவளை மேலே பேசவிடாமல், “ஆரா பிளீஸ் பேசாம போ!” என்றான் நிகேதன். எப்போதுமே அவனை நடுவில் வைத்துக்கொண்டு வீட்டுப் பெண்கள் பிடிக்கிற சண்டைகளில் எல்லாமே வெறுத்தது அவனுக்கு.
எப்போதுமே அவன் தன்னையே அடக்குகிறான் என்பதில் ஆரணிக்கும் கோபம் வந்தது. “நான் கதைச்சத்தில என்ன பிழை எண்டு இப்ப நீ என்னோட கோபப்படுறாய் நிக்கி? இன்னொரு செலவு செய்ய உன்னால ஏலுமா? அத சொன்னது பிழையா?” என்று நியாயம் கேட்டாள்.
“ஏய்! போடி உள்ளுக்கு. வந்திட்டா விளக்கமும் வியாக்கியானமும் சொல்லிக்கொண்டு!” என்று இருந்த விசருக்கு அவளில் எரிந்து விழுந்தான் அவன்.
“போகமாட்டன்! நீ காரணம் சொல்லு! சும்மா சும்மா நீ அதட்டுறதும் நான் வாய மூடுறதும் சரியில்ல நிக்கி. நான் கதைச்சத்தில என்ன பிழை எண்டு சொல்லு நீ.” என்றவளைப் பார்த்த அமராவதிக்கு பொறுக்கவே முடியவில்லை.
“என்ன பொம்பிளையடா இவள்? நீ ஒண்டு சொன்னா ஆயிரம் திருப்பிக் கதைக்கிறாள். அந்தப் பெடியன்ர காதில விழுந்தா எங்கட குடும்பத்தைப் பற்றி என்ன நினைக்கும்? உன்னைப்பற்றி என்ன நினைக்கும்?” மருமகனின் காதில் இதெல்லாம் விழுந்து மகளின் வாழ்வு பிரச்சனையாகிவிடுமோ என்று நடுங்கியது அவர் உள்ளம்.
“அப்பிடி நினைக்க என்ன கிடக்கு? நான் கதைச்சத்தில என்ன பிழை?” என்று அவளும் திருப்பிக் கதைக்கையிலேயே கிணற்றடியிலிருந்து ராகவன் வருவது தெரிந்தது.
நாற்காலியை தள்ளிக்கொண்டு எழுந்த நிகேதன் வேகமாக அவளை இழுத்துக்கொண்டுபோய் அறைக்குள் தள்ளினான்.
“வாய மூடு எண்டு சொன்னா வாய மூடப்பழகு. எல்லா நேரமும் எண்ணெயில் போட்ட அப்பளம் மாதிரி கொதிக்காத. இனி இதைப்பற்றி நீ கதைக்கக் கூடாது! கதைச்சியோ!” என்று விரல் நீட்டி உறுமிவிட்டுப் போனான் அவன்.
ஆரணி திகைத்து நின்றாள். நடந்ததை நம்புவதற்கே சில நொடிகள் பிடித்தது. மீண்டும் ஒரு முறை அவள் இதயம் உயிர்வலியில் துடித்துக் கதறியது.